இராமாயணம் - சுந்தர காண்டம் (பகுதி-2)
அப்பொழுது இராவணன் சீதையைக் காண அவ்விடம் வந்தான். இராவணனோடு பல அழகிய மங்கையரும் உடன் வந்தனர்.
இராவணன் சீதையிடம் ''எவ்விடத்து எனக்கு இன் அருள் ஈவது நொவ் விடக் குயிலே! அழகிய குயில் போன்றவளே! உன் மேல் அன்பு கொண்ட எனக்கு அருள் செய்வது எப்போது? கண்மணியே இன்னும் எவ்வளவு நாட்கள் பிடிவாதம் பிடிப்பாய்? என் மேல் இரக்கம் கொண்டு மனம் மாறுவதும் என்றோ?
உன் மனம் இன்று மாறும், நாளை மாறும் என பல நாட்கள் கடந்துவிட்டன. நீ இவ்வாறு என்னை வருத்தி நான் இறந்த பிறகு என்னைச் சேர்வாயோ?'' எனக் கேட்டான்.
'இன்று இறந்தன நாளை இறந்தன
என் திறம் தரும் தன்மை இதால் ; எனைக்
கொன்று இறந்தபின் கூடுதியோ? குழை
சென்று இறங்கி மறம் தரு செங்கணாய்!''
இராவணன் ''பொன் கொழுந்தே! அளவற்ற செல்வம் உடைய என் நாட்டில் என்ன குறை கண்டாய்? கிளி போன்றவளே! மாரீசன் இராமனைக் கொன்ற போதே நீ இராமனின் அலறலைக் கேட்டாய். பின்னும் இராமன் உயிருடன் இருக்கிறான் எனவும், அவன் வந்து உன்னை மீட்பான் எனவும் பகற்கனவு காண்கின்றாய். பேதைப் பெண்ணே! நீ இசைந்தால் உன்னை இந்நாட்டின் மகாராணி யாக்குகின்றேன். அப்போது மூன்று உலகங்களிலும் உள்ள பெண்கள் அனைவரும் உன்னை வணங்குவர். பெண்ணே! உன் மன மாற்றம் என்னை வாழவைக்கும்'' என சீதையின் முன் பணிந்து நின்றான்.
கடும் சினத்தோடு சீதை இராவணனிடம் ''துரும்பு போன்றவனே! பெண்களின் மனம் கற்பினை விடச் சிறந்ததாக எதனைக் கருதும்? நற்குடிப் பெண்களை நினைப்பதற்கும் உனக்கு உரிமை இல்லை. அறிவற்றவனே! இராமன் நினைத்தால் அவனது அம்பு மேரு மலையைத் துளைக்கும், விண்ணை இரண்டாகப் பிளக்கும், பதினான்கு உலகங்களையும் அழியச் செய்யும். அத்தகைய ஆற்றலுடையவன் இராமன். நீ இவ்விதம் தீயவற்றினைப் பேசி, உன் பத்து தலைகளும் சிதறும் படி செய்து கொள்கின்றாய்.
இராமன் மேல் கொண்ட அச்சத்தாலே, அன்று பொன் மான் என்று மாயமானை அனுப்பி, வஞ்சனை செய்து, தவ வேடம் கொண்டு என்னை திருடிக் கொண்டு வந்தாய். இப்பொழுது நீ உயிர் பிழைக்க வேண்டினால் என்னை விட்டுவிடு.
நீ பெற்ற வரமும், ஆயுளும், பிறப்பினால் உனக்கு அமைந்த வலிமையும், இன்னும் பிறவும், இராமன் வில்லில் அம்பைத் தொடுத்து விட்டவுடனே அவை வலிமை குன்றி அழியும். அறிவற்றவனே! சிவ பெருமான்! உனக்கு இப்பெருஞ்செல்வத்தை வழங்கினார். அதனை நீ அறநெறியில் நின்று துய்ப்பாய் என வழங்கினார். ஆனால் உன் தீய எண்ணம் அழிவிற் சேர்க்கும்.
குணமற்றவனே! நீ மறைந்து வாழும் இலங்கை, இராமன் வரும் நாளன்று அழியும்.
''ஏழை! நின் ஒளித்துறை இன்னது ஆம் என
ஆழி எம் கோம் மகன் அறிய வந்த நாள்
ஆழியும் இலங்கையும் அழியத் தாழுமோ?
