அபிராமி அந்தாதி பாடல்கள் (16-20) விளக்கம், வழிபாட்டு பலன்கள்

                 அபிராமி பட்டரால் 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பக்தி இலக்கிய நூல் அபிராமி அந்தாதி ஆகும். மனதை உருகச் செய்யும் இப்பாடல்கள் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் அபிராமி அம்மன் மீது பாடப்பெற்றதாகும். நூறு பாடல்களைக் கொண்டு அந்தாதி வகையில் அமைந்த தெய்வீக மணம் கமழும் பாடல்கள் ஆகும்.



பாடல் 16

[யாதுமாகிய அபிராமி அன்னை]

கிளியே இளைஞர் மனதே கிடந்து கிளர்ந்து ஒளிரும்

ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே என்னில் ஒன்றும் இல்லா

வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே

அளியே அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே.

 

             அபிராமி அன்னையே! கிளி போன்றவளே! உன்னை நினைத்து வழிபடும் அடியார் உள்ளத்திலே சுடர் விட்டு ஒளிரும் ஒளியே! அவ்வாறு ஒளிரும் ஒளிக்கு காரணமானவளே! ஐம்பூதங்கள் ஆகிய ஆகாயம், நிலம், நீர், நெருப்பு, காற்று என இவை அனைத்திலும் எங்கும் நிறைந்திருக்கும் என் அன்னையே! யாதுமாகிய அன்னையே! எளியனுடைய மனத்தினுள் நீ நிறைந்ததும் அதிசயமே!

பாடல் 17

[வாழ்வில் வெற்றிகளை அடைய]

அதிசயம் ஆன வடிவு உடையாள் அரவிந்தம் எல்லாம்

துதிசய ஆனன சுந்தரவல்லி துணை ரதி

பதிசயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர் தம்

மதி சயம் ஆக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே?

 

               அபிராமி அன்னை அதிசயமான வடிவுடையவள். தாமரை மலர்கள் எல்லாம் வெட்கி வணங்கக்கூடிய அழகுமுகம் கொண்டவள். ரதியின் கணவனாகிய மன்மதனை, நெற்றிக்கண்ணால் எரித்த சிவபெருமானின் மனத்தினை கவர்ந்து, அப் பெருமானின் இடபாகத்தைப் பெற்றவள். வெற்றிகளைக் கொண்டவள் நம் அபிராமி தாயே ஆகும்.

பாடல் 18

[அன்னையின் அருட்காட்சி]

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்

செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே

அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து

செவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே.

 

               அபிராமி அன்னையே! காலன் என் உயிரைக் கவர்ந்து செல்ல வரும்பொழுது, அம்மையே! உன்னை இடபாகத்தில் கொண்டுள்ள சிவபெருமானும், நீயும் மகிழ்ந்து அருளும் தரிசனமும், உங்கள் திருமணக் கோலமும், என்னை ஆட்கொண்டு அருளிய நின் பொற்பாதங்களையும், நான் கண்குளிர காணுமாறு அருள வேண்டும் அன்னையே!

பாடல் 19

[பேரின்ப நிலையை அடைய]

வெளி நின்ற நின் திருமேனியைப் பார்த்து என் விழியும் நெஞ்சும்

களி நின்ற வெள்ளம் கரை கண்டது இல்லை கருத்தினுள்ளே

தெளி நின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?

ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.

 

            ஒளி பொருந்திய ஒன்பது கோணங்களிலும் மேவி உறையும் அபிராமி அன்னையே! நினது திருவருளால் விண் முழுதும் நிறைந்த, உன் அற்புதக் காட்சியைக் கண்டு என் கண்களும் மனமும் கொண்ட மகிழ்ச்சி வெள்ளத்துக்கு கரை ஏதும் இல்லை. ஆயினும் என் மனம் தெளிந்த ஞானம் பெற்றதும் நின் திருவருளால் அன்றோ?

பாடல் 20

[வாழ்வின் செல்வம் பெருக]

உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ

அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ அமுதம்

நிறைகின்ற வெண் திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ

மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே.

 

           மங்கலம் அருளும் அபிராமி அன்னையே! நீ வீற்றிருக்கும் திருக்கோயில் சிவபெருமானின் இடபாகமோ? அல்லது நான்கு வேதங்களின் முதலோ, முடிவோ? அல்லது அமுதம் நிறைந்த குளிர்ந்த நிலவோ? வெண் தாமரை மலரோ? அடியேனுடைய நெஞ்சமோ? வளங்கள் மறைந்திருக்கும் பாற்கடலோ? யாதுமாகி, எங்கும் நிறைந்திருப்பவள் என் அபிராமி அன்னையே!

Comments

Popular posts from this blog

தஞ்சை பெரிய கோவில் (கட்டிடக் கலையின் உன்னதம்) BRIHADEESWARAR TEMPLE

வாலி வதைப் படலம்

நளதமயந்தி கதை (NALA THAMAYANDHI STORY)