இராமாயணம் - சுந்தர காண்டம் (பகுதி-4)
ஜம்புமாலி இறந்த செய்தி அறிந்த இராவணன், பஞ்ச சேனாதிபதிகளை அனுப்பினான். அவர்களும் அனுமனின் ஆற்றலின் முன் மாண்டனர். பின் இராவணனே போருக்குச் செல்ல நினைக்கையில், அவனது இளைய மகன் அக்ககுமாரன் தான் போருக்குச் செல்ல அனுமதி வேண்டினான்.
அக்ககுமாரன் ''தந்தையே! போர்களத்தில் நம்மை எதிர்ப்பது சிவபெருமானின் வாகனமாகிய காளையோ, திருமாலின் கருடனோ, ஆதிசேஷனோ அல்ல, அது அற்பக்குரங்கு. அதனை நான் பிடித்து வருகின்றேன் நீங்கள் கவலையின்றி இருங்கள்'' என்றான்.
''முக்கணான் ஊர்தி அன்றேல், மூவுலகு அடியில் தாயோன்
ஒக்க ஊர் பறவை அன்றேல், அவன் துயில் உரகம் அன்றேல்,
திக்கயம் அல்ல, ஆகில் குரங்கின் மேல் சேறி போலாம்,
இக்கடன் அடியேற்கு ஈதி,இருத்தி ஈண்டு இனிதின் எந்தாய்''
போருக்குச் சென்ற அக்ககுமாரன் தன் தேர்ப் பாகனிடம் ''இந்தக் குரங்கா நம் சேனையைக் கொன்றது?'' என்று ஏளனமாகக் கேட்டான்.
அதற்கு தேர்ப் பாகன் ''குரங்கு என்று எள்ளி நகையாட வேண்டாம். இராவணனை வீழ்த்தியதும் வாலி என்னும் குரங்கு தானே’’ என்றான்.
அக்ககுமாரனுக்கும் அனுமனுக்கும் கடும் போர் நடந்தது. அனுமன் அக்ககுமாரனை தரையில் தேய்த்துக் கொன்றான்.
''தேய்த்தான் ஊழியின் உலகு ஏழ் தேயினும், ஒரு தன் புகழ் இறை தேயாதான்''
எஞ்சிய படை வீரர்கள் தப்பியோடினர். இராவணன் தன் இளைய மகன் இறந்த செய்தி கேட்டு வெஞ்சினம் கொண்டான். மண்டோதரி அழுது புலம்பினாள். இராவணனின் மூத்த மகன் இந்திரஜித் (மேகநாதன்) பகை கொண்டு போருக்குக் கிளம்பினான்.
இராவணனிடம் இந்திரஜித் ''தந்தையே! ஜம்புமாலி, பஞ்சசேனாதிபதி, அக்ககுமாரன் இவர்கள் அனைவரும் மாண்டனர் என்றால் அக்குரங்கு மும்மூர்த்திகளின் திறத்திற்கு ஒத்தது அன்றோ? தமையன் அக்ககுமாரனை போருக்கு அனுப்புவதற்கு முன் நன்கு ஆராய்ந்திருக்க வேண்டும்.
ஒரு குரங்கினால் மாண்டான் என்னும் பழிச் சொல் அக்ககுமாரனுக்கு வந்து விட்டது'' என்றான். பின் நானே சென்று அக்குரங்கினைப் பிடித்து வருகின்றேன் என போருக்குக் கிளம்பினான்,
''கிங்கரர், சம்புமாலி, கேடு இலா ஐவர்,என்று இப்
பைங்கழல் அரக்கரோடு உடன் சென்ற பகுதிச் சேனை,
இங்கு ஒரு பேரும் மீண்டார் இல்லையேல், குரங்கு அது, எந்தாய்!
சங்கரன், அயன், மால் என்பார் தாம் எனும் தரத்தது ஆமோ''
தேரில் வந்த இந்திரஜித்தை அனுமன் கண்டான். 'வருபவன் இந்திரஜித்தே' என மகிழ்ந்தான். நடைபெறும் போரில் இந்திரஜித் மாண்டால் இராவணன் பயந்து ஒரு வேளை சீதையை விடுவிக்கலாம் என எண்ணினான்.
