இராமாயணம்-ஆரண்ய காண்டம் (பகுதி -2) RAMAYANAM- ARANYA KANDAM

             இராவணன், சூர்ப்பனகையின் மொழி கேட்டு சீதை மேல் ஆசை கொண்டான். எனவே சீதையை தூக்கி கொண்டு வர முடிவு செய்தான். 

இராவணன் தன் அமைச்சர்களோடு ஆலோசித்தான். பிறன் மனை அபகரிப்பது அழிவில் கொண்டு சேர்க்கும் என அமைச்சர்கள் கூற்றினை இராவணன் ஏற்கவில்லை. இராவணனின் தாய் வழி மாமன் மாரீசன். அவன் விசுவாமித்திரர் யாகம் செய்த போது, தொல்லை செய்ததால் இராமரின் அம்பு பட்டு கடலில் ஒளிந்து கொண்டான்.



இராவணன் சேது கடலில் ஒளிந்திருக்கும் மாரீசனை, அழைத்து சீதையைத் தூக்கி வர மாயமான் வேடம் எடுக்கக் கூறினான். 

மாரீசன் ''இராவணா! முன்பு பெரும் தவம் செய்தாய். சிவபெருமானிடம் பெரும் அன்பு கொண்டாய். பெரும் யாகம் செய்தாய்.பல வரமும், செல்வமும் பெற்றாய். இத்தீய செயலால் அவையனைத்தையும் இழக்கலாமா?'' என்றான். 

''மன்னா! நீ உன் வாழ்வை முடித்தாய் மதியற்றாய்

 உன்னால் அன்று ஈது, ஊழ்வினை என்றே உணர்கின்றேன்'' என்றான்.

       என் தாய் தாடகையும், சுபாகுவும் இராமனின் அம்பால் இறந்தனர். எனவே உன் எண்ணத்தை மாற்றிக் கொள் என்றான் மாரீசன்.

       இராவணன் ''உன் தாயைக் கொன்றவனைக் கண்டு பயந்து ஒளிகின்றாய். அரக்கர்களின் தலைவன் என் பேச்சினைக் கேள். உன் ஆளுகைக்கு உட்பட்ட வனத்தில் சீதை உள்ளாள். நீ மாய மான் வேடமிட்டு அவளுக்கு ஆசை உண்டாக்கு'' என்றான்.

       மாரீசனும் ஒப்புக்கொண்டான். பஞ்சவடியில் சீதை பூப்பறித்துக் கொண்டிருந்தாள். அழகிய பொன் மான் ஒன்று வருவதினைக் கண்டாள். அம்மானின் அழகில் மயங்கினாள். இராமனிடம் அம்மானின் அழகினை விவரித்தாள். ''மாணிக்க மயத்து ஒரு மான் உளதால் அம்மான் வேண்டும்'' என்றாள்.

இராமனும் அம்மானைக் கண்டு வியந்தான். சீதையின் விருப்பத்தினை நிறைவேற்ற எண்ணினான். ஆனால் இலக்குவன் அது மாயத் தோற்றம் என உணர்ந்தான். எனவே இராமனிடம், ''அது பொன் மான் அல்ல. மாயத் தோற்றம். அதில் மயங்க வேண்டாம். அது ஆபத்தினை விளைவிக்கும்'' என்றான்.

       இராமன் ''இலக்குவா! அது உண்மையான மான் என்றால் பிடித்து வருகின்றேன். மாயத்தோற்றத்தில் உள்ள அரக்கன் என்றால் அவனைக் கொன்று விடுகின்றேன். நீ சீதைக்குக் காவலாக இங்கேயே இரு'' என்றார்.

 இலக்குவன் ''அண்ணா! மாரீசனே மாயத்தோற்றத்தில் வந்துள்ளான் என எண்ணுகின்றேன். இதன் பின் உள்ள சூழ்ச்சி நமக்குத் தெரியாது. கேடு சூழும் என நான் எண்ணுவதால் நீங்கள் போக வேண்டாம். நான் போய் மானைப் பிடித்து வருகின்றேன்'' என்றான். 

