அபிராமி அந்தாதி பாடல்கள் (11-15) விளக்கம் மற்றும் வழிபாட்டு பலன்கள்

                 அபிராமி பட்டரால் 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பக்தி இலக்கிய நூல் அபிராமி அந்தாதி ஆகும். மனதை உருகச் செய்யும் இப்பாடல்கள் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் அபிராமி அம்மன் மீது பாடப்பெற்றதாகும். நூறு பாடல்களைக் கொண்டு அந்தாதி வகையில் அமைந்த தெய்வீக மணம் கமழும் பாடல்கள் ஆகும்.


பாடல் 11

(வாழ்வின் அமுதம்)

ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்

வான் அந்தமான வடிவு உடையாள் மறை நான்கினுக்கும்

தான் அந்தமான சரணா விந்தம் தவள நிறக்

கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே.

 

           அபிராமி அன்னை என் ஆனந்தமாகவும், என் அறிவாகவும் விளங்குகின்றாள். என் வாழ்வில் நிறைந்த அமுதமாக பூத்து மலர்ந்திருக்கின்றாள். பஞ்சபூதங்களையும் (வான் நீர் நெருப்பு மண் காற்று) தன் வடிவில் கொண்டவள் அன்னை! வேதம் நான்கினுக்கும் தானே முதலும் முடிவும் ஆனவள். என் அன்னையின் திருவடித் தாமரைகள், திருவெண்காட்டில் நடனம் புரியும் எம்பிரான் ஈசனின் திருமுடிக்கு, மாலையாய் விளங்குகிறது.

பாடல் 12

(மோன நிலையை அடைய)

கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பக்தி

பண்ணியது உன் இரு பாதாம் புயத்தில் பகல் இரவா

நண்ணியது உன்னை நயந்தோர் அவயத்து நான் முன் செய்த

புண்ணியது ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.

 

           புவனம் ஏழினுக்கும் அன்னையே! என் அம்மையே! அபிராமி அன்னையே! நான் எப்பொழுதும் எண்ணுவது நின் புகழையே!  நான் கற்பது உன் நாமம். என் மனம் கசிந்து பக்தி பண்ணுவதோ உன் பொற்பாதங்களையே! இரவென்றும் பகல் என்றும் பாராமல் நான் சென்று சேர்ந்திருப்பது உன் அடியார் கூட்டத்தையே ஆகும். இத்தனையும் நல்கிய அம்மையே நான் முற்பிறவியல் செய்த புண்ணியம் தான் ஏது?

பாடல் 13

(அண்டத்தின் நாயகி)

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்

காத்தவளே பின் கரந்தவளே கறை கண்டனுக்கு

மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே

மாத்தவளே உனையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.

 

        பதினான்கு உலகங்களையும் பெற்றவளே! பெற்ற வண்ணம் அவ்வுலகு அனைத்தையும் காத்தவளே! முடிவில் அனைத்தையும் தனக்குள் ஒடுக்கியவளே! கறை கண்டனுக்கு மூத்தவளே! மும்மூர்த்திகளில் சிறப்புமிக்க திருமாலின் தங்கையே! பெரும் தவத்தின் தேவியே! அபிராமி அன்னையே! உன்னைத் தவிர வேறொரு தெய்வத்தையும்  வணங்குவதோ?

பாடல் 14

(அன்னையின் கருணை)

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்

சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தை உள்ளே

சந்திப்பவர்  அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்

சிந்திப்பவர்க்கு எளிதம் எம்பிராட்டி நின் தண்ணலியே.

 

         அன்னை அபிராமியே!  உன்னை தேவர்களும் அசுரர்களும் அடியார்களும் வணங்குகின்றனர். நான்கு முகம் கொண்ட பிரம்மாவும்,  பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமாலும்,  உன்னைச் சிந்திப்பவர்கள். ஆதியும் அந்தமும் இல்லா சிவபெருமான் உன்னில் பாதியாகி கலந்தார். இவர்களைக் காட்டிலும் புவியில் உன்னை வழிபடுபவர்களுக்கு எளிதில் அருள் புரிகின்றாய். அபிராமி அன்னையே உன் அன்பிற்கும், கருணைக்கும், ஓர் எல்லை உண்டோ?

பாடல் 15

(வீடு பேற்றினை அடைய)

தண்ணளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்

மண் அளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர்தம்

விண் அளிக்கும் செல்வமும் அழியா முக்தி வீடும் அன்றோ

பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே

 

        அபிராமி அன்னையே!  இனிய இசையை எழுப்பக்கூடிய அழகிய பைங்கிளி போன்றவளே! உன் அருள் பெற்ற அன்பர்களும், பல கோடி தவங்களைச் செய்தவர்களும் , இப்புவி வழங்கும் செல்வங்களைப்  பெறுவது மட்டுமல்லாமல், இந்திரன் ஆட்சி செய்யும் விண்ணுலகத்தையும், பிறப்பு இறப்பு இல்லா முத்தியையும் பெறுவர்.

Comments

Popular posts from this blog

தஞ்சை பெரிய கோவில் (கட்டிடக் கலையின் உன்னதம்) BRIHADEESWARAR TEMPLE

வாலி வதைப் படலம்

நளதமயந்தி கதை (NALA THAMAYANDHI STORY)