அபிராமி அந்தாதி பாடல்கள் (21-25) விளக்கம், வழிபாட்டு பலன்கள்

             அபிராமி பட்டரால் 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பக்தி இலக்கிய நூல் அபிராமி அந்தாதி ஆகும். மனதை உருகச் செய்யும் இப்பாடல்கள் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் அபிராமி அம்மன் மீது பாடப்பெற்றதாகும். நூறு பாடல்களைக் கொண்டு அந்தாதி வகையில் அமைந்த தெய்வீக மணம் கமழும் பாடல்கள் ஆகும்.


பாடல் 21

[அம்பிகையின் மகிமை]

மங்கலை செங்கலசம் முலையால் மலையால் வருணச்

சங்கு அலை செங்கைச் சகல கலா மயில் தாவு கங்கை

பொங்கு அலை தங்கும் புரி சடையோன் புடையாள் உடையாள்

பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பொன் கொடியே.

            அன்னை அபிராமியே! மங்கலம் தரும் நாயகியே! செம்மையான கலசம் போன்ற தனங்களைக் கொண்டவளே! மலையரசன் புதல்வியே! வெண் சங்கு போன்ற வளையல்கள் அணிந்த அழகிய சிவந்த கரங்களை உடையவளே! சகல கலைகளும் உணர்ந்த மயில் போன்றவளே! பொங்கி வரும் கங்கையைத் தன் சடை முடியில் அணிந்த சிவபெருமானின் ஒரு பாகமானவளே! பொன்னிறம் உடையவளே! நீல நிற அம்பிகையே! செம்மை நிறத்தாயே! என்றும் பசுமையான பெண் கொடியாக விளங்கும் அம்பிகையே!


பாடல் 22

[முக்தி நெறியை அடைய]

கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த

படியே மறையின் பரிமளமே பனிமால் இமயப்

பிடியே பிரமன் முதலாக தேவரைப் பெற்ற அம்மே

அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.

          கொடி போன்றவளே! இளமையான வஞ்சிக்கொம்பே! வேதங்களின் உட்பொருள் ஆனவளே! பனி படர்ந்த இமயமலையில் தோன்றிய பெண் யானை போன்றவளே! பிரம்மன் முதலான தேவர்களைப் பெற்றெடுத்த தாயே! அடியேன் இறந்து மீண்டும் இப்பூவுலகில் பிறவாமல் முக்தி தந்து ஆட்கொண்டருள்வாயாக.


பாடல் 23

[வாழ்வில் மகிழ்ச்சியை அடைய]

கொள்ளேன்  மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை

விள்ளேன் பல சமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு

உள்ளே அனைத்தினுகும் புறம்பே உள்ளத்தே விளைந்த

கள்ளே களிக்குங்களியே அளிய என் கண்மணியே.

                 அபிராமி அன்னையே! என் மனதில் நின் கோலம் அல்லாது வேறு எதுவும் நினைய மாட்டேன்.  நின்னுடைய அடியார் கூட்டத்தினை விட்டு பிரிய மாட்டேன். பிற சமயங்களை விரும்ப மாட்டேன். மூன்று உலகங்களுக்கு உள்ளும் வெளியேயும் நீக்கமற நிறைந்திருக்கும் அன்னை அபிராமியே! என் உள்ளத்திலே நிறைந்து களிப்பைத் தரும் கள்ளே! ஆனந்தமயமானவளே!


பாடல் 24

[பிணி தீர்க்கும் மருந்து]

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த

அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்குப்

பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே

பணியே ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே.

             அபிராமி அன்னையே! மாணிக்க மணியானவளே! அந்த மணியில் ஒளிரும் ஒளியாகத் திகழ்பவளே! அழகிய மணிகள் கோர்க்கப்பட்ட அணிகலன்கள் புனையப் பெற்று பேரழகுடன் திகழ்பவளே! உன் அருமை அறியாதவர்கள் நோயினால் பீடிக்கப்பட்டவர்களாவர். உன் அடியவர்களுக்கு பிறவிப்பிணி தீர்க்கும் மருந்தாக உள்ளவள் அன்னை அபிராமி!  விண்ணவர்களுக்கு பெரும் பொக்கிஷமாக விளங்குபவள் அன்னை! நினது பொற்பாதங்கள் அன்றி வேறொருவரையும் பணியேன்.


பாடல் 25

[எண்ணிய செயல் வெற்றி பெற]

பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க

முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்

அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே

என்னே? இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே.

           அம்பிகையே! மும்மூர்த்திகளுக்கும் முதலாக விளங்குபவளே! மூவுலகுக்கும் அருமருந்தாகத் திகழ்பவளே! பிறவிப் பிணியில் இருந்து விடுபட தவங்கள் பல செய்து உன் அடியாரைப் பேணி அவர்களோடு உடனிருந்து, பணிகள் பல செய்து வருகின்றேன். அபிராமி அன்னையே! இனி உன்னை மறவாமல் வழிபடுவேன்.

Comments

Popular posts from this blog

தஞ்சை பெரிய கோவில் (கட்டிடக் கலையின் உன்னதம்) BRIHADEESWARAR TEMPLE

வாலி வதைப் படலம்

நளதமயந்தி கதை (NALA THAMAYANDHI STORY)