அரக்கு மாளிகை (ARAKKU MALIGAI)

 

பாண்டவர்களும், கௌரவர்களும் அஸ்தினாபுரத்தில் சிறப்பாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் அறிவிலும், ஆற்றலிலும் சிறப்புடையவர்களாக விளங்கினார்கள். இதனைக் கண்டு திருதராட்டிரன், விதுரர், பீஷ்மர் முதலானோர் பாராட்டினார்கள்.

இவர்களில் ஒழுக்கத்தில் சிறந்தவனும், மூத்த மகனுமாகிய தருமனுக்கு இளவரசு பட்டம் சூட்டினார்கள்.

தருமனுக்கு இளவரசனாக முடிசூட்டப்பட்டதை அறிந்து துரியோதனன் கோபமும், வெறுப்பும், பொறாமையும் அடைந்தான். அவன் தன் தந்தை திருதராட்டிரனை சந்திக்கச் சென்றான்.

திருதராட்டிரனிடம் சென்ற துரியோதனன், "தந்தையே! உனது தம்பி மகனாகிய தருமனுக்கு அரச உரிமைகள் அனைத்தையும் அளித்து விட்டாயே. இதில் எனக்கு என்ன சிறப்பு உள்ளது?" என்று கேட்டான்.

"துரியோதனா! தருமன் வயதில் மூத்தவன். அறத்தில் சிறந்தவன். இறந்து போன எனது தம்பிக்குரிய பதவிகளை அவன் மக்களுக்குத் தருவது தவறல்ல. அவர்களுக்கும் அரச பதவியில் உரிமை உள்ளது. நீ அறநெறி தவறி நடக்கிறாய்" என்றான்.

தந்தை திருதராட்டிரனின் பதிலால் துரியோதனன் திருப்தியடையவில்லை. அவன் அளவற்ற கோபம் கொண்டான்.

தன் தந்தையிடம், "நான் பாண்டவர்களை வெறுக்கின்றேன். இனி அவர்களோடு எவ்வித உறவும் எனக்குத் தேவையில்லை. என் தம்பிமார்களும், கர்ணனும், மாமா சகுனியும் எனக்குத் துணையாக இருப்பார்கள். பாண்டவர்களின் துணை எனக்குத் தேவையில்லை." என்று கோபத்துடன் கூறினான். அவன் மேலும் பலவற்றினைக் கூறித் தன் தந்தையின் மனத்தினை சிறிது சிறிதாக மாற்றினான். துரியோதனனின் பேச்சைக் கேட்ட திருதராட்டிரன் மனம் மாறினான்.

திருதராட்டிரன் பீஷ்மரையும், விதுரனையும் ஆலோசனை மண்டபத்திற்கு அழைத்தான். திருதராட்டிரன் அவர்களிடம் "பாண்டவர்களும் கௌரவர்களும் சேர்ந்திருந்தால் பகைமை தான் வளரும். இளமையில் இருந்தே பகைமை உணர்ச்சி வளர்ந்து வந்துள்ளது. மூத்தோரின் அறிவுரையைக் கேட்கும் மனநிலையில் அவர்கள் இல்லை. எனவே சிறிது காலம் அவர்கள் பிரிந்திருந்தால் பகைமை உணர்வு மறையும் " என்று கூறினான். இதனைக் கேட்ட பீஷ்மரும், விதுரரும் திருதராட்டிரன் விருப்பப்படியே ஏதாவது நடக்கட்டும் என்று வெறுப்புடன் அவ்விடம் விட்டு நகர்ந்தனர்.

பீஷ்மரும் விதுரரும் அங்கிருந்து சென்ற பிறகு, திருதராட்டிரனும், துரியோதனனும், அவனுடைய நண்பர்களும், தீய அமைச்சனான புரோசனன் என்பவனுடன் சேர்ந்து பாண்டவர்களை அழிக்க சூழ்ச்சி செய்தனர்.

அதன்படி, துரியோதனன் வாரணாவதம் என்னும் இடத்தில் அரக்கினால் ஆன பெரிய மாளிகை ஒன்றினைக் கட்டினான். அம்மாளிகையில் பாண்டவர்களைத் தங்கச் செய்து, ஒருவரும் அறியா வண்ணம் அம்மாளிகைக்குத் தீ வைத்து, அவர்கள் ஐவரையும் ஒரே சமயத்தில் கொன்று விடவேண்டும் என்று வஞ்சகத் திட்டம் தீட்டினான்.

அந்த புதிய மாளிகையில் பாண்டவர்களைத் தங்கச் செய்ய வேண்டியது தன் தந்தை திருதராட்டிரனின் பொறுப்பு என்று கூறிவிட்டான். திருதராட்டிரனும் தன் மகனின் சதிச் செயலுக்கு உடன்பட்டான். பின் திருதராட்டிரன் தருமனை அழைத்து, வாரணாவதத்தில்  உள்ள பெரிய மாளிகையில் தங்கி ஆட்சி செய்யும் படிக் கூறினான். தன் பெரிய தந்தையின் வாக்கினை சிரமேற் கொண்டு, தருமனும் தன் தம்பிமார்களுடனும், தன் தாயார் குந்தி தேவியுடனும் அரக்கு மாளிகைக்குச் சென்று அங்கிருந்து ஆட்சி புரிந்து வந்தான்.

