இராமாயணம் - சுந்தர காண்டம் (பகுதி-3)
அனுமனே நீ பிரம்மசரிய விரதத்தால் ஐம்பொறிகளையும் அடக்கியுள்ளாய். எனவே நீ மட்டும் இராமனிடம் செல். இராமனை வந்து என்னை மீட்கச் சொல்.
அனுமனும் ''நன்று நன்று'' என சீதையின் கூற்றினை ஆமோதித்தான். பின் இராமனிடம் 'யாது கூற வேண்டும்?' என சீதையிடம் கேட்டான்.
சீதை அனுமனிடம் ''அனுமா! நான் இராமன் வருகைக்காக இலங்கையில் இன்னும் ஒரு மாதம் காத்திருப்பேன். அதற்குள் இராமன் வராவிட்டால் உயிர் துறப்பேன். இதனை இராமரிடம் கூறு. இராமனின் கட்டளைப்படி இலக்குவனுக்கும் என்னைக் காக்கும் பொறுப்பு உண்டு. ஒரு மாதம் கழித்து இராமன் வந்தால், எனக்கு கங்கையில் நீர்கடன் செய்யும் படி சொல்.
என் மாமியர் மூவர்க்கும், இறக்கின்ற சீதை வணக்கம் தெரிவித்தாள் எனக் கூறு. மிதிலையில் இராமன் என் கரம் பிடிக்கும் போது, இப்பிறவியில் என்னைத் தவிர வேறு ஒரு பெண்ணை மனத்தாலும் நினைக்கமாட்டேன் என உறுதி கூறியதை நினைவு படுத்து’’ இவ்வாறு சீதை கூறினாள்.
''வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்
இந்த இப் பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்
தந்தவாறு திருச்செவி சாற்றுவாய்''
அனுமன் ''தாயே ! இராமன் அரக்கர்களை வதம் செய்து தங்களை இத்துன்பக்கடலில் இருந்து விரைவில் மீட்பான். நீங்கள் ஒரு மாதம் இங்கு காத்திருக்க வேண்டியதில்லை. நான் இராமனிடம் சேதி சொன்னவுடன், படையோடு வந்து தங்களை மீட்பான், இது உறுதி'' என்றான்.
சீதை இராமனிடம் சில அடையாள வார்த்தைகளைக் கூறினாள்.
''அனுமா! நானும் இராமனும் அயோத்தியில் அரண்மனையில் இருந்த போது என் ஆசைக் கிளிக்கு என்ன பெயர் வைக்கலாம்?'' எனக் கேட்ட போது, இராமன் அக்கிளிக்கு ''கைகேயி'' எனத் தன் தாயின் பெயரைப் பரிந்துரைத்தான்.
''மாசறு கேகயன் மாது என் அன்னை தன் பெயர் ஆக்கு"
இதனை இராமனிடம் கூறுவாயாக என்றாள். பின் தன் சேலை முடிப்பில் இருந்து ''சூடாமணி''யை எடுத்து அனுமனிடம் தந்தாள். ''அனுமா! இந்த சூடாமணி எங்கள் திருமணத்தின் போது என் தாய் எனக்கு கொடுத்தது. இதனை இராமனிடம் கொடு'' என்றாள்.
அனுமனும் சூடாமணியை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டான். பின் சீதையை வணங்கி தொழுது புறப்பட ஆயத்தமானான். சீதை அனுமனுக்கு ஆசி வழங்கினாள்.
அனுமன் புறப்படும் முன் சிறிது சிந்தனையில் ஆழ்ந்தான். சீதாதேவியைக் கண்டதால் வந்த வேலை முடிந்தது. ஆனால் இராமனின் தூதுவனாக நான் வந்தது இராவணனுக்குத் தெரிய வேண்டும். என்ன செய்வது? என யோசித்தான். பின் விஸ்வரூபம் எடுத்து பேருருக் கொண்டான். அசோக வனத்தில் இருந்த மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தான். பூந்தோட்டத்தை நாசம் செய்தான். பெரும் ஆரவாரத்தோடு அலங்கார மண்டபங்களை இடித்துத் தள்ளினான்.
