இராமாயணம்- ஆரண்ய காண்டம் (பகுதி -1) RAMAYANAM- ARANYA KANDAM

         இராமர், சீதையுடனும். இலக்குவனுடனும் தண்டகாரண்ய காட்டினுள் பயணத்தைத் தொடர்ந்தார். ஏராளமான புண்ணிய நதிகளில் நீராடியும், முனிவர்களின் ஆசிகளைப் பெற்றும் பயணத்தைத் தொடர்ந்தனர். தண்டகாரண்யம் மிகப் பெரும் காடு. இங்கு பல ஆண்டுகள் பழமையான வானுயர்ந்த மரங்கள் நிறைந்துள்ளன. விந்திய, சாத்பூரா மலைகள் அருகே உள்ளன.



       தண்டகாரண்ய பயணத்தின் நடுவே அத்திரி முனிவரின் ஆசிரமத்தை அடைந்தனர். அத்திரி முனிவரும், அவரது மனைவி அனுசுயாவும், இராம இலக்குவ சீதையை வரவேற்று உபசரித்தனர். அனுசுயா சீதையை தன் மகளைப் போல பாவித்து அன்பினைப் பொழிந்தாள். சீதைக்கு அழகிய ஆபரணங்களை அணிவித்தாள். மேலும் சீதைக்கு பத்து மாதம் பசிக்காத வரமளித்தாள். 

மறு நாள் அத்திரி முனிவரின் ஆசிரமத்திலிருந்து புறப்பட்டு, மூவரும் தெற்கு நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தனர்.

வழியில் வீராடன் என்னும் அரக்கன் எதிர் வந்தான். அவன் சீதையைத் தூக்கிச் சென்றான். இராமனுக்கும் வீராடனுக்கும் போர் மூண்டது. இராமன் தன் வில்லில் நாணேற்றி எழுப்பிய ஒலியில் காடே அதிர்ந்தது. இராமன் வீராடனை தன் காலால் உதைத்தான். கீழே விழுந்த வீராடன் இறந்தான். பின் சாப விமோசனம் பெற்று, உயிரோடு எழுந்தான். 

       வீராடன் இராம இலக்குவரை வணங்கி, ''இராமா! நான் குபேர சாபத்தால் அரக்கனானேன். இப்பொழுது உன் பாதம் பட்டதால் சாப விமோசனம் பெற்று பழைய உருப் பெற்றேன். என் பெயர் தும்புரு. நான் ஒரு கந்தர்வன்'' என்றான்.

தெற்கு நோக்கிய இராமனின் பயணம் தொடர்ந்தது. அவர்கள் சரபங்கர் என்ற முனிவரின் ஆசிரமத்தை அடைந்தனர். அவர் இராமரின் தரிசனத்திற்காகக் காத்திருந்தார். அவர் தன் ஆயுட்காலம் முடிந்த பின்னும் சீதா ராம தரிசனத்திற்காக உயிர் வளர்த்தார். இராமரைக் கண்டவுடன் எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டார்.

சரபங்கர் இராமனிடம், ''இராமா, இந்திரன் என் தவ வலிமையைப் பாராட்டி, எனக்கு 'பிரம்மபதம்' அளிப்பதாகவும், என்னை விண்ணுலகம் வரும் படியும் கூறினான். ஆனால் நான் இராமதரிசனம் காணாமல் எங்கும் வரமாட்டேன் என்று கூறி விட்டேன். இப்பொழுது இராம தரிசனம் கிடைக்கப் பெற்றேன். யாரும் பெறாத பேறு பெற்றேன். இராமா!, எனக்கு ஓர் ஆசை உண்டு. எனக்கு உன்னுடைய 'பரமபதம்' தான் வேண்டும்'' என்றார்.

இராமர் சரபங்கரின் அன்பினைப் போற்றினார். அடுத்த நாள் காலை சரபங்கர் அக்னியில் மூழ்கி பரமபதம் அடைந்தார்.

       இராமரின் பயணம் தொடர்ந்தது. மூவரும் தாண்டக வனத்தை அடைந்தனர். அங்கு முனிவர்களாகிய தவசீலர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களின் அன்போடும், ஆசியோடும் இராம, இலக்குவ, சீதை மூவரும் பத்து ஆண்டுகள் அங்கு வாழ்ந்தனர். அதன் பின் அகத்திய முனிவரைக் காணப் புறப்பட்டனர்.

அகத்திய முனிவர், மூவரையும் அன்போடு வரவேற்று உபசரித்தார். அவர் இராமருக்கு திருமாலின் வில்லும், அம்பறாத் துணியும், ஒப்பற்ற வலிய அம்பினையும் வழங்கினார்.

