சூடிக் கொடுத்த சுடர்க் கொடி ஆண்டாள்(ANDAL)
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் ஆண்டாள். இவர் நீல நிறக் கண்ணனின் மேல் தீரா அன்பு கொண்டு அப்பெருமானின் திருவடியை அடைந்தவர். மகாலட்சுமியே ஆண்டாளாக அவதரித்ததாகவும் கூறுவர்.
மதுரைக்கு அருகிலுள்ள திருவில்லிப்புத்தூர் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தவர் பெரியாழ்வார். இவரும் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராவார். கண்ணபிரானின் தீவிர பக்தர். இவர் திருவில்லிப்புத்தூர் கோவிலில் உள்ள அரங்கநாதப் பெருமாளுக்கு தினமும் மலர்களால் ஆன மாலையைத் தொடுத்துக் கொடுப்பதையே தமது கடமையாகக் கொண்டவர்.
பெரியாழ்வார் ஒரு நாள் தோட்டத்தில் பூப் பறிக்கச் சென்ற போது, அழகிய பெண் குழந்தை ஒன்று (ஆண்டாள்) துளசிச் செடியின் கீழ் இருப்பதைக் கண்டார். அக்குழந்தையை மகிழ்வுடன் எடுத்துக் கொண்ட பெரியாழ்வார், அக்குழந்தை இறைவனின் பரிசு என மகிழ்ந்தார். அக்குழந்தைக்கு "கோதை" எனப் பெயரிட்டு அன்புடன் வளர்த்து வந்தார்.
கோதை சிறு வயதில் இருந்தே கண்ணன் மீது அளவற்ற அன்பு பூண்டிருந்தாள். பருவ வயது வந்ததும், கண்ணனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும் வளர்த்துக் கொண்டாள். கண்ணனின் மணப்பெண்ணாகத் தன்னைப் பாவித்துக் கொண்டு ஆனந்தம் அடைவாள்.
திருவில்லிப்புத்தூர் பெருமாளுக்கு என்று பெரியாழ்வார் தொடுத்து வைக்கும் மாலைகளை கோதை (ஆண்டாள்) ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து, கண்ணனுக்கு ஏற்ற மணப்பெண்ணாகத் தான் இருக்கிறோமா எனக் கண்ணாடியில் அழகு பார்த்து மகிழ்ந்து, பின்னர் திரும்பவும் அம்மாலையை அவ்விடத்திலேயே வைத்து வந்தாள்.
இவ்வாறு தினமும் கோதையாகிய ஆண்டாள் சூடிய மாலைகளே இறைவனுக்கு சூட்டப்பட்டன. ஒரு நாள் இதனை அறிந்து கொண்ட பெரியாழ்வார், கோதையிடம் இவ்விதம் நீ செய்வது தவறு என்று கூறி கடிந்து கொண்டார். பின்னர் கோதை (ஆண்டாள்) சூடிக் கொடுத்த மாலையை வைத்து விட்டு, வேறொரு மாலையை இறைவனுக்குச் சூட்டினார்.
அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை சூடிய மாலைகளே தமக்கு உகந்தவை என்றும், அவற்றையே தமக்கு சூட்ட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். இதனாலேயே "சூடிக் கொடுத்த சுடர்க் கொடி" எனவும், ஆண்டவனையே ஆண்டு கொண்டவள் என்னும் பொருளில் "ஆண்டாள்" எனவும் அழைக்கப்படுகிறார்.
ஆண்டாளின் அன்பு நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. திருமண வயதை அடைந்த ஆண்டாள் திருவரங்கத்தில் உள்ள இறைவனையே மணப்பது என்று பிடிவாதமாக இருந்தார்.
பெரியாழ்வார் என்ன செய்வது என்று பெரும் குழப்பத்திலும், கவலையிலும் இருந்த போது, இறைவன் அவரது கனவில் தோன்றி, ஆண்டாளை மணப்பெண்ணாக அலங்கரித்து திருவரங்கம் கோவிலுக்கு அழைத்து வருமாறு கூறினார். அவ்வாறே குறித்த நாளில், பெரியாழ்வார் ஆண்டாளை மணப்பெண்ணாக அலங்கரித்து, திருவரங்கம் ஆலயத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு கருவறையில் இறை சோதியில், ஆண்டாள் இறைவனுடன் இரண்டறக் கலந்து விட்டார்.
ஆண்டாள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரு நூல்களை எழுதி உள்ளார்.
திருப்பதியில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு, புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை அன்று திருவில்லிப்புத்தூரில் உள்ள ஆண்டாள் சூடிய மாலையையே அணிவிக்கின்றனர். அது போல ஆண்டாளின் திருமணத்திற்கு, திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் இருந்து பட்டுப்புடவை வருகிறது. அப்புடவையையே ஆண்டாளுக்கு அணிவிக்கின்றனர்.
மார்கழி மாதம் ஆண்டாளின் திருப்பாவை அனைத்து வைணவ ஆலயங்களிலும், இல்லங்களிலும் பாடப்படுகிறது. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் நீல நிறக் கண்ணனின் மனத்தில் நீங்கா இடம் பெற்றவரானார்.