அய்யர் மலை இரத்தினகிரீஸ்வரர் ஆலயம் - Ayyar malai Temple

 காவேரியின் தென்கரையில் அமைந்துள்ள பாடல் பெற்ற தலம் அய்யர் மலை இரத்தினகிரீஸ்வரர் ஆலயம் ஆகும். தமிழ் நாட்டின் கரூர் மாவட்டத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

 


அய்யர் மலையில் சிவபெருமான் எட்டு பாறைகளுக்கு நடுவே ஒன்பதாவது பாறையில் சுயம்பு மூர்த்தியாக இரத்தினகிரீஸ்வரராக எழுந்தருளியுள்ளார். தாயார் சுரும்பார் குழலி என்னும் நாமத்தோடு அருள் பாலிக்கின்றார். தல விருட்சமாக வேம்பு உள்ளது. இரத்தினகிரீஸ்வரை வணங்க 1140 படிக்கட்டுகள் ஏறிச் சென்று வழிபட வேண்டும். 

யாவர்க்கும் மேலாகிய தலைவர் (ஐயர்) இங்கு எழுந்தருளி அருள் பாலிப்பதால் "ஐயர் மலை" என்னும் பெயர் வழங்கப்படுகிறது. பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின் போது இங்கு தங்கி இருந்தனர் என்றும், அதனால் இம்மலைக்கு ஐவர் மலை என்னும் பெயர் வந்து, பின்னர் நாளடைவில் ஐவர் மலை திரிந்து ஐயர் மலை என்றாயிற்று என்னும் கூற்றும் உள்ளது. 

அகத்தியர் சிவபெருமானை நண்பகலில் தரிசித்த தலம் என்பதால், இறைவன் "மத்தியான சுந்தரர்" என்றும் அழைக்கப்படுகிறார்.
 
தல வரலாறு 

இத்தலத்தில் சிவலிங்கத்தின் முன்பு "பொய்வாசிக் கொப்பரை" என்னும் நீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டிக்கு ஒரு வரலாறு உண்டு. ஆரிய மன்னன் ஒருவன் மாணிக்கக் கற்கள் வேண்டி இறைவனிடம் வந்தான். "மாணிக்கக் கற்களை நீ பெற வேண்டுமானால் இங்குள்ள தொட்டியை காவேரி ஆற்றின் நீரால் நீ நிரப்ப வேண்டும் " என்று இறைவர் கூறினார். ஆரிய மன்னனும் அந்தத் தொட்டியை நிரப்ப முயன்றான். எவ்வளவு நீர் ஊற்றியும் தொட்டி நிரம்பவில்லை. எனவே கோபம் கொண்ட மன்னன் தன் வாளினை எடுத்து இறைவர் மேல் வீசினான். அச்சமயம் இறைவர் மாணிக்கக் கற்களைத் தந்து அருள் பாலித்தார். 

இறைவனைக் காயப்படுத்தியதற்காக வருத்தமடைந்த மன்னன் அக்கோயிலில் தங்கி இறைவனுக்கு சேவை செய்து முக்தி பெற்றான் என்று கூறப்படுகிறது. அந்த மன்னனால் இறைவன் வெட்டப்பட்டதால் இறைவனுக்கு "முடிதழும்பர்" என்னும் பெயரும் உள்ளது. இன்றும் சிவலிங்கத்தின் மேல் வெட்டப்பட்ட தழும்பு உள்ளது. சிவலிங்கத்தின் முன்பு அந்த நீர்த் தொட்டி "பொய்வாசிக் கொப்பரை" என்னும் நீர் தொட்டியாக இருக்கின்றது. 

 மன்னன் செய்த தவறைப் போக்க, தினமும் 8 கி.மீ தூரத்தில் உள்ள காவிரியாற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து, அந்தத் தொட்டியில் நிரப்பப்பட்டு, இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் முறை உருவானது. இந்த வழக்கம் இன்றளவும் தொடர்கின்றது. 

இரத்தினகிரி, மாணிக்க மலை, சிவாய மலை, அரதனசலம் என்னும் பெயர்களும் இக்கோவிலுக்கு வழங்கப்படுகிறது. காலையில் குளித்தலை, மதியம் ஐயர் மலை, மாலையில் ஈங்கோய் மலை ஆகிய மூன்று தலங்களையும் ஒரே நாளில் வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்னும் நம்பிக்கை நிலவுகிறது. கார்த்திகை மாதம் இவ்வாறு ஒரே நாளில் வணங்கி பக்தர்கள் நலம் பெறுகின்றனர்.

 சுரும்பார் குழலி உடனமர் இரத்தினகிரீஸ்வரரை வணங்கி வாழ்வில் அனைத்து நலன்களையும் பெறுவோமாக.

Comments

Popular posts from this blog

நளதமயந்தி கதை (NALA THAMAYANDHI STORY)

வாலி வதைப் படலம்

தஞ்சை பெரிய கோவில் (கட்டிடக் கலையின் உன்னதம்) BRIHADEESWARAR TEMPLE