 

       ஆனால் இராமன் இலக்குவனை சீதைக்குக் காவலாக இருக்கும் படி கூறிவிட்டுத் தானே மாயமானைத் தேடிச் சென்றான்.

       மாயமானைத் தேடி வெகுதொலைவு வந்தான். மான் அவனுக்கு போக்குக் காட்டியது. அருகில் இருப்பது போலவும், தொலைவில் இருப்பது போலவும் மாறி, மாறி தோற்ற மயக்கம் காட்டியது. இராமன் இப்பொழுது மாயமான் என்பதனை உணர்ந்தான். தன் அம்பினால் அதனைக் கொன்றான். அது ஏ! சீதா! இலக்குவா! என இராமனின் குரலில் கூக்குரலிட்டபடி உயிர் விட்டது. 

       உயிரிழந்த மாயமான் சுய உருவாகிய மாரீசன் வடிவத்தினைப் பெற்றது. மாரீசனே மாயமான் வடிவில் வந்ததாக இலக்குவன் கூறியது சரியானது என இராமர் எண்ணினார். இக்கூக்குரலினைக் கேட்டு சீதை அச்சம் கொள்வாள் என இராமர் கவலை கொண்டார். இருப்பினும் இலக்குவன் அருகில் இருப்பதால், சீதையைத் தேற்றி, வந்தது மாரீசனே என புரிய வைப்பான், என மனத்திடம் கொண்டார். ஆனாலும் தன் குரலில் மாரீசன் கத்தியதில் ஏதோ சதி உள்ளது என்று எண்ணிய இராமர் விரைந்து சென்று பர்ணசாலையை அடைய வேண்டும் என வேகமாகச் சென்றார்.

       பர்ணசாலையில் சீதை, இராமனின் அபயக்குரல் கேட்டு மனத்தில் பெரும் அச்சம் கொண்டாள். அவள் இலக்குவனிடம் ''என் கணவரின் குரல் கேட்கின்றது. மான் வேண்டும் எனக் கேட்டு அவருக்கு ஆபத்தினை ஏற்படுத்தி விட்டேன். இலக்குவா! உடனே ஓடிச் சென்று உன் அண்ணனைக் காப்பாற்று'' என்றாள்.

இலக்குவன் வந்தது மாரீசன் என அறிந்ததால் சீதையிடம் ''அண்ணி! காட்டில் அட்டகாசம் செய்த பல அரக்கர்களை கொன்று வீழ்த்தியவர் அண்ணன், இப்பொழுது மாயமான் வேடத்தில் வந்திருக்கும் அரக்கனை அவர் ஓர் அம்பில் விழ்த்தியிருப்பார். இது அரக்கனின் சூழ்ச்சி'' என்றான்.

சீதை பதற்றத்தில் இருந்ததால் இலக்குவனின் பதிலில் உள்ள உண்மையை உணர்ந்து கொள்ளவில்லை. அவள் சினத்துடன் இலக்குவனிடம் ''நீ செய்வது முறையற்றது. ஆபத்தில் உள்ள அண்ணனைக் காப்பாற்ற ஓடிச் செல்லாமல் கவலையின்றி நிற்கின்றாய். நான் இப்பொழுதே தீயில் விழப் போகின்றேன்'' என்றாள். 

 சீதையின் சினமொழி கேட்டு இலக்குவன் ''அண்ணி ! நீங்கள் எதற்காக சாக வேண்டும். உங்களின் சொல் கேட்டு நான் அஞ்சுகின்றேன் இப்பொழுதே நான் அண்ணனைத் தேடிச் செல்கின்றேன். ஆனால் அண்ணன் இட்டக் கட்டளையை மீறுகின்றேன். அவர் உங்களுக்குக் காவலாக இவ்விடம் இருக்கச் சொன்னார். ஏதோ கேடு சூழ்ந்துள்ளது என்பதனை என்னால் அறிய முடிகின்றது'' என்றான். 

