இராமாயணம் - யுத்த காண்டம் (பகுதி-6)

                    இராமனின் அம்பினால் மகோதரன் உயிர் துறந்தான். இராவணனின் பெரும் சேனையைத் தாக்கி இராமன் அழித்தான். இராவணன் தன் தேர் பாகனிடம், ''இராமன் தேர் நோக்கிச் செல்க'' என்றான்.



இராவணனின் இடத்தோள்கள் துடித்தன. எங்கும் இரத்த மழை பொழிந்தது. பெரும் இடியொலி எழும்பியது. கழுகுகளும், காகங்களும் அங்கு சூழ்ந்தன. இராவணனின் தேர் வர வானர வீரர்கள் சிதறி ஓடினர். இராமனும், இராவணனும் மாறி மாறித் தாக்கிக் கொண்டனர். இராமனின் அம்பு மழையினைத் தாங்க முடியாமல், இராவணன் தன் தேரினை விண்ணில் பறக்கச் செய்தான். இராமனின் தேரும் பறந்தது. இராமனின் அம்புகள் இராவணனின் கைகளைத் துண்டித்தது. ஆனால் அவை திரும்ப முளைத்தன. இராமன் தன் அம்பினால் அவன் தலையைத் துண்டித்தான். ஒவ்வொரு தலையாகத் துண்டிக்க துண்டிக்க அவை மீண்டும் மீண்டும் முளைத்தன. 

       ரத ஓட்டி மாதலி இராமனிடம் ''இராவணன் முன்பு தன் தலையை வெட்டி, பிரம்மனுக்கு யாகம் செய்தான். எனவே பிரம்மன், இராவணனுக்கு தலை எத்தனை முறை துண்டிக்கப்பட்டாலும் திரும்ப முளைக்கும் என வரமளித்தார். எனவே தலையை வெட்டுவதால் பயனில்லை. இராவணனின் மார்புக்கு குறி வையுங்கள்'' என்றான்.

 இராமனும் மந்திரங்கள் கூறி பிரம்மாஸ்திரத்தினை இராவணனின் மார்பில் எய்தான். அது இராவணனின் மார்பில் பாய்ந்து அவனைக் கொன்றது.

தேவர்கள் பூமாரி பொழிந்தனர். வானர வீரர்கள் வெற்றிக் களிப்பில் திளைத்தனர்.

வீடணன் இறந்து கிடந்த இராவணனின் உடலைக் கண்டு கண்ணீர் வடித்தான். அவன் உடல் மேல் விழுந்து அழுது புலம்பினான்’’. வெற்றி வீரனாக வலம் வந்தவனே! சிவனிடம் தீரா அன்பு பூண்டவனே. உன் தகாத ஆசையால் இந்நிலை உனக்கு உண்டானதே'' எனப் பலவாறு புலம்பினான். அனுமனும், சுக்ரீவனும் வீடணனைத் தேற்றினர். இராமன், வீடணனிடம் இராவணனுக்கு இறுதி மரியாதை செய்யும் படி சொன்னான். 

 மண்டோதரி, தன் கணவன் இராவணனின் உடல் மேல் விழுந்து கதறி அழுதாள். அக்கணமே அவள் உயிரும் பிரிந்தது. வீடணன இருவருக்கும் இறுதி மரியாதை செய்தான். 

 பின்னர் பாட்டன் மாலியவான் முன்னிலையில், இராமன் தலைமையில், இலக்குவன் வீடணனுக்கு இலங்கையின் அரசனாக மணி முடி சூட்டினான்.

இராமன், அனுமனிடம், இராவணன் மாண்ட செய்தியை சீதையிடம் தெரிவிக்கச் சொன்னான். அனுமனும் இராமனின் ஆணைக்காகக் காத்திருந்தான். அவன் உத்திரவு கிடைக்கப் பெற்றவுடன் சீதையிடம் ஒடினான். செய்தி அறிந்த சீதை மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். அவள் இராமனைக் காண பெரு விருப்போடு காத்திருந்தாள்.

