அதிபத்த நாயனார்
சூரிய குலத்தின் மன்னர்கள் நல்லாட்சி புரிந்து வரும் வளமிக்க நாடு சோழ நாடு. ஓயாது ஒலிக்கும் கடல் அலைகளின் பேரொலியைக் கொண்ட ஊர் நாகப்பட்டிணம். இவ்வூரின் மக்கள் மீன் பிடிக்கும் தொழிலின் மூலம் வருவாய் ஈட்டி வாழ்ந்து வந்தனர். அங்குள்ள நுளைபாடி என்னும் மீனவக் குப்பத்தின் தலைவராக அதிபத்தர் விளங்கினார். அவர் கங்கையையும், பிறைச் சந்திரனையும் தலையில் சூடிய சிவபெருமானுக்குத் தொண்டு புரிபவராவார்.
மீனவத் தலைவரான அவர் பல படகுகளைக் கடலில் செலுத்தி, பல அரிய வகை மீன்களைப் பெறுவார். அவருடைய குடிமக்கள் கடலில் வலை வீசி எண்ணற்ற மீன்களைப் பிடித்து வந்து அவர் முன் குவிப்பர். அவற்றிலிருந்து ஒரு மீனை எடுத்து, அதனைச் சிவபெருமானுக்கே என்று அர்பணிப்பார். எனவே தினம் ஒரு மீனினை மீண்டும் கடலிலே விட்டுவிடுவார்.
இவ்வாறு தினந்தோறும் சிவபெருமானுக்கென்று ஒரு மீனினை உள்ளன்போடு அர்பணித்து வந்தார். சில சமயங்களில் ஒரே ஒரு மீன் கிடைத்த போதிலும், அம்மீனையும் எம்மிறைவன் ஈசனுக்கே என்று கடலில் விட்டுவிடுவார்.
இவ்விதம் திருத்தொண்டு புரிந்து வரும் நிலையில், சில நாட்களாக தினம் ஒரு மீன் மட்டுமே அகப்பட்டு வந்தது. கிடைத்த அந்த ஒரு மீனையும் இறைவனுக்கு என்று மீண்டும் கடலில் விட்டு வந்தார். பல நாட்களாக இவ்வாறு கழிந்தது. அவருடைய குடிமக்கள் உணவின்றி வாடினர். அவரும் உணவின்றி தளர்ச்சியடைந்தார். ஆனாலும் மனம் தளராமல் தம் திருத்தொண்டினை உறுதியுடன் நிறைவேற்றி வந்தார்.
இங்ஙனம் நிகழும் நாட்களில், அந்த ஒரு மீனும் கிடைக்காமல் இறைவர் செய்தார். பின் ஒரு நாள் அதிசய மீனாகிய பொன் மீன் ஒன்று வலையில் அகப்பட்டது. பல நாட்களாக ஒரு மீனே கிடைத்தும் , சில நாட்கள் மின்களேக் கிடைக்காமலும் வாடிய அவர்களுக்கு தங்க மீன் கிடைத்தது.
பேரொளி வீசிய பொன் மீனினை வலைஞர்கள் எடுத்து அதிபத்தரிடம் கொடுத்தனர். அவர் நவமணி பொலிந்த அம்மீனினைக் கண்டு மகிழ்ந்து ''இம்மீன் என்னை ஆளூடையவரின் பொன்னடிக்கே உரித்தாகுக'' என்று கூறி மீண்டும் கடலில் விட்டார்.
பொருட்பற்றினைத் துறந்த அதிபத்தர் முன், இறையனார் காளை வாகனத்தில் எழுந்து அருளி காட்சி அளித்தார். தேவர்கள் கற்பக மலர் மழை பொழிந்தனர். அதிபத்தர் ஆனந்தத்தில் தம் கண்களில் கண்ணீர் பெருக இறைவனின் திருவடிகளை வணங்கி நின்றார். சிவபெருமான் அதிபத்தருக்கு சிவலோகத்தில் தம் அடியார்களுடன் இருக்கும் பேற்றினை அருளினார்.
இவ்விதம் தங்க மீனே ஆயினும் இறைவனுக்கு படைத்த நாயன்மார் அதிபத்தர்.