இருவருக்கும் இடையே கடும் போர் நடந்தது. இந்திரஜித் வீசிய அம்புகளை அனுமனின் சினத்தீச்சுடர் பயனற்றவையாக ஆக்கின. இந்திரனை வெற்றி கொண்டதாலே இந்திரஜித் என்னும் பெயர் பெற்றான் இவன். ஆனால் இப்பொழுது அனுமனின் முழு உருவமும் காண முடியாமல் திகைத்து நின்றான். இந்திரஜித் எய்த அம்புகளை, தன் மேல் படாத படி அனுமன், தன் நீண்ட கைகள் மூலம் அவற்றினை, திரும்ப அவன் மேல் போய் விழுமாறு வீசி எறிந்தான்.
யுத்தம் கடுமையாக நடந்தது. அனுமன் இந்திரஜித்தை தேரோடு தூக்கி எறிந்தான். இறுதியில் இந்திரஜித் பிரம்மாஸ்திரத்தை அனுமன் மேல் ஏவினான். அனுமன் தன் வரத்தால் பிரம்மாஸ்திரத்தைக் கடக்கும் ஆற்றலுடையவன் ஆயினும், பிரம்மனை பெருமைப்படுத்தும் நோக்கில் அதற்கு கட்டுப்பட்டான்.
அரக்கர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் மாபெரும் கயிறு கொண்டு அனுமனைக் கட்டினர். பிரம்மாஸ்திரத்தால் கட்டப்பட்டவர்களை பிற கயிறு கொண்டு கட்டினால், பிரம்மாஸ்திரத்தின் மந்திரம் அறுபடும். இது அனுமனுக்கும் தெரியும், இந்திரஜித்திற்கும் தெரியும். ஆனாலும் அனுமன் இராவணனைக் காண எண்ணம் கொண்டவனாய் கட்டுப்பட்டு அமைதியாக இருந்தான்.
அனுமன் பிடிபட்ட செய்தி இராவணனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவன் நற்செய்தி கூறிய தூதுவர்க்கு பரிசளித்தான். அனுமனைக் கொல்லாமல் கொண்டு வரும் படி ஆணையிட்டான்.
அனுமன் பிடிபட்ட செய்தி அறிந்த சீதை வருந்தினாள். ''அனுமனே! சகல கலைகளையும் கற்ற நீ ஒரு அரக்கனால் கட்டுண்டாயே. இராமனைப் பிரிந்து வருந்தும் நான், இராம தூதன் பிடிபட்டதை எண்ணி மேலும் துயரடைகின்றேன்'' என பலவாறு புலம்பினாள்.
இந்திரஜித் கட்டுண்ட அனுமனை இராவணன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். முத்துமணிச் சரங்கள் அசையும் வெண் கொற்றக் குடையின் கீழ் இராவணன் அமர்ந்திருந்தான்.
இராவணனைக் கண்ட அனுமன் கடுஞ்சினம் கொண்டவனாய் ''இவனை இப்பொழுதே அழித்து சீதையை மீட்பேன்'' என எண்ணினான். பிறகு சிறிது சிந்தித்தவனாய் ''இராவணனைக் கொல்ல இராமனே தகுந்தவன் என எண்ணம் கொண்டான். தனக்கும், இராவணனுக்கும் போர் தொடங்கினால் முடிவின்றி பல காலங்கள் நடைபெறும். சீதாதேவி ஒரு மாதம் மட்டுமே காலக்கெடு கொடுத்துள்ளார். எனவே இராவணனிடம் தன்னை இராம தூதன் எனக் காட்டிக் கொள்வதே உகந்தது'' என நினைத்தான்.
சினங்கொண்ட இராவணன் அனுமனிடம் ''நீ யார்? இங்கு வந்த காரணம் என்ன? நீ சக்கராயுதம் கொண்ட திருமாலா? நீண்ட சூலாயுதம் கொண்ட சிவபெருமானா? தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனா? வேல் கொண்ட முருகனா? இந்திரனா? யார் நீ? உன்னை அனுப்பியவர் யார்?'' எனக் கேட்டான்
''நேமியோ? குலிசியோ? நெடும் கணிச்சியோ?
தாமரைக் கிழவனோ? தறுகண் பல் தலைப்
பூமி தங்கு ஒருவனோ? பொருது முற்றுவான்
நாமமும் உருவமும் கரந்து நண்ணினாய்!''
