இராமாயணம் - யுத்த காண்டம் (பகுதி-1)

        ஒன்றே என்னின், ஒன்றே ஆம்; பல என்று உரைக்கின், பலவே ஆம்;

அன்றே என்னின், அன்றே ஆம் ; ஆமே என்னின், ஆமே ஆம்;

இன்றே என்னின், இன்றே ஆம்; உளது என்று உரைக்கின், உளதே ஆம்;

நன்றே, நம்பி குடி வாழ்க்கை! நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா!''


இராமனும், அவனது சேனையும் தென் திசைக் கடலினை அடைந்தனர். எழுபது வெள்ள சேனை கடற்கரையில் திரண்டது. இராமர் சீதையை எண்ணி உறக்கமில்லாத கண்களோடும், வாடிய உள்ளத்தோடும் இருந்தார்.

எரியுண்ட இலங்கையை இராவணன் தெய்வ தச்சன் மயன் உதவியுடன் புதுப்பித்தான். இராவணன் இலங்கை நகரின் அழகினைக் கண்டு, முன்பிருந்ததை விட அழகாய் உள்ளது என மகிழ்ந்து சினம் தணிந்தான். ''உலகங்கள் யாவற்றையும் பல முறை படைக்கும் பிரம்மனுக்கு இது அரிய செயல் அல்ல'' என்று கவிச்சக்கரவர்த்திக் கம்பர் கூறுகின்றார்.

          இராவணன் தன் அரண்மனையில் ஆலோசனைக் கூட்டத்தினைக் கூட்டினான். பல மதிநுட்பம் வாய்ந்த அமைச்சர்கள் சூழ ஆலோசனை மண்டபத்தில் அவன் வீற்றிருந்தான்.

          இராவணன் ''ஒரு குரங்கினால் இலங்கை நகர் எரிந்தது. என் பெயரும் கெட்டது. இதனை விடவும் எனக்கு தாழ்ச்சியைத் தருவது எதுவும் உண்டோ? என் ஆட்சியும், என் பலமும் ஒரு குரங்கால் பழிக்கு ஆளானது''.

 

''சுட்டது குரங்கு; எரி சூறையாடிடக்

கெட்டது, கொடி நகர் ; கிளையும் நண்பரும்

பட்டனர்; பரிபவம் பரந்தது எங்கணும்;

இட்டது இவ் அரியணை இருந்தது, என் உடல்''

 

அவமானம் எங்கும் பரவியது. இங்கு இந்த சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளேன் என்பதனைக் தவிர வேறு என்ன சிறப்பு உள்ளது?

இலங்கையின் கிணறுகளில் இரத்தம் ஊறுகின்றது. தீயில் வெந்த மங்கையர் கூந்தல் நாறுகின்றது. இத்தனையும் செய்த குரங்கினைக் கொன்றோமா என்றால் அதுவும் இல்லை. இனி என்ன செய்யப் போகிறோம்? என்றான்.

அப்பொழுது படைத்தலைவன் பிரகத்தன் எழுந்து பேசலானான். ''மானிடர்களாகிய இராமலக்குவரைக் கொல்ல வேண்டும். சூர்ப்பனகையின் மூக்கினை அறுத்தவர்களை அன்றே கொன்றிருக்க வேண்டும்'' என்றான்.

அடுத்து மகோதரன் எழுந்தான். அவன் ''தேவர்களும் அஞ்சுவர் இலங்கை வேந்தன் இராவணனின் பெயரைக் கேட்டால். இனி நாம் தாமதிப்பதும் எதற்கு? இப்பொழுதே சென்று அக்குரங்கையும், இராமலக்குவரையும் அழித்து வருகின்றேன்'' என்றான். வச்சிரந்தன் ''பகை வெல்ல உடனே கிளம்புவோம்'' என்றான். 

 துன்முகன் ''ஒரு குரங்கினைக் கண்டு அஞ்சுவதா? குரங்கினையும், அதனை அனுப்பிய மானிடரையும் விரைந்து கொன்று தின்போம்'' என்றான்.

          வேள்வியின் பகைவன் ''மனிதர்களால், அரக்கர்களாகிய நமது மேன்மையும், வலிமையும் தாழ்ந்தது என்றால் இதனை விடவும் வெட்கப்பட என்ன உள்ளது?'' என்றான்.

          புகை நிறக் கண்ணன் ''குரங்குப் படையை கொண்டுள்ள மனிதர்கள் மேல் போர் செய்வது என்பது நமது சிறப்புக்கு ஏற்புடையது அல்ல. ஆனாலும் வேறு வழி இல்லை. அவர்களை போரில் வெற்றி கொள்வதே நல்லது'' என்றான்.

