மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் (MADURAI MEENAKSHIAMMAN TEMPLE)

  மதுரை என்றவுடன் நம் மனக்கண் முன் வருவது மீனாட்சி அம்மன் ஆலயமாகும். இவ்வாலயம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்டுள்ளது.  மீனாட்சியம்மை தன் திருக்கரங்களில் பச்சைக் கிளியினை ஏந்திய படி நிற்கின்றார். இக்கிளி பக்தர்களின் வேண்டுதல்களை மீண்டும் மீண்டும் அம்மையிடம் கூறி பக்தர்களின் துயர் தீர உதவுவதாகக் கூறப்படுகிறது. இக்கோயில் எட்டு கோபுரங்களையும், இரண்டு விமானங்களையும் கொண்டுள்ளது. இதன் கருவறை விமானங்கள் இந்திர விமானங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்கோயிலின் பொற்றாமரைக்குளம் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

புராண காலத்தில் மதுரை நகரம் திரு ஆலவாய் என்று அழைக்கப்பட்டது. மேலும் இது கடம்ப வனம், பூலோக கயிலாயம், நான்மாடக் கூடல், சிவநகரம் என்றும் அழைக்கப்படுகிறது.

 

கோயில் சுவாமி விபரம்

மூலவர்             - மீனாட்சி சுந்தரேஸ்வரர், சோமசுந்தர், சொக்கநாதர் 

இறைவி           - மீனாட்சி அம்மன்

தலவிருட்சம்  - கடம்ப மரம்

 தீர்த்தம்          - பொற்றாமரைக் குளம்

தல வரலாறு

இந்திரன், விருத்திராசூரனைக் கொன்றமையால் உண்டான பிரம்மகத்தி தோஷம் நீங்க, கடம்ப வனத்தில் இருந்த இந்தச் சிவலிங்கத்தைப் பூசித்துத் தனது தோஷத்தைப் போக்கிக் கொண்டதாக ஒரு வரலாறு கூறுகின்றது.

அடுத்து, வெகு காலத்திற்கு பிறகு, வணிகர் தனஞ்செயன் தனது சொந்த ஊரான மணவூருக்குத் திரும்பிய போது, இரவானதால் இடைப்பட்ட இந்தக் கடம்பவனத்தின் நடுவே பொய்கைக் கரையோரம் தங்கினார். அன்றிரவு அங்கிருந்த சுயம்பு லிங்கத்தை விண்ணிலிருந்து வந்து தேவர்கள் பூஜித்த அதிசயம் கண்டு பரவசம் அடைந்தார். அந்த அபூர்வ செய்தியினை மறுநாள் குலசேகர பாண்டிய மன்னனிடம் தெரிவித்தார். அன்றிரவு மன்னனின் கனவிலும் சிவபெருமான் தோன்றி, "கடம்பவனத்தை திருத்தி நகராக்குக" எனக் கட்டளையிட்டார்.

பாண்டிய மன்னனும் கடம்பவனத்தை திருத்தி மதுரை நகராக மாற்றினார். அப்படி உருவானது தான் எழில் மிக்க மதுரை நகரும், பிரம்மாண்ட மீனாட்சியம்மன் ஆலயமுமாகும்.

மரகத மீனாட்சி

மீனாட்சி அம்மனின் திருமேனி சிலை முழுக்க மரகதக் கல்லால் ஆனது. இவ்வாலயம் 17 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மீனாட்சி அம்மன் சன்னதியில் வழங்கப்படுகின்ற தாழம்பூ குங்குமம் பிரசித்தி பெற்றதாகும். ஆயிரங்கால் மண்டபம் இக்கோயிலின் சிறப்பாகக் கூறப்படுகிறது. இங்கு உள்ள இசைத் தூண்கள் பிரசித்தி பெற்றவையாகும் . 22 இசைத் தூண்கள் உள்ளன.

சித்ரா பௌவுர்ணமி

சித்ரா பௌவுர்ணமி இங்கு மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சித்ரா பௌவுர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. அதே நாளில், மதுரை வைகை ஆற்றில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. மேலும் இவ்வாலயத்தைச் சுற்றியுள்ள தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. சித்திரை வீதிகள், ஆவணி வீதிகள், மாசி வீதிகள், கீழ ஆடி வீதிகள், மேல ஆடி வீதிக்ள், வடக்கு ஆடி வீதிகள், தெற்கு ஆடி வீதிகள் எனவும் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.

முக்தித் தலம்

மதுரைக்கு வந்து மீனாட்சி சொக்கநாதரை வணங்கினால் முக்தி கிடைக்கும் என்றும், இது பூலோக கயிலாயம் எனவும் அழைக்கப்படுகிறது. சிறப்புக்கள் மிக்க மீனாட்சியம்மனை தரிசித்து வாழ்வின் வளங்களைப் பெறுவோமாக

 

                                                             


Popular posts from this blog

நளதமயந்தி கதை (NALA THAMAYANDHI STORY)

சென்டினல் மக்கள் ( THE SENTINELESE)

திருப்பாண்டிக் கொடுமுடி (KODUMUDI TEMPLE)