அபிராமி அந்தாதி பாடல்கள்-(1-5) விளக்கம் மற்றும் வழிபாட்டு பலன்கள்
அபிராமி பட்டரால் 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பக்தி இலக்கிய நூல் அபிராமி அந்தாதி ஆகும். மனதை உருகச் செய்யும் இப்பாடல்கள் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் அபிராமி அம்மன் மீது பாடப்பெற்றதாகும். நூறு பாடல்களைக் கொண்டு அந்தாதி வகையில் அமைந்த தெய்வீக மணம் கமழும் பாடல்கள் ஆகும்.
கணபதி காப்பு
தாரமர் கொன்றையும் செண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே-உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே
காரமர் மேனி கணபதியே நிற்க கட்டுரையே.
பாடல்
-1
(அனைத்து வளங்களும் பெற)
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி மென்கடி குங்கும தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத் துணையே.
அதிகாலையில் உதிக்கின்ற செம்மையான கதிர் போன்ற சூரியனை நெற்றியில் திலகமாகக் கொண்டவளும், ஒளிர்கின்ற மாணிக்கம் போலவும், மாதுளை மொட்டை போலவும், மலர்களை உடைய மின்னல் கொடி போன்ற மென்மையான, மனம் கமழும் அழகுடன் கூடிய குங்குமம் தோய்ந்தாற் போன்ற திருமேனியை உடையவளுமாக, விளங்குகின்ற அபிராமி அன்னையே எனக்கு எப்பொழுதும் துணையாவாள்.
பாடல்
-2
(பிரிந்த உறவுகள் ஒன்றிணைய)
துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதி கொண்ட வேரும் பனிமலர்ப் பூங்
கணையும் கருப்புச் சிலையும் மென் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுரசுந்தரி ஆவது அறிந்தனமே.
எனக்கு துணையும், நான் தொழும் தெய்வமும், என்னைப் பெற்ற தாயும் ஆகிய அபிராமி அன்னையே! வேதங்களில் தொழிலாகவும், அவற்றின் கிளைகளாகவும், வேராகவும் சிறந்து விளங்குகின்றாள். அம்மை கையிலே குளிர்ந்த மலர் அம்பும், கரும்பு வில்லும், மெல்லிய பாசாங்குசமும், கொண்டு விளங்குகின்றாள். அந்தத் திரிபுரசுந்தரியே எனக்குத் துணை என அறிந்து கொண்டேன்.
பாடல்
-3
(திருவடி சரணம்)
அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு
செறிந்தேன் நினது திருவடிக்கே திருவே வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மருந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.
திருமகளாய்த் திகழும் அபிராமி அன்னையே! நின் பெருமையை உணர்த்தும் அடியார் கூட்டத்தோடு நான் சேரவில்லை. அன்னையே நின் மேல் மாறா அன்பு கொண்ட நின் அடியார் பெருமையை உணராமல் என் நெஞ்சானது நரகத்தில் விழுந்து மனிதரையே நாடிக்கொண்டிருந்தது. இப்பொழுது நான் அறிந்து கொண்டேன். நின்னன்பர் அல்லாதாரை விட்டு விலகினேன். எவரும் அறியாத வேதப் பொருளான எம் அபிராமி அன்னையின் மலரடியினை அடைக்கலமாக அடைந்தேன். நீயே எனது துணையாவாய்.
பாடல்
-4
(மேன்மையான நிலையை அடைய)
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றைவார் தடை மேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் குந்தி என்னாளும் பொருந்துகவே
மனிதர், தேவர், மாமுனிவர் போன்றோ ர் தலைவைத்து வணங்கும் பொற்பாதங்களை கொண்ட கோமளவல்லித்தாயே! தனது நீண்ட சடாமுடியில் கொன்றை மாலையும், பிறை நிலவும், பாம்பும், கங்கை நதியையும் கொண்டு விளங்குகின்ற, அடிமுடி காண வொண்ணா,சிவபெருமானும் நீயும் என் உள்ளத்தில் நீங்காது நிறைந்திருக்க வேண்டும்.
பாடல்- 5
(மனக்கவலை நீங்க)
பொருந்திய முப்புரை செப்பு உரை செய்யும் புணர் முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே .
அபிராமி அன்னையே! முப்புரங்களின் தலைவியாய் இருப்பவளே! மனோன்மணி யானவளே! நீண்ட சடையினை உடைய சிவபெருமான் உண்ட நஞ்சினை அமுதமாக்கிய அழகிய தேவியே! தாமரை மலரினை வெட்கமடைய செய்யும் மென்மையும், அழகும் உடைய நினது திருவடிகளையே, என் சென்னிமேல் கொண்டேன்.
Comments
Post a Comment