கடல் தாண்டும் அனுமன்(HANUMAN STORY)
அனுமன் மகேந்திர மலை உச்சியில் விஸ்வரூபம் எடுத்து நின்றான். அவன் மனத்துள் இராம நாமத்தை உச்சரித்துக் கொண்டான். இலங்கை அவன் கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
''கண்டனென் இலங்கை மூதூர்! கடிபொழில், கனக நாஞ்சில்
மண்டல மதிலும், கொற்ற வாயிலும், மணியில் செய்த
வெண் தளக் களப மாட வீதியும், பிறவும் ! என்னா,
அண்டமும் திசைகள் எட்டும் அதிரத் தோள் கொட்டி ஆரத்தான்''.
தந்தை வாயு தேவனையும், தாய் அஞ்சனை தேவியையும் தியானித்துக் கொண்டான். அனுமன் கால் அழுந்த மகேந்திர மலை நசுங்கியது. மலையில் இருந்த உயிரினங்கள் அஞ்சி ஓடின. பூமியிலிருந்து நீர் கசிந்து பெருகியது.
அனுமன் வாலை வேகமாக உயர்த்தி, வலிமையான கால்களை மடக்கி, வேகமாக கைகளை நீட்டி, விண்ணில் தாவினான். அனுமனின் வேகத்தால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
அனுமன் ஏழுலகமும் நடுங்கும் படி விண்ணில் பறந்து சென்றான். திருமால் காலால் அளந்த உலகத்தை, அனுமன் வாலால் அளந்தானோ என்று விண்ணவர் மருளும் படி சென்றான். அனுமன் உயரப் பறந்து செல்லும் போது, கடலின் நடுவே மைந்நாக மலை மேலெழுந்து வந்தது. மைந்நாக மலையை அனுமன் உந்தித் தள்ள அது கடலுள் சென்றது.
பின் மைந்நாகமலை மனித உருவம் எடுத்து அனுமனிடம் பேசியது. ''அனுமனே! உனக்கு இடையூறு விளைவிக்க நான் மேலெழும்பவில்லை. ஒரு முறை இந்திரன் தன் வச்சிராயுதத்தால் என் சிறகுகளை அரிந்தான். அப்பொழுது வாயு பகவான் என்னைக் காத்தார். அதற்கு நன்றி சொல்லும் விதமாக உனக்கு உதவ வந்துள்ளேன். உனக்கு அயர்ச்சியாக இருந்தால் என் மேல் இளைப்பாறிச் செல்'' என்றது.
அனுமன் ''மைந்நாக மலையே உன் உபசரிப்புக்கு நன்றி. இராமபிரான் என் மேல் கொண்ட அன்பால் நான் சோர்வடைய மாட்டேன். உணவும் வேண்டா, என் பணி முடிந்து நான் திரும்பி வரும் பொழுது உன் உபச்சாரத்தினை ஏற்றுக் கொள்கின்றேன்'' எனக் கூறி விரைந்து சென்றான். மைந்நாக மலையும் அனுமனின் கூற்றினை ஏற்று கடலினுள் மூழ்கியது.
அனுமனின் ஆற்றலை உலகுக்கு உணர்த்த விரும்பிய தேவர்கள் சுரசை என்னும் பெண்ணை அனுப்பினர். அவள் பெரும் அரக்கி வடிவெடுத்து அனுமனை வழி மறித்தாள். விண்ணை முட்டும் படி நின்ற அவள் தன் வாயைப் பிளந்து கொண்டு அனுமனை விழுங்கக் காத்திருந்தாள். அவள் அனுமனிடம் ''என் வாய்க்குள் புகுந்து வெளியே வந்தால் உனக்கு வழி விடுகின்றேன்'' என்றாள்.
பேருரூ கொண்ட அனுமனை விழுங்க அரக்கி தன் வாயை அகலமாக்கிக் கொண்டே சென்றாள். ஆனால் அனுமன் திடீரென்று தன் உடலைச் சுருக்கிக் கொண்டு, அரக்கி சுரசையின் வாயுள் சென்று வெளியே வந்தான். சுரசை அனுமனின் செயலைப் பாராட்டி அவனுக்கு வழி விட்டாள். விண்ணவரும் அனுமனின் சாமார்த்தியத்தினைப் பாராட்டினர்.