ஊழியும் திரியும் உன் உயிரோடு ஓயுமோ?''
இவ்வாறு சீதை சினத்தில் சீறினாள். சீதையின் அறிவுரை கேட்டு இராவணனின் இருபது கண்களும் கோபத்தில் சிவந்தன. சீதையைக் கொன்று விட இராவணன் துடித்தான். ஆனாலும் காமம் கோபத்தை வென்றது.
இராவணன் சீதையிடம் ''பெண்ணே! உன் கேள்விகளுக்கு என்னிடம் விடை உள்ளது. நீ உயிராக நினைக்கும் இராமனைக் கொன்று விட்டு, உன்னைக் கொண்டு வந்தால், நீயும் இராமன் இறந்த சோகத்தில் மாள்வாய். எனவே தான் வஞ்சித்து உன்னை இவ்விடம் கொண்டு வந்தேன். தேவர்களும் எனக்கு பணி செய்கின்றனர். மானிடர்கள் எனக்கு அற்பமானவர்கள். இனி இராம இலக்குவரை ஒரு நொடியில் என் கையால் நசுக்கிக் கொள்வேன்.
உனக்கு இரண்டு மாதங்கள் அவகாசம் தருகின்றேன். அதற்குள் உன் முடிவினை மாற்றிக் கொள். அல்லது உன்னைக் கொன்று விடுவேன்'' எனக் கூறினான்.
பின் இராவணன் அரக்கியரிடம் ''சீதையை அச்சுறுத்தியோ அல்லது அறிவுரை வழங்கியோ எவ்வாறாயினும் அவள் மனத்தை மாற்ற வேண்டும். இல்லையென்றால் நான் உங்களுக்கு நஞ்சாவேன்'' என எச்சரித்துச் சென்றான்.
உடனே அரக்கியர் கூட்டம் சீதையை நெருங்கி அவளை மிரட்டினர். சீதை தன்னிலையை எண்ணி அழ, திரிசடை அரக்கியரை விலக்கி, சீதையைத் தேற்றினாள். அனுமன் இராம நாமத்தை உச்சரிக்க அரக்கியர் அனைவரும் மயங்கினர்.
சீதை தனியே இருந்தாள். சீதை இராமரின் வருகைக்காகக் காத்திருந்தாள். தன்னுள்ளே பலவாறு எண்ணி வருத்தமுற்றாள். ''இலக்குவனிடம் மிகக் கடுமையாகப் பேசியதால் இராமன் என்னை விட்டுவிட்டானோ? இராவணனால் தூக்கி வரப்பட்ட நான் என் கற்பினை எவ்வாறு நிரூபிப்பேன்? இனி நான் உயிர் வாழ்வதில் பயன் ஒன்றும் இல்லை'' என முடிவு செய்து தற்கொலை செய்து கொள்ள கொடி ஒன்றின் அருகே சென்றாள்.
''ஒன்று என் உயிர் உண்டு எனின் உண்டு இடர்'' என எண்ணினாள்.
அப்பொழுது அனுமன் சீதையின் செயலைக் கண்டு திடுக்கிற்றான். அவள் செயலைத் தடுக்கும் பொருட்டு, அவளிடம் ''நான் இராமபிரானின் தூதன்'' என முன் நின்றான்.
''கண்டனன் அனுமனும்; கருத்தும் எண்ணினான்
கொண்டனன் துணுக்கம்; மெய் தீண்டக் கூசுவான்
'அண்டர் நாயகன் அருள் தூதன் யான்' எனா
தொண்டை வாய் மயிலினைத் தொழுது தோன்றினான்''
''நான் இராமபிரானின் கட்டளையால் இங்கு வந்தேன். உங்களைக் காணும் பேறு பெற்றேன். தாயே! நீவிர் இங்கு இருப்பதை இராமர் அறியவில்லை. அறிந்திருந்தால் அரக்கர் கூட்டம் இன்னும் உயிரோடு இருப்பார்களா? என்னைக் கண்டு சந்தேகிக்க வேண்டாம். இராமர் கூறிய அடையாள மொழிகள் உள்ளன'' என்று சீதையை வணங்கி நின்றான்.