அனுமன் நீ சொன்ன யாரும் அல்லன். நான் வில் வீரனாகிய இராமனின் தூதுவனாக வந்துள்ளேன். முதலும் முடிவும் இல்லாதவனாய், காலம் கடந்தவனாய், திரிசூலம், சங்கு சக்கரம், கமண்டலம் இவற்றினை விடுத்து, கயிலைமலை, பாற்கடல், தாமரை மலர் இவற்றை விட்டு இராமனாக அவதரித்துள்ளான்.
''மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய
காலமும் கடந்து நின்ற காரணன், கைவில் ஏந்திச்
சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை
ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு, அயோத்தி வந்தான்''
நான் இராமனின் சேவகன். என் பெயர் அனுமன். உன் நன்மைக்கு ஏதுவானதை நான் கூற விரும்புகின்றேன். அற நெறி தவறி உன் செல்வ வாழ்வினை நீயே கெடுத்துக் கொண்டாய். தீயினும் தூயவளான சீதாதேவியை நீ துன்புறுத்துவதால் உன் தவத்தின் பயன் உன்னை விட்டு நீங்கியது. நீ பெற்ற அரிய வரங்கள் எல்லாம் உன் தீய எண்ணத்தால் அழிந்தது. எனவே சீதையை இராமனிடம் ஒப்படைத்து உன் செல்வத்தையும், வாழ்வையும் தக்க வைத்துக் கொள்'' என்றான்.
இராவணன் பெருஞ்சிரிப்புடன் ''இவை அனைத்தும் மலையில் திரிந்து வாழும் அற்பக்குரங்கு கூறுகின்றது, நன்றாக இருக்கிறது'' எனச் சிரித்தான். பின் கோபத்துடன் ''இந்தக் குரங்கினைக் கொல்லுங்கள்'' என ஆணையிட்டான்.
அப்பொழுது இராவணனின் தமையன் வீடணன் குறுக்கிட்டு ''மன்னா! தூது வந்தவர்களை கொல்வது முறையாகாது. அது அரச நீதியும் அல்ல. நம் தங்கை சூர்ப்பனகையின் மூக்கினை அறுத்து, ஊனப்படுத்தி அனுப்பியது போல் இக்குரங்கினை ஊனப்படுத்தி அனுப்பலாம்'' என்றான்.
இராவனனும் வீடணனின் கூற்றினை சரி என எண்ணினான். எனவே ''இக்குரங்கின் வாலைத் தீயிட்டுக் கொளுத்தி விரட்டுங்கள்'' என ஆணையிட்டான்.
அனுமன் தன் வாலுக்குத் தீ வைப்பது இலங்கைக்குத் தீ வைப்பதற்குச் சமம் எனத் தனக்குள் எண்ணிக் கொண்டான்.
அரக்கர்கள் அனுமனை ஏராளமான கயிறு கொண்டு கட்டி இழுத்து சென்றனர். அனுமன் அமைதியாக சென்றான். அனுமன் வாலில் தீ மூட்டுவதனைக் காண அரக்கர்கள் கூட்டம் திரண்டது. அனுமன் தன் வாலினை நீண்டு வளரும் படி செய்தான். அரக்கர்கள் பல வகை துணிகளைச் சுற்றியும், அவ்வால் முழுவதையும் நெய்யிலும், எண்ணெயிலும் தோய்த்து எரியும் கொடிய நெருப்பைக் கொளுத்தி விட்டனர்.
அனுமனின் வாலில் தீ மூட்டப்பட்டதை மகிழ்ச்சியுடன் அரக்கியர் சீதையிடம் கூறினர். சீதை மனம் வருந்தி அக்னி தேவனை நினைத்து ''நான் கற்பில் தூய்மையுடையவள் என்பது உண்மையானால், அனுமனை நீ சுடாதே!" எனப் பிரார்த்தனை செய்தாள்.
சீதையின் வேண்டுகோளுக்கிணங்கி அக்னி தேவனும் அனுமனின் வாலில் வெம்மையைத் தராமல் குளிர்ந்தான். அனல் போய் குளிர்ச்சி வந்தது, கண்டு அனுமன் ''இது சீதையின் அருளாலே நிகழ்ந்தது'' என மகிழ்ந்தான்.
''வெற்பினால் இயன்றது அன்ன மேனியை விழுங்கி,வெந் தீ
நிற்பினும் சுடாது நின்ற நீர்மையை நினைவின் நோக்கி,
அற்பின் நார் அறாத சிந்தை அனுமனும், 'சனகன் பாவை
கற்பினால் இயன்றது' என்பான், பெரியது ஓர் களிப்பன் ஆனான்''.