இராமன் வீடணனிடம் சீதைக்கு, சர்வ அலங்காரம் செய்து அழைத்துவரும் படி கூறினான். வீடணனும் அதனைச் சீதையிடம் தெரிவித்தான். அலங்காரம் செய்து கொள்வதில் சீதைக்கு விருப்பம் இல்லையாயினும், இராமனின் விருப்பத்திற்கிணங்கி அலங்காரம் செய்து கொண்டாள்.

 பல்லக்கில் ஏறிய சீதையை வானரர்கள் கொண்டாடினர். அனைவரும் சீதையின் அழகினைக் கண்டு வியந்தனர். சீதை இராமன் இருக்குமிடம் சென்றாள். அவனைக் கண்டு கண்ணிருடன் நின்றாள். இராமன் எங்கோ பார்த்துக் கொண்டு நின்றான்.

 பின் கோபமாக சீதையிடம் ''நான் உன்னை மீட்க இவ்விடம் வரவில்லை. கடலில் அணை கட்டி, பெரும் படை சேர்த்து வந்தது என்னை மீட்கவே. என் பிழையை மீட்கவே வந்தேன். நீதியும், அறமும் அற்ற அரக்கர் வாழும் இலங்கையில் இவ்வளவு நாள் தங்கி இராவணனுக்கு அடங்கி இருந்தாய். அரக்கர் ஊரில் ஊன் உண்டாய். உன் பெருமை குழைந்தது. பழி வந்தால் குலப் பெண்கள் மாள்வர். அரக்கர் ஊரில் பத்து மாதம் தங்கியிருந்த உன்னை என்னால் ஏற்க இயலாது'' என்றான்.

 

''உன்னை மீட்பான் பொருட்டு, உவரி தூர்த்து, ஒளிர்

மின்னை மீட்டு உறுபடை அரக்கர் வேர் அற,

பின்னை மீட்டு, உறுபகை கடந்திலேன்; பிழை

என்னை மீட்பான் பொருட்டு, இலங்கை எய்தினேன்''

 

       இராமனின் உரை கேட்டு அனைவரும் திகைத்தனர். சீதை மனமுடைந்து நின்றாள். பின் கோபமாக ''என்னிலையை இனி யாரிடம் விளக்க முடியும்? என் உயிர் இன்னும் இவ்வுடலில் இருக்கிறது. இலக்குவா! உடனே தீ மூட்டு. நான் அக்னி பிரவேசம் செய்கிறேன்'' என்றாள்.

இலக்குவன் மனம் கலங்கினான். இருப்பினும் சீதையின் ஆணைப் படி தீ மூட்டினான். 

       சீதை ''யான் மனத்தாலும், வாக்கினாலும் குற்றமுடையவளாயின் தீச்செல்வா! என்னை சுட்டெரிப்பாயாக'' எனக் கூறி இராமனை வணங்கி தீயில் விழுந்தாள்.

 

''கனத்தினால் கடந்த பூண் முலைய கைவளை,

மனத்தினால், வாக்கினால், மறு உற்றேன் எனின்,

சினத்தினால் சுடுதியால், தீச்செல்வா! என்றாள்;

புனத் துழாய்க் கணவற்கும் வணக்கம் போக்கினாள்''.

 

 தீக்கடவுள் சீதையைக் கையிலேந்தி மேல் வந்தான். பின் இராமனைத் தொழுது, ''கற்புக்கரசியின் கற்புக்கனல் என்னைத் தகிக்கிறது. கற்புக்கரசி சீதையைத் தாங்கள் ஏற்க வேண்டும்'' என்றான்.

 இராமன் சீதையை ஏற்றான். பின் சீதையிடம் ''சீதா! இவ்வுலகின் பழிக்கு நீ ஆளாகக் கூடாது என்பதற்காகவே உன்னை என் வார்த்தையால் சுட்டேன். இப்பொழுது நீ அப்பழுக்கற்றவள் என உலகம் உணர்ந்தது'' என்றான். இராமனும் சீதையும் இணைந்தனர். 

