வீரமங்கை வேலு நாச்சியார்(VELU NACHIYAR)
ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய முதல் வீரப் பெண் வேலு நாச்சியார். இவர் இந்திய சுதந்திரப் போரில் ஆண்களுக்கு நிகராகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டவர். வேலு நாச்சியார் 1730ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதிக்கும், முத்தாத்தாள் நாச்சியாருக்கும் மகளாகப் பிறந்தார். அக்காலத்தில் அரச குடும்பத்தினர் மத்தியில் ஆண் வாரிசு வேண்டும் என்கின்ற எண்ணம் மிகுந்திருந்தது. ஆனால் இராஜா செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி அவர்கள், தனது ஒரே மகளான வேலு நாச்சியாரை ஆண் குழந்தை போலவே வளர்த்தார். வேலு நாச்சியாருக்கு தற்காப்பு கலைகள், ஆயுதப் பயிற்சி, போர்ப் பயிற்சி, வாட்பயிற்சி, குதிரையேற்றம், யானை ஏற்றம் போன்றவற்றைப் பயில்வித்து அருமையுடன் வளர்த்தார்.
வேலு நாச்சியார் வீரமும் , தைரியமும் மிக்க பெண்ணாக வளர்ந்தார். எச்சூழ்நிலையிலும் தன் மன உறுதியையும், நம்பிக்கையையும் இழக்காமல் துணிவுமிக்க பெண்ணாக வலம் வந்தார். வேலு நாச்சியார் கல்வியிலும் சிறந்து விளங்கினார். அவர் தமிழ் தவிர ஆங்கிலம், உருது, தெலுங்கு என பல மொழிகளில் தேர்ச்சி பெற்று பன்மொழி வித்தகராக விளங்கினார்.
வீரமிக்க வேலு நாச்சியாருக்கு அவரது பதினாறாவது வயதில் , சிவகங்கை மன்னரான முத்து வடுக நாதருடன் திருமணம் நடைபெற்றது. அதன் பின் சிவகங்கையின் அரசியாக விளங்கினார். வேலு நாச்சியாருக்கும், முத்து வடுக நாதருக்கும் பிறந்த பெண் குழந்தைக்கு வெள்ளச்சி நாச்சியார் எனப் பெயரிட்டு அன்புடன் வளர்த்து வந்தனர். நன்முறையில் சிவகங்கையை ஆண்டு வந்த முத்துவடுக நாதருக்கும், வேலு நாச்சியாருக்கும் மருது சகோதரர்கள் துணை நின்றனர்.
இந்நிலையில், ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் அவர்களுக்கு பணிந்து நடந்த ஆற்காடு நவாப், முத்துவடுக நாதரிடம் வரி கேட்டு வந்தார். கோபம் கொண்ட முத்துவடுக நாதர், "எதற்காக கப்பம் கட்ட வேண்டும்? ஆங்கிலேயருக்கு அடி பணிய முடியாது" என உறுதியுடன் கூறி ஆற்காடு நவாபைத் திருப்பி அனுப்பினார்.
இதன் பின் ஆற்காடு நவாப் ஆங்கிலேயரின் துணையோடு, முத்துவடுக நாதரை வெற்றி கொள்ள பல முறை முயன்றும் அதில் தோல்வியே அடைந்தார். நேருக்கு நேர் போரில் வெற்றி பெற முடியாததால், சதி செய்து அவரை அழிக்க திட்டம் தீட்டினார். எனவே முத்துவடுக நாதர் 1772ல் காளையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த போது, ஆங்கிலேயப் படைகளால் திடீர் தாக்குதல் செய்யப்பட்டு வீர மரணம் அடைந்தார். கணவரின் மரணச்செய்தியைக் கேட்ட வேலு நாச்சியார், அதற்குக் காரணமான ஆங்கிலேயரைப் " பழி தீர்ப்பேன்" என சூளுரைத்தார்.
சிவகங்கை அரண்மணையும், கோட்டையும் ஆங்கிலேயர் வசம் சென்றது. வேலு நாச்சியார் எதிரிப்படைகளிடமிருந்து தப்பி, மருது சகோதரர்கள் உதவியுடன் திண்டுக்கல் சென்றார். அப்போது திண்டுக்கல் ஹைதர் அலியின் வசம் இருந்தது. நவாபுக்கும், ஆங்கிலேயருக்கும் பொதுவான எதிரி ஹைதர் அலி. எனவே வேலு நாச்சியார் ஹைதர் அலியிடம் உதவி கோர முடிவு செய்தார். அவர் ஹைதர் அலியிடம் உருது மொழியில் பேசி, தமக்கு உதவுமாறு கேட்டார். ஹைதர் அலி வேலு நாச்சியாரின் அறிவுத் திறனையும், அவரின் வீரத்தையும் கண்டு வியந்து, அவருக்கு உதவுவதாக ஒப்புக்கொண்டார்.
வேலு நாச்சியார் திண்டுக்கல் கோட்டையில் பாதுகாப்பாகத் தங்கி படைகளைத் திரட்டத் தொடங்கினார். தனது படையினை மூன்று குழுக்களாகப் பிரித்தார். சிவகங்கை குழுவிற்கு வேலு நாச்சியாரே தலைமை ஏற்றார். மற்றொரு குழுவிற்கு மருது சகோதரர்கள் தலைமை ஏற்றனர்.
வேலு நாச்சியாரின் தலைமையில் பெண்கள் குழு சிவகங்கை சென்றது. அங்கு அரண்மனையில் விஜயதசமி விழாக் கொண்டாட்டம் நடந்து வந்தது. அவ்விழாவிற்கு சென்ற பெண்களோடு பெண்களாக வேலு நாச்சியாரும், அவர் படைப் பெண்களும் சென்றனர். அவர்கள் மாறுவேடமிட்டும், ஆயுதங்களை ஆடையில் மறைத்தும் சென்று திடீரென்று தாக்குதலை நடத்தினர். அதே போல வேலு நாச்சியார் படையில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்துக் கொண்டு, ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கினுள் நுழைந்து, ஆயுதக்கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள் என்றும் வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.
1780ம் ஆண்டு வேலு நாச்சியார் தலைமையில் பெரும் படை திண்டுக்கல்லில் இருந்து சிவகங்கை நோக்கிச் சென்றது. கடும் போர் புரிந்து அவரது படை ஆங்கிலேயரை தோற்கடித்து சிவகங்கையை மீட்டது. வேலு நாச்சியார் எட்டு வருடங்கள் காத்திருந்து, திட்டம் தீட்டி, தனது கணவரைக் கொன்ற ஆங்கிலேயப் படையைத் தோற்கடித்தார். தனது சபதத்தை நிறைவேற்றி சிவகங்கையின் அரசியானார். தனது 50 வது வயதில் சிவகங்கையின் அரசியானார் வீரப்பெண்மணி வேலு நாச்சியார்.
இவர் தனது ஆட்சியில் சிவகங்கையை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றார். மக்களின் நலனில் அக்கறை கொண்டு பணியாற்றினார். பின்னாளில் தன் மகளின் மரணத்தால் துயரடைந்த வேலு நாச்சியார், 1796 ம் ஆண்டு இவ்வுலகை விட்டு நீங்கினார்.
இந்திய சுதந்திரப் போரில், ஜான்சி ராணி அவர்களுக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே, வேலு நாச்சியார் தனது பங்களிப்பை அளித்து, தனது மன உறுதியையும், வீரத்தையும் நிலைநாட்டியுள்ளார்.