 இலக்குவன் உள்ளத்தில் ஒரே குழப்பம். அரக்கர்களின் சூழ்ச்சியால் என்ன துன்பம் விளையப் போகின்றதோ, என அச்சம் கொண்டான். அண்ணன் சொற்படி இவ்விடம் இருந்தால் அண்ணி தீயில் வீழ்ந்து உயிர் துறப்பாள். இல்லாமல் போனாலும் தீங்கு நேரிடும். என்ன செய்வது எனக் கலங்கினான். பின் சீதைக்கு ஆபத்து நேர்ந்தால் ஜடாயு காப்பார் என எண்ணிய படி அவ்விடம் விட்டு இராமனைத் தேடிச் சென்றான்.

       சீதை தனியாக பர்ணசாலையில் இருந்தாள். இராவணன் சீதை இருக்குமிடம் வந்தான். அவன் பிச்சைப் பாத்திரம் ஏந்தி தவ வடிவில் வந்தான். அவன் சீதையின் அழகினைக் கண்டு பிரமித்தான்.

       இராவணன் ''இப்பர்ணசாலையில் இருப்பது யார்?'' எனக் கேட்டான். ''பவதி பிட்சாந்தேகி'' என்றான். சீதை துறவி ஒருவர் தவ வடிவில் வந்திருப்பதைக் கண்டாள். உள்ளே அழைத்து ஆசனமிட்டாள். ''ஈண்டு எழுந்து அருளும்'' என்று இனிய கூறினாள்.

இராவணன் அவ்விடம் வந்தது கண்டு மலைகளும், மரங்களும் அஞ்சின. விலங்குகளும் அஞ்சின. கொடிய பாம்பும் படமெடுப்பதை விட்டு அஞ்சி அடங்கின.

இராவணன் ''பெண்ணே! யார் பெற்ற மகள் நீ. இவ்விடம் நீ தனியாக என்ன செய்கின்றாய்'' எனக் கேட்டான். 

       சீதை ''தவ சீலரே! நான் சனகன் மகள். தசரத சக்கரவர்த்தியின் புதல்வன் இராமனின் மனைவி. என் கணவரோடும், அவர் இளையானோடும், நான் வன வாசம் வந்துள்ளேன். நீங்கள் யார்? எங்கிருந்து வருகின்றீர்கள்?'' என்றாள். 

இராவணன் ''அழகில் இந்திரன், பிரம்மனின் மரபில் தோன்றியவன். மூவுலகும் ஆள்கின்றவன், கயிலையை பெயர்த்து எடுத்தவன், கற்பகத்தரு முதலிய தேவலோக செல்வங்களை உடையவன், இலங்கை என்னும் அழகிய நகரத்தினை ஆளும் இராவணனின் ஊரில் இருந்து வருகின்றேன்'' என்றான்.

       சீதை ''தவசீலராக இருந்து கொண்டு அரக்கர் வாழும் ஊரில் ஏன் வாழ்கின்றீர்கள்?'' என்றாள்.

இராவணன் ''தேவர்களும் வணங்கும் ஆற்றலுடையவன் இராவணன்'' என்றான்.

       சீதை ''அரக்கர்களையும் அழிக்கும் ஆற்றலுடையவன் இராமன். அரக்கர்களை அழிப்பதற்காக கானகம் வந்துள்ளான்'' என்றாள்.

இராவணன் ''நீ இராவணனின் மகிமை அறியாமல் பேசுகின்றாய்'' என்றான். பின் கோபத்தோடு தன் சுய ரூபத்தினைக் காட்டினான். பத்து தலைகளுடன், இருபது கரங்களுடன் இராவணனாக நின்றான். சீதை அஞ்சி நடுங்கினாள்.

