நளதமயந்தி கதை (NALA THAMAYANDHI STORY)
மகாபாரதத்தில் வரும் ஒரு கிளைக் கதையே நளதமயந்தி கதை ஆகும். இக்கதையைக் கேட்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் சனி பகவானின் பாதிப்பு குறையும் என்னும் நம்பிக்கை நிலவுகிறது. இனி கதையினுள் செல்வோம்.
நெடுத நாட்டு மன்னன் வீரசேனன். இவரது மகன் நளன். ஒரு நாள் நளன் அரண்மனைத் தோட்டத்தில் உலாவி வந்த போது, ஓர் அழகிய அன்னப்பறவை பறந்து வந்து அவனது அருகில் நின்றது. நளன் அப்பறவையின் அழகினைக் கண்டு வியந்தான். நளன் மேலும் ஆச்சரியம் அடையும் வகையில் அப்பறவை இனிய மொழியில் பேசியது.
அன்னப்பறவை நளனிடம் "மன்னா! நீ பேரழகு உடையவனாகவும், அறிவாற்றல் உடையவனாகவும், மக்களின் நலனில் அக்கறை உடையவனாகவும் விளங்குகிறாய். நற்குணங்கள் உள்ள உனக்கு மனைவியாக வரும் பெண்ணும் அழகாகவும், அறிவுடையவளாகவும், குணவதியாகவும் இருக்க வேண்டும். அப்படிபட்டப் பெண் ஒருத்தி இருக்கிறாள். அவள் பெயர் தமயந்தி" என்று கூறியது. மேலும் தமயந்தியின் அழகினை வர்ணித்தது. இதனைக் கேட்ட நளன் தமயந்தியைப் பார்க்காமலேயே அவள் மேல் காதல் கொண்டான். அப்போது அந்த அன்னம் நளனிடம், "தமந்தியிடம் தூது செல்லவா?" எனக் கேட்டது. அதற்கு நளனும் சம்மதம் தெரிவிக்க, உடனே பறந்து சென்ற அன்னம் தனிமையில் இருந்த தமயந்தியிடம், நளனுடைய பெருமைகளை ஓர் பாடலாகப் பாடியது. இதனைக் கேட்ட தமயந்தி நளன் மேல் காதல் கொண்டாள்.
இச்சமயத்தில் தமயந்தியின் தந்தை பீமன் தன் மகளுக்கு சுயம்வர ஏற்பாடு செய்தான். இந்த சுயம்வரத்திற்கு இளவரசர்களும், வானுலக தேவர்களும் வந்தார்கள். அவ்வாறு வந்த தேவர்களில் சனி பகவானும் ஒருவர். தேவர்கள் அனைவரும் தமயந்தி நளன் மேல் காதல் கொண்டுள்ளாள் என அறிந்து, நளனைப் போலவே உருவம் கொண்டு அங்கு வந்தார்கள்.
நளனின் கழுத்தில் மாலை அணிவிக்க வேண்டும் என்ற ஆவலோடும், விருப்பத்தோடும் வந்த தமயந்தி, அங்கு நளன் போலவே ஆறு பேர் நிற்பதனைக் கண்டு குழம்பினாள். பின்னர் தேவர்கள் கண் இமைகளை இமைக்க மாட்டார்கள் என்பது நினைவுக்கு வர, நளனின் கழுத்தில் மாலை சூட்டினாள். நளதமயந்தி திருமணம் இனிதே நடைபெற்றது.
திருமணத்திற்குப் பிறகு நளன் தன் மனைவியான தமயந்தியை நெடுத நாட்டிற்கு அழைத்துச் சென்றான். சுயம்வரத்திற்கு வந்து ஏமாந்து போன தேவர்கள் அத்தனைப் பேரும் கடும் கோபம் கொண்டார்கள். இவர்களில் ஒருவரான சனி பகவான் நளனை துன்பப்படுத்துவதற்கு தக்க சமயத்தினை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் நளனுடைய தந்தை, நளனுக்கு பட்டபிஷேகம் செய்து அரசனாக அறிவிக்கிறார். நெடுத நாட்டின் மன்னனாக நளனுக்கு முடிசூட்டப்படுகிறது. நளன் மக்களின் நலனில் அக்கறை கொண்டவனாக, நல்லாட்சி புரிந்து வந்தான். நளதமயந்தியின் இனிய இல்லறத்தின் பயனாக இரு குழந்தைகள் பிறக்கிறார்கள். அவர்கள் இந்திரசேனன், இந்திரசேனா ஆகும்.
