இராமாயணம் - யுத்த காண்டம் (பகுதி-4)
இராமன் இராவணனிடம் ''பாவச் செயல்களின் ஊற்றானவனே!'' நிராயுதபாணியாக நிற்கும் உன்னைக் கொல்வதனை நான் விரும்பவில்லை. உன் சுற்றத்தையும், படைக் கருவிகளையும், சேனைகளையும் திரட்டிக் கொண்டு வந்து என்னுடன் போரிடு.
இல்லையாயின் கோட்டைக்குள் ஒளிந்து கொள். சிறை வைத்துள்ள சீதையை விடுவித்து, உன் தம்பி வீடணனை மன்னனாக அரியணையில் அமர்த்தி, அவனுக்கு ஏவல் புரிந்து இருப்பாயானால் உன் தலை தப்பும். இல்லையென்றால் உன் ஆற்றல் முழுவதும் கொண்டு என்னை எதிர்த்து நில். இன்று உன் அரண்மனைக்குச் சென்று விரும்பினால் நாளை போருக்கு வருவாயாக. 'இன்று போய் நாளை வா' என்றான்.
''ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; 'இன்று போய், போர்க்கு
நாளை வா' என நல்கினன், நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்''
முதல் நாள் போரில் இராமனுடன் போராடி, வெறுங்கையுடன் தனியனாய் இராவணன் இலங்கை நகர் மீண்டான். கயிலை எடுத்தவன், சாம கானம் பாடியவன், சிவ பெருமானிடம் சந்திரகாசம் என்னும் வாளினைப் பெற்றவன், இப்பொழுது தனியனாய் சென்றான். இலங்கையின் மங்கையர் நோக்க, நாணி சென்றான்.
அரண்மனையை அடைந்த இராவணன், தூதரிடம் எட்டுத் திக்கிலும் உள்ள அரக்கர் சேனையைத் திரட்டி வரச் சொன்னான். அப்பொழுது இராவணனின் பாட்டன் மாலியவான் அங்கு வந்தான்.
மாலியவான் இராவணனின் நிலைமையை உணர்ந்து, ''பெருந்தவ மகனே! என்ன நிகழ்ந்தது?'' எனக் கேட்டான்.
இராவணன் மாலியவானிடம் மனம் விட்டுப் பேசலானான். அவன் பெருமூச்சு விட்டு ''தவ வேடங் கொண்ட இராமலக்குவருடன், நாம் போரிடுவது என்பது அரக்கர் கூட்டத்திற்கு தீராதப் பழியை உண்டாக்கி விட்டது. மூவுலக மக்களும் திரண்டு நம் பக்கம் நின்றாலும், இலக்குவனின் வலிமை முன் அவை ஈடாகாது''.
இராமனின் அம்பு, எய்த வேண்டிய இலக்கை, பாரெல்லாம் தேடிச் சென்றாயினும் அடையும். மேரு மலையை இரண்டாகப் பிளக்கும். விண் கடந்து நிலவுலகை எட்டும். இராமனின் அம்புகள், கவிஞர்களின் நாவில் இருந்து வெளிப்படும் சிறப்புடைய சொற்றொடர் போலும், செய்யுளின் தொடை போலவும் ஆம். சிவபெருமானின் திரிசூலமும். திருமாலின் சக்கரப் படையும், இந்திரனின் வச்சிராயுதமும். இராமனின் அம்புக்கு ஈடாகாது.
''இந்திரன் குலிச வேலும், ஈசன் கை இலை மூன்று என்னும்
மந்திர அயிலும், மாயோன் வளை எஃகின் வரவும் கண்டேன்;
அந்தரம் நீளிது, அம்மா! தபதன் அம்புக்கு ஆற்றா
நொந்தனென் யான் அலாதார் யார் அவை நோற்ககிற்பார்?''
இராமனின் வில் வரும் திசையை என்னால் கணிக்க முடியவில்லை. அனுமனை வாகனமாகக் கொண்டுள்ள இராமன் காற்றை வாகனமாகக் கொண்டுள்ளானா? அல்லது எமனை வாகனமாகக் கொண்டுள்ளானா? என வியக்கும் படி உள்ளது. அனுமனின் போர் செயலை திருமாலின் வாகனமாகிய கருடன் தான் செய்யுமோ? என எண்ணுகின்றேன்.
''ஏற்றம் ஒன்று இல்லை என்பது ஏழைமைப் பாலது அன்றே?
ஆற்றல் சால் கலுழனேதான் ஆற்றுமே அமரின் ஆற்றல்!
காற்றையே மேற்கொண்டானோ? கனலையே கடாவினானோ?
