இராமாயணம் - யுத்த காண்டம் (பகுதி-5)
வீடணனின் கூற்றினைக் கேட்டு கும்பகர்ணனை, நம்முடன் சேர்த்துக் கொள்ளலாம் என சுக்ரீவன் கூறினான். இராமனும் அது சரி என்று வீடணனை, கும்பகர்ணனிடம் போய் பேசுமாறு அனுப்பினான்.
வீடணன் கும்பகர்ணிடம் சென்று அவனை வணங்கினான். கும்பகர்ணன் அவனை ஆரத் தழுவிக் கொண்டான்.
''வீடணா! தவசீலனான இராமனோடு சேர்ந்து, நீ அறம் வளர்த்தாய் என நான் பெருமை கொண்டேன். ஆனால் இப்பொழுது நீ தனியாக எங்கள் பக்கம் வரக் காரணம் என்ன?'' எனக் கேட்டான்.
வீடணன் ''அண்ணா! நீ இராமனை அடைக்கலமாக அடைந்தாயானால் அவன் உனக்கு அருள் புரிவான். உன் இளமைக் காலம் தூக்கத்தில் கழிந்தது. இனி தீமைக்காகப் போரிட்டு அழியப் போகின்றாயா? நீ இராமனை அடைந்தால் அவன் உனக்கு இலங்கையையும், அதன் செல்வத்தையும் அளிப்பான். பிறவி என்னும் தளை நீங்க உதவுவான். இன்பம், துன்பம் என மாறிமாறிச் சுழலும் இம்மாய வாழ்க்கையிலிருந்து விடுவித்து முக்தி அளிப்பான். இம்மைக்கும், மறுமைக்குமான பேற்றினை நமக்கு வழங்குவான். எனவே நீ இராமனைக் காண வருவாயாக!'' என்றான்.
''வேத நாயகனே! உன்னைக் கருணையால், வேண்டி விட்டான்
காதலால், என் மேல் வைத்த கருணயால், கருமம் ஈதே;
ஆதலால் அவனைக் காண, அறத்தோடு திறம்பாது, ஐய!
போதுவாய் நீயே என்னப் பொன் அடி இரண்டும் பூண்டான்''
கும்பகர்ணன் ''தம்பி! என்னை இவ்வளவு காலம் அருமையாக வளர்த்து, இன்று எனக்குப் போர்க்கோளம் அணிவித்து, என்னை நம்பி, சென்று வா! என்று அனுப்பிய இராவணனுக்காக என்னுயிரை வழங்காமல், நீரில் போட்ட கோலம் போல நிலையில்லாத செல்வ வாழ்க்கையை விரும்பி நான் இராமனுடன் சேர மாட்டேன்.
''நீர் கோல வாழ்வை நச்சி, நெடிது நாள் வளர்த்துப் பின்னைப்
போர்க் கோலம் செய்து விட்டாற்கு உயிர் விடாது, அங்கு போயின்
தார்க் கோல மேனி மைந்த என துயர் தவிர்த்தி ஆகின்
கார் கோல மேனியானைக் கூடுதி கடிதின் ஏகி"
நீ பிரம்ம குலத்தின் அறத்தை வளர்த்தாய். அதனால் நீ இராமனைச் சேர்வது முறையானது. இராவணன் எனக்கு செய்த செஞ்சோற்றுக் கடனுக்காக அவனுக்கு முன் என் உயிரை விடுவதே சரியானது. உற்ற துணையாக தம்பி இருந்தும், யாருமற்றவனாக இராவணன், இராமனின் அம்பு பட்டு இறப்பதைப் பார்க்கவும் என்னால் முடியமா? எனவே நீ இராமனின் பக்கம் செல். எனக்காக நீ வருந்தாதே'' என்றான்.
கும்பகர்ணன் கண்ணிருடன் வீடணனுக்கு விடை கொடுத்தான். வீடணன் இராமனை அடைந்தான்.
வீடணன் ''அண்ணலே! எவ்வளவோ எடுத்துக் கூறியும் கும்பகர்ணனின் குலத்து மானம் தீரவில்லை'' என்றான்.
இராமன் ''வீடணா! உன் முன்னால் உன் அண்ணனைக் கொல்வது முறையாகா. எனவே நீ இவ்விடம் விட்டு அகல்வாயாக'' என்றான்.
