மலர்களின் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா
மலர்கள் என்றாலே கொள்ளை அழகு. அதிலும் கோடிக்கணக்கான மலர்கள் எங்கும் வியாபித்திருக்கும் ஓர் இடம் உண்டு என்றால் அது பூலோக சொர்க்கம் என்றல்லவா கூறப்படும். ஆம் இந்த பூலோக சொர்க்கம் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. மலர்களின் பள்ளத்தாக்கு என்று வழங்கப்படும் இப்பகுதியில் இயற்கை அன்னை தன் மலர் கரங்களால் அழகினை வாரி வழங்கியுள்ளார். எங்கு நோக்கினும் பல வண்ண மலர்கள், அதனூடே பள்ளத்தாக்கில் வெள்ளியை உருக்கினாற் போல பாய்ந்தோடும் “புஷ்பாவதி நதி.” சுற்றிலும் மலை தொடர்கள் என்று இதன் அழகு வார்த்தைகளால் விவரிக்க முடியாத அற்புதம்.
உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி என்னும் மாவட்டத்தில் இமயமலை பகுதியில் அமைந்துள்ள ஓர் அழகிய இயற்கை அதிசயம் இந்த “மலைகளின் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா” ஆகும். இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக விளங்குகிறது.
மலைகளின் அரசியான இமயமலையில் அமைந்துள்ள இப் பூங்கா இயற்கையின் அதிசயமாக அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 3352 மீட்டர் முதல் 3658 மீட்டர் (11000 முதல் 12000 அடி) உயரத்தில் உள்ளது. மலர்களின் சொர்க்கம் என்று கூறப்படும் இந்த தேசிய பூங்கா சுமார் 87.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
பூக்களின் வகைகள்:
*பிரம்ம கமலம் (BRAHMA KAMALAM)
இது உத்தரகாண்ட் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மலர். இது இரவில் மட்டுமே மலரக்கூடிய ஓர் அரிய வகை மலராகும்.
*நீல பாப்பி (BLUE POPPY)
இம்மலர் இதன் அரிய நீல நிறத்திற்காக உலகப் புகழ்பெற்றது.
*இமயமலை மார்ஷ் மேரி கோல்ட் (HIMALAYAN MARSHMARIGOLD)
நீர் நிலைகளுக்கு அருகில் மஞ்சள் நிறத்தில் அடர்த்தியாக பூத்துக் குலுங்கும் மலர் இதுவாகும்.
*அல்பைன் அனிமோன் (ALPINE ANEMONE)
இது வெள்ளை மற்றும் ஊதா நிறத்தில் காணப்படும் அழகிய சிறிய வகை பூக்கள் ஆகும்.
*இமயமலை பெல் ஃப்ளவர் (HIMALAYAN BELL FLOWER)
மணி வடிவில் ஊதா நிறத்தில் தொங்கும் பூக்கள் ஆகும். இவற்றோடு மேலும் கணக்கற்ற மலர் வகைகள் இங்கு உள்ளன.
பூக்கள் மலரும் காலம்:
*ஜூலை மற்றும் ஆகஸ்ட்
இவ்விரு மாதங்களில் தான் பெரும்பாலான மலர்கள் (குறிப்பாக பிரம்ம கமலம்) முழுமையாக பூத்துக் குலுங்கும். இப்பள்ளத்தாக்கு ஜூன் முதல் செப்டம்பர் வரை ஒவ்வொரு மாதமும் தனது நிறத்தை மாற்றிக் கொண்டே இருக்கும்.
ஜூன் மாதத்தில் பனி உருகி பச்சை வர்ணத்தில் ஜொலிக்கும். ஜூலையில் இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிற மலர்களினால் நிறைந்திருக்கும். ஆகஸ்ட் மாதத்தில் நீலம் மற்றும் ஊதா மலர்களால் சூழப்பட்டு கண்களுக்கு விருந்தாகும். செப்டம்பரில் ஒட்டுமொத்த பள்ளத்தாக்கும் பொன்னிறமாக காட்சியளிக்கும்.
*வண்ணத்துப்பூச்சிகளின் சொர்க்கம்
பல வண்ண மலர்களால் நிறைந்திருக்கும் இப்பகுதியானது, மேலும் அதற்கு மகுடம் சேர்ப்பது போல, ஆயிரக்கணக்கான பல வண்ணத்துப்பூச்சிகள் இப்பள்ளதாக்கு முழுவதும் பறந்து திரிவது பார்ப்பதற்கு ஓர் மாயாஜால உலகம் போல இருக்கும்.
*இராமாயண தொடர்பு:
இராமாயண காதையில் இலட்சுமணன் போரில் காயமடைந்த போது, அவரை குணப்படுத்த அனுமன் 'சஞ்சீவினி' மூலிகையைத் தேடி வந்தது இந்த இமயமலை பகுதியில் தான் என்று நம்பப்படுகின்றது. இங்குள்ள மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள் இதற்கு சான்றாக உள்ளன.
*இப்பள்ளத்தாக்கின் மையப் பகுதி வழியாக புஷ்பாவதி நதி பாய்ந்தோடுகின்றது. இது ஒரு அழகான பனிப்பாறை ஆறாகும். (GLACIAL RIVER)
*வன விலங்குகள்:
இப்பகுதி பூக்களுக்கு மட்டுமில்லாமல், அழியும் நிலையில் உள்ள பல அரிய வகை விலங்குகளுக்கும் புகலிடமாக உள்ளது.
*மலர்களின் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா திறந்திருக்கும் காலம்:
இப்பூங்காவானது குளிர்காலத்தில் முழுமையாக பனியால் மூடப்பட்டிருக்கும். எனவே இது ஜூன் 1 முதல் அக்டோபர் 31 வரை மட்டுமே பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்திருக்கும். இந்த மலர்களின் பள்ளத்தாக்கை அடைய வாகனங்களில் செல்ல முடியாது. 'கோவிந்த் காட்' என்ற இடத்திலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தூரம் மலை ஏற்றம் செய்ய வேண்டும்.
மலர்களின் பள்ளத்தாக்கு இயற்கை நமக்கு அளித்த மிக அரிய அற்புத படைப்பாகும். பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் இந்த மலர்களின் பள்ளத்தாக்கு, நாம் இயற்கையைப் போற்றி பாதுகாக்க வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டும் ஓர் அழகிய உன்னத இடமாகும். இயற்கையின் அழகில் இறைவனைக் காணலாம் என்னும் கருத்தினை இம்மலர்களின் பள்ளத்தாக்கு மெய்ப்பிக்கின்றது என்றால் அது மிகையாகா.






Comments
Post a Comment