கூற்றையே ஊர்கின்றானோ? குரங்கின் மேல் கொண்டு நின்றான்''
எனக்கு ஓர் அழிவு காலம் நெருங்கிவிட்டதாயினும், சிறந்த ஒரு பகைவனைப் பெற்றேன். ''நல்லதோர் பகையைப் பெற்றேன். இதுவே நிகழ்ந்தது'' என்றான்.
மாலியவான் ''மின்னலை ஒத்தவனும், வில்லாற்றல் மிக்கவனுமான இராமனைப் பற்றி நான் முன்பு கூறிய போது நீ கோபம் கொண்டாய். வீடணனும் இவை அறிந்தே, உனக்கு நல்மொழிகள் கூறினான். நீ செவி சாய்க்க வில்லை. அரக்கர் குல அழிவு நெருங்கி விட்டது. ஆனால் உன் கருத்துக்கு மாற்றுக் கருத்து உண்டோ?''
''நின் உரைக்கு வேறு உரை உண்டோ?'' என்றான்.
அப்பொழுது மகோதரன் இராவணனிடம் ''மன்னா! நாம் ஒரு செயலில் இறங்கி விட்டால், அதில் வெற்றிக்கு வேறுபட்ட நிகழ்வு நடக்குமாயினும், அல்லது தோற்று உயிர் விட்டாலும், அச்செயலில் முன்னெடுத்து செல்வதே சிறப்பாகும். மனம் தளர்ந்து பின் வாங்குவது இழிவாகும். கயிலையை எடுத்தவனே! அன்று திருமாலை வெற்றி கொண்டாய். இன்று மனிதருக்கு அஞ்சுகின்றாயா? வென்றவர் தோற்பதும், தோற்றவர் வெல்வதும் இயற்கை. சீதையை விடுவது உன் ஆவியை விடுவதற்குச் சமம். மனத்திடம் கொண்டு கும்பகர்ணனை அழை. அவன் வெற்றியைப் பெற்றுத் தருவான்'' என்றான்.
மகோதரன் உரைக் கேட்டு, இராவணன் மனமாற்றம் அடைந்தான். அவன் கும்பகர்ணனை அழைத்து வருமாறு பணியாளரை அனுப்பினான். அவர்கள் கும்பகர்ணன் அரண்மனையை அடைந்தனர்.
மலையை ஒத்த கும்பகர்ணன், உறங்கிக் கொண்டிருந்தான். அவன் உறங்கினால், கண் விழிக்க ஆறு மாத காலம் ஆகும். போர் தொடங்கும் முன் தான் அவன் உறங்கினான். பணியாளர்கள் தங்கள் கையில் உள்ள இரும்புத் தூண்களைக் கொண்டு, அவன் செவியிலும், தலையிலும் இடித்தனர். உறங்குகின்ற கும்பகர்ணனைப் பார்த்து இவ்விதம் கூறினர்.
''உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வு எலாம்
இறங்குகின்றது. இன்று காண் ; எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்கு போல வில் பிடித்த கால தூதர் கையிலே
உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்!''
என்ன செய்தும் கும்பகர்ணன் உறக்கம் கலைய வில்லை என இராவணனிடம் பணியாளர்கள் தெரிவித்தனர். இராவணன் அவனை ஆயிரம் மல்லர்களைக் கொண்டு அடித்து எழுப்பச் சொன்னான். உடனே ஆயிரம் மல்லர்கள் கும்பகர்ணனைச் சூழ்ந்தனர். அவர்களும் அவனை எழுப்ப முடியாமல் பின் வாங்கினர். பின் வீரர்கள் அவனைத் துயில் எழுப்ப சங்கு, தாரை முதலியவற்றை உரக்க ஒலித்தனர்.
இராவணன் ஆயிரமாயிரம் குதிரைகளை மிதிக்க விட்டு, எழுப்பும் படிச் சொன்னான். பின் கும்பகர்ணன் புரண்டு படுத்தான். மெல்ல கண் விழித்தான். உறக்கத்திலிருந்து எழுந்ததும் குடம் குடமாக உணவும், கள்ளும் குடித்தான். ஆனாலும் பசி அடங்காதவனாய், மென் மேலும் பசியுடையவனாய் இருந்தான்.
''ஆறு நூறு சகடத்து அடிசிலும்
நூறு நூறு குடம் கள்ளும் நுங்கினான்;
ஏறுகின்ற பசியை எழுப்பினான்;
சீறுகின்ற முகத்து இரு செங்கணான்;''
கும்பகர்ணன், இராவணன் அரண்மனையை அடைந்து தன் தமையனை வணங்கினான். இராவணன் அவனைத் தழுவிக் கொண்டான். பின் உணவு முதலியவற்றை அளித்து, அவனுக்கு போர் கவசம் அணிவித்தான்.
கும்பகர்ணன் ''அண்ணா! போர் ஆயத்தங்கள் எதற்காக?'' எனக் கேட்டான்.
