வாலி வதைப் படலம்
இராமாயணத்தில் இராவணனுக்கு இணையான வலிமை கொண்டவன் வாலி. அப்படிப்பட்ட வாலி இராமரால் வதம் செய்யப்பட்டதைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
இராமர் சுக்ரீவனிடம் ''உனக்கும் வாலிக்கும் உள்ள பகை யாது?'' என்றார்.
சுக்ரீவன் என் தமையன் வாலி பெரும் வலிமை வாய்ந்தவன். அவன் யாருடன் போரிடுகின்றானோ, அவர்களின் பலத்தில் பாதியைத் தான் பெறும் படி வரம் பெற்றிருந்தான். ஒரு சமயம் மாயாவி என்னும் அரக்கன் வாலியுடன் போரிட்டான். அவன் வாலியின் வீரத்தின் முன் ஈடு கொடுக்க முடியாமல், தோற்று ஓடினான்.
பின் மீண்டும் போருக்கு வந்தான். வாலி அவனைக் கொல்லாமல் விடுவதில்லை என்று துரத்திச் சென்றான். அவனும், அவனுடன் வந்தவர்களும் ஒரு குகையில் சென்று ஒளிந்து கொண்டனர். வாலியுடன், நானும் குகைக்குள் செல்ல முற்பட்ட போது, வாலி என்னைத் தடுத்தான். நானும் உனக்குத் துணையாக வருகின்றேன் என்றேன். அதற்கு அவன் ''மாயாவி என்னிடமிருந்து தப்பி ஓடி வெளியே வந்தால் நீ அவனைக் கொன்று விடு. எனவே குகை வாயிலில் காவல் இரு'' என்று கூறி குகைக்குள் சென்றான்.
குகைக்குள் வாலி சென்று இருபத்தெட்டு மாதங்கள் ஆகியது. வாலி வரவில்லை. நான் குகை வாயிலில் காவலாக இருந்தேன். ஒரு நாள் குகையில் இருந்து இரத்த ஆறு வெளி வருவதனைக் கண்டு கலங்கினேன். மாயாவியும், அவனுடன் வந்தவர்களும் வாலியைக் கொன்று விட்டதாக எண்ணினேன். எனவே நான் குகைக்குள் சென்று மாயாவியை எதிர்க்கப் போவதாகக் கூறி குகைக்குள் விரைந்தேன். ஆனால் அமைச்சர்களும், பெரியோரும் நீயும் உள்ளே போய் மாண்டால், கிஷ்கிந்தை அரசன் இல்லாத நாடாகும் என்று கூறித் தடுத்தனர். எனவே மாயாவி குகையை விட்டு வெளியே வராத படி ஒரு பெரிய பாறையைக் கொண்டு வாயிலை அடைத்து விட்டேன். பின் கிஷ்கிந்தையின் அரசனாகப் பதவியேற்றுக் கொண்டேன்.
ஆனால் குகைக்குள் நடந்ததே வேறு. வாலி மாயாவியையும், அவனுடன் வந்தவர்களையும் பல மாதங்கள் போரிட்டு வெற்றி கொண்டான். பின் குகை வாயிலில் வந்து பார்த்த போது குகை வாயில் பாறை கொண்டு அடைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்ட வாலி ''இளவல் காவல் நன்று'' என்று கூறி, கோபத்தோடு பாறையை காலால் உதைத்து உடைத்தான்.
பெரும் கோபத்தோடு நகருக்குள் வந்தான். என் முன் வந்து நின்ற வாலியைக் கண்டு நான் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். குருதி வெள்ளத்தினைக் கண்டு மாயாவி வெற்றி பெற்றதாக, தவறுதலாக எண்ணியதைச் சொல்லி, நடந்தவற்றினை விளக்கினேன்.
