கைகேயி கேட்ட வரம்
கைகேயின் தோழி கூனி என்கின்ற மந்தரை. அவள் பெரிய அரசியல் தந்திரி. உலகிற்கெல்லாம் துன்பம் செய்யும் இராவணனைக் காட்டிலும் மிகு தீமை செய்யும் கொடுமனக்கூனி தோன்றினாள், என்று கம்பர் கூறுகிறார்.
இராமனுக்கு மணி முடி சூடுவதற்கு அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டது கண்டு கூனி நெஞ்சு துடிக்கின்றாள். அவள் இராமனிடம் தீராப்பகைக் கொண்டிருந்தாள். முன்னொரு நாள் இராமன் கூனியின் மேல் விளையாட்டாக அம்பு செலுத்தினான், அது கூனியின் மேல் பட்டது. அந்நாள் முதல் கூனி இராமனின் மேல் வெறுப்பு கொண்டிருந்தாள். அவள் கேகயன் மகள் கைகேயி இருப்பிடம் விரைந்தாள்.
கைகேயி கூனி உரையாடல்;
கூனி : கைகேயி உன் வாழ்வில் இருள் சூழ்ந்து விட்டது. ஆனால் நீயோ ஒன்றும் நடவாதது போல உறங்கிக் கொண்டிருக்கின்றாய். உறங்கிக் கொண்டிருக்கும் உன் மனத்தை நானே எழுப்புவேன் என்றாள்.
கைகேயி : திடுக்கிட்டு எழுந்த கைகேயி ''மந்தரை என்ன கூறுகின்றாய்? எனக்கு ஒன்றும் விளங்கவில்லை'' என்றாள்.
கூனி : நாளை இராமனுக்கு பட்டாபிடேகம், நீ அறிவாயா, நாடே விழாக்கோலம் கொண்டுள்ளது.
கைகேயி : ''ஆம், மந்தரை. இது மகிழ்ச்சியான செய்தியல்லவா? இராமன் அன்பில் சிறந்தவன். அவன் நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டவன். அவன் நல்லாட்சி புரிவான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நீ ஏன் பதறுகின்றாய்?'' என்றாள்
பின் முத்துமாலையைக் கழற்றி மந்தரையிடம் இதோ என் பரிசு பெற்றுக்கொள் என்றாள்.
அதனைத் தூர வீசி எறிந்தாள் மந்தரை. ''நான் ஒன்றும் உன்னைப் போல வெட்கம் கெட்டவள் அல்ல. உன்னைத் திருமணம் செய்யும் பொழுது உன் கணவர், உன் தந்தைக்கு என்ன வாக்குறுதி அளித்தார், என்பது நினைவிருக்கிறதா?'' உன் வயிற்றுக் குழந்தைகளுக்கே வாரிசு உரிமை தருவதாக உறுதி அளித்தார் அல்லவா? இப்பொழுது இராமனுக்கு முடிசூட்ட ஆணை பிறப்பித்துள்ளார். இப்பொழுது இராமன் மன்னனாவான், பின் அவன் மகன்,
அவன் பேரன் என்று ஆட்சிப் பீடத்தில் அமர்வார்கள். உன் மகன் பரதன் கதி என்னவாகும், என்று சிந்தித்தாயா?
அதற்கு, கைகேயி மந்தரையிடம், ''இராமன் குணம் அறிந்துமா நீ இவ்வாறு பேசுகின்றாய்? இராமன் விட்டுக்கொடுத்து போவதில் அவனுக்கு ஈடு அவன் தான். குடும்பத்தின் மூத்த மகன். தம்பிகளின் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளான். அவனுக்கு பட்டம் சூட்டுவதில் என்ன தவறு உள்ளது''
என்றாள்.
அதற்கு, கூனி ''கைகேயி நீ இவ்வளவு மதியிலியாக இருப்பாய் என நான் எண்ணவில்லை. இராமன் அரசனானப் பின் நீ கோசலையிடம் கைக்கட்டி சேவகம் செய்யப்போகிறாயா?. இதனைத் தடுக்க ஒரே வழி தான் உள்ளது, பரதன் அரசனாக வேண்டும்'' என்றாள்.
கூனியின் வாதம் கைகேயியின் மனத்தை மாற்றியது.
''பரதனுக்கு முடிசூட்டுவதா? இது நடக்கக் கூடிய காரியமா? என்று வினவினாள்'' கைகேயி.
