இராவணன் முன் அனுமன்(HANUMAN STORY)
அனுமன் பிடிபட்ட செய்தி இராவணனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவன் நற்செய்தி கூறிய தூதுவர்க்கு பரிசளித்தான். அனுமனைக் கொல்லாமல் கொண்டு வரும் படி ஆணையிட்டான்.
அனுமன் பிடிபட்ட செய்தி அறிந்த சீதை வருந்தினாள். ''அனுமனே! சகல கலைகளையும் கற்ற நீ ஒரு அரக்கனால் கட்டுண்டாயே. இராமனைப் பிரிந்து வருந்தும் நான், இராம தூதன் பிடிபட்டதை எண்ணி மேலும் துயரடைகின்றேன்'' என பலவாறு புலம்பினாள்.
இந்திரஜித் கட்டுண்ட அனுமனை இராவணன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். முத்துமணிச் சரங்கள் அசையும் வெண் கொற்றக் குடையின் கீழ் இராவணன் அமர்ந்திருந்தான்.
இராவணனைக் கண்ட அனுமன் கடுஞ்சினம் கொண்டவனாய் ''இவனை இப்பொழுதே அழித்து சீதையை மீட்பேன்'' என எண்ணினான். பிறகு சிறிது சிந்தித்தவனாய் ''இராவணனைக் கொல்ல இராமனே தகுந்தவன் என எண்ணம் கொண்டான். தனக்கும், இராவணனுக்கும் போர் தொடங்கினால் முடிவின்றி பல காலங்கள் நடைபெறும். சீதாதேவி ஒரு மாதம் மட்டுமே காலக்கெடு கொடுத்துள்ளார். எனவே இராவணனிடம் தன்னை இராம தூதன் எனக் காட்டிக் கொள்வதே உகந்தது'' என நினைத்தான்.
சினங்கொண்ட இராவணன் அனுமனிடம் ''நீ யார்?
இங்கு வந்த காரணம் என்ன?
நீ சக்கராயுதம் கொண்ட திருமாலா? நீண்ட சூலாயுதம் கொண்ட சிவபெருமானா? தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனா? வேல் கொண்ட முருகனா? இந்திரனா? யார் நீ? உன்னை அனுப்பியவர் யார்?'' எனக் கேட்டான்
''நேமியோ? குலிசியோ? நெடும் கணிச்சியோ?
தாமரைக் கிழவனோ?
தறுகண் பல் தலைப்
பூமி தங்கு ஒருவனோ? பொருது முற்றுவான்
நாமமும் உருவமும் கரந்து நண்ணினாய்!''
அனுமன் நீ சொன்ன யாரும் அல்லன். நான் வில் வீரனாகிய இராமனின் தூதுவனாக வந்துள்ளேன். முதலும் முடிவும் இல்லாதவனாய், காலம் கடந்தவனாய், திரிசூலம், சங்கு சக்கரம், கமண்டலம் இவற்றினை விடுத்து, கயிலைமலை, பாற்கடல், தாமரை மலர் இவற்றை விட்டு இராமனாக அவதரித்துள்ளான்.
''மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய
காலமும் கடந்து நின்ற காரணன்,
கைவில் ஏந்திச்
சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை
ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு, அயோத்தி வந்தான்''
நான் இராமனின் சேவகன். என் பெயர் அனுமன். உன் நன்மைக்கு ஏதுவானதை நான் கூற விரும்புகின்றேன். அற நெறி தவறி உன் செல்வ வாழ்வினை நீயே கெடுத்துக் கொண்டாய். தீயினும் தூயவளான சீதாதேவியை நீ துன்புறுத்துவதால் உன் தவத்தின் பயன் உன்னை விட்டு நீங்கியது. நீ பெற்ற அரிய வரங்கள் எல்லாம் உன் தீய எண்ணத்தால் அழிந்தது. எனவே சீதையை இராமனிடம் ஒப்படைத்து உன் செல்வத்தையும், வாழ்வையும் தக்க வைத்துக் கொள்'' என்றான்.
