கள்ளழகர் ஆற்றில் இறங்கும் கதை


அழகர் கோவில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு பழைமையான ஆலயம் ஆகும். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் பல பெருமைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்கும் இத்தலம் "திருமாலிருஞ்சோலை" என்றும் அழைக்கப்படுகிறது.  இங்கு கள்ளழகராக அவதாரம் எடுத்து எழுந்தருளியிருக்கும் சுந்தரராஜ பெருமாள் சங்கு, சக்கரம், வில், வாள், கதை என பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார்.

மதுரை மாவட்டத்தில் சித்திரைத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த விழாவாகும். மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், அதைத் தொடர்ந்து வரும் கள்ளழகர் ஆற்றில் இறங்கு வைபவமும் தூங்கா நகரமான மதுரையில் வெகு விமர்சையாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

தன் தங்கை மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வர பெருமானுக்கும் திருமணம் நடக்கும் செய்தியைக் கேள்விப்பட்டு, அழகர் சுந்தரராஜப் பெருமாள், கள்ளழகர் திருக்கோலத்துடன் அழகர் மலையிலிருந்து இறங்கி, சகல கொண்டாட்டத்துடன் மதுரையை நோக்கி வருகிறார். வரும் வழி எங்கும் தம் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து, அருள் வழங்கி வருவதால் திருமணத்தைக் காண முடியாமல் போய்விடுகிறது. அந்த சோகத்துடன் வைகையில் எழுந்தருள்கிறார் என்கிறது ஒரு புராணக் கதை.

மற்றோர் புராணக் கதையில் சுதபஸ் என்ற முனிவர் நூரபுங்கயில் நீராடி, வேங்கடப் பெருமாளை நோக்கி தவமிருந்தார். அவ்வேளையில் துர்வாச முனிவர், தன் பரிவாரங்களுடன் அவ்வழியாக வந்தார். சுதபஸ் முனிவர் தவத்தில் இருந்ததனால் துர்வாச முனிவர் வந்ததைக் கவனிக்க வில்லை. இதனால் ஆத்திரமடைந்த துர்வாச முனிவர், சுதபஸ் முனிவரை தவளையாக மாறும் படி சாபமிட்டார். கள்ளழகர் என்றழைக்கப்படும் சுந்தரராஜ பெருமாள் அவதரித்து, இச்சாபத்தில் இருந்து சுதபஸ் முனிவரை மீட்டெடுப்பார் என்றும் கூறினார்.

தவளை வடிவம் காரணமாக 'மண்டூக மகரிஷி' என்று பெயர் பெற்றார் சுதபஸ் முனிவர். அவர் தேனூரில் வேகவதி என்றழைக்கப்படும் வைகை நதிக்கரையில் தவம் செய்தார். மண்டூக மகரிஷியை சாபத்திலிருந்து மீட்க்ம்பப்படுகிஅ எண்ணி சுந்தரராஜ பெருமாள் அழகர் மலையிலிருந்து இறங்கி வந்தார். அது முதல் மலைப்பட்டி, அலங்காநல்லூர், வயலூர் வழியாக கள்ளழகர் தேனூருக்கு வருவதாக நம்பப்படுகிறது. தேனூர் மண்டபத்தில் இறைவன் முனிவருக்கு சாப விமோசனம் தந்தபின்னர், வைகை ஆற்றில் இறங்கும் அழகர், பின்னர் தன் இருப்பிடம் செல்வதாக ஐதீகம்.

அழகரின் ஆடை

அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். இப்பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமை பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப்புடவை கிடைக்கிறதோ, அது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் தினத்தில் அணிவிக்கப்படும்.

சித்திரைத் திருவிழாவின் பத்து நாள் கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. சுந்தரராஜ பெருமாள் அழகர் மலையிலிருந்து கிளம்பி வழி நெடுக பக்தர்களுக்கு அருளாசி வழங்கி, தேனூரில் வைகையாற்றில் இறங்கிய பின்னர், மீண்டும் அழகர் மலையை அடைகிறார். பத்து நாட்களும் மதுரை மாநகரம் திருவிழாக் கோலம் பூண்டு மக்களை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்கின்றது.

Comments

Popular posts from this blog

நளதமயந்தி கதை (NALA THAMAYANDHI STORY)

சென்டினல் மக்கள் (THE SENTINELESE)

திருப்பாண்டிக் கொடுமுடி (KODUMUDI TEMPLE)