இராமாயணம் - கிஷ்கிந்தா காண்டம் (பகுதி-3)

               இராவணனை அழிக்க புயல் போன்ற என்னை விடுத்து முயல் போன்ற சுக்ரீவனின் துணைக் கொண்டாயே. இவ்வாறு வாலி பலவாகப் புலம்பினான்.



       வாலி பலவாகப் பேசினாலும், அவற்றினைப் பொறுமையாகக் கேட்ட இராமன் பின் பதில் அளித்தான்.

இராமன் ''வாலி, நீ சுக்ரீவன் மனைவியைக் கவர்ந்து சென்றது அறமில்லாத செயல். பிறன் மனை நயத்தல் கொடிய குற்றமாகும். மேலும் சுக்ரீவன் முதலில் என்னிடம் வந்து அபயம் எனக் கேட்டதனால் நான் அவனுக்கு உதவி செய்தேன். நானும் சுக்ரீவனும் நண்பர்களாக நட்பு பிரமானம் செய்து கொண்டோம். சுக்ரீவன் உன்னிடம் நாட்டினை அளித்து, தான் செய்தது தவறு என மன்னிப்புக் கேட்டும் நீ அவனைக் கொல்ல துரத்தினாய். நீங்கள் இருவரும் போரிடும் போது நான் உங்கள் முன் வந்தால், நீயும் என்னிடம் சரணடைந்தால், என்னால் சுக்ரீவனுக்குக் கொடுத்த வாக்கினை நிறைவேற்ற முடியாது. எனவே மறைந்து நின்று அம்பெய்தேன்'' என்றான்.

 

''இனையது ஆதலின், எக்குலத்து யாவர்க்கும்,

வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும்

அனைய தன்மை அறிந்தும், அழித்தனன்,

மனையின் மாட்சி என்றான், மனு நீதிமான்''

       இராமனின் விடையால், வாலி தன் குற்றங்களை உணர்ந்தான். தவற்றினை உணர்ந்த வாலி, இராமன் பெருமைகளையும் உணர்ந்ததனால், தான் என்னும் செருக்கற்று அடங்கினான். 

வாலி இராமனிடம் ''இராமா! எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டி அருள் செய்பவன் நீ. அறமும், நடு நிலையும், நற்குண அறிவும் உடையன். நாய் போலும் இழிந்த என்னை மன்னித்து, என் குற்றங்களைப் பொறுத்தருள்வாயாக.

 

''தாய் என உயிர்க்கு நல்கி தருமமும், தகவும், சால்பும்

நீ என நின்ற நம்பி ! நெறியினின் நோக்கும் நேர்மை

நாய் என நின்ற எம்பால், நவை அற உணரலாமே?

தீயன பொறுத்தி என்றான் சிறியன சிந்தியான்''

 

       வாலி பின்னும் இராமனிடம் ''எந்தையே! கொடிய சொற்களினால் உன் மனத்தைக் காயப்படுத்திவிட்டேன். அவற்றினை மனத்தில் கொள்ளாதே. துன்பத்தைத தருகின்ற பிறவி என்னும் கொடிய நோயிலிருந்து என்னைக் காப்பாயாக. மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம்''. உயிர் நீங்கும் சமயத்தில் மெய்யுணர்வு தந்து எனக்கு அருள் செய்தாய்.

என்னுள் மாற்றம் தந்து, அஞ்ஞானத்தைக் களைந்து, எனக்கு நல்லறிவு புகட்டினாய். இனி எனக்கு கிடைத்தற்கரிய வீடு பேற்றினை அருள்வாயாக. ''தா அரும் பதம்''

 இராமா! இன்னும் உன்னிடம் இரப்பது ஒன்று உண்டு. என் தமையன் சுக்ரீவனை, அண்ணனைக் கொன்றவன் என்று பழிப்பார்களானால் அதனை நீ தடுப்பாயாக. சுக்ரீவன் தன் சிறுமையினால் ஏதேனும் தவறிழைத்தால் அவற்றினை நீ பொறுத்தருள்வாயாக என்றான். 