''ஏன் நடக்காது? முன்பு தேவேந்திரனுக்கு உதவியாகத் தயரதன் சம்பாசுரனை எதிர்த்தான். அப்போரில் உன் கணவன் அம்பு பட்டுத் தேரில் சாய்ந்த போது நீ தேரினைச் செலுத்தி அவன் உயிரைக் காப்பாற்றினாய். அப்பொழுது தயரதன் உனக்கு இரண்டு வரங்கள் அளித்தான் அல்லவா, அச்சமயம் உனக்கு அவ்வரம் தேவைப்படவில்லை. நீ தயரதனிடம் தக்க சமயம் வரும் பொழுது பெற்றுக்கொள்வதாகக் கூறினாய். நினைவிருக்கிறதா?” இப்பொழுது அவ்வரங்களைக் கேள்.
முதல் வரம் பரதன் நாடாள வேண்டும். ''இரண்டாவது வரம் இராமன் பதினான்கு வருடம் கானகம் செல்ல வேண்டும்'' என்று இரு வரங்களைக் கேள் எனக் கொடுமனக்கூனிக் கூறினாள்.
கைகேயி கூனியிடம் ''பரதன் நாடாள வேண்டும், சரி, இராமன் பதினான்கு வருடம் காட்டிற்குச் செல்ல வேண்டும் என்று ஏன் கேட்க வேண்டும்'' என்றாள்.
''இராமன் மேல் மக்கள் அதிக பிரியம் கொண்டிருக்கிறார்கள். தங்கள் வீட்டுப்பிள்ளை அரியணை ஏறினால் எவ்வளவு ஆனந்தம் அடைவார்களோ, அதனை விட மிகுதி உவகையில் இருக்கிறார்கள். வீதிகள் தோறும் தோரணங்கள், மலர் அலங்காரங்கள் என்று களைகட்டியுள்ளன. நாளை இராமனுக்குப் பதில் பரதன் முடிசூடப் போகிறான், என்றால் கலகம் செய்வார்கள். எனவே இராமன் பதினான்கு வருடம் கானகம் சென்று விட்டால் இராமனை மறந்து விட்டு பரதனை அரசனாக ஏற்றுக்கொள்வார்கள். தயரதனிடம் இரு வரங்களையும் கேள்'' என்றாள் கூனி.
''கைகேயி தயக்கத்தினை விட்டு விடு,
தயரதன் வரும் நேரமாகின்றது. பின்னிய கூந்தலை அவிழ்த்து விடு, ஆபரணங்களை கழற்று'' என்று உந்தினாள். கைகேயியும் கூனியின் போதனையால் உள்ளம் மாறினாள். அவள் கூறியது போல ஆபரணங்களை கழற்றி வீசிவிட்டு அலங்கோலமாக வெறுந்தரையில் படுத்துக் கொண்டாள்.
தயரதன் முடிசூட்டு விழாவின் ஏற்பாடுகளை கவனித்து விட்டு,
இராமன் முடிசூடப்போகிறான் என்ற இனிய செய்தியைக் கைகேயியிடம் கூற விரைந்தான். கைகேயியின் நிலைக் கண்டு தயரதன் தடுமாறினான்.
தயரதன் கைகேயியிடம் பரிவுடன் பேசலானான். ''கைகேயி என்ன நடந்தது, உன்னை யாராவது மரியாதை குறைவாக நடத்தினார்களா? அல்லது உன் உடல் நலம் சரியில்லையா? சொல்'' என்றான். அதற்கு கைகேயி பதில் அளிக்கவில்லை. உடனே அவன் ''உனக்கு யாராவது தீமை செய்தார்களா? உன் ஆணையை யாராவது மீறினார்களா? சொல்,
என்ன நேர்ந்தது'' என்றான்.
கைகேயி அதற்கு பதில் கூறாமல் அமைதியாகவே இருந்தாள். தயரதன் மனம் துயரம் அடைந்தது. அவன் கைகேயியிடம், ''கைகேயி நீ இவ்வாறு இருப்பதினை என்னால் காண முடியவில்லை, நான் உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமா? கூறு செய்து தருகின்றேன்'' என்றான்.
கைகேயி தசரதனிடம், ''இராமன் மீது ஆணையிட்டு நான் கேட்பதைத் தருவதாகக் கூறுங்கள்'' என்றாள்.
தயரதனும் கைகேயியின் எண்ணம் அறியாமல் அவளிடம் ''இராமன் மீது ஆணை,
நீ எது கேட்டாலும் செய்து தருகிறேன்'' என்றான்.