போர் தொடங்கியது. அரக்கர் சேனையும், வானர சேனையும் மோதிக் கொண்டது. யானைகளும், குதிரைகளும் ஓட எங்கும் புழுதி படலமாகக் காட்சியளித்தது. எங்கும் இரத்த ஆறு ஓடியது. கும்பகர்ணன் வானரப் படையைக் கடுமையாகத் தாக்கினான். நீலன், அங்கதன் ஆகியோர் கும்பகர்ணனின் அடி தாங்காமல் கீழே விழுந்தனர். பின் அனுமன் வந்தான்.
அனுமன் கும்பகர்ணன் மேல் குன்றினை வீசினான். தன் தலையில் பட்ட மலையையே கும்பகர்ணன் அனுமன் மேல் வீசினான். அனுமன் கடுஞ்சினத்துடன் மற்றோர் மலையைப் பெயர்த்து தூக்கி வீச, கும்பகர்ணன் மேல் விழுந்து அம்மலை தூள் தூளாகியது.
''மாருதி, வல்லை ஆகின், நில், அடா! மாட்டாய் ஆகின்
பேருதி, உயிர் கொண்டு என்று பெருங்கையால் நெருங்க விட்ட
கார் உதிர வயிரக் குன்றைக் காத்திலன்; தோள் மேல் ஏற்றான்
ஓர் உதிர நூறு கூறாய் உக்கது, எவ் உலகும் உட்க''
கும்பகர்ணனின் ஆற்றல் கண்டு தேவர்களூம் அஞ்சினர். அவன் வானரப் படையைத் தாக்கி அழித்தான். எங்கும் குருதி பாய்ந்தது. கும்பகர்ணன் பூதாகரமாய் திரிந்தான். அவன் காலில் மிதிபட்டு யானை, குதிரை, வானர வீரர்கள் என எல்லாம் நசுங்கின. வானரர்கள் அங்கும் இங்கும் ஓடினர்.
சுக்ரீவன் கும்பகர்ணனைத் தாக்க இருவருக்கும் கடுமையான போர் நிகழ்ந்தது. சுக்ரிவன் தாக்குப் பிடிக்க முடியாமல் மயங்கி விழுந்தான். கும்பகர்ணன் அவனைத் தூக்கிக் கொண்டு இலங்கை நகர் கோட்டைக்குள் நுழைய முற்பட்டான். அப்பொழுது இராமன் அதனைத் தடுக்க அவ்விடம் வந்தான். இராமன் எய்த அம்பு மழையினால், கோட்டை வாசலில் அம்புகளினால் சுவர் உண்டானது போல தடுப்பு எழும்பி கும்பகர்ணனை வழி மறித்தது.
கும்பகர்ணன், சுக்ரீவனை தோளில் வைத்துக் கொண்டே, திரும்பி இராமனுடன் போரிட வந்தான். இராம பாணம் கும்பகர்ணனின் நெற்றியைத் தாக்கியது. அவன் நெற்றியில் பட்ட அம்பினால் இரத்தம் வழிந்தது. அந்த இரத்தம் சுக்ரீவன் மேல் பட, அவன் மயக்கம் தெளிந்து, கும்பகர்ணனின் மூக்கு, செவி இரண்டையும் அரிந்தான். பின் ஒரே பாய்ச்சலாக அவன் தோளிலிருந்து அகன்றான். ஆத்திரமடைந்த கும்பகர்ணன், சரமாரியாக வானரர்களைத் தாக்கினான். இராமனின் அம்பு அவன் தேர், வாள் என அனைத்தையும் பறித்தது. கும்பகர்ணன் ஆயுதம் இன்றி தனியனாக நின்றான்.
இராமன் ''கும்பகர்ணா! நீ ஆயுதம் இன்றி தனியனாக நிற்கின்றாய். ஆயுதமில்லாத ஒருவனை நான் தாக்கி அழிக்க விரும்பவில்லை. நீ இப்பொழுது இவ்விடம் விட்டு போகிறாயா? பிறகு வருகிறாயா? அல்லது போரிட்டு சாகிறாயா?'' எனக் கேட்டான்.
''ஏதியோடு எதிர் பெருந்துணை இழந்தனை; எதிர் ஒருதனி நின்றாய்!
நீதியோனுடன் பிறந்தனை ஆதலின், நின் உயிர் நினக்கு ஈவன்;
போதியோ? பின்றை வருதியோ? அன்று எனின் போர்புரிந்து இப்போதே
சாதியோ? உனக்கு உறுவது சொல்லுதி சமைவுறத் தெரிந்து அம்மா!''