அனுமன் இலங்கையின் எல்லா இடங்களிலும் தீ பற்றி எரியும் படி செய்தான். இலங்கை கொழுந்து விட்டு எரிந்தது. மாடமாளிகைகள், வீடுகள் என எங்கும் நெருப்பின் கோரத் தாண்டவம் ஆடியது. ஆனால் சீதை இருந்த அசோகவனம் மட்டும் எரியவில்லை. அனுமன் மகிழ்ந்து சீதையிடம் ஆசி பெற்று புறப்பட்டான்.
இலங்கை முழுவதும் எரிவது கண்டு இராவணன் ஊழிக் காலம் வந்ததோ? என ஐயுற்றான்.
அனுமன் தன் வாலினைக் கடல் நீரில் நனைக்க, நெருப்பு மறைந்தது. அனுமன் குன்றின் மேல் ஏறி, இராமரை வணங்கி, கடலைத் தாண்ட விண்ணில் தாவினான். வழியில் மைநாக மலை அனுமனை வாழ்த்தி அனுப்பியது. அனுமன் மகேந்திர மலையை அடைந்தான். வானர வீரர்கள் அனுமனின் முகக்குறிப்பைக் கொண்டு அவன் வெற்றியோடு வந்துள்ளான் என வீர முழக்கம் இட்டனர். பின் அவன் உடலில் உள்ள காயங்களைக் கண்டு வருந்தினர்.
அங்கதன், சாம்பவான் என அனைவரும் அனுமனைப் பாராட்டி, நடந்தனவற்றினைக் கூறும்படிக் கேட்டனர். அனுமன் சீதையைக் கண்டதையும், சூடாமணியைப் பெற்றதையும் கூறினான். வானரப் படை மகிழ்ந்தது.
அனுமன் ''நாம் விரைந்து சென்று இராமரிடம் சேதி சொல்ல வேண்டும்'' எனக் கூறி அனைவருடனும் கிளம்பினான்.
தென் திசை வீரர்கள் திரும்பி வராததை எண்ணி இராமர் வருந்தினார். அவர் சுக்ரீவனிடம் ''சுக்ரீவா! மூன்று திசை வீரர்களும், சீதையைக் காணாமல் திரும்பி வந்து விட்டனர். தென் திசை வீரர்கள் சென்று மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் அவர்கள் இன்னும் வந்து சேரவில்லை. என்ன நிகழ்ந்தது? சீதையைக் காணவில்லை என்னும் செய்தியை சொல்ல மனமின்றி உயிரை விட்டார்களோ? அல்லது சீதை மாண்டாளோ?'' எனப் பலவாறு புலம்பினான்.
அப்பொழுது அனுமன் இராமனின் முன் வந்து நின்றான். இராமனை பூமியில் வீழ்ந்து வணங்கினான். பின் இராமரிடம் ''கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்'' என்றான்.
''கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்,
தெண் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக! இனை, துறத்தி, ஐயமும்
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான்''
அனுமன் ''எந்தையே! சீதாதேவி தங்களின் பிரிவால் உள்ளம் வாடியுள்ளார். அவர் இராவணனிடம் இருந்து தன்னை மீட்க ஒரு மாதம் தவணை அளித்துள்ளார். வஞ்சக அரக்கரிடமுருந்து அவரை விரைவில் மீட்க வேண்டும்'' என்றான்.
பின் சீதை கூறிய அடையாள மொழிகளைச் சொல்லி, அவர் தந்த 'சூடாமணி'யை இராமரிடம் கொடுத்தான்.
இராமன் மகிழ்வுடன் சூடாமணியை வாங்கி, சீதையின் நினைவுகளில் மூழ்கினான்.
சுக்ரீவன் இராமரிடம் ''ஐயனே! காலதாமதம் செய்யாமல் இப்பொழுதே விரைந்து சென்று தேவியை மீட்போம்'' என்றான்.
அனைவரும் தென் திசை நோக்கி புறப்பட ஆயத்தமானார்கள். இரகு குல வீரன் இராமனும், அவனது சேனையும் பன்னிரு நாட்களில் தென் திசைக் கடலினை அடைந்தனர்.

Comments
Post a Comment