 

''இப்புவனம் முற்றும் ஒரு தட்டினிடை இட்டால்

ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும்

வெப்பு உருவு பெற்ற அரன் மேரு வரை வில்லாய்

முப்புரம் எரித்த தனி மொய்க் கணையும் நல்கா''

 

அகத்தியர் இராமரை, ''இவ்விடமே தங்குக'' என்று கூறினார்.

       இராமர் ''முனிவரே! நாங்கள் இன்னும் தெற்கு நோக்கி செல்ல விரும்புகின்றோம். அங்கு நாங்கள் தங்குவதற்கு ஏதுவான இடம் எது என்று தாங்கள் கூற வேண்டும்'' என்றார்.

       அகத்திய முனிவர், ''இராமா ! இன்னும் சிறிது தூரத்தில் பஞ்சவடி உள்ளது. அது நதிகளும் சோலைகளும் சூழ்ந்த பகுதியாம். அங்கு நீ தங்கிக் கொள்'' என்றார். 

       இராம சீதை, இலக்குவர் மூவரும் அகத்திய முனிவரின் ஆசியுடன் பயணத்தைத் தொடர்ந்தனர். பஞ்சவடியை நோக்கி மூவரும் சென்றனர். வழியில் வானத்தில் பறந்து சென்ற கழுகுகளின் அரசன் ஜடாயுவைக் கண்டனர். ஜடாயு தூய்மையும், வாய்மையும், மதியின் கூர்மையும், தூரத்தில் உள்ளவற்றினைக் கண்டறியும் சிறிய கண்ணினை உடையவனும் ஆவான்.

ஜடாயு இராம இலக்குவரைக் கண்டு இவர்கள் யாரென ஐயமுற்றார். ''கருமலை செம்மலை அனைய காட்சியர்'' யாரோ என வியந்தார்.

       ஜடாயு, இராமரிடம் ''நீங்கள் யார்?'' என வினவினார்.

       இராமர் ''நாங்கள் தசரதச் சக்கரவர்த்தியின் புதல்வர்கள்'' என்றார். 

ஜடாயு மகிழ்ச்சியுடன் ''தசரதனின் புதல்வர்களா நீங்கள். தசரதன் என்னுயிர் நண்பன். இப்பொழுது தசரதன் நலமா?'' எனக் கேட்டார்.

       இராமர் ''நீங்கள் என் தந்தையின் நண்பரா? உங்களைக் கண்டது எங்கள் தந்தையைக் கண்டது போன்று மகிழ்வளிக்கின்றது'' என்றார். பின் தந்தை தயரதன் உயிர் நீத்தார் எனக் கூறினார்.

       ஜடாயு தயரதன் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ந்தார். பின் இராம இலக்குவரிடம் தயரதனின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். இராமரும் தாங்கள் கானகம் வந்த கதையைக் கூறினார். 

பின் ஜடாயு பஞ்சவடிக்கு செல்லும் வழியைக் காட்டினார். ஆகாய மார்க்கமாக பறந்து சென்று அவர்களுக்கு உதவினார். மூவரும் பஞ்சவடியை அடைந்ததும், ஜடாயு அவர்களிடம் ''நீங்கள் நாட்டுக்குத் திரும்பும் வரை உங்களின் பாதுகாவலனாக நான் இருப்பேன்'' என்று கூறினார்.

       மூவரும் பஞ்சவடியில் தங்கினர். இலக்குவன் சித்திரகூடத்தில் அமைத்தது போன்று அழகிய பர்ணசாலையை பஞ்சவடியில் அமைத்தான்.

       பர்ண சாலையில் மூவரும் நலமுடன் வாழ்ந்து வந்தனர்.

 ஒரு நாள் காலைப் பொழுது இராவணனின் தங்கை சூர்ப்பனகை அங்கு வந்தாள். அவள் இராமனைக் கண்டு அவன் அழகில் மயங்கினாள். இவர் மன்மதனோ என ஐயமுற்று, பின் மன்மதனைத் தான் சிவன் நெற்றிக் கண்ணால் எரித்து விட்டாரே, என எண்ணி, இவர் வேறு எனத் தெளிந்தாள். 

''எவன் செய இனிய இவ்வழகை எய்தினேன்?'' என வியந்தாள். 

       இராமரைக் கவர அழகியப் பெண் உருப் பெற்றாள். 

