அபிராமி அந்தாதி பாடல்கள் (26-30) விளக்கம், வழிபாட்டு பலன்கள்

     அபிராமி பட்டரால் 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பக்தி இலக்கிய நூல் அபிராமி அந்தாதி ஆகும். மனதை உருகச் செய்யும் இப்பாடல்கள் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் அபிராமி அம்மன் மீது பாடப்பெற்றதாகும். நூறு பாடல்களைக் கொண்டு அந்தாதி வகையில் அமைந்த தெய்வீக மணம் கமழும் பாடல்கள் ஆகும்.


பாடல் 26

 [ஈரேழ் உலகினையும் காக்கும் அன்னை]

ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும்

காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூங்கடம்பு

 சாத்தும் குழல் அனங்கே மனம் நாறும் நின் தாளிணைக்கு என்

நாத் தங்கு பொன்மொழி ஏறியவாறு நகை உடைத்தே.

மனம் கமழ்கின்ற கடம்ப மலர்களை மாலையாக அணிந்த அபிராமி அன்னையே! பதினான்கு உலகங்களையும் படைத்தும், காத்தும், அழித்தும் முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளும், உன்னைப் போற்றி வணங்குகின்றனர். உனது மனம் கமழும் திருவடிகளைப் போற்றி எளியனாகிய நான், நாவில் தோன்றுகின்ற வார்த்தைகளைப் பாடல்களாக பாடுகின்றேன். அவ்வாறு நான் அந்தாதி பாடும் இந்த செயல், எனக்கே நகைப்பை உண்டாக்குகின்றது.


பாடல் 27

[அன்னையின் அருள் பெற]

உடைத்தனை வஞ்சப் பிறவியை உள்ளம் உருகும் அன்பு

படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே

அடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட் புனலால்

துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே.

அபிராமி அன்னையே! தொடர்ந்து வருகின்ற பிறவியை உடைத்து எறிந்தாய். உன்னை நினைத்து அன்பினால் உருகும் உள்ளத்தினை அளித்தாய். தாமரை மலர் போன்ற நின் பொற்பாதங்களை வணங்கும் பேற்றினை எனக்கு நல்கினாய். என் நெஞ்சத்தில் உள்ள அழுக்கை எல்லாம் உன்னுடைய அருட்பார்வை கொண்டு விலக்கினாய். அம்மையே! உன்னுடைய அருளை நான் என்னவென்று உரைப்பேன்!


பாடல் 28

[அழியாத செல்வம் பெற]

சொல்லும் பொருளும் என நடம் ஆடும் துணைவருடன்

புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த் தாள்

அல்லும் பகலும் தொழுமவர்கே அழியா அரசும்

செல்லும் தவ நெறியும் சிவலோகமும் சித்திக்குமே.

சொல்லும், அதன் உட்பொருளும் போன்று, தில்லையில் திரு நடனம் புரியும் சிவபெருமானோடு இணைந்து, அருள் பாலிக்கும் அழகிய பூங்கொடி போன்ற, அபிராமி அன்னையே! புதுமலர் போன்ற நினது திருவடியை அல்லும் பகலும் வணங்குபவர்களுக்கு அழியாத செல்வமும், மேன்மையான அரச வாழ்வும், சிவலோக வாழ்வும் கை வரக்கூடும்.


பாடல் 29

[ஞானம் நிலை பெற]

சித்தியும் தித்தி தரும் தெய்வமும் ஆகித் திகழும் பரா

சத்தியும் சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்

முத்தியும் முத்திக்கு வித்தும் வித்து ஆகி முளைத்து எழுந்த

புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தை அன்றே.

அபிராமி தாயே! நீயே அனைத்திற்கும் சித்தியாவாய். சித்தியைத் தரும் மகா சக்தியும் நீயே ஆவாய். பராசக்தியாகவும், பராசக்தியின் நீட்சியாக சிவமாகவும், சிவனாரை நோக்கி தவம் செய்யும் முனிவர்களுக்கு முத்தியும், அந்த முத்திக்கு  விதையாகவும், அந்த விதையிலிருந்து முளைத்து எழுந்த தெளிந்த ஞானமாகவும், ஞானம் நிலைபெற உதவுபவர் ஆகவும், உள்ளவள் அபிராமி அன்னை ஆகும்.


பாடல் 30

[பிறவிப்பிணி நீங்க]

அன்றே தடுத்து என்னை ஆண்டு கொண்டாய் கொண்டது அல்ல என் கை

நன்றே உனக்கு இனி நான் என் செயினும்,  நடு கடலுள்

சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமோ

ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே.

என் உமையவளே! அபிராமி அன்னையே! ஒன்றாகவும், பலவாகவும் பல வடிவங்களில் தரிசனம் தருபவள் அன்னை அபிராமி. தாயின் கருவினுள் இருந்த அன்றே, என்னை நீ ஆண்டு கொண்டாய். இனி நான் என் செய்யினும், பிறவி என்னும் கடலில் மூழ்காமல் என்னை கரையேற்றுவது உன் திருவருள் அன்றோ!

Comments

Popular posts from this blog

தஞ்சை பெரிய கோவில் (கட்டிடக் கலையின் உன்னதம்) BRIHADEESWARAR TEMPLE

வாலி வதைப் படலம்

நளதமயந்தி கதை (NALA THAMAYANDHI STORY)