கிஷ்கிந்தையின் அரசனாக வாலியைப் பொறுப்பேற்கும் படி கூறி, அவன் பாதங்களில் பணிந்தேன். ஆனால் வாலி என்னை மன்னிக்கவில்லை. அவன் நான் திட்டமிட்டு, குகை வாயிலை மூடியதாக எண்ணினான். என்னை அடித்து நொறுக்கினான். என்னைக் கொல்லப் போவதாகத் துரத்தினான். நான் இரிசியமுக மலையில் ஒளிந்து கொண்டேன். இம்மலைக்கு வாலியால் வர முடியாது. வந்தால் அவன் தலை வெடித்துவிடும் என்னும் சாபம் உள்ளது.
ஒரு சமயம் துந்துபி என்னும் அரக்கன் வாலியுடன் போரிட்டான். வாலி அவனைக் கொன்று தூக்கி விசினான். அவன் இரிசியமுக மலையில் உள்ள மதங்க முனிவரின் ஆசிரமத்தில் வந்து விழுந்தான். கோபம் கொண்ட மதங்க முனிவர் வாலிக்கு சாபமிட்டார். ''நீ இம்மலையில் கால் வைத்தால் உன் தலை வெடிக்கும்'' என்று சாபமிட்டார். அதிலிருந்து அவன் இம்மலைக்கு வருவதில்லை.
அனுமனும், மற்ற அமைச்சர்களும் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அவன் உடன்படவில்லை. என் மனைவி உருமையையும் வாலி துக்கிச் சென்று விட்டான். நான் இம்மலையில் அவனுக்குப் பயந்து ஒளிந்து வாழ்கின்றேன் என்றான்.
வாலி சுக்ரீவனின் மனைவியை அபகரித்தான் என்பதனை இராமரால் எற்றுக்கொள்ள முடியவில்லை.
இராமர் சுக்ரீவனிடம், ''தீய வழியில் சென்று பிறன் மனை அபகரித்த வாலிக்கு அழிவு நிச்சயம்'' என்றார்.
சுக்ரீவன் அனுமனிடம் தனியே ஆலோசித்தான். ''அனுமனே! வாலி வரம்பில்லா ஆற்றல் உடையவன். சிவனருள் பெற்றவன். தனி ஒருவனாக பாற் கடலைக் கடையும் தோள் வலிமை பெற்றவன். இராமனின் அம்பு வாலியின் வஜ்ரம் பொருந்திய உடலை துளைத்துச் செல்லுமா?'' என ஐயமுடன் கேட்டான்.
அனுமன் ''சுக்ரீவா! நீ இராமனின் ஆற்றலில் சந்தேகம் கொள்ளாதே. இராமனின் பெரிய கைகளிலும், பாதங்களிலும் சங்கு, சக்கர குறி உள்ளது. அவர் திருமாலின் அவதாரமே'' என்றான்.
''சங்கு சக்கரக்குறியுள நடக்கையில் தாளில்
எங்கும் இத்துணை இலக்கணம் யாவர்க்கும் இல்லை
செங்கண் விற்கரத்து இராமன் அத்திரு நெடு மாலே
இங்கு உதித்தனன் ஈண்டு அறம் நிறுத்துதற்கு இன்னும்''
அனுமன் ''சிவ தனுசை இராமன் உடைத்தான். திருமாலைத் தவிர வேறு யாரால் இதனைச் செய்ய இயலும். மேலும் என் தந்தை வாயு பகவான், துன்பம் வந்த காலத்து திருமாலே உனக்கு உதவ வருவான். அப்பொழுது உன் உள்ளத்தில் அன்பு பெருகும்'' என்றார். எனக்கு இராமனைக் கண்டவுடன் உள்ளத்தில் அன்பு பெருகின்றது. எனவே இராமன் திருமாலே.
இராமனது ஆற்றலை அறிய உனக்கு ஒரு வழி கூறுகின்றேன். ஏழு மராமரங்கள் உள்ள பகுதி இங்கு உள்ளது. ஏழு மராமரங்களில் ஒன்றினை ஊடுருவிச் செல்லும் படி இராமனை அம்பு போடச் சொல் என்றான்.