சீதை அனுமனை அரக்கன் இல்லை என நம்பினாள். இவன் பொறிகள் ஐந்தையும் வென்றவன், தூயவன் என எண்ணினாள். அனுமன் அருகே வர சீதை இராவணன் தான் மாறுவேடத்தில் வந்திருப்பானோ? என அச்சம் கொண்டாள். அனுமன் ''ராமராமராமராம'' என இராம நாமத்தை உச்சரிக்க சீதை மனம் தெளிந்தாள்.
பின் அனுமனிடம் ''நீ அரக்கனானாலும், குரங்கானாலும் இராம நாமத்தை உச்சரித்து என் உள்ளத்தை உருக்கினாய். வீரனே! நீ யார்?'' எனக் கேட்டாள்.
''அரக்கனே ஆக; வேறு ஓர் அமரனே ஆக; அன்றிக்
குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக; கொடுமை ஆக;
இரக்கமே ஆக; வந்து இங்கு எம்பிரான் நாமம் சொல்லி
உருக்கினன் உணர்வைத் தந்தான் உயிர்; இதின் உதவி உண்டோ?''
அனுமன் சீதையிடம் தன் வரலாற்றினை முழுமையாகக் கூறினான். ''இராமர் தங்கள் நினைவாகவே உள்ளார். அவர் வானரப் படை கொண்டு தங்களைத் தேடும் பணியைத் துவக்கிய போது, நாங்கள் தென் திசையில் தேடினோம். தங்களைக் காணும் பேறு கிடைத்தது'' என்றான்.
சீதை அனுமனிடம் இராமரின் அடையாள மொழிகளைக் கூறும் படி கேட்டாள். அனுமனும் இராமரின் அடையாள மொழிகளைக் கூறலானான். முதலில் இராமரின் அழகினை வர்ணித்தான். பின் இராமர் கூற்றாக ''நான் கானகம் புறப்படும் போது சீதையை அயோத்தியிலேயே இருக்கச் சொன்னேன். ஆனால் அவள் இராமர் இருக்குமிடமே சீதைக்கு அயோத்தி எனக் கூறி என்னுடன் வந்தாள். கானகம் செல்ல அரண்மனை வாயில் வந்தவுடன் கானகம் எவ்வளவு தூரம் என வெகுளியாய் கேட்டாள்'' இந்த அடையாள வார்த்தைகளை இராமர் கூறியதாக அனுமன் சீதையிடம் கூறினான். பின்னும் சீதையிடம் ''இராமரின் கணையாழி இதோ'' எனக் காட்டினான்.
சீதை இராமனின் கணையாழியைக் கண்டு இராமனையேக் கண்டது போல மகிழ்ந்தாள்.
''அனுமனே! இவ்வளவு சிறிய உருவம் கொண்ட நீ எவ்விதம் கடல் கடந்தாய்? தவத்தின் பயனாலா? அல்லது சித்திகளால் நிகழ்ந்ததா?'' என வினவினாள்.
உடனே அனுமன் தன் சிறிய உருவில் இருந்து நீங்கி, உயர்ந்த தோள்களையுடையவனாய், ஆகாயத்திற்கும் மேலே விஸ்வரூபம் எடுத்து நின்றான். எட்டு திசைகளிலும், எல்லா உலகங்களிலும் உள்ள உயிர்க் கூட்டங்கள் அனுமனைப் பார்த்தன.
சீதையால் அனுமனின் திருவடிகளைக் கூட காண முடியவில்லை. அனுமனால் அரக்கர்கள் இறந்தவராவர் என எண்ணினாள். பின் அனுமனிடம் ''உன் உருவத்தைச் சுருக்கிக் கொள்'' என்றாள். அனுமன் தன் பேருருவை ஒடுக்கி சிறிய உருவம் கொண்டான்.
சீதை அனுமனிடம் ''இன்று நான் இம்மாயச் சிறையிலிருந்து மீண்டது போல உணர்கின்றேன். இனி நான் ஓர் பழிச் சொல்லுக்கு ஆளாக மாட்டேன். எம்பிரான் இராமரின் திருவடிகளை என் தலையில் சுமந்தவள் ஆனேன். ஆகையால் நான் இறந்தாலும் என் ஆன்மாவுக்கு ஓர் குறையும் இல்லை'' என்று மகிழ்ந்தாள்.