கும்பகர்ணன் ''என் தங்கை போல மூக்கிழந்து வாழ்தல் இயலாது. இராவணனிடம் சீதையை விட்டு விடு என்று கூறி வாக்கினை இழந்தேன். இப்பொழுது மூக்கினை இழந்து என்னால் வாழ இயலாது. என் மூக்கும் செவியும் இல்லாமல் என்னால் இலங்கை நகர் திரும்ப இயலாது'' என்று கூறி பெரு மலையைத் தூக்கி வீசினான். இராமன் தன் அம்பினால் அதனைத் தூளாக்கினான். இராமனின் அம்புகள் கும்பகர்ணனின் கைகள், கால்கள் என எல்லாவற்றையும் துண்டாக்கியது.
கும்பகர்ணனின் மார்பில் இராமன் அம்பெய்தான். ஆனால் அவன் சிவகவசம் அணிந்திருந்ததால் அதனை இராம பாணம் துளைக்க முடியவில்லை. பின் இராமன் தன் வில்லில் சிவ கணையைப் பூட்டி அவன் மேல் விடுத்தான். அது அவன் மார்பைத் துளைத்தது.
கும்பகர்ணன் ''இராமா, மூக்கில்லாத முகம் என்று என்னை ஒருவரும் கூறல் ஆகாது. எனவே என் தலையைத் துண்டித்து கடலில் போட்டு விடு'' என்று வரம் கேட்டான்.
''மூக்கிலா முகம் என்று முனிவர்களும் அமரர்களும்
நோக்குவார் நோக்காமே நோன்கணையால் என் கழுத்தை
நீக்குவாய்; நீக்கியபின் நெடுந்தலையைக் கருங்கடலுள்
போக்குவாய்; இது நின்னை வேண்டுகின்ற பொருள் என்றான்''
இராமனும் அவன் வரத்திற்கு இசைந்து, அவன் தலையைத் தன் அம்பினால் துண்டாக்கி கடலில் போட்டான். தலை கடலில் மூழ்கியது. கும்பகர்ணன் இறந்த செய்தியைக் கூற ஒற்றர்கள் விரைந்தனர்.
கும்பகர்ணன் மாண்ட செய்தியைக் கேட்டு இராவணன் துடித்தான். ''தம்பி! உன்னைப் போன்ற வலிமை மிக்கவனை வெல்வார் உண்டோ? என நான் பெருமை கொண்டிருந்தேனே. அவை அனைத்தும் மண்ணாகிப் போனதே. இனி நான் என் செய்வேன்'' எனப் புலம்பினான்.
இராவணனுக்கு அவன் புதல்வர்களான இந்திரஜித், அதிகாயன் ஆறுதல் கூறினர். இராவணனின் புதல்வன் அதிகாயன் போர்க்களம் புகுந்தான். அதிகாயன் இலக்குவனால் கொல்லப்பட்டான். செய்தி அறிந்த இந்திரஜித் இனி தானே போர்க்களம் செல்ல முடிவெடுத்தான்.
இலக்குவனுடன் கடுமையானப் போர் நிகழ்ந்தது. இந்திரஜித் தன் அம்புகளால் வானரப் படையை நிர்மூலம் ஆக்கினான். இலக்குவனும் அரக்கர் படையைக் கொன்று குவித்தான். அப்பொழுது இராமனும், இலக்குவனுடன் இணைந்து போரிட்டான். இந்திரஜித் இராமலக்குவர் இருவரையும் கண்டு, இது தான் சமயம் என பிரம்மாஸ்திரத்தை ஏவினான். இராமலக்குவர் இருவரும் மயங்கி விழுந்தனர். போர்க்களத்தில் வானர வீரர்கள் பெரும் குரல் எழுப்பி அலறினர். அதைக் கேட்டு சுக்ரீவன், அனுமன், ஜாம்பவான் என அனைவரும் இராமலக்குவர் மயங்கிய இடத்திற்கு ஓடி வந்தனர்.
ஜாம்பவான் அனுமனிடம் ''அனுமா! மேரு மலையில் (இமய மலை) உள்ள சஞ்சீவி மலை அரிய மூலிகைகள் கொண்டது. அம் மூலிகைகள் பிரம்மாஸ்திரத்தில் மயங்கியவர்களை உயிர் பெற வைக்கும். நீ விரைந்து சென்று நான் கூறும் மூலிகைகளைக் கொண்டு வா" என்றான்.
