அபிராமி அந்தாதி பாடல்கள் (31-35) விளக்கம், வழிபாட்டு பலன்கள்
அபிராமி பட்டரால் 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பக்தி இலக்கிய நூல் அபிராமி அந்தாதி ஆகும். மனதை உருகச் செய்யும் இப்பாடல்கள் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் அபிராமி அம்மன் மீது பாடப்பெற்றதாகும். நூறு பாடல்களைக் கொண்டு அந்தாதி வகையில் அமைந்த தெய்வீக மணம் கமழும் பாடல்கள் ஆகும்.
பாடல் 31
[மறுமையில் இன்பம்]
உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே.
தாயே! அபிராமியே! உமையம்மையும், உமையொரு பாகனுமாகிய சிவபெருமானும், ஆண்பாதி, பெண் பாதியாக அர்த்தநாரீஸ்வரர் உருவில் வந்து, எனக்கு காட்சி அளித்ததோடு, என்னை உங்களுக்கு பணி செய்யும் படி அருள் புரிந்தீர்கள். இனி நான் வேறு ஒரு சமயம் பற்றி சிந்திக்கவும் தேவையில்லை. பிறவி இல்லையாதலால், என்னைப் பெற்றெடுக்க ஒரு தாயும் தேவையில்லை. மூங்கிலையொத்த தோள்களை உடைய, பெண்களின் மேல் வைத்த ஆசையும் அற்றுப்போனது.
பாடல் 32
[அன்னையின் நேசம்]
ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற் பட இருந்தேனை நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்வேன்? ஈசர் பாகத்து நேரிழையே.
அபிராமி அன்னையே! ஈசனின் இடப்பாகம் கொண்டவளே! அபிராமித் தாயே! இவ்வுலகில் ஆசை என்னும் கடலில் அகப்பட்டு, அதன் மூலம் எமனின் பாசக் கயிற்றில் சிக்கி, பிறப்பு இறப்பு என்னும் சுழலில் சிக்கி இருந்தேன். அன்னையே! அப்போது நின் தாமரை போன்ற பொற்பாதங்களை, என் தலைமேல் வலிய வைத்து ஆண்டு கொண்டாய். நின் கருணையை நான் என்னவென்று சொல்வேன்?
பாடல் 33
[மரண பயம் நீங்க]
இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளை கோமளமே
உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே.
அபிராமியே! என் தீய வினைகளுக்காக காலதூதன் என்னை தண்டிக்க வரும் பொழுது, நான் அஞ்சு நடுங்கி அன்னையே! என்று உன்னை அழைக்கும் போது, நீ அஞ்சாதே! என்று கூறி என்னைக் காப்பாற்றுவாய். கோமளவல்லித் தாயே! மரணத் தருவாயில் நான் வேதனையூறும் போது, அன்னையே! என்றால் என்னை ஓடிவந்து காப்பவளே!
பாடல் 34
[துயரங்கள் நீங்க]
வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பரு மணி ஆகமும் பாகமும் பொற்
செந்தேன் மலரும் அலர் கதிர் ஞாயிறு திங்களுமே.
அபிராமி அன்னையே! உன்னையே சரணம்! என்று உன் தாள் சேர்ந்த அடியார்க்கு, துன்பங்களைக் களைந்து, விண்ணுலக வாழ்வை நல்குகிறாய். தாயே! செம்மையான தேன் சிந்தும் மலர்களிலும், மலர்களை மலரச்செய்யும் சூரிய, சந்திர ஒளியிலும், நான்முகனின் படைப்புத் தொழிலிலும், பசுமையான தேன் கலந்த பூ மாலையும் நவமணியும் அணிந்த திருமாலின் மார்பிலும், சிவபெருமானின் ஒரு பாகமாக இடபாகத்திலும் நீயே இருக்கின்றாய்.
பாடல் 35
[பெறுதற்கரிய பேறு]
திங்கட் பசுவின் மணம் நாறும் சீரடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா எண்ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? தரங்கக் கடலுள்
வெங் கண் பணி அணை மேல் துயில் கூரும் விழுப் பொருளே.
அன்னை அபிராமியே! திருப்பாற்கடலில் திருமால் துயில் செய்யும் பாம்பு படுக்கையில் வாசம் செய்யும் தேவியே! சிவபெருமானின் சடாமுடியில் சூட்டப்பட்டதால் பிறை சந்திரன் நறுமணம் பெற்றான். அந்த நறுமணம் கமழும் திருவடிகளை என் தலை மேல் வைக்க யான் செய்த தவம் தான் ஏது? விண்ணுலகத்தவர்களுக்கும் இப்பேறு கிட்டுமோ?

Comments
Post a Comment