இராமாயணம்- கிஷ்கிந்தா காண்டம் (பகுதி-1)


                      பம்பை நதிக் கரையில் இராமரும், இலக்குவரும் நீராடினர். பின் சவரி கூறியப் பாதையில் சென்று இரிசியமூக மலையை அடைந்தனர். இராமரும். இலக்குவரும் வருவதனைக் கண்ட சுக்ரீவன், தன்னைக் கொல்ல வாலி அனுப்பிய நபர்களோ என அஞ்சினான். எனவே குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டான்.


       அனுமனும், மற்றவர்களும் சுக்ரீவனுக்கு ஆறுதல் கூறினர். சுக்ரீவன் அனுமனை அனுப்பி அவர்கள் யார் என்று அறிந்து வரச் சொன்னான். அனுமன் உண்மை அறியும் பொருட்டு, தன் வடிவத்தினை மாற்றிக் கொண்டு ஒரு சிறிய மாணவனாகச் சென்றான். அவர்களை தூரத்தில் இருந்து கொண்டு கவனித்தான். 

அனுமன், ''மும்மூர்த்திகளோ மூவர். இவர்களோ இருவர் கையில் வில்லேந்தி வருகின்றனர். முகமோ சோர்வுற்று இருக்கின்றது. அவர்களின் முகக்குறிப்பின் மூலம் கோபம் என்னும் தன்மை அற்றவர்களாகவும், மேலும் கருணையே வடிவானவர்களாகவும் தெரிகின்றார்கள்'' என அனுமன் எண்ணினான்.

 

''தேவருக்கு ஒரு தலைவர் ஆம் முதல் தேவர் எனின்,

மூவர்; மற்று இவர் இருவர் மூரிவில் கரர் இவரை

யாவர் ஒப்பவர் உலகின்? யாது இவர்க்கு அரிய பொருள்?

கேவலத்து இவர் நிலைமை தேர்வது எக்கிழமை கொடு?''

  அனுமனுக்கு, இராமலக்குவர் இருவரும் முன்பே கண்டு நெடு நாள் பழகியவர்கள் போன்று உள்ளத்தில் அன்பு பெருகியது.

       ''அன்பினின் உருகின்ற உள்ளத்தன், ஆர்வத்தோரை முன் பிரிந்து அனையர் தம்மை முன்னினான் என்ன நின்றான்''

       ''கொடிய மிருகங்களும் இராமலக்குவரிடம் அன்பு காட்டுவதனைப் பார்க்கும் போது, அவர்கள் பகைவர்கள் என்று அஞ்சத் தேவையில்லை'' என அனுமன் எண்ணினான்.

 தன் குழப்பங்கள் நீங்கியப் பின் அனுமன், இராமலக்குவரை நேரில் சந்தித்தான். அவர்களை வணங்கி ''என் பெயர் அனுமன். நான் வாயு புத்திரன். என் தாயார் அஞ்சனாதேவி. வானர ராஜன் சுக்ரீவனின் மந்திரி'' என்றான். ''யான் காற்றின் வேந்தற்க்கு, அஞ்சனை வயிற்றில் வந்தேன்; என் நாமமும் அனுமன் என்பேன்''

       உயர்ந்த தோள்களையுடையவனாகிய அனுமன் ''எரிகின்ற ஒளிக்கதிர்களை உடைய சூரிய தேவனின் மகனாகிய சுக்ரீவனுக்கு பணி செய்ய வந்துள்ளேன். தாங்கள் இவ்விடம் எழுந்தருளி இருப்பதன் காரணத்தை அறிந்து வருமாறு என் தலைவன் அனுப்பினான்'' என்றான்.

இராமர் அனுமனின் சொற் சாதூர்யத்தைப் பாராட்டினார். அவர் அனுமனிடம் ''நாங்கள் உங்கள் தலைவன் சுக்ரீவனின் நட்பைப் பெறவே வந்துள்ளோம். உங்கள் தலைவன் உள்ள இடத்தினைக் காட்டுவாயாக'' என்றார்.

அதற்கு அனுமன் ''வலிமையான தோள்களையுடைய வீரர்களே! சுக்ரீவனின் நட்பைப் பெற வந்துள்ளீர்கள் என்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது. வாலி சுக்ரீவனின் மேல் கொண்ட பகை காரணமாக, இங்கு எங்களுடன் ஒளிந்து உள்ளான். உங்களைப் போன்ற வீரர்கள் அவனுக்குத் துணை நிற்பது, அவன் பெற்ற செல்வமாகும்'' என்றார்.