இதனைக் கண்டு அனுமனும், மற்ற அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

இராமனின் உண்மை நிலையை அவனுக்கு உணர்த்த தேவர்கள் விண்ணில் இருந்து மண்ணிற்கு வந்தனர். அவர்களோடு தயரதனும் வந்தான். இராமன் பரம் பொருளே என அவனுக்கு தேவர்கள் கூறினர். சிவபெருமானும் அதனை இராமனுக்கு உணர்த்தினார்.

       தயரதன் ''சனகனின் புதல்வியே! பொறுமையின் சிகரமே! இலக்குமியின் அம்சமே! நீ இராமன் மேல் கோபம் கொள்ளாதே! உன் பெருமை உலகு அறிய வேண்டியே இந்த அக்னிப் பிரவேசம். உனக்கு நன்மைகள் பல உண்டாகட்டும்'' என்றான்.

பின் இலக்குவனைத் தழுவி, தமையனுக்காக ஆற்றிய உனது தொண்டு அளப்பரியது என்றான்.

இராமனிடம் ''இராமா! நீ என் மகன் என்பதில் நான் பெருமை கொள்கின்றேன். உனக்கு இரு வரங்கள் தருகின்றேன். கேள்'' என்றான்.

இராமன் ''தந்தையே! நீங்கள் தாரமில்லை என ஒதுக்கிய என் அன்னை கைகேயியை, உங்கள் மனைவியாகவும், என் தம்பி பரதனை உங்கள் மகனாகவும், உலகறிய நீங்கள் ஏற்க வேண்டும்'' என இரு வரங்களைக் கேட்டான்.

தயரதனும் அவ்வாறே வரமளித்தான். அனைவரையும் வாழ்த்தி, தயரதன் தேவர்களுடன் விண்ணகம் சென்றான். தேவர்கள் போரில் இறந்த வானர வீரர்கள் உயிர் பெற்று எழும் வரம் அளித்தனர். வானர வீரர்களும் உயிர் பெற்றனர்.

 பதினான்கு வருடம் இன்றோடு முடிகின்றது. இன்று வளர்பிறை திதி. நாளை பஞ்சமி திதி. நாளை இராமன் அயோத்தி செல்லாவிட்டால் பரதன் தீ மூட்டி அக்னிப் பிரவேசம் செய்வான். எனவே இராமன் சீதையோடும், இலக்குவனோடும் அயோத்திக்குப் புறப்பட்டான். 

       இராமனோடு தாங்களும் வருவதாக சுக்ரீவன், ஜாம்பவான், வீடணன், நளன், அங்கதன், நீலன் என அனைவரும் கூறினர். இராமன் அனைவரையும் புஷ்பக விமானத்தில் ஏறும் படிக் கூறினான். அனுமன் முன்னே பறந்து சென்றான்.

சேது கரையில் விமானம் தரை இறங்கியது. இராவணன், கும்பகர்ணன், இந்திரஜித் இவர்களைக் கொன்றதால் உண்டான பிரம்மஹத்தி தோஷத்தினை போக்க, இராமன் சேது கரையில் (இராமேஸ்வரத்தில்) சிவ லிங்க பூசை செய்ய இறங்கினான். காசியில் இருந்து சிவ லிங்கத்தினைக் கொண்டு வர அனுமன் பறந்து சென்றான். ஆனால் அனுமன் வர தாமதம் ஆனதால், சீதை மணலில் தன் கையினால் அழகிய சிவ லிங்கம் ஒன்றினைச் செய்தாள். அந்த சிவ லிங்கத்திற்கு இராமன் சிவ பூசை செய்தான்.

தாமதமானாலும் அனுமன் சிவ லிங்கதோடு சேது கரையினை அடைந்தான். அனுமன் கொண்டு வந்த காசி லிங்கத்தினை முறைப்படி ஸ்தாபித்து, இராமன் சிவ பூசை செய்தான். பின் ''அனுமன் கொண்டு வந்த லிங்கத்தினை முதலில் தரிசித்த பின்னரே சீதாராம லிங்கத்தினை தரிசிக்க வேண்டும். அவ்விதம் செய்தாலே பூரண அருளும், நலனும் கிடைக்கும்'' என்றான்.