இதற்கிடையில் இந்திரஜித், இராமலக்குவர் மண்ணில் வீழ்ந்தனர் என இராவணனிடம் கூறினான். இராவணன் பெரு மகிழ்ச்சி அடைந்தான்.
அனுமன் சஞ்சீவி மலையினை அடைந்தான். ஆனால் ஜாம்பவான் கூறிய மூலிகைகளின் பெயரினை மறந்ததால், சஞ்சீவி மலையினை முழுமையாகப் பெயர்த்து எடுத்துக் கொண்டு இலங்கையை நோக்கிக் கிளம்பினான். அனுமன் சஞ்சீவி மலையுடன் இலங்கையுள் நுழைந்தான். வானில் பறந்து வரும் போதே அம்மலையின் மூலிகைக் காற்றுப் பட்டு மயங்கிய வானர வீரர்கள் பிழைத்து எழுந்தனர்.
இராமலக்குவர் இருவரும் துயில் நீங்கி எழுந்தவர் போன்று கண் விழித்தனர். இராமர் அனுமனின் செயலைப் பாராட்டி, அவனைத் தழுவிக் கொண்டார். இராமலக்குவர் உயிர் பிழைத்ததை அறிந்த இந்திரஜித், கோபம் கொண்டு, அரக்கன் ஒருவனை மாயத்தால் சீதையாக மாற்றி, ஆகாயமார்க்கமாக இராமலக்குவர் இருக்குமிடம் வந்தான். சீதையாக இருக்கும் அரக்கனின் தலையை வெட்டி வீழ்த்தினான். பின் இராமனிடம் ''இனி நீங்கள் போரில் வென்றாலும் சீதையை அடைய முடியாது'' எனக் கூறி மறைந்தான்.
அவ்வுடல் முன் அங்கதன், சுக்ரீவன், அனுமன் ஆகியோர் அழுதனர். இராமன் மனம் கலங்கி, என்ன செய்வது என அறியாமல் திகைத்து நின்றான். அப்பொழுது வீடணன் அனைவரிடமும் இது சீதை அல்ல. மாயவடிவின் அரக்கன். எனவே நீங்கள் மனம் தளராமல் இருங்கள். இது நம்மை திசை திருப்ப இந்திரஜித் செய்த செயல் எனக் கூறினான். மேலும் இந்திரஜித் இப்பொழுது நிகும்பலை யாகம் செய்வதாகவும், அதனைத் தடுக்காவிட்டால், அவனை யாராலும் வெல்ல முடியாது எனவும் கூறினான்.
அவன் யாகத்தை தடுக்க இலக்குவன் கிளம்பினான். யாகத்தில் இருந்த இந்திரஜித்திடம் இலக்குவன் ''போர் நடக்கும் போது நீ யாகம் செய்கிறாயா? எங்களைக் கண்டு பயந்து விட்டாயா? ஒளிந்து கொள் கோழையே!'' எனக் கூறி, யாகம் செய்வதில் இருந்து அவன் கவனத்தைத் திசை திருப்பினான்.
யாகம் முழுமையடையாமல் பயன் இல்லை. இந்திரஜித்திற்கும், இலக்குவனுக்கும் கடுமையான போர் நடந்தது. அனுமனின் தோளில் இலக்குவன் ஏறிக் கொண்டான். வீடணன் இலக்குவனிடம் ''இந்திரஜித் பகலில் அல்லாமல் இரவில் இறக்க மாட்டான்'' எனக் கூறினான். அப்பொழுது கதிரவனும் உதித்தான். இலக்குவன் இந்திரஜித்தின் தேரைச் சிதைத்தான். இந்திரஜித் வானில் மறைந்து கல் மழை பொழியச் செய்தான். இலக்குவன் இடைவிடாமல் அம்புகளை எய்து அவற்றினைத் தடுத்தான்.
ஆதிசேஷனின் அவதாரமான இலக்குவன், இராமர் மேல் ஆணை, இவ்வம்பு இந்திரஜித்தைக் கொல்லட்டும் எனக் கூறி அம்பு எய்தான். அது இந்திரஜித் தலையைக் கொய்தது.