சுக்ரீவன் ''நல்ல ஒரு உபாயம் கூறினாய் அனுமா!'' என்றான்.
சுக்ரீவன் இராமனிடம் ''இராமா! இப்பகுதியில் மராமரங்கள் ஏழு உள்ளன. அவற்றில் ஒரு மராமரத்தில் உன் அம்பு ஊடுருவிச் செல்லும் படி செய்க'' என்றான்.
இராமன் புன்னகையுடன் தன் வில்லில் நாணேற்றி அம்பெய்தான். அவ்வம்பானது ஏழு மராமரங்களையும் ஊடுருவிச் சென்றது.சுக்ரீவன் மகிழ்ச்சியுடன் இராமனைத் தழுவிக் கொண்டான்.
''ஏழு மா மரம் உருவிக் கீழ் உலகம் என்று இசைக்கும்
ஏழும் ஊடு புக்கு உருவிப் பின் உடன் அடுத்து இயன்ற
ஏழ் இலாமையால் மீண்டது, அவ் இராகவன் பகழி
ஏழு கண்டபின் உருவுமால், ஒழிவது அன்று, இன்னும்''.
சுக்ரீவன் இராமனின் வில்லாற்றலை நேரில் கண்ட பின், அனுமன் கூறியது போன்று இராமன் திருமாலின் அவதாரமே எனத் தெளிந்தான்.
''வையம் நீ வானும் நீ மற்று நீ மலரின் மேல்
ஐயன் நீ ஆழிமேல் ஆழி வாழ் கையன் நீ
செய்யதீ அனைய அத் தேவும் நீ நாயினேன்
உய்ய வந்து உதவினாய் உலகம் முந்து உதவினாய்''
சுக்ரீவன் இராமனைப் பலவாறு போற்றினான். வாலியால் துன்புற்ற வானரர்கள், இராமனின் பேராற்றல் கண்டு ஆடிப் பாடி மகிழ்ந்தனர். வாலியின் அழிவு நிச்சயம் என மனத்திடம் கொண்டனர்.
வாலியை அழிக்க இராமன் கிளம்பினான். அவனோடு இலக்குவன், சுக்ரீவன், அனுமன், மற்றுமுள்ள வானரங்கள் ஆகியோர் புறப்பட்டனர். அனைவரும் கிஷ்கிந்தையை அடைந்தனர்.
இராமன் சுக்ரீவனிடம் ''சுக்ரீவா! நீ வாலியைப் போருக்கு அழை. நீ வாலியுடன் போரிடும் போது நான் மறைந்து நின்று வாலி மேல் அம்பு எய்துகின்றேன்'' என்றான்.
சுக்ரீவனும் மிக நன்று எனக் கூறி வாலியை போருக்கு வரும் படி பெரும் குரலெடுத்து கூப்பிட்டான். ''வாலி என்னோடு போருக்கு வா, உன்னை நான் கொல்லப் போகின்றேன்'' என்றான்.
இளவல் கூவலைக் கேட்ட வாலி உலகமெலாம் நடுங்கும் படி அடங்காச் சினத்தோடு சுக்ரீவனுடன் போர் செய்யக் கிளம்பினான். ஆனால் அவன் மனைவி தாரை வாலியைத் தடுத்தாள்.
தாரை வாலியிடம் ''ஐயனே! சுக்ரீவன் உங்கள் வீரத்தின் முன் ஈடுகொடுக்க முடியாமல் தோற்று ஓடி, இவ்வளவு நாள் ஒளிந்து இருந்தான். இப்பொழுது அவனே வந்து உங்களைப் போருக்கு அழைக்கின்றான் என்றால் அவன் பெருவலிமை பெற்றான் என்பதால் இல்லை. அவன் இராமன் என்னும் பெருந்துணை கொண்டதாலே'' என்றாள்.