       உயிர் பிரியும் தருவாயில் வாலி தன் மகன் அங்கதனைக் காண வேண்டும் என்றான். சுக்ரீவன் சென்று அங்கதனை அழைத்து வந்தான். தன் தந்தையின் நிலையினைக் கண்ட அங்கதன் கதறி அழுதான். வாலி அங்கதனைத் தேற்றினான்.

வாலி அங்கதனிடம் ''மகனே! மனத்திடம் கொண்டு இருப்பாயாக. பிறப்பும் இறப்பும் இவ்வுலகின் நியதி. நான் இராமன் என்னும் மெய்பொருளால் ஞானம் பெற்றேன். நீ இராமனை அபயமாக சரணடைந்து வாழ்வில் வளம் பெறுவாயாக'' என்றான்.

வாலி இராமனிடம், அங்கதனை ஒப்படைத்தான். பின் ''இராமா அங்கதன் உன் பொறுப்பு'' என்றான். இராமன் அங்கதனை ஏற்றுக் கொள்ள வாலி பரம பதம் அடைந்தான். வாலி இறந்த செய்தியைக் கேட்ட தாரை, தன் கணவனைக் கண்டு கதறி அழுதாள்.

தாரையை அனுமன் தேற்றினான். வாலியின் இறுதி மரியாதையை அங்கதன் நிறைவேற்றினான்.

       கிஷ்கிந்தையின் அரசனாக சுக்ரீவன் பொறுப்பேற்றான். அனைவரும் வாழ்த்தினர். அங்கதனுக்கு இளவரசனாக பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. கார்காலம் தொடங்கியதால் இராமர், சுக்ரீவனிடம் ''நீ நான்கு மாத காலம் கிஷ்கிந்தையின் ஆட்சிப் பொறுப்பினைக் கவனித்துவிட்டு, பின் சீதையைத் தேடும் பணிக்கு வா'' என்றார். சுக்ரீவன் தங்கிய குகையில் இராமலக்குவர் தங்கினர்.

       மழைக் காலம் முடிந்தது. சுக்ரீவனிடம் இருந்து எந்த ஒரு செய்தியும் வரவில்லை. இராமர் கோபம் கொண்டு, இலக்குவனைக் கிஷ்கிந்தைக்கு அனுப்பினார்.

       இலக்குவன் கிஷ்கிந்தைக்கு விரைந்தான். கடும் கோபத்துடன் இலக்குவன் வருவதனைக் கண்ட வானரங்கள் அஞ்சி ஓடின. 

       கிஷ்கிந்தையில் சுக்ரீவன் கேளிக்கைகளில் நாட்டம் கொண்டு தன்னிலை மறந்து இருந்தான். அவனது போதையைச் தெளிவிக்க, அவன் தலையில் நீரினை ஊற்றினார்கள்.

       இலக்குவன் அரண்மனைக்கு விரைந்தான். அனுமன் தாரையை அனுப்பி இலக்குவனைச் சந்திக்க செய்தான்.

       தாரையைக் கண்ட இலக்குவன் பணிந்தான். பின் தாரையிடம் ''சுக்ரீவன், இராமனுக்குத் தந்த வாக்குறுதியை மறந்து விட்டானா? அல்லது கிஷ்கிந்தையின் அரசனாகி விட்டதால், செருக்கு அடைந்தானா? இராமரின் பாணம் ஓர் நொடியில் அவனை வீழ்த்திவிடும்'' என்று கோபமாக இலக்குவன் பேசினான்.

தாரை ''இலக்குவா! சுக்ரீவன் தன் வாக்குறுதியை மறக்க வில்லை. நாலா பக்கமும் சென்றுள்ள வானர சேனையின் வீரர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். எனவே சுக்ரீவன் அனைவரும் வந்து சேரட்டும் என்று தாமதிக்கிறான். காட்டில் வெகு காலம் வாழ்ந்ததால், மாளிகையின் சுக போகங்களில் மூழ்கிவிட்டான். அவனது தவற்றினைப் பொறுத்தருள வேண்டும்'' என்றாள்.