''மாண்டேன் எனினும் பழுது அன்றே; இன்றே இம்மாயச் சிறை நின்றும்
மீண்டேன்; என்னை ஒறுத்தாரைக் குலங்களோடும் வேர் அறுத்தேன்
பூண்டேன் என் கோன் பொலம் கழலும்; புகழே அன்றிப் புன்பழியும்
தீண்டேன்! என்று மனம் மகிழ்ந்தாள், திருவின் முகத்துத் திரு ஆனாள்’’.
அனுமன் சீதையிடம் ''அம்மையே! அளவிட முடியாத எண்ணற்ற வானர வீரர்கள் இராமர் வசம் உள்ளனர். அவர்களைக் கணக்கிடுவது என்பது கடலில் கிடக்கின்ற மணலை எண்ணுவது போலாம். அவர்களுடைய கூட்டத்தில் நானும் ஒருவன். எனவே அரக்கர் கூட்டம் அழிவது திண்ணம். நீங்கள் நம்பிக்கையோடு இருங்கள். இராமபிரானின் சேனை எழுபது வெள்ளம். அச்சேனையின் வீரர்கள் அனைவரும் இக்கடல் நீரை அள்ளிக் குடிக்க இக்கடல் பள்ளமாகும். வஞ்சகர் சூழ்ந்த இவ்விலங்கையானது இராமரால் அழிக்கப்படும்'' என்றான்.
பின் அனுமன், இலக்குமி போன்ற சீதை தற்கொலை செய்ய எண்ணுகின்றாள். எனவே சீதையை சுமந்து கொண்டு இவ்விடம் விட்டு அகல்வதே சிறந்தது என எண்ணினான்.
''தாயே! தாங்கள் என் தோளில் அமர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களை இராமபிரான் இருக்கும் மலையில் கண் இமைக்கும் நேரத்தில் கொண்டு சேர்க்கின்றேன். என்னைத் தடுக்கும் அரக்கர்களைக் கொன்று என் சினத்தைப் போக்கிக் கொள்கின்றேன். ஒருவராலும் சாகாவரம் பெற்ற நான் தங்களை இத்துன்ப நிலையில் விட்டு, இராமரிடம் வெறுங்கையுடன் திரும்ப மாட்டேன்'' என்றான்.
சீதை அனுமனிடம் ''அனுமனே! உன்னால் முடியாதது எதுவும் இல்லை. நான் நன்கறிவேன். ஆனால் வேறொரு ஆடவரின் மேல் அமர்ந்து வருவது என் பெண்மைக்கு சிறப்பாகா. மேலும் என்னை நீ சுமந்து செல்லும் போது அரக்கர் கூட்டம், தடுத்து தாக்க வரும் போது, நீ என்னைக் காப்பாயா? அல்லது அரக்கருடன் போரிடுவாயா?. மேலும் என்னை வஞ்சித்து கவர்ந்த இராவணனை இராமன் தன் வில்லால் வதம் செய்வதே இராமனுக்கும், என் பெண்மைக்கும் சிறப்பாகும்''.
அனுமனே! என் சொல்லால் இலங்கையை மட்டுமல்ல, இவ்வுலகத்தையும் சுட்டெரிப்பேன். ஆனால் அது இராமனுக்கு மேன்மை சேர்க்காது. எனவே அதனை விடுத்தேன்.
''அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்
வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று வீசினேன்''.
இராவணன் என்னைத் தூக்கி வந்தனாலும், என்னைத் தீண்டவில்லை. பர்ணசாலையோடு பெயர்த்து எடுத்து வந்தான். என்னைத் தீண்டி இருந்தால் அவன் இவ்வளவு நாள் உயிரோடு இருப்பானா? விரும்பாத பெண்ணைத் தீண்டினால் அவன் தலை வெடிக்கும் என்னும் பிரம்மனின் சாபம் உள்ளது. இதனை திரிசடை என்னிடம் கூறியுள்ளாள்.
அனுமனே நீ பிரம்மசரிய விரதத்தால் ஐம்பொறிகளையும் அடக்கியுள்ளாய். எனவே நீ மட்டும் இராமனிடம் செல். இராமனை வந்து என்னை மீட்கச் சொல்.

Comments
Post a Comment