       அயோத்திக்கு முதலில் சென்று, பரதன் அக்னி பிரவேசம் செய்யாமல் தடுக்கும் படி, அனுமனிடம் இராமன் கூறினான். அனுமனும் முன்னே பறந்து சென்றான்.

 

இராமன் அயோத்திக்குச் செல்லும் வழியில் சீதையிடம் தாங்கள் கடந்து வந்த பாதையைக் கூறிய வண்ணம் வந்தான். ''இது கிஷ்கந்தை, சுக்ரீவனைச் சந்தித்த இடம். இது உன் ஆபரணங்களை மீட்டெடுத்த இடம். இது அனுமனைச் சந்தித்த இடம் என ஒவ்வொன்றாகக் காட்டினான். பின் பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்று அவரின் ஆசி பெற்று அயோத்திக்கு விரைந்தனர்.

நந்தி கிராமத்தில் பரதன், பதினான்கு ஆண்டுகள் இன்றோடு முடிகின்றது, ஆனால் அண்ணன் இன்னும் வரவில்லை எனக் கவலையில் ஆழ்ந்திருந்தான். பின் உயிர் வாழ்வதில் பயனில்லை என எண்ணி, அக்னிப் பிரவேசம் செய்ய தீ மூட்டச் சொன்னான். சத்ருக்கனும், தாய்மார்களும் இராமன் வந்து விடுவான் எனக்கூறி பரதனைத் தடுத்தனர். ஆனாலும் பரதன் தீயில் விழச் சென்றான்.

அப்பொழுது அனுமன் விண்ணில் இருந்து இறங்கி, ''ராமராமராம'' என இராமனின் நாமத்தை உச்சரித்தான். பரதன் இராம நாமத்தினைக் கேட்டு அனுமனிடம் ஓடி வந்தான். அனுமன் ''இராமலக்குவ, சீதை பரத்வாஜ ஆசிரமத்தில் இருந்து வந்து கொண்டிருக்கிறார்கள்'' எனக் கூறினான். பரதன் மகிழ்ந்து அனுமனைத் தழுவிக் கொண்டான். 

 

''அய்யன் வந்தனன் ; ஆரியன் வந்தனன்;

மெய்யின் மெய் அன்ன நின் உயிர் வீடினால்

உய்யுமே அவன்? என்று உரைத்து உள்புகா

கய்யினால் எரியைக் கரி ஆக்கினான்''

 

 எங்கும் மகிழ்ச்சி பரவியது. அனுமன், இராவணன் சீதையைக் கவர்ந்தது, சேது அணைக் கட்டி வானர வீரர்கள் இலங்கை அடைந்தது, இராவணனை இராமன் வதம் செய்தது, சீதையின் அக்னிப் பிரவேசம் என அனைத்தையும் கூறினான்.

பரதனும், சத்துருக்கனும் இராவணன் சீதையைக் கவர்ந்ததனை அறிந்து சினம் கொண்டனர். தாய்மார்கள் சீதையின் அக்னிப் பிரவேசம் அறிந்து துடித்தனர். 

இராமலக்குவ, சீதை வந்த புஷ்பக விமானம் அயோத்தியில் தரை இறங்கியது. பரதனும் இராமனும் ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டனர். இராமனின் பாதக்களில் விழுந்து பரதனும், சத்ருக்கனும் ஆசி பெற்றனர்.

வசிட்டர் ''இராமன் அயோத்தி மன்னனாக மணி முடி சூட நாளையே ஏற்ற தினமாக உள்ளது'' என்றார். நான்கு திசைகளிலும் உள்ள கடலில் இருந்து அபிஷேக நீர் கொண்டு வர, அனுமன், அங்கதன், நீலன், நளன் என விண்ணில் பாய்ந்தனர்.

மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். எங்கும் திருவிழாக் கோலம் பூண்டது. மங்கள வாத்தியங்கள் முழங்கியது. இராம சீதையும், இலக்குவனும் மரவுரி களைந்து, நீராடி பட்டாடை உடுத்தினர்.