திருமால் தங்குகின்ற ஆலமரம் போன்று சீதை தங்கி இருந்த மரம் மட்டும் அழியாமல் இருந்தது. அப்பொழுது அனுமன் ஊழி காலத்தில் உலகத்தை எல்லாம் அழித்து நிற்கும் உருத்திர மூர்த்தியைப் போல இருந்தான்.
''முடிந்தன; பிளந்தன; முரிந்தன; நெரிந்த
மடிந்தன; பொடிந்தன; மறிந்தன; முறிந்த
இடிந்தன; தகர்ந்தன; எரிந்தன; கரிந்த
ஒடிந்தன; ஒசிந்தன; உதிர்ந்தன; பிதிர்ந்த''
மயங்கி இருந்த அரக்கியர் கூட்டம் எழுந்து அசோகவனம் சிதைந்து இருப்பதைக் கண்டு பதறினர். பின் பேருரு கொண்ட அனுமனைப் பார்த்து அஞ்சி ஓடினர். அவர்கள் சீதையிடம் ''யார் இந்த குரங்கு? உனக்குத் தெரியுமா?'' என்றனர்.
சீதை ''எனக்கு எப்படித் தெரியும்? மாயம் செய்வதில் அரக்கர்களாகிய நீங்கள் தான் வல்லவர்கள்'' என்றாள்.
பின் சோலைக் காவலர்கள் விரைந்து இராவணனிடம் சென்று ''பெருங்குரங்கு ஒன்று அசோகவனத்தை அழித்தது'' என முறையிட்டனர்.
இராவணன் அதனை நம்ப முடியாமல் சிறு முறுவலுடன் ''குரங்கு ஒன்று பொன்மயமான சோலையை அழித்ததும்… அரக்கர்களுடைய வீரம் நன்றாக இருக்கிறது'' என்றான்.
காவலர்கள் ''மன்னனே! அக்குரங்கு தேவர்கள் வாழ்த்தும் மும்மூர்த்திகளில் ஒருவனாக இருக்குமோ என அஞ்சக் கூடிய அளவில் உள்ளது'' என்றனர்.
அப்பொழுது அனுமன் செய்த ஆரவாரம் இராவணனில் இருபது செவிகளில் விழுந்தது. புல்லிய முறுவல் தோன்ற பொறாமையும் சிறிது பொங்க இராவணன் தன் காவலர்களிடம் ''குரங்கு தப்பிச் செல்லாத படி பிடித்து வாருங்கள்'' என்றான்.
எண்ணற்ற வீரர்கள் அனுமனைப் பிடிக்கச் சென்றனர். அவர்கள் அனுமனைச் சூழ்ந்து நின்றனர். அனுமன் கதிரவனும் அஞ்ச, ஆகாயத்தை எட்டிய கயிலைமலையைப் போல விஸ்வரூபம் எடுத்து நின்றான். அவன் காவலர்கள் அனைவரையும் கொன்றான்.
காவல் வீரர்கள் கொல்லப்பட்டதை அறிந்த இராவணன் ஜம்புமாலி என்னும் மாவீரனை அழைத்து ''வீரனே! குரங்கை கயிற்றில் கட்டிக் கொண்டு வந்து, என் மனத்தில் உள்ள கோபத்தை ஆற்றுவாயாக'' என்றான்.
ஜம்புமாலி போருக்குக் கிளம்பினான். பெரும் சேனையோடு சென்றான். அசோகவனத்தில் அனுமன் தோரணவாயில் மேல் ஏறி நின்றான். ஜம்புமாலி சேனையுடன் அனுமனை நெருங்கினான். அனுமன் தன் நெற்றியை முன்னணிச் சேனையாகவும், உடம்பின் ரோமங்களை படை வீரர்களாகவும், நகங்களை கூரிய வாளாகவும், வாலினைப் பின்னணிச் சேனையாகவும் கொண்டு அவன் ஒருவனே ஒரு முழுச் சேனையாக போர்க் களத்தில் நின்றான்.
கடுமையாகப் போர் நிகழ்ந்தது. படை வீரர்கள் எல்லாம் இறந்தனர். ஜம்புமாலி அனுமன் மேல் அம்பினை எய்தான். அனுமன் அவற்றினைத் தகர்த்தான். இறுதியில் ஜம்புமாலி அனுமனால் கொல்லப்பட்டான்.

Comments
Post a Comment