இராவணன் ''தம்பி! மானிடர் இருவர் இலங்கை நகரைச் சுற்றி வளைத்தனர். நீ போய் அவர்களைக் கொன்று, வென்று வா'' என்றான்.
கும்பகர்ணன் ''போர் தொடங்கி விட்டதா? சீதையின் துயரம் இன்னும் தீரவில்லையா? விண்ணும், மண்ணும் வளர்ந்தோங்கிய உன் புகழ் போய் விட்டதா? நம் அழிவு காலம் வந்து விட்டதா?
நான் முன்பே உன்னிடம் கூறினேன் அல்லவா? கற்புக்கரசி சீதையை நீ விடவில்லையா? அவ்வாறு நீ விடாதது விதியின் செயல். பிரம்மனின் மரபிலே, தரும வழி வழுவாத குலத்தின் தன்மை உன் செயலால் அழிந்து விட்டது. அறம் உன்னை விட்டுச் சென்றது.
சீதையை விடுவித்து, இராமனின் திருவடிகளில் சரண் அடைந்து, வீடணனுடன் நட்பு பாராட்டுவதே நாம் உயிர் பிழைக்க வழியாகும். அவ்வாறு செய்ய நீ விரும்பாவிட்டால் கூட்டம் கூட்டமாக நம் படை அழிவதைக் காண்பாய்'' என்றான்.
இராவணன் ''உன்னை அழைத்தது, இனி நடப்பவை பற்றி அறிய அல்ல. அதனைக் கூற நீ அறிவுடைய அமைச்சனும் அல்ல. நீ அஞ்சுகின்றாய். உன் வீரம் வீணானது. நீ போய் உறங்கு'' என்றான்.
''கூறுவது தெரிய அன்று; உன்னைக் கூயது
சிறு தொழில் மனிதரைக் கோறி சென்று; எனக்கு
அறிவிடை அமைச்சன் நீ அல்லை அஞ்சினை;
வெறிவிது உன் வீரம்'' என்று இவை விளம்பினான்''
மானிடரையும், குரங்கினையும் வணங்கிக் கொண்டு, உன் தம்பி வீடணனைப் போல் உயிர் வளர்த்துக் கொள். அச்செயலை நான் செய்ய மாட்டேன். உடனே போர்க்களம் செல்ல ஆவன செய்க. நானே செல்கின்றேன் தருக என் தேர் படை என்றான்.
கும்பகர்ணன் ''அண்ணா! நீ செல்ல வேண்டாம். நானே போருக்குச் செல்கின்றேன். விதி என் கழுத்தைப் பிடித்துத் தள்ளும் போது நான் என் செய்வேன்? நான் போரில் தோற்றால் நீ சீதையை விட்டு விடு. அவ்விருவர் என்னை வென்றால், உன்னை வெல்வதும் திண்ணம்.
கொற்றவனே! இது நாள் வரையில் நான் ஏதேனும் தவறு இழைத்திருந்தால் பொறுத்தருள்வாயாக. இனி நான் உன் முகத்தில் விழிப்பது நடவாது. விடை பெறுகின்றேன்'' எனப் போர்க்களம் புறப்பட்டான்.
''இற்றை நாள் வரை, முதல், யான் முன் செய்தன
குற்றமும் உள எனின் பொறுத்தி; கொற்றவர்
அற்றதால் முகத்தினில் விழித்தல்; ஆரிய!
பெற்றனென் விடை என பெயர்ந்து போயினான்''
இராவணன் தன் இருபது கண்களிலும் இரத்தக் கண்ணீர் வடித்தான். செவ்விழி நீரோடு குருதி தேக்கினான். கும்பகர்ணன் நகர வாயிலை அடைந்தான். அவன் முன் செல்ல உணவும், கள்ளும் கொண்டு பணியாளர்கள் பின் சென்றனர். அவனுடன் பெரும் படை சென்றது.
இராமன், தேரில் வந்த கும்பகர்ணனைப் பார்த்து ''மேரு மலையைப் போல இருக்கும் இவன் யார்?'' என வீடணனைக் கேட்டான்.
வீடணன் ''இவன் இராவணனுக்குத் தம்பி. எனக்கு அண்ணன். திருமால் துயில் நீங்கி எழுந்தால் அசுரர் இறப்பர். இவன் துயில் நீங்கி எழுந்தால் தேவர் இறப்பர். அத்தகைய ஆற்றல் உடையவன். இவன் இவ்வளவு நாள் தூங்கியதால் உலகு பிழைத்தது. இராவணன் சீதையைக் கவர்ந்தது தவறு எனப் பல முறைக் கூறியவன். இராவணன் கேளாமையால் இன்று காலன் முன் எய்தினான்'' எனறான்.
Comments
Post a Comment