''தாங்கள் இரண்டு வரங்கள் எனக்குத் தர வேண்டும். முதல் வரம் என் மகன் பரதனுக்கு முடி சூட்ட வேண்டும். இரண்டாவது வரம்,
இராமன் பதினான்கு வருடம் வனவாசம் செல்ல வேண்டும்'' என்றாள்.
''ஏய வரங்கள் இரண்டில் ஒன்றினால் என்
சேய் உலகாள்வது சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனமாள்வது எனப் புகன்று நின்றாள்
தீயவை யாவையிலும் சிறந்த தீயாள்''
தயரதனுக்கு உலகம் இருண்டது. கை,கால்கள் நடுங்கின. வாய் குழறியது. அவன் கைகேயிடம், ''கைகேயி, என்ன கேட்கின்றாய், விடிந்தால் இராமனுக்குப் பட்டாபிக்ஷேகம். நீ பரதனுக்கு முடிசூட்ட வேண்டும்'' என்கின்றாய்.
''உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா? அல்லது வஞ்சகர்களின் சதி வலையில் சிக்கிக்கொண்டாயா? சொல்''
என்றான்.
கைகேயி சிறிதும் அஞ்சாமல், ''யாரும் சதி செய்யவும் இல்லை, எனக்குப் பைத்தியமும இல்லை,
நான் தெளிவாகக் கூறுகின்றேன். மன்னா,
முன் தந்த இரு வரங்களைத் தர வேண்டும், இன்றேல் உன் மீது பழி ஏற்படுத்தி மாள்வேன். இது உறுதி''
என்றாள்.
''திகைத்ததும் இல்லை எனக்கு வந்து தீயோர்
இசைத்ததும் இல்லை முன் ஈந்த வரங்கள் என்பால்
குசைப்பரியோய் ! தரின் இன்று கொள்வேஎன்; அன்றேல்
வசைத்திறம் நின்வயின் நிற்க மாள்வன் என்றாள்''
கைகேயியின் கொடுமொழிகளைக் கேட்டு தயரதன் மிகவும் துன்புறுகின்றான். கொடிய நாகம் போன்ற கொடுந்தன்மை கொண்ட கைகேயி தன் நாவினால் நல்கிய நஞ்சு மிக வருத்துவதால் தயரதன் நடுக்கம் அடைந்தான்.
கைகேயி கேட்ட வரத்தை தரமறுக்கவும் அஞ்சுகின்றான். தன் நிலையில் மாறாத கைகேயியை வாளால் அறுப்பதை விட அவளிடம் இரப்பதே மேல் என்று நினைத்து அவள் காலில் விழுகின்றான். ''இராமனைக் காட்டிற்கு அனுப்ப வானுலகத்தோரும் விரும்ப மாட்டார்கள். மண்ணுலகில் உள்ளவர்களோ அவனைப் பிரிந்திருக்க மாட்டார்கள். ஆனால் நீயோ கல் நெஞ்சம் கொண்டாயோ?'' இவ்வாறு பலவாக மன்னன் புலம்பினான்.
பின் தயரதன் கைகேயியிடம் ''பரதன் நாடாளட்டும், ஆனால் இராமன் கானகம் செல்ல வேண்டும் என்ற உன் இரண்டாவது வரத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்'' என்றான்.
கைகேயி தன் முடிவில் மாற்றமின்றி உறுதியாக இருந்தாள். ''முன் தந்த வரத்தை தர மறுத்தால் நினது வாய்மை என்னவாகும்'' என்றாள்.
தயரதன் நிலை குன்றினான். ''இராமன் காடு போனால் நான் உயிர் பிழைக்க மாட்டேன்” என்று சொல்லி மதி மயங்கி சோர்ந்து விழுந்தான்.
மன்னன் இவ்வாறு சோர்வுற்று இருப்பதைக் கண்ட கைகேயி ''சத்தியத்தைக் காக்கும் பொறுட்டு சிபிச்சக்கரவர்த்தி தன் உடம்பையே அரிந்து கொடுத்தான். அப்பரம்பரையில் வந்த நீ முன்னர் வரத்தை நல்கி விட்டு பிறகு வருந்துவதால் என்ன பயன்''
என்றாள்.
தயரதன் வேறு வழியில்லாமல், நீ கேட்ட வரங்களை ஈந்தேன், ஈந்தேன், என்றான். கைகேயி மகிழ்ச்சியடைந்தாள்.