வாலி ''பெண்ணே! மூன்று உலகங்களிலும் உள்ள வல்லமை வாய்ந்தவர்கள் வந்தாலும், அவர்களை நான் வெல்வேன். திருப்பாற்கடலினை என் தோள் வலிமையால் நான் ஒருவனே கடைந்தேன் என்பதனை நீ மறந்து விட்டாயா?'' மேலும் இராமன் அறத்தில் சிறந்தவன். அவன் எந்த ஒரு காரணமும் இன்றி, என்னை எதற்காகக் கொல்ல வேண்டும். இரு தரப்பையும் சமமாக எண்ணும் அறசீலன் இராமன். எனவே இராமன் அறமற்ற செயலைச் செய்ய மாட்டான்.
''இருமையும் நோக்குறும் இயல்பினாற்கு இது
பெருமையோ? இங்கு இதில் பெறுவது என் கொலோ?
அருமையின் நின்று உயிர் அளிக்கும் ஆறுடைத்
தருமமே தவிர்குமோ தன்னைத் தான் அரோ?''
தாரை கலங்காதே! பயமின்றி இரு. நான் சுக்ரீவனையும் அவனோடு வந்தவர்களையும் அழித்துவிட்டு வருகின்றேன் என்றான்.
வாலி இவ்வாறு பேசியதும் தாரை பேச்சற்று அமைதியானாள்.
பெரிய மலையை ஒத்து விளங்கும் வாலி, மாநரசிங்கமூர்த்தி போல எதிர்பட்டு தன்னைக் காண்கின்ற எல்லோரும் அஞ்சி நடுங்கும் வகையில் வெளியே வந்து நின்றான். போர் முழக்கம் செய்கின்ற சுக்ரீவனை நோக்கி தானும் போர் முழக்கம் செய்தான்.
வாலியும் சுக்ரீவனும் கடுமையாகப் போரிட்டனர். இரண்டு வலிமையான யானைகள் ஒன்றுடன் ஒன்று மோதுவது போன்று இருவரும் மோதிக் கொண்டனர். வாலி சுக்ரீவனை பலமாகத் தாக்கினான். ஆனால் மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்த இராமனுக்கு வாலி யார், சுக்ரீவன் யார் என்பது தெரியவில்லை. இருவரும் தோற்றத்தில் ஒரே மாதிரி இருந்ததால் இராமனுக்கு யார் மீது அம்பு எய்துவது எனக் குழப்பம் ஏற்பட்டது.
வாலியிடம் கடுமையாக உதைப்பட்ட சுக்ரீவன், வலி தாங்க முடியாமல் இராமனிடம் ஓடி வந்தான்.
இராமன் சுக்ரீவனிடம் ''சுக்ரீவா! நீயும் வாலியும் தோற்றத்தில் ஒரே மாதிரி இருப்பதால், எனக்கு இருவரையும் வேறுபடுத்திப் பார்க்க இயலவில்லை. எனவே இலக்குவன் தரும் பூமாலையை அணிந்து கொண்டு மீண்டும் போருக்குச் செல்'' என்றான்.
சுக்ரீவனும் இராமன் கூறியது போல, பூமாலையை அணிந்து கொண்டு மீண்டும் போருக்குச் சென்றான். தோற்றோடியவன் மீண்டும் வந்தது கண்டு வாலி, சினத்துடனும், சிறு நகைப்புடனும், சுக்ரீவன் மயக்கமடையுமாறு அவனது உயிர் நிலையில் எல்லாம் அடித்தான், உதைத்தான்.