தக்க சமயத்தினை எதிர்பார்த்து சனி பகவான் காத்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் நளன் கோயிலுக்குப் போகும் போது, தன்னுடைய கால்களை சரியாகக் கழுவாமல் போனான். இதனையே காரணமாகக் கொண்டு சனி பகவான் நளனைப் பீடித்தார். அது வரையில் சரியாகச் சென்று கொண்டிருந்த நளனின் வாழ்வில் துன்பங்கள் தொடங்கின. நளனுக்கு சூதாடும் பழக்கம் இருந்தது. ஒரு நாள் நளனுடைய அமைச்சரான புட்கரன் அவனை சூதாட்டத்தில் தோற்கடித்து, அவனுடைய ஆட்சியையும், நாட்டினையும் பெற்றுக் கொண்டான்.
இப்போது நளன் காட்டிற்கு வனவாசம் செல்ல வேண்டிய நிலைமை வந்தது. தமயந்தி தன் இரு குழந்தைகளையும் அவளுடைய அன்னையிடம் ஒப்படைத்து விட்டு, நளனுடன் சென்றாள். காட்டில் சரியாக உணவு கிடைக்காததால் இருவரும் சோர்வுற்றனர். நளன் தமயந்தியிடம் நீ என்னோடு வந்தால் மேலும் பல துன்பங்களை அனுபவிக்கவேண்டி வரும். எனவே 'உன் தந்தை வீட்டிற்கு செல்' என்று கூறினான். ஆனால் தமயந்தி அதனை மறுத்து, அவனோடே இருப்பதாகக் கூறினாள். எனவே நளன் தமயந்திக்குத் தெரியாமல், அவள் தூங்கும் போது அவ்விடம் விட்டு அகன்று சென்றான்.
கண் விழித்த தமயந்தி நளனைக் காணாமல், தன் தந்தையின் நாட்டிற்குச் சென்றாள். தமயந்தி அவளின் தந்தை வீட்டில் உள்ளாள் என அறிந்து நளன் நிம்மதி அடைந்தான். தமயந்தியைப் பிரிந்து சென்ற பின் நளனுக்கு நடந்தவை யாது?
நளன் அடர்த்தியான காடு வழியே செல்லும் போது "காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்" என்னும் அபயக் குரலினைக் கேட்டான். அந்தக் குரல் வந்த திசையை நோக்கிச் சென்று பார்க்கும் போது, அங்கு மரங்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன. அதில் சிக்கிக் கொண்டிருந்த கார்கோடன் என்னும் பாம்பே அவ்வாறு கத்தியது. உடனே நளன் அந்தப் பாம்பை தீயிலிருந்து காப்பாற்றினான். கார்கோடன் நளனுக்கு நன்றி கூறியது. மேலும் அவனுக்கு உதவும் நிமித்தமாக உருவம் மாறும் வரத்தினை வழங்கியது. இதனால் நளன் கூன் விழுந்த கிழவனாக மாறினான். மேலும் கார்கோடன், நளனிடம் "உனது அழகான உருவம் எப்போது வேண்டும் என்று நினைக்கிறாயோ, அப்போது இந்த உடையை அணிந்து கொள். உனது அழகிய உருவம் திரும்பக் கிடைக்கும்" என்று கூறி ஓர் உடையைக் கொடுத்தது. நளன் கார்கோடனுக்கு தன் நன்றியைத் தெரிவித்தான்.
