இக்கிகய் - நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய இரகசியம்.
Ikigai - The Japanese secret to a long and happy life.
இப்புத்தகத்தின் ஆசிரியர்கள் ஹெக்டர் கார்சியா மற்றும் பிரான் செஸ்க் மிராயியஸ் ஆகிய இருவருமாவர். இவர்கள் இருவரும், நூறு வயதைக் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஜப்பானியர்களின் வாழ்க்கை இரகசியத்தை அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டனர். ஜப்பானில் உள்ள ஒக்கினாவா தீவில் நூறு வயதைத் தாண்டியவர்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். எனவே அத்தீவில் நேரில் சென்று ஆய்வு செய்தும், அங்குள்ள மக்களின் கருத்துக்களை பதிவு செய்தும், இறுதியில் இந்நூலினை எழுதியுள்ளனர். இப்புத்தகம் ஸ்பானிஷ் மொழியில் எழுதப்பட்டுள்ளது. அதன் பின் இதுவரை 57 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் ஒக்கினாவா தீவில் உள்ள "ஒகிமி" என்னும் கிராமத்தில் தான் உலகிலேயே அதிக வயதுடையவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தத் தீவில் வசிப்பவர்களில் ஒரு லட்சம் பேருக்கு 25 பேர் என்ற கணக்கில் நூறு வயதைத் தாண்டியவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இது உலக சராசரியை விட பன்மடங்கு அதிகமாகும்.
இத்தீவில் உள்ள முதியவர்கள் அனைவரும் நோய் நொடியின்றி, சுறுசுறுப்புடனும், அவர்கள் வேலைகளை அவர்களே செய்து கொண்டும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழும் மக்களின் இளமையின் இரகசியம் என்ன? என்பதனையே"இக்கிகய்" புத்தகம் விளக்குகிறது.
நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையின் இரகசியங்கள் என இக்கிகய் புத்தகத்தில் கூறி இருப்பவையாவன :
உங்கள் இருத்தலுக்கான காரணம் என்ன? நீங்கள் தினமும் காலையில் ஆவலுடன் கண் விழிப்பதற்கான காரணம் என்ன? எதைச் செய்தால் உங்களுக்கு மனநிறைவும், நிம்மதியும் கிடைக்கிறதோ அதனைச் செய்யுங்கள். உதாரணமாக, சிலருக்கு ஓவியம் வரைவதில் மன அமைதியும், நிறைவும் கிடைக்கும். இன்னும் சிலருக்கு படிப்பது, சிலருக்கு எழுதுவது, சிலருக்கு அறுசுவையுடன் சமைப்பது என்று அவரவரின் விருப்பங்கள் மாறுபடும். இதில் உங்களுக்கு ஏற்றது எது என்று கண்டுபிடியுங்கள். பின் அதற்கென உங்களுடைய நேரத்தைப் பயன்படுத்துங்கள்.
வாழ்வின் சிறிய சிறிய விஷயங்களில மகிழ்ச்சியைக் கண்டுபிடியுங்கள். வாழ்வின் தற்கணத்தில் (நிகழ்காலத்தில்) வாழுங்கள். கடந்த காலக் கவலைகளையும், எதிர் கால நிச்சயமின்மையையும் விட்டு விட்டு நிகழ்காலத்தில் மனத்தைச் செலுத்தி வாழுங்கள். வாழ்வில் எப்போதும் சுறுசுறுப்புடன் இருங்கள். மாற்றங்களை ஏற்றுக் கொள்ளூங்கள். உறவுகளோடும், நட்பு வட்டத்தோடும் எப்போதும் தொடர்பில் இருங்கள். வாழ்வின் ஓட்டத்தோடு இயைந்து செல்லுங்கள்.
உணவு விஷயத்தில் ஜப்பானியர்கள் கடைபிடிக்கும் ஒரு வழிமுறை எதுவென்றால், உணவு எதுவாயினும் முழு வயிறு உண்ணாமல் 80 சதவீதம் உண்டவுடன், உண்பதை நிறுத்தி விடுகிறார்கள். இதுவும் அவர்களின் நீண்ட ஆயுளுக்கான ஒரு காரணியாகும்.
இயற்கையோடு இயைந்து வாழ்வது சிறப்பான ஒன்றாகக் கூறப்படுகிறது. காலை எழுந்ததும் சூரியனைப் பார்த்து நன்றி சொல்வது முதல், இரவு நிலவினைப் பார்த்து விட்டு படுக்கைக்குச் செல்வது வரை, இயற்கையோடு இணைந்து செல்லலாம். நம்முடைய ஆற்றலைப் புதுப்பித்துக் கொள்ள நாம் இயற்கையோடு இயைந்து செல்ல வேண்டியது அவசியம்.
இறுதியாக உங்களுடைய இக்கிகயை அறிந்து கொள்வது. உங்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் வேட்கையைக் கண்டுபிடித்து, உங்களுடைய தனித்துவமான திறமையை, உலகத்தோடு பகிர்ந்து கொள்ளுங்கள். நீண்ட ஆயுளுக்கும், மன அமைதிக்கும் வழி வகுக்கும் இக்கிகயை அனைவரும் பின்பற்றுவோமாக.