''அயிர்த்த சிந்தையன், அந்தகன் குலைகுலைந்து அஞ்ச
செயிர்த்து நோக்கினான்; சினத்தொடு சிறு நகை செய்யா
வயிர்த்த கையினும், காலினும் கதிர் மகன் மயங்க,
உயிர்த் தலந்தொறும் புடைத்தனன்; அடித்தனன்; உதைத்தனன்''
வாலி சுக்ரீவனைக் கொல்ல முற்படுகையில், இராமபாணம் வாலியின் மார்பில் குத்தியது. மேரு மலையை ஒத்த வாலி பூமியில் வீழ்ந்தான். அவன் தன் மேல் அம்பு விட்டது யார்? என ஐயமுற்றான். தேவர்கள் இச்செயலைச் செய்தார்களோ? என எண்ணினான். பின் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க தேவர்களுக்கு தான் உதவியிருப்பதால், அவர்கள் இச்செயலினைச் செய்ய மாட்டார்கள் எனத் தெளிந்தான்.
பின் வாலி ''இதனைச் செய்தது யார்?'' என்னும் ஐயத்தோடு தன் மார்பில் பாய்ந்த அம்பினை எடுத்தான். வாலி மார்பில் இருந்த அம்பினை எடுத்தவுடன் வெள்ளமென இரத்தம் பெருகி ஓடியது. வாலியின் நிலையைக் கண்ட சுக்ரீவன் உடன்பிறப்பென்னும் பாசத்தால் கண்ணீர் வடித்தான்.
தன் மார்பில் இருந்த அம்பினை கையில் எடுத்த வாலி, அதில் இராமனது பெயர் பொறிக்கப்பட்டிருப்பதனைப் பார்த்தான். அப்பொழுது இராமன் அவ்விடம் வந்தான். பின் வாலி இராமனிடம் இராமா! இது தான் உன் தருமமா? தந்தையின் வாக்கிற்காக அரச பதவியைத் துறந்து கானகம் வந்து தவ வாழ்வு வாழும் நீ, இப்பொழுது வில்லறம் துறந்து என் மேல் அம்பு எய்தாய். உனக்கும் எனக்கும் என்ன பகை இராமா? இருவர் போரிடும் போது ஒருவர் மேல் மறைந்து நின்று அம்பு எய்துதல் எவ்வகையில் அறமாகும்.
''இருவர் போர் எதிருங்காலை இருவரும் நல்லுற்றாரே !
ஒருவர் மேல் கருணை தூண்ட ஒருவர் மேல் ஒளித்து நின்று
வரிசிலை குழைய வாங்கி வாயம்பு மருமத்து எய்தல்
தருமமோ? பிறிதொன் றாமோ? தக்கிலது என்னும் பக்கம்''
இராமா! நீயே இவ்வாறு முறை தவறி நடந்தால், பின் இழிந்தவர்கள் நிலைமை என்னவாகும்? இராவணன் செய்தது தவறென்றால் நீ செய்தது சரியாகுமா? சீதையை மீட்பதற்காகவா இதனைச் செய்தாய்? என்னிடம் கூறியிருந்தால் நான் இராவணனை அழித்து சீதையை மீட்டு உன்னிடம் அளித்திருப்பேனே! இராவணனை அழிக்க புயல் போன்ற என்னை விடுத்து முயல் போன்ற சுக்ரீவனின் துணைக் கொண்டாயே. இவ்வாறு வாலி பலவாகப் புலம்பினான்.
வாலி பலவாகப் பேசினாலும், அவற்றினைப் பொறுமையாகக் கேட்ட இராமன் பின் பதில் அளித்தான்.
இராமன் ''வாலி, நீ சுக்ரீவன் மனைவியைக் கவர்ந்து சென்றது அறமில்லாத செயல். பிறன் மனை நயத்தல் கொடிய குற்றமாகும். மேலும் சுக்ரீவன் முதலில் என்னிடம் வந்து அபயம் எனக் கேட்டதனால் நான் அவனுக்கு உதவி செய்தேன். நானும் சுக்ரீவனும் நண்பர்களாக நட்பு பிரமானம் செய்து கொண்டோம். சுக்ரீவன் உன்னிடம் நாட்டினை அளித்து, தான் செய்தது தவறு என மன்னிப்புக் கேட்டும் நீ அவனைக் கொல்ல துரத்தினாய். நீங்கள் இருவரும் போரிடும் போது நான் உங்கள் முன் வந்தால், நீயும் என்னிடம் சரணடைந்தால், என்னால் சுக்ரீவனுக்குக் கொடுத்த வாக்கினை நிறைவேற்ற முடியாது. எனவே மறைந்து நின்று அம்பெய்தேன்'' என்றான்.