அதன் பின் நளன் கூன் விழுந்த கிழவனின் உருவத்தோடு அயோத்தி நாட்டுக்குச் சென்றான். அங்கு ஓர் அரசனுக்கு தேரோட்டியாக இருந்தான். நளனுக்கு மிகவும் வேகமாக தேர் ஓட்டத் தெரியும். அந்த வித்தையை அரசனுக்குக் கற்றுக் கொடுத்தான். அரசனும் ஒரு மரத்தில் இருக்கின்ற இலைகளை எவ்வளவு வேகமாக எண்ண வேண்டும் என்கிற வித்தையை நளனுக்குக் கற்றுக் கொடுத்தான்.
இவ்வாறாக நளன் தேரோட்டியாகவும், தமயந்தி தன் தந்தை வீட்டிலும் வாழ்ந்து வருகிறார்கள். காலங்கள் உருண்டோடி 12 வருடங்கள் முடிவடைந்தன.
இச்சமயத்தில் தமயந்தி ஒரு யோசனை செய்தாள். நளனை எவ்வாறாகிலும் கண்டுபிடித்தாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டாள். நளன் தன்னைத் தேடி வரவேண்டும் என்பதற்காக, தனது தந்தையிடம் சொல்லி சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தாள்.
அவள் நினைத்த படியே அச்சுயம்வரத்திற்கு அயோத்தி மன்னனின் தேரோட்டியாக நளன் வந்தான். நளனுடைய பாதம் அந்த இடத்தில் பட்ட உடனேயே தமயந்தியின் உள்ளுணர்வு ஏதோ சொல்ல, அவளின் கண்கள் நளனைத் தேடியது. அன்றுதான் சனி பகவான் நளனை விட்டு விலகும் நாள். எவ்வளவு துன்பம் வந்தாலும் நேர்மையாக இருக்கும் நளனைப் பார்த்த சனி பகவான், அவனை விட்டு விலகிச் சென்றார்.
தமயந்திக்கு சுயம்வரம் நடக்கும் நிகழ்ச்சியைப் பார்த்த நளன், உடனே கார்கோடன் கொடுத்த உடையை அணிந்து கொண்டு அழகிய உருவம் பெற்றான். நளனைக் கண்ட தமயந்தி பெருமகிழ்ச்சியோடு அவனுக்கு மாலையைச் சூட்டுகிறாள். இருவரும் ஒன்று சேர்ந்தனர்.
இந்த திருமணத்திற்குப் பிறகு, தமயந்தியின் தந்தை பீமன், நளனிடம் உனக்கு என்ன சீர் வரிசை வேண்டும் எனக் கேட்க, அதற்கு நளன் "உங்களிடம் உள்ள படைகளைக் கொடுங்கள். நான் எனது நாட்டை மீட்க வேண்டும்" என்று கூறினான். பீமனும் நளன் கேட்ட படைகளைக் கொடுக்க, நெடுத நாட்டில் கொடுமையான ஆட்சி புரிந்து வரும் புட்கரனை நளன் தோற்கடித்து, நெடுத நாட்டின் மன்னனாக தனது நல்லாட்சியைத் தொடங்கினான்.
அனைத்து துன்பங்களும் நீங்கியதால், நளனும் தமயந்தியும் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தனர். அங்கு அவர்களுக்கு காட்சி அளித்த சனி பகவான், அவர்களிடம் "உங்களுக்கு மிகுந்த துன்பம் அளித்து விட்டேன். உங்களுக்கு வரம் தர விரும்புகிறேன், கேளுங்கள்" என்றார்.
அதற்கு நளன் தனக்காக எதுவும் கேட்காமல் "இவ்வுலகில தாங்கள் பட்ட துன்பங்களை எவரும் படக் கூடாது" எனவும், மேலும் நளதமயந்தி கதையை யாரெல்லாம் கேட்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் உங்களுடைய பாதிப்பிலிருந்து விடுவிப்பு வேண்டும்" என்றும் கேட்டான். சனி பகவானும் அவர்கள் கேட்ட வரத்தினை நல்கினார்.
நெடுத நாட்டில் நளன் நல்லாட்சி புரிந்து, தமயந்தியோடு இனிதே வாழ்ந்தான்.
முற்றும்.