 எல்லோரும் அதுவே உகந்தது என்றனர்.

 கும்பகர்ணன் மற்றையோரை அமர்க எனக் கூறி ''அண்ணா! நான் நன்மையைக் கூறுவேன் என நீ கருதுவாயானால் எனது கருத்துக்களைக் கேட்பாயாக. நீ பிரம்மனின் குலத்திலிருந்து வந்தவன். ஆயிரம் மறைப்பொருள் கற்றவன் நீ. இலங்கை எரியுண்டதற்கு நீ வருந்துகின்றாய். ஆனால் அரக்கரினம் அல்லாத மனிதர் இனமான இராமனின் மனைவியை கவர்ந்து சிறை வைத்துள்ளாய். இது ஏற்புடையதா? மாற்றான் மனைவியின் பாதங்களில் பல முறை விழுந்து உன் விருப்பத்திற்கு இசைய பணிகின்றாய். இது உன் புகழுக்கு ஏற்ற செயலா? நீ சீதையைக் கவர்ந்து வந்த நாளன்றே அரக்கர் புகழ் அழியலாயிற்று.

 அரக்கர் புகழ் உயர மானிடரைக் கொன்று தின்பதே சிறப்பு. இனி சீதையை விட்டால் நாம் எளியர் ஆவோம். எனவே இராமலக்குவர் மேல் போர் தொடுத்து நாம் வெல்லாவிட்டாலும் அதனால் பழி இல்லை. அவர்களை வெல்ல படை எடுப்பதே நன்று'' என்றான்.

 இராவணன் ''தம்பி! நன்று. நானும் இதையே கருதினேன். இனி செய்வதற்கு உள்ள ஒன்று அவர்கள் மேல் போர் தொடுப்பதே! நம் வீணைக் கொடிப் படை கிளம்புக'' என்றான்.

இந்திரஜித் ''மன்னா! மாபெரும் வீரர் பலர் இருக்க அற்ப மானிடரைக் கொல்ல நீங்கள் தான் செல்ல வேண்டுமா? மேன்மையும், சிறப்பும் பெற்ற இராவணனின் மகனாகிய நான் செல்கின்றேன். சீதை கண்ணீர் சிந்த, உங்கள் பாதங்களில் இராமலக்குவர் தலைகளை கொண்டு வந்து சேர்க்கின்றேன். இப்பொழுதே போருக்கு போக விடை தருக'' என்றான்.

வீடணன், அவையில் மூத்தோர் பலர் இருக்க இளையோன் நீ அமர்க என இந்திரஜித்தைக் கூறினான். பின் இராவணனிடம் ''அண்ணா! நன்மையைக் தீமை வெல்ல முடியுமா? எனது கருத்தினை நீ கேட்பாயாக''.

அண்ணா! வெற்றி தலைநகராகிய இலங்கை, சீதையின் கற்பினால் வெந்து ஒழிந்ததே அல்லாமல், ஒரு குரங்கு வந்து சுட்டது என நினைப்பது அறிவுடைமை ஆகுமா? ஒருவரின் வாழ்வு தாழ்வதும், உயர்வதும் பெண் காரணமாகவோ அல்லது மண் காரணமாகவோ அன்றி வேறு காரணத்தால் வருமோ? இராவணனின் தவப்பயன் ஒரு மானிடப் பெண்ணால் கெட்டது என்ற பெயர் நீங்குமா? நீ நெடிய பல வரம் பிரம்மனிடம் பெற்றாலும் மனிதரால் மரணம் இல்லை என்னும் வரம் பெறவில்லை. இனி உனது தோல்விக்குக் காரணம் எது என்று கூறவும் வேண்டுமா?

சீதையின் சாப மொழிகள் உனக்கு நினைவில்லையா? 'நான் உனக்கு நஞ்சாவேன்' என சீதை கூறியுள்ளாள். அவள் முன்பு பாற்கடலில் அவதரித்த இலக்குமி ஆவாள். இராமன் தயரதனின் மகன். கங்கையை பூமிக்கு கொண்டு வந்த பாகிரதனின் மரபில் வந்தவன். அரக்கர் கூட்டத்தினை அடியோடு அழிப்பேன் என சபதம் பூண்டவர்கள் இராமலக்குவர். அவர்கள் உனக்கு பகை ஆயினர். எனவே ''சீதையை விட்டு விடு'' என்றான்.