மயன், இராமன் மணிமுடி சூட அழகிய மண்டபம் அமைத்தான் மாணிக்கங்களும், முத்துமணிகளும், வைரங்களும் நிரம்பிய அரியணையில் இராமனும், சீதையும் அழகுற வீற்றிருந்தனர்.

 

''மாணிக்கப் பலகை தைத்து, வயிரத்தில் கால்கள் சேர்த்தி

ஆண்ப்பொன் சுற்றி முற்றி அழகுறச் சமைத்த பீடம்

ஏணுற்ற பளிங்கு மாடத்து இட்டனர் அதனின் மீது

பூணுற்ற திரள்தோள்வீரன் திருவொடும் பொலிந்தான் மன்னோ!''

 

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த, பரதன் வெண் குடை பிடிக்க, இலக்குவனும், சத்துருக்கனும் கவரி வீச, வசிட்டர் இராமனுக்கு மணிமுடி சூட்டினார்.

 

''அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் பற்றப்

பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் கவர் வீச

விரைசெறி கமலத் தாள் சேர் வெண்ணெய்மன் சடையன் தங்கள்

மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனந்தான் மௌலி''.

 

இராமன் எல்லோர்க்கும் பரிசுகள் வழங்கினான். பசுக்கள், குதிரைகள், பொற்காசுகள் ஆகியவற்றினை ஏழை எளியவர்களுக்கு வழங்கினான். 

இந்திரன் தந்த மணிகடகம், யானை, தேர், குதிரைகளைச் சுக்ரீவனுக்கு வழங்கினான். அங்கதனுக்கு முத்துமாலை, பட்டாடை, குதிரை, யானை ஆகியவற்றினை வழங்கினான். வீடணனுக்கு மணிகடகம், பொன்னாடை, யானை, குதிரை, தேர் ஆகியவற்றினை வழங்கினான். ஜாம்பவானுக்கு யானை, குதிரை இவற்றினை வழங்கினான்.

இறுதியில் அனுமனுக்கு இவை எது கொடுத்தாலும் ஈடாகாது எனக் கருதி, அனுமனை அழைத்து இறுகக் கட்டிக் கொண்டான். சீதாதேவி அனுமனுக்கு முத்துமாலையைப் பரிசாகத் தந்தாள்.

       அனைவரும் பிரியா விடை பெற்றனர். இராமன், அனுமனிடம் ''அனுமா! உனக்கு நான் ஏதேனும் தர விரும்புகின்றேன். கேள்'' என்றான்.

       அனுமன் ''நாதனே! இவ்வுலகில் எங்கெல்லாம் இராம நாமம் கூறுகிறார்களோ அங்கெல்லாம் நான் இருக்க விரும்புகின்றேன். இராம நாமம் என் உள்ளத்தை விட்டு பிரியக்கூடாது. இராம நாமம் கூறுவதில் எனக்கு எப்போதும் சலிப்பே வரக்கூடாது. இவ்விதம் வரமளியுங்கள்'' எனக் கேட்டான். 

       இராமரும் அவ்வாறே வரமளித்தார்.

 

''உம்பரோடு இம்பர் காறும், உலகம் ஓர் ஏழும் ஏழும்,

'எம் பெருமான்' என்று ஏத்தி இறைஞ்சி நின்று ஏவல் செய்ய,

தம்பியரோடு தானும் தருமமும் தரணி காத்தான்

அம்பரத்து அனந்தர் நீங்கி, அயோத்தியில் வந்த வள்ளல்''.

 

       இராமாயணம் படிப்போர், கேட்போர் என அனைவரும், வாழ்வின் அனைத்து வளமும், செல்வமும் பெற்று நலமுடன் வாழ்வர்.

 

சுபம்.


Comments

Popular posts from this blog

தஞ்சை பெரிய கோவில் (கட்டிடக் கலையின் உன்னதம்) BRIHADEESWARAR TEMPLE

வாலி வதைப் படலம்

நளதமயந்தி கதை (NALA THAMAYANDHI STORY)