அங்கோர்வாட் கோயில் - கம்போடியா(Angkor wat temple- Cambodia)
உலகின் மிகப் பெரிய கோயிலாக 'அங்கோர்வாட்' விளங்குகிறது. சூரியவர்மன் என்னும் மன்னரால் விஷ்ணு பகவானுக்காகக் கட்டப்பட்ட பிரமாண்டமான கற்கோவில் இதுவாகும். சூரியவர்மன் இராஜ ராஜ சோழனின் நெருங்கிய நண்பன் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். 11 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இவ்வாலயம் சூரியவர்மனின் ஆட்சிக்குப் பிறகு, புத்தரின் ஆலயமாக மாற்றப்பட்டது. இவ்போது கோவிலின் மையப்பகுதியில் கோபுரத்தின் கீழ் இருப்பது புத்தரின் சிலையே ஆகும்.
இந்த மாபெரும் ஆலயம் 400 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்டதாக விளங்குகிறது. அங்கோர்வாட் என்பதன் பொருள் 'கோவில் நகரம்' என்பதாம். இக்கோவிலைக் கட்ட 40 ஆண்டுகள் ஆனதாகக் கூறப்படுகிறது.
கோவிலின் அமைப்பு
முற்றிலும் கற்களால் கட்டப்பட்ட இக்கோவில், மேற்கு பார்த்த வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.கோவிலைச் சுற்றி 5 கிலோமீட்டர் சுற்றளவுள்ள அகழி உள்ளது. இதன் ஆழம் 13 அடி. பல ஆயிரம் மக்களின் உழைப்பினால், 53 மில்லியன் கன அடி மணல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. பெரிய கோவிலின் நிலத்தடி நீரைப் பாதுகாக்க இது உதவுகிறது.
அகழிக்கு முன்னால் சிங்கங்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐந்து தலை நாகமும், அதன் நீளமான உடலும், கைப்பிடிச் சுவராக அமைக்கப்பட்டுள்ளன. அகழியைத் தாண்டி சற்று தூரம் சென்ற பின்பே, நாம் கோவிலை அடைய முடியும்.
கோவில் மூன்று அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் உள்ள கோவில் சுற்றுச் சுவர் முழுவதும், அதிக அளவில் இராமாயண, மகாபாரத இதிகாசக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் பாற்கடல் கடைவது போன்ற புடைப்புச் சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன. போர்களத்தில் இராமன், இராவணனுடன் போருக்கு நிற்பது, அனுமன் சஞ்சீவி மலையுடன் வருவது போன்ற காட்சிகள் அனைத்தும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
சூரியவர்மன் தீவிரமாக வைணவ மதத்தைப் பின்பற்றி வந்ததால், இக்கோவில் எங்கும் வைணவ மதம் தொடர்புடைய சிற்பங்கள் நிறந்துள்ளன.
இரண்டாம் தளத்தில் நூலகம் போன்ற அமைப்பு இருந்ததாகக் கூறுகிறார்கள்.முற்காலத்தில் கோவிலுக்குள்ளேயே பல்கலைக்கழகம் இருந்ததாகவும் கூறுகிறார்கள்.
மூன்றாவது தளத்தின் நடுப்பகுதியில், 300 அடி உயரம் கொண்ட நடுகோபுரமும், அதைச் சுற்றி நான்கு சிறிய கோபுரங்களும் உள்ளன. இங்கு பெரிய கற்கோபுரத்தின் அடியில் மூலவராக விஷ்ணு எட்டு கரங்களுடன் இருக்கிறார். காஞ்சியில் உள்ள கோவில்களிலும் விஷ்ணுவுக்கு எட்டு கரங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. கோவில் முழுவதும் கற்களைப் பயன்படுத்தியே கட்டியிருக்கிறார்கள்.
இப்போது கோவிலின் நடு கோபுரத்தின் கீழ் இருப்பவர் புத்தர் என்பதால், இங்கு எந்த விதமான பூஜைகளும் நடப்பது இல்லை. சூரிய உதயத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காக காலை 5 மணிக்கே கோவில் திறக்கப்பட்டு, சூரிய அஸ்தமனம் வரையில், அதாவது மாலை 6 மணி வரையில் கோவில் திறந்திருக்கும். ஆண்டு தோறும் இலட்சக் கணக்கான மக்கள் இக்கோவிலைப் பார்த்துச் செல்கிறார்கள். ஏழ்மை நாடான கம்போடியாவிற்கு, சுற்றுலா மூலம் வரும் வருவாய் முக்கியமானதாக உள்ளது. அங்கோர்வாட் கோவில் யுனஸ்கோவால் உலகப் பராம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.