சின்னக் கண்ணனின் குறும்புகள்
ஒரு நாள் யசோதை தன் வீட்டில் தயிர் கடைந்து கொண்டிருந்தாள்.அப்பொழுது சின்னக்கண்ணன் தன் தாய் யசோதையிடம் வந்து தயிர்கடையும் மத்தைப் பிடித்துக் கொண்டு தடுத்தார். மடியின் மீது வந்து ஏறிய குழந்தையைப் புன்னகையுடன் பார்த்தாள் யசோதை. அப்பொழுது அவள் அடுப்பில் ஏற்றியிருந்த பால் பொங்கி வழிவதைக் கண்டதும் பாலக்கிருஷ்ணனை விட்டு விட்டு, வேகமாக பால் பாத்திரத்தை கீழே எடுத்து வைக்கச் சென்றாள்.அதனால் கோபம் கொண்ட சின்னக்கண்ணன், தயிர் ஏடுள்ள சட்டியை உடைத்து விட்டு, கண்களில் பொய்யாகக் கண்ணீரை வரவழைத்துக் கொண்டு, வீட்டினுள்ளே ஒருவரும் அறியாத இடத்திற்கு சென்று வெண்ணையை எடுத்து தின்று கொண்டிருந்தார்.
பாலை இறக்கி வைத்து விட்டு வந்த யசோதை அங்கு, தயிர்ப்பானை உடைந்துருப்பதையும், அதனை உடைத்தவன் தன் மகன் தான் என்பதையும் அறிந்து,சிரித்துக் கொண்டே தன் மகனை அங்குமிங்கும் தேடினாள். வீட்டினுள்ளே சென்று பார்த்தாள்.
அங்கே கண்ணன்,
உரியிலிருக்கும் வெண்ணையை எடுத்துத் தின்று கொண்டும், அருகில் இருக்கும் குரங்கிற்கு வேண்டிய அளவு வெண்ணையை கொடுத்தும், திருட்டுத் தனத்துடன் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டும், நிற்பதைக் கண்ட யசோதை மெதுவாகச் சென்று பிடிக்க முயன்றாள். அதனைக் கண்ட குறும்புக் கண்ணன் உரியிலிருந்து வேகமாகக் குதித்து,ஓட்டம் பிடித்தார்.
யாராலும் பிடிக்க முடியாத மாயக் கண்ணனை யசோதை ஓடிச் சென்று பிடித்துக் கொண்டாள். மை தீட்டிய கண்களைக் கசக்கிக் கொண்டே,
அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்த சின்னக்கண்ணனை அவள் பொய்யாக மிரட்டினாள். மாயக்கண்ணனின் சக்தியை அறியாத யசோதை, குழந்தை பயந்து விட்டதாக எண்ணிக் கொண்டாள். பின் சின்னக்கண்ணனை கயிற்றினால் கட்டுவதற்கு விரும்பினாள்.
யாதுமாகிய பரம்பொருளை யாரால் கட்ட முடியும்,
இதனை அறியாத யசோதைக் கண்ணனை கயிறு கொண்டு உரலில் கட்டத் தொடங்கினாள். ஆனால் அந்தக் கயிறு இரண்டு அங்குலம் குறைவாக இருந்தது. வேறு ஒரு கயிற்றை எடுத்து,
அதனுடன் முடிச்சுப் போட்டு,
யசோதைக் கண்ணனைக் கட்ட முயன்றாள். அப்போதும் கயிறு இரண்டு அங்குலம் குறைவாகவே இருந்தது. வீட்டிலுள்ள எல்லாக் கயிறுகளையும் எடுத்து முடிச்சுப் போட்டு கண்ணனைக் கட்டப் போனாள். அப்போதும் கயிறு இரண்டு அங்குலம் குறைவாகவே இருப்பது கண்டு திகைத்தாள்.
அப்போது அங்கிருந்த கோபிகைகள் விழுந்து விழுந்து சிரிப்பதனைக் கண்டு யசோதையும் சிரித்தாள். அவள் உடல் வியர்த்தது. கண்ணனை வியப்புடன் பார்த்தாள். இதனைக் கண்ட கண்ணன் தன் தாயின் சிரமத்தை பார்த்து , தன்னை உரலில் கட்டுவதற்கு இடம் கொடுத்தார். பரம்பொருள் அன்புக்கு கட்டுப்படுவார் என்பது எவ்வளவு உண்மை. சின்னக் கண்ணனை உரலில் கட்டிய யசோதை,
வீட்டு வேலைகளைக் கவனிக்கச் சென்றுவிட்டாள்.