 பின் இலக்குவன் தாங்கள் கானகம் வந்த காரணத்தையும், சீதை கவரப் பட்ட செய்தியையும் அனுமனிடம் கூறினான்.

அனுமன் வீசுவரூபம் எடுத்து தன் சுய வடிவத்தினை இராமலக்குவரிடம் காட்டினான். தான் வானரக் குலத்தில் ஒருவன் என்றான். இராம இலக்குவர் மகிழ்ச்சி அடைந்தனர். அனுமன், சுக்ரீவனிடம் இராமலக்குவரின் வீரச் செயல்களை எடுத்துக் கூறி, அவர்களின் உதவியுடன் வாலியை வெல்ல முடியும் என்றான். பின் சுக்ரீவனை இராம இலக்குவர் இருக்குமிடத்திற்கு அழைத்து வந்தான். 

       சுக்ரீவன் இராமலக்குவரின் அழகில் மெய் மறந்து நெடு நேரம் நின்றான். இராமர் சுக்ரீவனை வரவேற்று ஆரத் தழுவிக் கொண்டான்.

சுக்ரீவன் ''உங்களைப் பற்றி என் அமைச்சன் அனுமன் மூலம் தெரிந்து கொண்டேன். நான் அரசனாக இருந்தவன். என் அண்ணனின் கோபத்திற்கு ஆளாகி நாட்டினையும், என் மனைவியையும் வாலியிடம் பறிகொடுத்து நிற்கின்றேன்'' என்றான்.

       சுக்ரீவன் ''நாம் இருவரும் நண்பர்களாகி ஒருவருக்கொருவர் உதவி செய்து, நாம் இழந்தவைகளை மீண்டும் பெறுவோம்'' என்றான்.

பின் இராமரும், சுக்ரீவனும் கரம் கோர்த்து நண்பர்களாக பிரமானம் செய்து கொண்டனர். இராமர் சுக்ரீவனிடம் ''இன்று முதல் நீயும் எனக்கு ஒரு சகோதரன் ஆனாய். நாம் இருவரும் என்றும் நண்பர்களாக இருப்போம். ஒருவரின் இன்பத்திலும் துன்பத்திலும் மற்றவர் பங்கு கொண்டு, உறுதுணையாக இருப்போம்'' என்றார்.

       சுக்ரீவன் இராமருக்கும், இலக்குவனுக்கும் விருந்து உபசாரங்களை அளித்தான்.

சுக்ரீவன் இராமனிடம் ''சில நாட்கள் முன்பு வான் வழியாக குலமங்கை ஒருவரை இராவணன் புஷ்பக விமானத்தில் தூக்கிச் சென்றதைப் பார்த்தோம். அம்மங்கை தன் ஆபரணங்களைஒரு துணியில் கட்டி கீழே வீசினாள். அவற்றினை நாங்கள் எடுத்து பாதுகாப்பாக வைத்திருந்தோம். இதோ அவை'' என்றான்.

       இராமர் அவற்றினைப் பதைபதைப்புடன் வாங்கிப் பார்த்தார். அவை சீதையின் ஆபரணங்கள் தான் என்று அறிந்து வேதனையில் வாடினார்.

       சுக்ரீவன் ''இராமா! அறிவற்ற நான் அணிகலன்களைக் காட்டி துன்பத்தில் உள்ள உன்னை மேலும் துன்பத்திற்கு ஆளாக்கினேன்'' என்றான். 

இராமரின் வேதனை கோபமாக மாறியது. அவர் சுக்ரீவனிடம் ''சீதையை எங்கிருந்தாலும் கண்டுபிடித்து, இராவணனை வதம் செய்வேன்'' என உறுதி பூண்டார்.

       சுக்ரீவன் ''எனது பகைவனான வாலி கிஷ்கிந்தையின் அரசனாக உள்ளான். பெரும் வானர சேனை அவன் வசம் உள்ளது. அவனுக்கு இராவணனோடு நட்பு உண்டு. வாலியிடமிருந்து ஆட்சியை மீட்டு விட்டால் பெரும் வானர சேனை என் வசம் வரும். அச்சேனை கொண்டு இராமா உனக்கு உதவுவோம்'' என்றான்.

இராமர் சுக்ரீவனிடம் ''உனக்கும் வாலிக்கும் உள்ள பகை யாது?'' என்றான்.

      

Comments

Popular posts from this blog

நளதமயந்தி கதை (NALA THAMAYANDHI STORY)

தஞ்சை பெரிய கோவில் (கட்டிடக் கலையின் உன்னதம்) BRIHADEESWARAR TEMPLE

வாலி வதைப் படலம்