அனுமனின் பயணம் தொடர்ந்தது. அங்கதாரை என்னும் அரக்கி ஆலகால விஷம் போல கடலின் நடுவே எழுந்தாள். அவள் கடலின் மேலே பறந்து செல்லும் பறவைகளின் நிழலைப் பிடித்து இழுத்து, அவற்றினை விழுங்கிப் பசியாறுவாள். அவ்வாறு அனுமனின் நிழலைக் கீழே இழுத்து அதன் மூலம் அனுமனை விழுங்கினாள். அனுமன் அவள் வயிற்றினைக் கிழித்து வெளியே வந்தான். அரக்கி உயிரிழந்து கடலில் விழுந்தைக் கண்டு பறவைகள் மகிழ்ச்சியடைந்தன.
எண்ணங்களின் வேகம் அளவிட முடியாதது. அது செல்லும் தூரமும் அளப்பறியது. ஆனால் அனுமன் எண்ணங்களை விட வேகம் என்று கூறும் படி வேகமாகப் பறந்தான். அனுமன் இலங்கையின் பவளமலையில் குதித்தான்.
இலங்கை பொன் நகரமாகக் காட்சியளித்தது. அனுமன் இலங்கையின் அழகினைக் கண்டு வியந்தான். சூரியன் மறைந்ததும் இலங்கை நகருக்குள் செல்லத் தீர்மானித்தான். தன் உடலைச் சுருக்கிக் கொண்டு சாதாரணக் குரங்கு போன்று, இலங்கையின் உள்ளே சென்றான்.
அனுமன் இலங்கையின் காவல் தேவதையான இலங்கிணியால் தடுத்து நிறுத்தப்பட்டான். அவள் எட்டுத் தோள்களும், நான்கு முகங்களும் உடையவள்.
''எட்டுத் தோளாள், நாலு முகத்தாள், உலகு ஏழும்
தொட்டுப் பேரும் சோதி நிறத்தாள், சுழல் கண்ணாள்
முட்டிப் போரின் மூவுலகத்தை முதலோடும்
கட்டிச் சீறும் காலன் வலத்தாள், சுமை இல்லாள்''.
இலங்கிணி ''ஏய் குரங்கே! யார் நீ? எங்கே செல்கிறாய்?'' என்று வழி மறித்தாள்.
அனுமன் ''நான் இலங்கை நகரினைச் சுற்றிப் பார்க்கச் செல்கின்றேன்'' என்றான்.
இலங்கிணி பெரும் சத்தத்துடன் சிரித்தாள். பின் ''நீ இலங்கையைச் சுற்றிப் பார்க்கிறாயா? இல்லை. உனக்கு அனுமதி தர முடியாது. ஓடிப் போ'' என்றாள்.
அனுமன் உள்ளே நுழைந்தான். இலங்கிணி எட்டு கரங்களிலும் சூலமும், வேலும் கொண்டு நின்றாள். அனுமனுக்கும், இலங்கிணிக்கும் போர் மூண்டது அனுமன் விஸ்வரூபம் எடுத்து ஓர் அறை விட்டான். அவள் மண்ணில் விழுந்தாள்.
சாப விமோசனம் பெற்ற இலங்கிணி, அனுமனை வணங்கி ''ஐயா! பிரம்ம தேவன் சாபத்தால் நான் இந்நகரைக் காவல் காத்து வந்தேன். எனக்கு சாப விமோசனம் எப்பொழுது என பிரம்மனிடம் கேட்டேன், அதற்கு பிரமன்'' இராமனின் தூதுவனால் நீ விழ்த்தப்படும் நாளில் இலங்கையின் அழிவு ஆரம்பம் ஆகும். அன்று உனக்கு சாப விமோசனம் கிடைத்து, நீ இலங்கையைக் காக்கும் பொறுப்பில் இருந்து விடுபடுவாய்'' என்று கூறினார். இன்று அந்நாளும் வந்தது. நீ உள்ளே செல்லாம்'' என்று கூறி இலங்கிணி விண்ணுலகம் சென்றாள்.
அனுமன் பழையபடி தன் உடலைச் சுருக்கிக் கொண்டு இலங்கை நகருக்குள் புகுந்தான். மதிலின் மேல் ஏறி கோட்டைக்குள் பிரவேசித்தான். இலங்கையின் மாட மாளிகைகளைப் பார்த்துக் கொண்டே சென்றான். சீதையை ஒவ்வொரு இடமாக தேடிக் கொண்டே சென்றான்.