 

''பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்கச்

செஞ்செவிய கஞ்சம் நிமிர சீரடியின் ஆகி

அஞ்சொல் இள மஞ்ஞை என அன்னமென மின்னும்

வஞ்சி என நஞ்சமென வஞ்ச மகள் வந்தாள்''

 

சூர்ப்பனகையின் அழகினைக் கண்டு இராமன் வியந்தான். பேரழகினை உடைய இப்பெண் யார் என அறிய ஆவல் கொண்டான்.

       இராமர் சூர்ப்பனகையிடம், ''அழகிய பெண்ணே! நீ யார்?" எனக் கேட்டார். 

       சூர்ப்பனகை இராமரிடம் ''என் பெயர் காமவல்லி. நான் பிரம்மாவின் பேத்தி, இலங்கா புரி வேந்தன் இராவணனின் தங்கை. என் தந்தை பெயர் விச்சிரவஷ். தாயின் பெயர் இராகை. கரண், தூக்ஷனன், திரிசரன் மூவரும் என் சிற்றன்னையின் புதல்வர்கள். என் தமையன் கரண் இக்காட்டின் அரசன். அழகிய ஆண்மகனே! நீ என்னை மணந்து கொண்டால் இக்காட்டில் உள்ள அரக்கர்கள் உனக்கு சேவகம் செய்வார்கள்” என்றாள். 

இராமர் ''பெண்ணே, நான் திருமணமானவன். தசரத சக்கரவர்த்தியின் மைந்தன். தந்தையின் ஆணைப் படி வனவாசம் வந்துள்ளோம். உன்னை மணந்து கொள்ள இயலாது. நீ இவ்விடம் விட்டு அகன்று விடு'' என்றார். 

அப்பொழுது சீதை அவ்விடம் வந்தாள். சூர்ப்பனகை சீதையைக் கண்டாள். பின் சூர்ப்பனகை, இராமரிடம் ''ஆண்மகனே, இவளா உன் மனைவி?. இவள் உன் அழகுக்கு ஈடானவள் இல்லை. என்னைத் திருமணம் செய்து கொண்டால் இக்காட்டில் நீ சுகமாக வாழலாம்'' என்றாள்.

       இராமர் சூர்ப்பனகையிடம் பேசுவது பிரச்சனைக்கு வழி வகுக்கும் என் எண்ணி, அவளிடம் ''பெண்ணே, நீ இவ்விடம் விட்டு அகல்வது அனைவருக்கும் நன்று'' எனக் கூறினார்.

       சீதை இவ்விடம் இருப்பதாலே இராமர் தன்னை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக சூர்ப்பனகை எண்ணினாள். எனவே சீதையைத் தூக்கிச் சென்று விட எண்ணி, அவளை நெருங்கி அவள் கரம் பற்றினாள். அப்பொழுது இவையனைத்தையும் கண்டு கொண்டிருந்த இலக்குவன், சூர்ப்பனகையின் செயலில் கோபம் கொண்டு, அவளின் காது மற்றும் மூக்கு இவை இரண்டையும் அறுத்தான். 

       சூர்ப்பனகை பெரும் குரலெடுத்து ஓலமிட்டு அழுதாள். அவள் இட்ட ஓலம் உலகெலாம் கேட்டது. பெரும் துன்பத்தில் அவதியுற்றாள். அரக்கியான அவளும் தான் பெண்ணெனப் பிறந்ததே பிழை என எண்ணினாள். ''பெண் பிறந்தேன் பட்ட பிழை எனப் பிதற்றும்'' எனக் கம்பர் கூறுகின்றார்.

இரத்தம் சொட்ட சொட்ட அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

       சூர்ப்பனகை ஓலமிட்டுக் கொண்டு கரண் சபை நோக்கிச் சென்றாள். கரண் ''நீ இந்நிலை அடைய யார் காரணம்?'' எனக் கேட்டான். 

       ''என் இந்நிலைக்குக் காரணம் இரு மானிடர்கள். நம் தமையன் இராவணனுக்காக சீதையைத் தூக்கச் சென்ற போது, என் மூக்கையும் காதையும் அறுத்து விட்டார்கள்'' என்று கூறினாள். 

       இராவணனின் பெரும் படையில் ஒரு பகுதி கரண் வசம் இருந்தது. பெரும் கோபம் கொண்ட கரண் போருக்குத் தயாரானான். தன் படைத் தளபதிகள் பதினான்கு பேரை அனுப்பி இராம இலக்குவரை கொல்லச் சொன்னான்.