       தாரையின் பேச்சினால் இலக்குவனின் கோபம் குறைந்தது. அனுமன் மூலம் சுக்ரீவன், இலக்குவன் வந்த செய்தியை அறிந்தான். தனது உடுப்புக்களை மாற்றி இலக்குவனைச் சந்திக்கத் தயாரானான்.

அனுமன், இலக்குவனை சுக்ரீவனிடம் அழைத்து வந்தான். சுக்ரீவன் இலக்குவனை வரவேற்று ''இராம காரியத்தை நான் மறப்பேனா? நாலாப் பக்கமும் சென்றிருந்த படை வீரர்கள் வருவதற்காகத் தாமதித்தேன். இடைப்பட்ட காலத்தில் உங்களை வந்து சந்திக்காததற்கு மன்னிப்புக் கோருகின்றேன்'' என்றான்.

இலக்குவனும் சுக்ரீவனை மன்னித்து, ''நீ இராமரை நேரில் சந்தித்து அவரை சமாதானம் செய்'' என்றான். 

பின் இலக்குவனும், சுக்ரீவனும் இரிசியமுக மலையினை அடைந்தனர். சுக்ரீவன் இராமரைக் கண்டு பணிந்து வணங்கினான்.

       சுக்ரீவன் ''இராமா! சீதாதேவியைத தேடும் பணியை இன்றே துவக்கிவிடுகின்றேன்'' என்றான்.

       இராமர் ''அஞ்சனைப் புத்திரன் அனுமன் எங்கே?'' என்றான்.

       சுக்ரீவன் ''அனுமன் சேனையைத் திரட்ட சென்றுள்ளான். இன்று அல்லது நாளை வந்து விடுவான்'' என்றான் 

       இராமர், சுக்ரீவனிடமும், அங்கதனிடமும், ''சூரியன் மறைந்து விட்டான், எனவே நாளை காலை படைகள் கூடியதும் வாருங்கள்'' என்றான்.

       மறு நாள் பெரும் படையுடன் சுக்ரீவன், இராமனைக் காண வந்தான். கடலெனத் திரண்டு வந்த வானரப் படைகளைக் கண்டு இராமன் வியந்தான். சுக்ரீவனிடம் இராமன் ''க்ரீவா! சீதாதேவியைத் தேடுவதற்கு ஆவன செய்க'' என்றான்.

சுக்ரீவன் நான்கு திசைகளிலும் சேனைகளைப் பிரித்து அனுப்பினான். அனைத்து திசைகளிலும் தேவியைத் தேடும் பணியை விரைந்து செய்ய வேண்டும் என்று சேனாதிபதிகளுக்கு ஆணையிட்டான். தென் திசைக்கு அங்கதன் தலைமை ஏற்றான். அதில் அனுமன், ஜாம்பவான் போன்றோர் இருந்தனர். மேற்கு திசைக்கு இடபன் தலைவன். வடக்குத் திசைக்கு சதவலி தலைவன். கிழக்குத் திசைக்கு விந்தன் தலைவன். அனைவரும் ஒரே நேரத்தில் சென்று சீதாதேவியைத் தேட வேண்டும். ஒரு மாத காலம் தேட வேண்டும். அதற்குள் கண்டுபிடிக்க முடியாவிட்டால் திரும்பி வந்து சேர வேண்டும். தவறினால் தண்டிக்கப் படுவீர்கள் என ஆணையிட்டான்.

இராமர் சுக்ரீவனிடம், அனுமனோடு பேச வேண்டும் என்று கூறினார். அனுமன் இராமரைச் சந்திக்க வந்தான். 

