அபிராமி அந்தாதி பாடல்கள்-(6-10) விளக்கம் மற்றும் வழிபாட்டு பலன்கள்

 அபிராமி அந்தாதி பாடல்கள்-(6-10)  விளக்கம் மற்றும் வழிபாட்டு பலன்கள். 

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் அபிராமி அம்மன் மீது பாடப்பெற்றப் பாடல்கள் ஆகும். 


 

பாடல் -6

(எண்ணியது நிறைவேற)

சென்னியது உன் பொன் திருவடித் தாமரை சிந்தையுள்ளே

மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே

முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே

பன்னியது என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.

             

                   அபிராமி அன்னையே! செம்மையான தாமரை மலர்களின் மென்மையை ஒத்த நின் திருப்பாதங்களில் என் தலை வைத்து நான் சரணடைந்தேன். நினது திருமந்திரமே, என்றும் என் சிந்தை உள்ளே நீங்காமல் நிலைபெற்று இருப்பது எனக் கொண்டேன். செந்தூர வண்ணம் கொண்ட அழகிய தேவியே, உனது அடியாரோடு, என்னையும் கலந்து உய்விப்பாயாக.

பாடல்- 7

(முக்தி நெறியை அடைய)

ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலவு ஓர்

கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்

மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்

துதியுறு சேவடி சிந்தூரானன சுந்தரியே.

 

                தாமரை மலரில் தோன்றிய பிரம்மனும், பாற்கடலில் வீற்றிருக்கும் திருமாலும் வணங்கி போற்றுகின்ற சிவந்த பாதங்களை உடைய, அழகிய தேவியே! தயிரைக் கடையும் மத்து போன்று முன் வினைகளினால் உண்டான பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் சுழன்று வருந்தாமல், எனது உயிர் உயர்வுடைய முக்தி நெறியை அடைய அருள் புரிவாயாக.

பாடல் -8

(பாச வினைகள் நீங்கிட)

சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரை எல்லாம்

வந்து அரி சிந்தூர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்

அந்தரி, நீலி, அழியாத கன்னிகை ஆரணத்தோன்

கம் தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.

 

                 அபிராமி அன்னை அழகே வடிவானவள்! அவள் எம் தந்தையாம் சிவபெருமானின்    துணைவியானவள்! பாச வினைகளை அறுக்கும் செந்நிற வண்ணத்தினாள்! மகிஷாசுரனின் தலைமேல் நர்த்தனம் ஆடி அவனை அழித்தவள்!  நீலி நிறம் உடைய காளியும், அழியாத நித்தியக் கன்னியும் ஆனவள். தன்னுடையக் கையில் பிரம்ம கபாலத்தைக் கொண்டிருப்பவள். அவளுடைய மலர்த் தாளை என்றும் போற்றி வணங்குவோம்.

பாடல்- 9

(அன்னையின் கருணை)

கருத்தன எந்தை தன் கண்ணன வண்ணக் கனக வெற்பின்

பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின் பேர் அருள்கூர்

திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும், அம்பும்

முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே.

 

             அபிராமி அன்னையே! என் தந்தையாம் சிவபெருமானின் கண்ணிலும், கருத்திலும் நீயே நிறைந்து நிற்கின்றாய். சீர்காழியில் அழுதக் குழந்தை, ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டினாய்.  செந்நிற திருக்கரங்களில் கரும்பு வில்லுடன் மலர் அம்புகள் சேர்ந்திட, முத்துக்கள் போன்ற பற்களுடன், உன் சிரிப்புடனும் தாயே என் முன் காட்சி அருள வேண்டும்.

பாடல் -10

( அழியாத முத்தி இன்பம்)

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை

என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் எழுதா மறையின்

ஒன்றும் அரும்பொருளே,  அருளே உமையே இமயத்து

அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே.

 

                  கருணையின் வடிவான உமையம்மையே!  வேதங்களின் பொருளாய் உள்ளவளே! இமயத்து மலையரசன் மகளே!  பிறப்பு இறப்பு இல்லா முக்தியைக் கொடுத்து ஆனந்தம் அளிப்பவளே!  அன்னையே! நான் நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் எப்பொழுதும் நினைப்பது உன்னையே!  என்றென்றும் நான் வணங்குவது உன் தாமரை மலர் போன்றப்  பொற்பாதங்களையே ஆகும்.

Comments

Popular posts from this blog

தஞ்சை பெரிய கோவில் (கட்டிடக் கலையின் உன்னதம்) BRIHADEESWARAR TEMPLE

வாலி வதைப் படலம்

நளதமயந்தி கதை (NALA THAMAYANDHI STORY)