          இராவணன் ''என் பேராற்றலை உணராமல் மனிதர் வெல்வர் என்கின்றாய். பித்தர் போலப் பேசுகின்றாய். இவ்வாறு நீ கூறுவதன் காரணம், நீ மனிதர் மேல் கொண்ட அச்சத்தாலா? அல்லது அவர்கள் மேல் கொண்ட அன்பாலா? என் உடன்பிறந்தவனான உனக்கு என்னை விட மானிடர் வலிமையானவராகத் தெரிகின்றனரோ? ஏற்கனவே ஊனமான வில்லை உடைத்து, கூனியால் நாட்டினை இழந்து, கானகத்தில் மனைவியை இழந்து திரியும் ஒரு மனிதனை உன்னையல்லாமல் வேறு யார் மதிப்பர்?''

 

''ஊன வில் இறுத்து, ஓட்டை மாமரத்துள் அம்பு ஓட்டிக்

கூனி சூழ்ச்சியால் அரசு இழந்து உயர் வனம் குறுகி,

யான் இழைத்திட இல் இழந்து இன் உயிர் சுமக்கும்

மானிட வலி நீ அலாது ஆர் உளர்? மதித்தார்''

 

 வீடணன் ''அண்ணா! திருமாலே இராமனாக அவதரித்து அரக்கர்களைக் கொல்ல வந்துள்ளான். இதனை தெரிந்த பின்னும் போருக்குச் செல்வாய் எனின் என் செய்கேன்'' என்றான்.

இராவணன் ''திருமால் தான் இராமன் என்றால், அந்த திருமால் என்னிடம் எத்தனை முறை தோற்றுள்ளான்? போருக்கு அஞ்சும் நீ எங்களூடன் வர வேண்டாம். இங்கேயே ஒளிந்து இரு'' என்றான்.

 வீடணன் ''அண்ணா! உன்னை விட வலிமையுடையவர்கள் திருமாலை எதிர்த்து மாண்டனர். அவர்களில் இரணியனும் ஒருவன். திருமால் நரசிங்க மூர்த்தியாய் அவதாரம் எடுத்து, பகலும் இரவும் இல்லாத அந்திப் பொழுதில் அவன் வயிற்றினைக் கிழித்துக் கொன்றார். எனவே இதை நீ உணர்ந்து சீதையை விட்டு விடு'' என்றான். 

 இராவணன் ''இரணியன் என்னை விட வலிமை மிக்கவன், அத்தகைய வலிமையுடையவனையேக் கொன்ற திருமாலே உனக்கு பாதுகாப்பானவன் என்று அவனிடம் சேர்ந்தாயா? இரணியன் வீழ்ந்தது கண்டு பிரகலாதன் மகிழ்ந்தது போன்று நீ என் விழ்ச்சி கண்டு களிப்படைவாய். நீ என் எதிரியிடம் தானே அன்பு கொண்டுள்ளாய். நான் மாண்ட பின் என் அரசாட்சியை நீ பெற்றுக் கொள்ளாலாம் என எண்ணுகின்றாயா?'' 

 

''இரணியன் என்பவன் எம்மனோரினும்

முரணியன்; அவன் தனை முருக்கி முற்றினான்,

அரணியன் என்று, அவற்கு அன்பு பூண்டனை

மரணம் என்று ஒரு பொருள் மாற்றும் வன்மையே"

 

அன்றே அக்குரங்கினைக் கொல்லலாம் என்றேன். நீ தான் தடுத்து, தூதன் என்றாய். இப்பொழுது புரிகின்றது, நீ அன்றே மானிடர் வசம் சேர திட்டம் தீட்டியுள்ளாய் என்று தம்பியைக் கொன்ற பழி எனக்கு வேண்டா. என் கண் முன் நின்றால் நீ சாவாய். விலகிச் செல் என்றான்.            

          உடனே வீடணன் எழுந்து இராவணன் இடத்தை விட்டு நீங்கினான். பின் தன் அமைச்சர் நால்வருடன் ஆகாய மார்க்கமாக இராமன் இருக்கும் கடற்கரையை அடைந்தான். அங்கு பெரும் வானரப் படையைக் கண்டான். வீடணன் யாது செய்வது எனத் தன் அமைச்சர்களைக் கேட்ட போது அவர்கள் ''இராமபிரானைத் தரிசிப்பதே நமது கடமை'' என்றனர். வீடணனும் மகிழ்ந்து இராமனைக் காண சித்தம் கொண்டான்.

Comments