''மறைகளே தேறத்தக்க, வேதியர் வணங்கற் பால
இறையவன் இராமன் என்னும், நல் அறமூர்த்தி என்னின்,
பிறை எயிற்று இவனைக் கோறி, என்று ஒரு பிறைவாய் வாளி
நிறை உற வாங்கி விட்டான் உலகு எலாம் நிறுத்தி நின்றான்"
இலக்குவன் இந்திரஜித்தின் தலையை இராமனின் பாதங்களில் வைத்து வணங்கினான். இராமன் மகிழ்ந்து தம்பியைத் தழுவிக் கொண்டான்.
இந்திரஜித் மாண்டான் என்னும் செய்தி கேட்டு, இராவணன் திகைத்து நின்றான். பின் போர்க்களம் சென்று மகனின் உடலைக் கண்டு கதறி அழுதான். இந்திரஜித்தின் தலையற்ற உடலைத் தூக்கிக் கொண்டு, அரண்மனைக்குச் சென்றான். மண்டோதரி மகனின் உடலைக் கண்டு பெருங்குரலெடுத்து அழுதாள்.
இராவணன் ''என்னுயிர் மகனே! உன்னை இவ்விதம் காணவா நான் உயிர் கொண்டுள்ளேன்'' எனப் பலவாறு புலம்பினான்.
பின் கடுஞ்சினத்துடன் ''இனிப் போரில் வென்றாலும் எனக்கு சீதை தேவையில்லை. அவளால் என் மகன் மாண்டான். அவளை இவ்வாளால் வெட்டிக் கொல்லப் போகிறேன்'' எனக் கூறி வெஞ்சினத்துடன் சீதை இருப்பிடம் செல்ல புறப்பட்டான்.
''என்று அழைத்து இரங்கி ஏங்க, இத்துயர் நமர்கட்கு எல்லாம்
பொன் தழைத்து அனைய அல்குல் சீதையால் புகுந்தது என்ன
வன் தழைக் கல்லின் நெஞ்சின் வஞ்கத்தாளை, வாளால்
கொன்று இழைத்திடுவென், என்னா, ஓடினான், அரக்கர் கோமான்''
அப்பொழுது மகோதரன் ''பெண்ணைக் கொன்றால் உன்னைக் கோழை என்பர்'' எனத் தடுத்தான்.
இராவணன் ''அவ்விரு மனிதரைக் கொன்றாலே என் சினம் அடங்கும் எனக் கூறி போர்க்களம் விரைந்தான். எட்டுத் திக்கிலும் வெள்ளமென வந்த அரக்கர் படையோடு இராவணன் போர்க்களம் சென்றான். ஆண் சிங்கம் போன்ற இராவணன் நூறு கோடி தேர்களுடனும், இரு நூறு கோடி குதிரைகளுடனும், பத்து கோடி யானைகளுடனும் போர்க் களத்தில் முந்திச் சென்றான்.
''நூறு கோடி தேர் நொறில்பரி நூறு இரு கோடி
ஆறு போல் மத மா கரி ஐ இரு கோடி
ஏறுகோள் உறு பதாதியும் இவற்று இவற்று இரட்டி
சீறுகோள் அரி ஏறு அனானுடன் அன்று சென்ற''
அரக்கர்களுக்கும், வானரர்களுக்கும் கடும் போர் நடந்தது. இராவணனும், இலக்குவனும் மோதிக் கொண்டனர். இராவணன் மயன் தந்த வேலினை இலக்குவன் மேல் வீசினான். இலக்குவன் மயங்கி விழுந்தான். எனவே அனுமன் மீண்டும் மூலிகை மலையான சஞ்சீவி மலையைக் கொண்டு வர இலக்குவன் உயிர் பெற்று எழுந்தான்.
இப்பொழுது இராவணனும், இராமனும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் நேரம் வந்தது. தேவர்கள் இராமனுக்காகத் தேர் அனுப்பினர். மாதலி என்னும் சாரதியுடன் தேர் இராமனுக்காக விண்ணில் இருந்து வந்தது.
''மாதலி கொணர்ந்தனன் மகோததி வளாவும்
பூதலம் எழுந்துபடர் தன்மைய பொலந்தேர்
சீத மதி மண்டலமும் ஏனை உளவும் திண்
பாதம் என நின்றது பரந்தது விசும்பின்''
இராமன் தேரினைக் கண்டு வியந்து, பின் இது அரக்கர் மாயத்தால் வந்ததோ என ஐயுற, தேரின் குதிரைகள் பழமையான வேதங்களை ஓதின. பிறகு இராமன் ஐயம் நீங்கி மாதலியுடன் தேர் ஏறி போருக்குப் புறப்பட்டான்.
Comments
Post a Comment