       இராவணன் ''பெண்ணே ! அஞ்சாதே. உன்னை இலங்கையின் ராணியாக்குகின்றேன். என்னோடு வா'' என்று கூறி, பர்ணசாலையை பெயர்த்து எடுத்தான்.

சீதை ''வஞ்சகத்தால் பொய்மானை அனுப்பி, இராமனை காட்டுக்குள் போகவிட்டு, என்னைக் கவர்ந்தாய். வீரனாக இருந்தால் இராமனிடம் போரிடு. இராமன் உன் கூட்டத்தினைக் கொன்றான். உன் தங்கையின் மூக்கினை அறிந்தான், இனி உன்னையும் கொல்வான்'' என்றாள்.

       இராவணன் பர்ண சாலையோடு சீதையைத் தூக்கிக் கொண்டு பறந்து சென்ற போது, ஜடாயு எதிர் வந்தார். ''எங்கு அடா போவது? எங்கே? நில்! நில்!'' என்றார். ஜடாயு பெருங்காற்றினைப் போல இராவணனை எதிர்த்தார். சடாயுவின் சிறகில் இருந்து வரும் காற்றானது பெருமரங்களையும் வேரோடு பெயர்த்தது.

       ஜடாயு ''உத்தமன் தேவியை, தேரில் வைத்து எங்கு செல்கின்றாய்?'' எனக் கூறி வானையும், திசைகளையும் மறைப்பது போல எதிர் வந்தார்.

       ஜடாயு ''உன் செயலால் உன் உறவினரும் நீயும் அழிவீர்கள். இராமன் உன் இனத்தவரை ஒருவனாக நின்று அழித்தது கண்டும் நீ மதியற்ற தீய செயலினைச் செய்கின்றாய்.அரக்கரை அழித்து பகை முடிக்க வந்த இராமனின் கோபத்தை நீ அதிகரிக்கின்றாய். சிதையின் கற்பு உன்னை அழித்து விடும். இம்மைக்கும் மறுமைக்கும் கேடு விளைவிக்கும் தீய செயலினைச் செய்கின்றாய். எனவே சீதையை விட்டு விடு'' என்றார்.

இராவணன் சினந்து ''நீ புகழும் உன் இராமனைக் காட்டு'' என்றான். 

 ஜடாயு இராவணனை எதிர்த்துப் போராடினார். அவர் இராவணனின் பத்துக் கீரிடங்களைக் கீழேத்தள்ளினார். அவனது குண்டலங்களை அறுத்தெறிந்தார். இராவணன் வீசிய வேலை இரண்டாக உடைத்தார். தன் நெடிய மூக்கால் இராவணனின் வில்லைப் பறித்து உடைத்தெறிந்தார். இராவணனது தேரை அழித்து, அவனது அம்பறாத் துணியைக் கீழே வீசினார்.

       கடுங் கோபம் கொண்ட இராவணன், தான் சிவனிடம் வரமாகப் பெற்ற ''சந்திரகாசம்'' என்னும் வாளால் ஜடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்தினான். ஜடாயு குற்றுயிராய் பூமியில் வீழ்ந்தார்.

       இராவணன் சீதையோடு இலங்கை நோக்கிப் பறந்தான். சீதை மீண்டும் பதைத்தாள் ''தன்னைப் பாதுகாக்க வந்த நல்ல உள்ளம் தோற்க, தீயவன் இராவணன் வெல்வதா? தருமம் வெல்லும் என்பது பொய்யா?'' என ஏங்கினாள். தன்னால் இராமனது வில்லுக்கும், தான் பிறந்த குடிக்கும் பெரும் பழி வந்தது எனக் கவலையுற்றாள். பறந்து செல்லும் போது தனது ஆபரணங்களை கழற்றி வீசினாள்.

       இலங்கையில் அசோக வனத்தில் சீதையை இராவணன் சிறை வைத்தான். அரக்கியரை காவலுக்கு வைத்தான்.