புரோசனன் என்னும் தீயவன், திருதராட்டிரனால் தருமனுக்கு அமைச்சராக அமர்த்தப்பட்டிருந்தான். அவன் தக்க சமயம் பார்த்து, அரக்கு மாளிகைக்குத் தீ வைத்து, பாண்டவர்கள் ஐவரையும் கொன்றுவிட காத்துக் கொண்டிருந்தான்.

வாரணாவதத்தில் தன் தம்பிமார்களுடன் தங்கி தருமன் ஆட்சி புரிந்து வந்தான். சிறிது நாளில் பாண்டவர்களுக்கு புரோசனன் மீது சந்தேகம் வந்தது. அப்போது அங்கு தச்சன் என்பவன் வந்து, பீமனைத் தனியாக அழைத்து, "இந்த மாளிகை அரக்கினால் கட்டப்பட்டுள்ளது. இதனைக் கட்டியவர்களுள் நானும் ஒருவன். துரியோதனனின் சதிச் செயலை அறிந்து கொண்ட விதுரர், இம்மாளிகை கட்டும் போது என்னையும், அந்த சதிகாரர்களோடு சேர்ந்து, மாளிகை கட்டும் வேலையில் ஈடுபடச் செய்தார். ஆபத்து ஏற்படும் போது நீங்கள் இங்கிருந்து தப்பிச் செல்ல வழி அமைக்கும் படி சொல்லியிருந்தார். நானும் அதன்படி யாரும் அறியாதவண்ணம் மாளிகைக்குள் இருந்து வெளியே செல்ல சுரங்க வழி ஒன்றினை அமைத்துள்ளேன். மாளிகையின் நடுவே ஒரு தூணை அமைத்துள்ளேன். அந்தத் தூணைப் பெயர்த்து எடுத்துவிட்டால், சுரங்கப் பாதைக்குச் செல்லும் வழி தென்படும். அதன் வழியாகச் சென்றால் நகருக்கு வெளியே இருக்கும் காட்டை அடையலாம். அங்கிருந்து நீங்கள் அனைவரும் தப்பிச் சென்று விடலாம் " என்று கூறினான்.

பீமன் தச்சனுக்கு பெரும் பொருளைப் பரிசாகக் கொடுத்து அனுப்பினான். துரியோதனனின் சூழ்ச்சியினை அறிந்த பீமன் பெரும் கோபம் கொண்டான், ஆயினும் பொறுத்துக் கொண்டான். அவர்கள் அரக்கு மாளிகைக்குத் தீ வைப்பதற்கு முன், தானே அதனைக் கொளுத்தி விட தீர்மானித்தான்.

ஒரு நாள் நள்ளிரவு நேரத்தில் புரோசனன், வேடர் சிலரின் உதவியுடன் அரக்கு மாளிகையை அழிக்கத் திட்டம் தீட்டியிருந்தான். அதனை அறிந்து கொண்ட பீமன், தானே அரக்கு மாளிகைக்குத் தீ வைத்து, தச்சன் கூறியப் படி தூணைப் பெயர்த்து எடுத்து, சுரங்க வழியாகத் தாயோடும், தம்பியரோடும் தப்பி நகரை விட்டு வெளியே வந்து காட்டினை அடைந்தான்.

சிறிது நேரத்தில் அரக்கு மாளிகை முழுவதும் தீயில் எரிந்துவிட்டது. பாண்டவர்கள் தம் தாயோடு நெருப்புக்கு இரையாகி விட்டதாக பகைவர்கள் எண்ணினர். ஆனால் உண்மையில் அரக்கு மாளிகையில் நெருப்புக்கு இரையானது, வேடர் ஐவரும் அவர்களின் தாயாருமே. சதிச் செயலுக்கு உடன்பட்டு வந்த ஐவரும் இறந்தனர்.

சதித்திட்டம் தீட்டிய பகைவர்கள் பாண்டவர்கள் ஒழிந்தார்கள் என்று மகிழ்ந்தார்கள். திருதராட்டிரனும் துரியோதனனும் பாண்டவர்கள் மாண்டார்கள் என்று உள்ளே மகிழ்ந்தாலும், வெளியே துயரில் இருப்பது போல் நடித்தார்கள். விதுரருக்கு மட்டும் உண்மை தெரியும், என்றாலும் அவரும் வருந்துவதைப் போல் நடித்து அனைவருக்கும் ஆறுதல் கூறினார்.

 

 

Popular posts from this blog

நளதமயந்தி கதை (NALA THAMAYANDHI STORY)

சென்டினல் மக்கள் ( THE SENTINELESE)

திருப்பாண்டிக் கொடுமுடி (KODUMUDI TEMPLE)