''இனையது ஆதலின், எக்குலத்து யாவர்க்கும்,
வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும்
அனைய தன்மை அறிந்தும், அழித்தனன்,
மனையின் மாட்சி என்றான், மனு நீதிமான்''
இராமனின் விடையால், வாலி தன் குற்றங்களை உணர்ந்தான். தவற்றினை உணர்ந்த வாலி, இராமன் பெருமைகளையும் உணர்ந்ததனால், தான் என்னும் செருக்கற்று அடங்கினான்.
வாலி இராமனிடம் ''இராமா! எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டி அருள் செய்பவன் நீ. அறமும், நடு நிலையும், நற்குண அறிவும் உடையன். நாய் போலும் இழிந்த என்னை மன்னித்து, என் குற்றங்களைப் பொறுத்தருள்வாயாக.
''தாய் என உயிர்க்கு நல்கி தருமமும், தகவும், சால்பும்
நீ என நின்ற நம்பி ! நெறியினின் நோக்கும் நேர்மை
நாய் என நின்ற எம்பால், நவை அற உணரலாமே?
தீயன பொறுத்தி என்றான் சிறியன சிந்தியான்''
வாலி பின்னும் இராமனிடம் ''எந்தையே! கொடிய சொற்களினால் உன் மனத்தைக் காயப்படுத்திவிட்டேன். அவற்றினை மனத்தில் கொள்ளாதே. துன்பத்தைத தருகின்ற பிறவி என்னும் கொடிய நோயிலிருந்து என்னைக் காப்பாயாக. மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம்''. உயிர் நீங்கும் சமயத்தில் மெய்யுணர்வு தந்து எனக்கு அருள் செய்தாய்.
என்னுள் மாற்றம் தந்து, அஞ்ஞானத்தைக் களைந்து, எனக்கு நல்லறிவு புகட்டினாய். இனி எனக்கு கிடைத்தற்கரிய வீடு பேற்றினை அருள்வாயாக. ''தா அரும் பதம்''
இராமா! இன்னும் உன்னிடம் இரப்பது ஒன்று உண்டு. என் தமையன் சுக்ரீவனை, அண்ணனைக் கொன்றவன் என்று பழிப்பார்களானால் அதனை நீ
தடுப்பாயாக. சுக்ரீவன் தன் சிறுமையினால் ஏதேனும் தவறிழைத்தால் அவற்றினை நீ பொறுத்தருள்வாயாக என்றான்.
உயிர் பிரியும் தருவாயில் வாலி தன் மகன் அங்கதனைக் காண வேண்டும் என்றான். சுக்ரீவன் சென்று அங்கதனை அழைத்து வந்தான். தன் தந்தையின் நிலையினைக் கண்ட அங்கதன் கதறி அழுதான். வாலி அங்கதனைத் தேற்றினான்.
வாலி அங்கதனிடம் ''மகனே! மனத்திடம் கொண்டு இருப்பாயாக. பிறப்பும் இறப்பும் இவ்வுலகின் நியதி. நான் இராமன் என்னும் மெய்பொருளால் ஞானம் பெற்றேன். நீ
இராமனை அபயமாக சரணடைந்து வாழ்வில் வளம் பெறுவாயாக'' என்றான்.
வாலி இராமனிடம், அங்கதனை ஒப்படைத்தான். பின் ''இராமா அங்கதன் உன் பொறுப்பு'' என்றான். இராமன் அங்கதனை ஏற்றுக் கொள்ள வாலி பரம பதம் அடைந்தான்.
Comments
Post a Comment