இராமநாதசுவாமி திருக்கோயில் (RAMESWARAM TEMPLE)

 

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்லும் புண்ணியத் தலம் இராமேசுவரம் ஆகும். கடல் பரப்புகளால் சூழப்பட்ட சிறிய தீவுதான் இராமேசுவரம். அழகிய கட்டிடக் கலைக்கும், நுண்ணிய வேலைப்பாடுகள் மிக்க சிற்பக் கலைக்கும் சிறந்த சான்றாக இராமேஸ்வரம் விளங்குகிறது. இராமாயண காவியத்தின் பழமை எவ்வளவோ, அவ்வளவு பழமையானது இராமேசுவரம் ஆலயமாகும்.




இராமவதாரம்
எடுத்த திருமாலின் கைகளிலுள்ள இரண்டு ஆயுதங்களில் ஒன்றான "சங்கு" போன்ற வடிவில் இராமேஸ்வரம் அமைந்திருப்பது இத்தலத்தின் சிறப்பு அம்சமாகும். இராமேஸ்வரம் என்ற இவ்வூர் முன்பு பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டது. சேதுமாதவர் கோயில் முதன் முதலில் உருவானதால் "சேதுமாதவர்புரி" என்றும், அகத்தியர் மற்றும் பல முனிவர்கள் தவம் செய்து வந்ததால், இதற்கு 'அகத்தியபுரம்' என்றும் பெயர் வழங்கப்பட்டது.

இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமபிரான், சிவலிங்கம் அமைத்து சிவனாரை வழிபட்டதாலேயே இத்திருதலத்திற்கு "இராம ஈசுவரம்" எனப் பெயர் வரப்பெற்றது."இராம ஈசுவரம்" என்ற பெயர் தான் காலப் போக்கில் மருவி இராமேசுவரம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலமானது "சிவ வைணவ சங்கமத் திருத்தலம் என்றும் அழைக்கப்படுகிறது.

தல வரலாறு

இராமயணப் போரில் இராமர், இராவணனைக் கொன்ற பிறகு சீதையை மீட்டு அழைத்து வருகிறார். இராமேசுவர தலம் வந்த பின், இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் நீங்க சிவபெருமானை வழிபட எண்ணி, அனுமனைச் சிவலிங்கம் கொண்டு வருமாறு காசிக்கு அனுப்புகிறார்.

அனுமன் குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்பி வராததால், சீதை கடற்கரையில் உள்ள மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கித் தந்தார். இராமபிரான் குறிப்பிட்ட நேரத்தில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, தனது பூசையை நிறைவு செய்தார். காலங் கடந்து வந்த அனுமன், தான் வருவதற்குள் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதைக் கண்டு வருந்தினார். இராமர் அனுமனை சமாதானப்படுத்தி, அனுமன் கொண்டு வந்த சிவலிங்கத்தை, சீதாப்பிராட்டி மணலால் செய்த லிங்கத்திற்கு அருகில் பிரதிஷ்டை செய்தார். மேலும், அனுமன் கொண்டு வந்த சிவலிங்கத்திற்கே முதல் பூசை நடைபெற வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.


அனுமன் கொண்டு வந்த சிவலிங்கம் இராமலிங்கத்திற்கு வடபுறம் நிறுவப்பட்டுள்ளது. அனுமன் கொண்டு வந்து லிங்கம் காசி விஸ்வநாதர் என்று அழைக்கப்படுகிறது. இன்றும் இந்த காசி விஸ்வநாதருக்கே, முதல் பூசை நடைபெறுகிறது. பின்பே இராமரால் நிறுவப்பட்ட இராமலிங்கத்திற்கு பூசை நடைபெறுகிறது.

கோயிலின் அமைப்பு

இராமேசுவரம் ஆலயம் தீவின் தென்கிழக்கே, கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயில் மிகவும் பிரம்மாண்டமாகவும், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடனும் அமைந்துள்ளது. கருவறையைச் சுற்றிலும் மூன்று திருச்சுற்றுக்கள் உள்ளன. நாற்புறமும் மிக உயரமான மதில்களும், நான்கு வாயில்களும் உள்ளன.


இவ்வாலயத்தின் கிழக்குக் கோபுரம் ஒன்பது நிலைகளுடன் 128 அடி உயரமும், மேற்குக் கோபுரம் ஐந்து நிலைகளுடன் 78 அடி உயரமும் கொண்டு, முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளன.

கோயிலில் உள்ள முக்கிய சந்நிதிகளாவன:

விநாயகர் சந்நிதி, இராமநாத சுவாமி சந்நிதி, பர்வதவர்த்தினி அம்மன் சந்நிதி, காசி விஸ்வநாதர்,விசாலாட்சி அம்மன் சந்நிதி, சுப்பிரமண்யர் சந்நிதி, திருமகள், ஆஞ்சநேயர், சேதுமாதவர், பள்ளிகொண்ட பெருமாள் ஆகிய சந்நிதிகளும் உள்ளன.

கோயிலின் உள்ளே உள்ள 22 புண்ணியத் தீர்த்தங்களாவன:

1.மகாலட்சுமி தீர்த்தம், 2.சாவித்திரி தீர்த்தம், 3.சரசுவதி தீர்த்தம், 4.காயத்திரி தீர்த்தம், 5.சங்கு தீர்த்தம், 6.சக்கர தீர்த்தம், 7.சேதுமாதவ தீர்த்தம், 8.நீல தீர்த்தம், 9.நள தீர்த்தம், 10. கவாய தீர்த்தம், 11.கவாட்ச தீர்த்தம், 12.கந்த மாதன தீர்த்தம், 13.பிரமகத்தி விமோசன தீர்த்தம், 14.சூரிய தீர்த்தம்,15.சந்திர தீர்த்தம், 16.சர்வ தீர்த்தம், 17.சாத்தியாமிருத தீர்த்தம், 18.சிவ தீர்த்தம், 19.கங்கா தீர்த்தம், 20.யமுனா தீர்த்தம், 21. கயா தீர்த்தம், 22.கோடி தீர்த்தம் ஆகியவை ஆகும். இத்தீர்த்தங்கள் அனைத்தும் கிணறுகள் அமைப்பில் அமைந்துள்ளன.

கோயிலுக்கு வெளியேயும் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆலய தரிசனத்திற்கு அதிக அளவு தீர்த்தங்கள் நிறைந்த ஆலயமாக இராமேஸ்வரம் விளங்குகிறது.

இவ்வாலயத்தில் எல்லாச் சிறப்பு விழாக்களும் நடைபெறுகின்றன. அவற்றில் மகாசிவராத்திரி, திருக்கல்யாண உற்சவம், தெப்போற்சவம், வசந்தோற்சவம், இராமலிங்க பிரதிஷ்டை விழா, நவராத்திரி விழா, ஆருத்ரா தரிசன விழா ஆகியவை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக இராமநாத சுவாமி கோயில் விளங்குகிறது. பர்வதவர்த்தினி அம்மன் உடனுறை இராமநாத சுவாமியை வணங்கி வாழ்வில் நன்மைகளைப் பெறுவோமாக.

 

 







Comments

Popular posts from this blog

நளதமயந்தி கதை (NALA THAMAYANDHI STORY)

தஞ்சை பெரிய கோவில் (கட்டிடக் கலையின் உன்னதம்) BRIHADEESWARAR TEMPLE

வாலி வதைப் படலம்