இராமர் ''அனுமா! நீ தென் திசையான இராவணன் இருக்கும் திசை நோக்கிச் செல்கின்றாய். என் உள்ளம் நீயே சீதையைக் கண்டுபிடிப்பாய் என்று சொல்கின்றது. சீதையைக் கண்டால் நீ நான் கூறும் அடையாள வார்த்தைகளைக் கூறு. இதன் மூலம் சீதை, உன்னை நான் அனுப்பிய தூதுவன் என்பதனை அறிவாள்'' என்றான்.

       ''அனுமா! சீதை கானகம் செல்ல அரண்மனை வாயில் வந்தபோது கானகம் எவ்வளவு தூரம்? என்று சிறுபிள்ளைத் தனமாகக் கேட்டாள். நீ அவளைக் கண்டால் இந்த கணையாழியைக் (மோதிரம்) காட்டு'' எனத் தனது மோதிரத்தைக் கழட்டித் தந்தார். அனுமன் அதனை பத்திரமாக வைத்துக் கொண்டான். 

எல்லாத் திசைகளிலும் வானர சேனை சீதையைத தேடிச் சென்றது. ஒரு மாத காலம் சிரத்துடன் அனைத்து வழிகளிலும் சென்று சீதையைத் தேடினர்.

       தென் திசையில் அங்கதன் தலைமையில் வானரப் படை சீதையைத் தேடிக் கிளம்பியது.

       இரவு பகல் பாராமல் காடு, மலை என அனைத்து இடங்களிலும் தேடினர். அவ்வாறு செல்லும் போது ஒரு குகையை அடைந்தனர். குகைக்குள் இருள் சூழ்ந்து இருந்ததால், அனைவரும் அனுமனின் வாலைப் பிடித்துக் கொண்டு உள்ளே சென்றனர். குகை நீண்டு கொண்டே சென்றது. சற்று தூரத்தில் அங்கு பொன்னாலான நகரம் தென்பட்டது. அங்கு சுயம்பிரமை என்னும் பெண் தவத்தில் இருக்கக் கண்டனர். வானரப் படையின் சத்தத்தால் அவள் கண் விழித்தாள். அவள் அனுமனிடம் ''நீங்கள் இவ்விடம் வந்ததன் காரணம் யாது? எனக் கேட்டாள். அனுமன், இராம காரியமாக சீதையைத் தேடி வந்துள்ளோம்'' என்றான்.

பின் அனுமன் சுயம்பிரமையிடம் ''தாங்கள் யார்?'' என வினவினான்.

       சுயம்பிரமை ''நான் சுயம்பிரமை. பொன்னாலான இந்நகர் பிரமனால் மயனுக்கு வழங்கப்பட்டது. இந்திரன் சாபத்தால் நான் இங்கு இருக்கிறேன். இராம தூதர்களான வானரவீரர்கள் வரும் போது என் சாபம் நீங்கும் என பிரம்மா கூறியுள்ளார்'' என்றாள்.

       வானரங்கள் குகையை விட்டு வெளியே செல்ல வழி காட்டும் படி அப்பெண்னிடம் கேட்டனர். அப்பெண் தனக்கும் வழி தெரியாது என்றாள். அப்போது அனுமன் விஸ்வரூபம் எடுத்தான். அனுமனின் உடல் பெருத்துக் கொண்டே வந்தது, தலை குகையின் மேல் முட்டிப் பிளந்தது. அவ்வழியில் அனைவரும் வெளியே வந்தனர். அப்பெண்ணும் வெளியே வந்தாள். பிறகு அனுமன் தன் உடலைச் சுருக்கிக் கொண்டான்.

அனைவரும் மகேந்திரமலையை அடைந்தனர். அம்மலை கடல் அருகே உள்ளது. வானரங்கள் கவலை அடைந்தனர். எங்கு தேடியும் சீதையை அடையமுடியவில்லை என அங்கதன் கண்ணீர் சிந்தினான். எனவே அங்கதன் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறக்கப் போவதாகக் கூறி அமர்ந்தான்.

ஜாம்பவான் அங்கதனிடம் ''நீ இறந்த பின் நாங்கள் மட்டும் உயிர் வாழ்வோமா? நாங்களும் உயிர் துறக்கின்றோம்'' என்றான்.