 

''வஞ்சியை அரக்கனும் வல்லை கொண்டு போய்ச்

செஞ்சேவே திரு உரு தீண்ட அஞ்சுவான்

நஞ்சு இயல் அரக்கியர் நடுவண் ஆயிடை

சிஞ்சுப வனத்திடைச் சிறை வைத்தான் அரோ''

 

       விரைவாகச் சென்ற இலக்குவன் இராமனைக் கண்டான். கரு நிறக் கன்னலைக் கண்ட இலக்குவன், நடந்தவற்றினைக் கூறினான். சீதையின் கட்டளைப்படி தான் இவ்விடம் வந்ததாகவும் கூறினான். பின் இருவரும் சீதை தனியாக இருப்பதால், அவளுக்கு ஆபத்து எனக் கருதி பர்ணசாலை நோக்கி விரைந்தனர்.

       இராமனும் இலக்குவனும் பஞ்சவடியை அடைந்தனர். அங்கு பர்ணசாலையும் இல்லை, சீதையும் இல்லை. இராமன் உயிரற்ற உடலானான். சீதையைக் காணாமல் அயர்ச்சியுற்றான். இலக்குவன் இராமனைத் தேற்றினான். இலக்குவன் பர்ணசாலை இருந்த இடத்தில் ஏதேனும் சுவடு தென்படுகின்றதா என ஆராய்ந்தான். தேர்த் தடம் சென்ற வழியை இருவரும் பின் தொடர்ந்தனர்.

       தேர்த்தடம் சிறிது தூரம் சென்றதும் மறைந்தது. தேர் த்தடம் வானத்தை நோக்கிப் போவது போல மேலெழுந்து சென்றது கண்டு இராமன் என்ன செய்வது எனத் திகைத்தான்.

       ''மனம் மிகப் புழுங்கி, எண்ணி நாம் இனிச் செய்வது என்? இளவலே! என்றான்''

       இராமன் மனம் உடைந்ததைக் கண்ட இலக்குவன், ''அண்ணா! மனம் தளர வேண்டாம். இத்தேர் தென் திசை நோக்கி சென்றுள்ளது எனத் தெரிகின்றது. எனவே தொடர்ந்து சென்று தேடுவோம். நாம் கலங்கித் தடுமாறி நிற்பதால் என்ன பயன்?'' என இராமனைத் தேற்றினான்.

       பின் இருவரும் தெற்கு நோக்கி நடந்தனர். வழியில் வீணைக் கொடியைக் கண்டனர். மேலும் குண்டலங்கள், பத்துக் கீரிடங்கள், அம்பறாத்துணி இவற்றினையும் கண்டனர். ஜடாயு கடும் போர் புரிந்துள்ளார் என எண்ணினர். இராமன் இலக்குவனிடம், ''தம்பி! ஜடாயு பல பேருடன் போர் புரிந்துள்ளார்'' என்றார்.

ஆனால் இலக்குவன், ''பல பேர் அல்ல. ஒருவனே, பத்து தலை என்றால் அது இராவணனே'' என்றான். 

மேலும் நடந்து சென்ற போது ஜடாயுவைக் கண்டனர். இரத்த வெள்ளத்தில இருந்த ஜடாயுவைக் கண்டு இராமன் கண் கலங்கினான். ஜடாயு மயக்கத்தில் இருந்ததால் நீர் தெளித்தனர். மயக்கத்திலிருந்து மீண்ட ஜடாயு இராம இலக்குவரிடம் சீதையை இராவணன் புஷ்பக விமானத்தில் தூக்கிச் சென்றதைக் கூறினார். 

       இராமனின் கவலை கொண்ட முகத்தைக் கண்ட ஜடாயு ''இராமா! கலங்காதே, திங்களும் தேயும், பின் வளரும். இன்ப துன்பங்கள் அவை போன்றவை. இராவணனின் அழிவு காலம் வந்தது. எனவே சீதையைக் கவர்ந்து சென்றான். தேவர்கள் துயரம் தீரும் நாளும் உன்னால் உண்டாகும். எனவே சீதையை மீட்டு அரக்கர்களை வதம் செய்'' என்று கூறி உயிர் நீத்தார்.