போர் மூண்டது. இராமர், சீதைக்குத் துணையாக இலக்குவரை இருக்கச் சொன்னார். இராமரின் வில் வீரத்தின் முன் கரணின் படைத் தளபதிகள் ஈடு கொடுக்க முடியாமல் மாண்டார்கள். தனது படை தோல்வியுற்றதை அறிந்த கரண் தன் தமையன் தூக்ஷனனை அனுப்பினான். அவனும் தோல்வியற்றான், பின் மூன்று தலைகளையுடைய திரிசரனை அனுப்பினான். அவனும் இராமரால் கொல்லப்பட்டான். பிறகு கரணே களம் சென்றான், இராமர் எய்த அம்பானது கரணின் மார்பில் பட்டு அவன் உயிர் பிரிந்தான். பெரு மழையால் வனம் அழிவது போன்று இராமனின் அம்பு மழையில் கரணின்படைகள் அழிந்தன.

       இராமன் பாதங்களில் சீதையும், இலக்குவனும் வீழ்ந்து வணங்கினர். அவர்கள் வடித்த கண்ணீரானது, இராமர் அரக்கர்களை அழித்ததனால் உண்டான கறையை நீக்கியது எனக் கம்பர் கூறுகின்றார்.

 

''விண்ணின் நீங்கிய வெய்யவர் மேனியில்

புண்ணின் நீரும் பொடிகளும் போய் உக

அண்ணல் வீரனைத் தம்பியும் அன்னமும்

கண்ணின் நீரினில் பாதம் கழுவினர்''

 

சூர்ப்பனகை கரணின் உடலைப் பற்றிக் கொண்டு அழுதாள். பின் இலங்கை நோக்கி தன் தமையன் இராவணனைக் காண விரைந்தாள். 

       இலங்கையில் இராவணன் தோளும், குண்டலமும் ஒளி வீச, மகுடம் பிரகாசிக்க தன் அரண்மனையில் வீற்றிருந்தான். சூர்ப்பனகை இலங்கை நகரின் வடக்கு வாயில் வழியாக உள்ளே நுழைந்தாள். இலங்கை மக்கள், இராவணனின் தங்கையான இவளது முக்கினை யாரால் அரிய முடியும்? ஒரு வேளை இவளே தன் மூக்கினை அரிந்து கொண்டாளோ என்று பேசிக் கொண்டனர். 

சூர்ப்பனகையின் நிலை கண்டு இராவணன் ''உனது இந்நிலைக்கு யார் காரணம்?'' என்று கேட்டான்.

       சூர்ப்பனகை ''இரு மானிடர்கள்'' என்றாள். 

 இராவணன், ''மானிடர்களா'' என சிரித்தான். பின் உன் இந்நிலை கண்ட கரணும், தூக்ஷனும்., திரிசரனும் அவனைக் கொல்ல வில்லையா? எனக் கேட்டான்.

       சூர்ப்பனகை ''அவர்கள் தசரத குமாரர்கள். அரக்கர்களை அழிப்பதாக சபதம் செய்துள்ளனர். அளப்பரிய வீரம் உடையவர்கள். நம் தமையர்கள் மூவரும் இராமனின் அம்பு பட்டு மாண்டார்கள்'' என்றாள்.

       ''இராவணன் தன் தமையர்கள் கொல்லப்பட்டது அறிந்து கடும் சினம் கொண்டான். பின் உன் மூக்கினை அரிய நீ என்ன செய்தாய்?’’எனக் கேட்டான். 

       சூர்ப்பனகை ''சீதை அழகே உருவானவள். அவளை உனக்காகத் தூக்கச் சென்றேன், அதனால் என் மூக்கினை அறுத்தார்கள்'' என்றாள்.

 அவள் தன் மேல் உள்ள குற்றத்தினை மறைத்துக் கூறினாள்.

 

''மீன் கொண்டு ஊடாடும் வேலை மேகலை உலகம் ஏத்த

தேன் கொண்டு ஊடாடும் கூந்தல், சிற்றிடை சீதை என்னும்

மான் கொண்டு ஊடாடு நீ, உன் வாள் வலி உலகம் காண

யான் கொண்டு ஊடாடும் வண்ணம், இராமனைத் தருதி என்பால்''


    இராவணன், சூர்ப்பனகையின் மொழி கேட்டு சீதை மேல் ஆசை கொண்டான். எனவே சீதையை தூக்கி கொண்டு வர முடிவு செய்தான்.

   


Comments

Popular posts from this blog

நளதமயந்தி கதை (NALA THAMAYANDHI STORY)

தஞ்சை பெரிய கோவில் (கட்டிடக் கலையின் உன்னதம்) BRIHADEESWARAR TEMPLE

வாலி வதைப் படலம்