       அனுமன் ''ஏன் அனைவரும் இவ்வாறு விரக்தியுடன் பேசிக் கொள்கின்றீர்கள்? இன்னும் தேட வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன. அதற்குள் முடியாது என நமது முயற்சியைக் கைவிடலாகாது. சாவதாக இருந்தால் ஜடாயு போன்று போராடி சாக வேண்டும்'' என்றான். 

 

''நாடுதலே நயம் இன்னும் நாடி, அத்

தோடு அலர் குழலி துயரின் சென்று, அமர்

வீடிய சடாயுவைப் போல வீடுதல்

பாடவம்; அல்லது பழியிற்று ஆம்'' என்றான்.

 

அப்பொழுது ''ஜடாயு இறந்தான்'' என்னும் வாசகம் கேட்டு சம்பாதி என்னும் கிழக் கழுகு நடக்கவும் முடியாமல், பறக்கவும் முடியாமல் மெல்ல மெல்ல ஊர்ந்து வந்தது.

       சம்பாதி ஜடாயுவின் அண்ணன். சிறகுகளை இழந்து சம்பாதி நடந்து வருவதனைக் கண்ட வானரப் படை, அரக்கன் என அஞ்சி ஓடினர். அனுமன் அவர்களின் அச்சத்தைப் போக்கி, சம்பாதியுடன் பேசினான். 

 சம்பாதி அனுமனிடம் ''ஜடாயு எங்ஙனம் இறந்தான்?'' எனக் கேட்டது. அனுமன் ஜடாயு இறந்த நிகழ்வினையும், தாங்கள் அனைவரும் சீதையைத் தேடி வந்ததையும் கூறினான். பின் சம்பாதி தன் கதையைக் கூறியது. 

''நாங்கள் சூரியனுக்குத் தேரோட்டும் அருணனின் மைந்தர்கள் ஆய் கதிர்க் கடவுள் தேர் ஊர் அருணனுக்கு அமைந்த மைந்தர்''.

 

       ஒரு முறை உம்பர் நாடு செல்ல நாங்கள் இருவரும் உயரப் பறந்தோம். அப்பொழுது சூரியனின் கதிர்கள் ஜடாயுவின் சிறகுகளை எரித்தது. ஜடாயு ''அண்ணா காப்பாற்றுங்கள்'' என அலறினான். நான் ஜடாயுவின் மேல் பறந்து அவனுக்கு நிழல் தந்தேன். இதனால் அவன் காப்பாற்றப்பட்டு பூமியில் இறங்கினான். சூரியனின் வெப்பக்கதிர்கள் என் சிறகுகளை முற்றிலும் எரித்தது. அதனால் நான் இந்த மகேந்திர மலையில் கீழே விழுந்தேன்.

 என் நிலை கண்டு வருந்திய சூரியன், ''இராம காரியமாக வானரப் படை இங்கு வரும் பொழுது, அவர்கள் இராம நாமத்தை உச்சரிக்க உன் சிறகுகள் வளரும்'' என்றார். எனவே நீங்கள் அனைவரும் ''ராம நாமத்தை உச்சரியுங்கள்'' என சம்பாதி கூறினான்.

       வெள்ளமென திரண்டிருந்த வானரப் படை ''ராமராமராமராம'' என இராமனின் நாமத்தை உச்சரித்தனர். சம்பாதியின் சிறகுகள் சிறிது சிறிதாக முளைத்தது. சம்பாதி முழு சிறகுகளுடன் விண்ணில் உயரப் பறக்கத் தொடங்கினான்.

 பின் அனுமனிடம் சம்பாதி ''இராவணன் சீதையைத் தூக்கிச் சென்றதை நானும் கண்டேன். அவன் கடல் தாண்டி இலங்கையில் சீதையை சிறை வைத்துள்ளான். சீதை இன்னும் அங்கு தான் இருக்கிறாள். நீங்கள் யாரேனும் ஒருவர் கடல் தாண்டி சீதையைக் கண்டு, சீதை இருப்பதனை உறுதி செய்து வாருங்கள். நான் கூறிய செய்தியை இராமனிடம் தெரிவியுங்கள்'' எனக் கூறி கழுகரசன் உயரப் பறந்தது. 

