தஞ்சை பெரிய கோவில் (கட்டிடக் கலையின் உன்னதம்)BRIHADEESWARAR TEMPLE
தஞ்சை பெரிய கோவில் (கட்டிடக் கலையின் உன்னதம்)
தஞ்சையில் காவிரியின் தென் கரையில் அமைந்திருக்கும் இவ்வாலயம் இராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரகதீஸ்வரர் ஆலயம் என பலப் பெயர்களில் வழங்கப்படுகிறது.
சோழர்களின் காலம் பொற்காலம்
"சோழர்களின் காலம் பொற்காலம்" என வழங்கப்பட்ட இராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட சிறப்புமிக்க ஆலயம் தஞ்சை பெரிய கோவிலாகும். இக்கோவில் இந்தியாவில் உள்ள மிகப் பெரிய கோவில்களில் ஒன்றாகவும், கலைநயம் மிக்க கட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த சான்றாகவும் விளங்குகிறது. மேலும் இக்கோவில் யுனஸ்கோவால் உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய கோவிலின் கட்டிடக்கலை சிறப்புக்கள்
தஞ்சை பெரிய கோவிலைக் கட்ட ஏழு ஆண்டுகள் ஆனதாகவும், இதன் தலைமைச் சிற்பியின் பெயர் குஞ்சரமல்லன் எனவும் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு உள்ள நந்தி, 20 டன் எடையுடன் இந்தியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய நந்தியாக விளங்குகிறது. எகிப்திய பிரமிடுகளின் கட்டுமான முறைக்கும், இக்கோவிலின் கட்டுமான முறைக்கும் ஒற்றுமை இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரண்டிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கற்கள் அடுக்கியும், கோர்த்தும் வைத்துக் கட்டப்பட்டுள்ளது.
இவ்வாலயத்தில் கதிர்வீச்சுக்கள் அதன் மையப்பகுதியில் குவியுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டமைப்பு புவி அதிர்வுகளைத் தாங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. சோழர் காலக் கோவில்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆவுடை லிங்கங்கள், தொடர்ந்து சக்தியுள்ளவையாகவும், புகழுடையவையாகவும் விளங்குகின்றன. இராஜராஜ சோழனால் 10ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இவ்வாலயம் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நின்று, தமிழர்களின் கட்டிடக்கலை சிறப்பினை உணர்த்துகின்றது.
விழாக்கள்
இவ்வாலயத்தில் பிரம்மோற்சவம், அன்னாபிஷேகம், இராஜராஜன் பிறந்த நாள், திருவாதிரை, ஆடிப்பூரம், பிரதோஷம், சிவராத்திரி என அனைத்து விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
தஞ்சை பெரிய கோவிலின் சிறப்புக்கள்
கோயிலின் விமானம் 216 அடி ஓங்கி உயர்ந்துள்ளது.
கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் உயரம் -12 அடி
தமிழ் மொழியின் உயிர் எழுத்துக்கள் -12
சிவலிங்கம் உள்ள பீடத்தின் உயரம் -18 அடி
தமிழின் மெய்யெழுத்துக்கள் -18
கோவிலின் கோபுரத்தின் உயரம் -216 அடி
தமிழின் உயிர் மெய்யெழுத்துக்கள் -216
சிவலிங்கத்திற்கும், நந்திக்கும் உள்ள இடைவெளி -247 அடி
தமிழ் மொழியின் மொத்த எழுத்துக்கள் -247
இதன் மூலம் தமிழின் சிறப்புக்களும், சோழ மன்னர் இராஜராஜனின் தமிழ் பற்றும் விளங்குகிறது.
கோவிலில் உள்ள கல்வெட்டில் கோயிலைக் கட்ட யார் யார் பணியாற்றினார்களோ, கட்டிடக்கலை நிபுணர்களிலிருந்து, அவர்களின் துணிகளை சலவை செய்தவர்கள், முடி திருத்தியவர்கள் என கோயில் பணி செய்ய உதவியவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இராஜராஜன் மக்கள் மேல் கொண்டுள்ள அன்பும், அவரது பெருந்தன்மையும் விளங்குகிறது.
கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், மிகப் பிரம்மாண்டமான கற்கோவிலை இராஜராஜன் எழுப்பி உள்ளார்.
தமிழகத்தில் இதே அமைப்பில் உள்ள மற்ற கோவில்கள் கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில், திருபுவனம் கம்பரேஸ்வரர் கோவில் ஆகியவையாகும்.
சிறப்புக்கள் மிக்க தஞ்சை பெரிய கோவிலில் தரிசனம் செய்து, பெரியநாயகி உடனமர் பெருவுடையார் அருளினைப் பெறுவோமாக.