 ஜடாயுவிற்கு இராமர் இறுதி மரியாதை செய்தார். பின் இராமலக்குவர் சிறிது தூரம் சென்று, இருள் சூழ்ந்ததும் ஒரு மலையில் தங்கினர். சீதையை எண்ணி இராமர் வேதனையில் ஆழ்ந்தார். கடல் அலை போல் மீண்டும் மீண்டும், இராமன் 'வருவான் வருவான்' என சீதை வழி மேல் விழி வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பாளோ, என எண்ணி இராமர் கவலையுற்றார். உலகெலாம் காக்க முற்பட்ட தான், தன் குல மங்கையைக் காக்க இயலவில்லையே என கலங்கினான்.

 

''நின்று பல் உயிர் காத்தற்கு நேர்ந்த யான்

என் துணைக் குல மங்கை ஓர் ஏந்திழை,

தன் துயர்க்குத் தகவு இலென் ஆயினேன்;

நன்று நன்று, என் வலி, என நாணுமால்''

 

       இருள் விலகி கதிரவன் தோன்றினான். இராம இலக்குவர் இருவரும் நடந்து சென்று பதினெட்டு யோசனை தூரம் கடந்தனர். அங்கு ஓர் சோலையில் தங்கினர். அயோமுகி என்னும் அரக்கி இலக்குவனைக் கண்டு காதல் கொண்டாள். அவள் தன்னை ஏற்றுக் கொள்ளும் படி இலக்குவனிடம் கேட்டாள். இலக்குவன் ''இவ்வாறு நீ பேசினால் என் அம்பு உன்னைப் பதம் பார்க்கும்'' என்றான்.

அரக்கி அயோமுகி இலக்குவனைத் தூக்கிக் கொண்டு சென்றாள். இராமன் தன் பாணத்தால் இரவைப் பகலாக்கினார். இலக்குவன் அவ்வெளிச்சத்தில் அயோமுகியை வதம் செய்தான். பின் இருவரும் பயணத்தைத் தொடர்ந்தனர். அங்கு கவந்தன் எனும் அரக்கன் அவர்களை வழி மறித்தான். அவன் இராமரின் தீண்டுதலால், சாபம் நீங்கி, கந்தர்வ உருப் பெற்றான். 

       கந்தர்வன் இராமனிடம் ''சீதையை அடைய தெற்கு நோக்கி சென்று, சவரி என்னும் தாயினைச் சந்திக்கச் சொன்னான். பின் சுக்ரீவனின் நட்பைப் பெற்று சீதையைக் கண்டு மீட்டு வாருங்கள்'' என்றான். 

 இராமனின் வருகைக்காக சவரி காத்திருந்தாள். அவள் இராமனைக் கண்டு அன்பினால் புகழ்ந்து வாழ்த்தினாள். ஆண்டாண்டு காலம் செய்த தவத்தின் பயனை இப்பொழுது எய்தினேன் என மகிழ்ந்தாள்.

 

''மாண்டது என் மாயப்பாசம் ! வந்தது வரம்பு இல் காலம்

பூண்ட மா தவத்தின் செல்வம் ! போயது பிறவி'' என்பாள்.

 

       தொடர்ந்து வரும் பிறவிப் பிணியில் இருந்து விடுபட்டு சவரி, முக்தி அடைந்தாள். சவரியின் பக்தியை இராமர் போற்றினார். பின் இருவரும் பம்பை நதிக்கரையை அடைந்தனர்.

 

 


 


Comments

Popular posts from this blog

நளதமயந்தி கதை (NALA THAMAYANDHI STORY)

தஞ்சை பெரிய கோவில் (கட்டிடக் கலையின் உன்னதம்) BRIHADEESWARAR TEMPLE

வாலி வதைப் படலம்