நவராத்திரி விழா
இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் நவராத்திரி முதன்மையானது. நவராத்திரி விழாவானது நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழாவில் முதல் மூன்று நாட்கள் வீரத்தை வேண்டி துர்கையையும், அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தை வேண்டி லட்சுமியையும், அடுத்த மூன்று நாட்கள் கல்வியை வேண்டி சரஸ்வதியையும் வழிபடுகிறார்கள். பத்தாவது நாள் வெற்றியின் அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது. இது விஜய தசமி எனவும் அழைக்கப்படுகிறது. மூன்று மகாசக்திகளையும் வழிபடுவதனால் கல்வி, செல்வம், வீரம் என்னும் வளங்களைப் பெறலாம்.
முப்பெரும் தேவியரான துர்கா, லட்சுமி, சரஸ்வாதி ஆகிய மூவரையும் வழிபடுவதன் மூலம் நமது எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் உருவாகின்றன.
நவராத்திரி விழாவின் வரலாறு
கம்பன் என்பவனுக்கும், எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் பிறந்தவன் மகிஷாசூரன் ஆவான். அவன் மனித உடலுடனும், எருமை தலையுடனும் பிறந்தான்.
மகிஷாசூரன் பிரம்மதேவனை வேண்டி பல ஆயிரம் ஆண்டுகள் கடுமையான தவம் செய்தான். அவன் தவத்திற்கு மகிழ்ந்த பிரம்மதேவன் "யாது வரம் வேண்டும்" எனக் கேட்டார். அவன் "தனக்கு யாராலும் மரணம் உண்டாகக் கூடாது எனவும், அப்படி மரணம் ஏற்பட்டால் கன்னிப் பெண்ணால் தான் நேர வேண்டும்" எனவும் வரம் கேட்டுப் பெற்றான்.
இதன் பிறகு மகிஷாசூரன் தேவர்களை துன்புறுத்தத் துவங்கினான். தேவர்கள் அனைவரும் திருமாலிடம் சென்று மகிஷாசுர அரக்கனின் கொடுமைகளைக் கூறினர். திருமால் "அன்னை சக்தி பூமியில் பெண்ணாகப் பிறந்து மகிஷாசூரனை வதம் செய்வாள்" என்று கூறினார். அது போலவே அன்னை துர்கை தேவர்களைக் காக்க, பெண்ணுருவம் பூண்டு பூமியில் அவதரித்தாள்.
அன்னை சக்தி மகிஷாசூரனுடன் கடுமையாகப் போர் செய்து, அவனது எருமைத் தலையைத் தன் சூலாயுதத்தினால் வெட்டி வீழ்த்தினாள். தேவர்கள் மகிழ்ந்து சக்தியைப் போற்றினர். பூவுலகையும், விண்ணுலகையும் மகிஷாசூரனுடன் போரிட்டு மீட்டதனால் "மகிஷாசுரவர்த்தினி" என்று போற்றப்படுகிறார்.
ஒன்பது நாள் போரிட்டு பத்தாவது நாள் வெற்றி பெற்றதனால், பத்தாம் நாள் விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் வெற்றியின் அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது.
கொலு வைக்கும் நிகழ்வு
நவராத்திரி விழாவானது தீமைகளை அழித்து, நன்மையை நிலை நாட்டும் விழாவாகும். கொலு வைக்கும் நிகழ்ச்சியானது சக்தியானவள் எங்கும் நிறைந்துள்ளார் என்பதனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
கொலு படிக்கட்டுகள்
முதலாம் படியில் ஓரறிவு கொண்ட உயிரினங்களான புல், செடி, கொடி போன்ற தாவர வகைகளின் பொம்மைகள் இடம்பெற்றிருக்கும்.
இரண்டாம் படியில் ஈரறிவு கொண்ட உயிரினங்களான சங்கு, நத்தை போன்றவற்றின் பொம்மைகள் இடம்பெற்றிருக்கும்.
மூன்றாம் படியில் மூன்றறிவு கொண்ட உயிரினங்களான எறும்பு, கரையான், அட்டை போன்றவற்றின் பொம்மைகள் இடம்பெற்றிருக்கும்.
நாலாம் படியில் நான்கறிவு கொண்ட உயிரினங்களான நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகள் இடம்பெற்றிருக்கும்.
ஐந்தாம் படியில் ஐந்தறிவு கொண்ட உயிரினங்களான பறவைகள், மிருகங்கள் போன்றவற்றின் பொம்மைகள் இடம்பெற்றிருக்கும்.
ஆறாம் படியில் ஆறறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகள் இடம்பெற்றிருக்கும்.
ஏழாம் படியில் உயர்நிலையில் உள்ளவர்களான சித்தர்கள், ரிஷிகள் போன்றோரின் பொம்மைகள் இடம்பெற்றிருக்கும்.
எட்டாம் படியில் தேவர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்றோரின் பொம்மைகள் இடம்பெற்றிருக்கும்.
ஒன்பதாம் படியில் சிவபார்வதி, திருமால் லட்சுமி, பிரம்மா ஆகியோரின் உருவச் சிலைகள் நடுநாயகமாக இடம்பெற்றிருக்கும்.
மனிதன் படிப்படியாக ஆன்மீகத்தில் உயர்ந்து இறைநிலையுடன் கலக்க வேண்டும் என்பதனை உணர்த்துவதற்காகவே கொலு படியில் பொம்மைகள் வைக்கப்படுகின்றன.
நவராத்திரி விழாவின் நன்மைகள்
வறுமை நீங்கி செல்வ வளத்தினை வழங்கும். நேர்மறை எண்ணங்கள் உண்டாகும். வெற்றிகள் உண்டாகும். பக்தி, மகிழ்ச்சி, மன அமைதி , தெளிவு உண்டாகும்.
நவராத்திரி பண்டிகையானது நாடெங்கும் பெரு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.இவ்விழா மக்கள் மனத்தில் பக்தி உணர்வினையும், உற்சாகத்தையும் வழங்குகின்றது. நவராத்திரியில் அம்பிகையை வணங்கி வாழ்வின் வளங்களைப் பெறுவோமாக.