''புன் தொழில் அரக்கன் மற்று அத் தேவியைக்

தென் திசை என்ன உன்னித் தேடியே வந்தும் என்றார்''

''வேகின்ற உள்ளத்தானை வெஞ் சிறையகத்து வைத்தான்

ஏகுமின் காண்டிர்; ஆங்கே இருந்தனள் இறைவி இன்னும்''

 

சம்பாதி சென்றவுடன் வானரப் படை வீரர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். நம்மில் யார் கடல் தாண்டிச் செல்வது? என்று. மேலும் நம்மில் யார் நூறு யோசனை தூரம் தாண்டி செல்வர்? எனப் பேசிக் கொண்டனர். அங்கதன் தலைமையில் ஆலோசித்தனர். ஒருவன் பத்து யோசனை தூரம் நான் தாண்டுவேன் என்றான். மற்றுமொருவன் முப்பது யோசனை தூரம் நான் தாண்டுவேன் என்றான். அங்கதன் அனைவரையும் அமைதியாக இருக்கச் சொன்னான்.

       பின் அங்கதன் ''நானே செல்கின்றேன்'' என்றான். ஆனால் என்னால் திரும்பி வர முடியுமா எனத் தெரியவில்லை என்றான்.

       ஜாம்பவான் குறுக்கிட்டு, ''நம்மில் ஒருவரால் நூறு யோசனை தூரத்தினை எளிதில் தாண்ட முடியும். அவன் அனுமனே. அவன் சக்தி அவனுக்கே தெரியாது'' என்றான். உடனே வானரங்கள் அனைவரும் அனுமனிடம் சென்று கடல் தாண்டி சீதையைக் கண்டு வரும் படிக் கூறினர்.

       ஜாம்பவான் அனுமனிடம் ''அனுமா! நீயே கடல் தாண்டும் வலிமை பெற்றவன். நீ சிறுவனாக இருந்த போது சூரியனை சிவப்புக் கனி என நினைத்து பறிக்கச் சென்றாய். உனக்கு எந்த ஆயுதத்தாலும் மரணம் இல்லை என்று பிரமன் வரமளித்தார். உன் பறக்கும் சக்தியால் நீ அழியாத புகழ் அடைவாய் என தேவேந்திரன் வரம் அளித்துள்ளான். உன் பலம் உனக்கு மறந்து போகும் படி ஒரு சாபம் உள்ளது, இப்போது நான் உனக்கு உன் பலத்தினை நினைவு கூறுகின்றேன். நீ வெற்றியோடு வருவாய். சென்று வா'' என வாழ்த்தினான்.

       அனுமன் ''நீங்கள் அனைவரும் கூறுவதால் நானே செல்கின்றேன். நான் திரும்பி வரும் வரை நீங்கள் இங்கேயே இருங்கள்''.

அனுமன் சூரியன் மறைவதற்குள் இலங்கையிற் சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்தோடு மகேந்திர மலையின் உச்சியிலேறி விஸ்வரூபம் எடுத்து நின்றான்.

 

''பார் நிழல் பரப்பும் பொன் தேர் வெயில் கதிர்ப் பரிதி மைந்தன்

போர் நிழல் பரப்பும் மேலோர் புகழ் என உலகம் புக்கு,

தார் நிழல் பரப்பும் தோளான், தடங்கடல் தாவா முன்னம்,

நீ நிழல் உவரி தாவி இலங்கைமேல் செல்ல, நின்றான்''.

 


 


Comments

Popular posts from this blog

நளதமயந்தி கதை (NALA THAMAYANDHI STORY)

தஞ்சை பெரிய கோவில் (கட்டிடக் கலையின் உன்னதம்) BRIHADEESWARAR TEMPLE

வாலி வதைப் படலம்