இராவணன் பெருஞ்சிரிப்புடன் ''இவை அனைத்தும் மலையில் திரிந்து வாழும் அற்பக்குரங்கு கூறுகின்றது, நன்றாக இருக்கிறது'' எனச் சிரித்தான். பின் கோபத்துடன் ''இந்தக் குரங்கினைக் கொல்லுங்கள்'' என ஆணையிட்டான்.
அப்பொழுது இராவணனின் தமையன் வீடணன் குறுக்கிட்டு ''மன்னா! தூது வந்தவர்களை கொல்வது முறையாகாது. அது அரச நீதியும் அல்ல. நம் தங்கை சூர்ப்பனகையின் மூக்கினை அறுத்து, ஊனப்படுத்தி அனுப்பியது போல் இக்குரங்கினை ஊனப்படுத்தி அனுப்பலாம்'' என்றான்.
இராவனனும் வீடணனின் கூற்றினை சரி என எண்ணினான். எனவே ''இக்குரங்கின் வாலைத் தீயிட்டுக் கொளுத்தி விரட்டுங்கள்'' என ஆணையிட்டான்.
அனுமன் தன் வாலுக்குத் தீ வைப்பது இலங்கைக்குத் தீ வைப்பதற்குச் சமம் எனத் தனக்குள் எண்ணிக் கொண்டான்.
அரக்கர்கள் அனுமனை ஏராளமான கயிறு கொண்டு கட்டி இழுத்து சென்றனர். அனுமன் அமைதியாக சென்றான். அனுமன் வாலில் தீ மூட்டுவதனைக் காண அரக்கர்கள் கூட்டம் திரண்டது. அனுமன் தன் வாலினை நீண்டு வளரும் படி செய்தான். அரக்கர்கள் பல வகை துணிகளைச் சுற்றியும், அவ்வால் முழுவதையும் நெய்யிலும், எண்ணெயிலும் தோய்த்து எரியும் கொடிய நெருப்பைக் கொளுத்தி விட்டனர்.
அனுமனின் வாலில் தீ மூட்டப்பட்டதை மகிழ்ச்சியுடன் அரக்கியர் சீதையிடம் கூறினர். சீதை மனம் வருந்தி அக்னி தேவனை நினைத்து ''நான் கற்பில் தூய்மையுடையவள் என்பது உண்மையானால், அனுமனை நீ சுடாதே!"
எனப் பிரார்த்தனை செய்தாள்.
சீதையின் வேண்டுகோளுக்கிணங்கி அக்னி தேவனும் அனுமனின் வாலில் வெம்மையைத் தராமல் குளிர்ந்தான். அனல் போய் குளிர்ச்சி வந்தது, கண்டு அனுமன் ''இது சீதையின் அருளாலே நிகழ்ந்தது'' என மகிழ்ந்தான்.
''வெற்பினால் இயன்றது அன்ன மேனியை விழுங்கி,வெந் தீ
நிற்பினும் சுடாது நின்ற நீர்மையை நினைவின் நோக்கி,
அற்பின் நார் அறாத சிந்தை அனுமனும், 'சனகன் பாவை
கற்பினால் இயன்றது' என்பான், பெரியது ஓர் களிப்பன் ஆனான்''.
அனுமன் இலங்கையின் எல்லா இடங்களிலும் தீ பற்றி எரியும் படி செய்தான். இலங்கை கொழுந்து விட்டு எரிந்தது. மாடமாளிகைகள், வீடுகள் என எங்கும் நெருப்பின் கோரத் தாண்டவம் ஆடியது. ஆனால் சீதை இருந்த அசோகவனம் மட்டும் எரியவில்லை. அனுமன் மகிழ்ந்து சீதையிடம் ஆசி பெற்று புறப்பட்டான்.
இலங்கை முழுவதும் எரிவது கண்டு இராவணன் ஊழிக் காலம் வந்ததோ?
என ஐயுற்றான்.