ஸ்டீபன் ஹாக்கிங் (STEPHEN HAWKING)
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் தன்னம்பிக்கையின் அடையாளமாகப் போற்றப்படுகிறார். இவர் 1942 ம் வருடம் ஜனவரி 8ம் தேதியன்று, இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு நகரில், பிராங்கு, இசபெல் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இவர் 1959ம் ஆண்டு உலகப் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் இடம் கிடைத்தவுடன், தன் விருப்பப்பாடமாகிய இயற்கை அறிவியலை தேர்வு செய்து படிக்கத் தொடங்கினார். பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
1963ம் ஆண்டு தன் 21வது வயதில் ஸ்டீபன் ஹாக்கிங் "தசை சிதைவு" நோய்க்கு உள்ளானார். இக்குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, படிப்படியாகக் கை,கால் முதலிய உடல் இயக்கங்களும் பாதிக்கப்பட்டு, இறுதியில் பேச்சையும் இழந்த நிலையில், கணினி வாயிலாக பேச்சுத் தொகுப்பி மூலம், தன் கருத்துக்களை இவ்வுலகுக்கு எடுத்துரைத்தார்.
தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, ஹாக்கிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன், இவர் இன்னும் ஒரு சில தினங்களே உயிர் வாழ்வார் என மருத்துவர்கள் அறிக்கை தந்தனர். பக்கவாதம் (ameotropic sclerosis) என்னும் நரம்பு நோய் பாதிப்புடன் மருத்துவ உலகமே வியக்கும் வண்ணம் 53 ஆண்டுகள் வாழ்ந்து காட்டினார்.
1985ல் மூச்சுக் குழாய் தடங்கலால் பேசும் திறனை இழந்தார். இறுதியாக எஞ்சியது கன்னத்தின் தசையசைவும், கண் சிமிட்டலும் மட்டுமே. உடலில் மீதியுள்ள அத்தனை உறுப்புக்களும் செயலிழந்து விட்டன. தசையசைவு மூலம் தன் கருத்தை கணினியில் தட்டச்சு செய்து வெளிப்படுத்தினார். அவரின் ஆய்வுகளுக்கு துணையாக செயற்கை நுண்ணறிவு கணினி (Artificial Intelligence) செயல்பட்டது.
இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத் துறையிலும், பொது வாழ்விலும் மிகவும் ஈடுபாடு உள்ளவராகவே ஸ்டீபன் ஹாக்கிங் இருந்தார். அமெரிக்காவில் உள்ள ஓர் அறக்கட்டளை இயற்பியல் கணிதத்தை மாணவர்களுக்கு எளிய முறையில், புதிய கோணத்தில் வடிவமைப்பவர்களுக்கு 6 மில்லியன் டாலர் பரிசு என 1986ல் அறிவித்தது. இதனை ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு சவாலாக ஏற்று "காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்" என்ற பாடத் திட்டத்தை உருவாக்கிக் கொடுத்து, பரிசு பெற்றார். இச்சிறந்த படைப்பு தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது.
ஹாக்கிங் அமெரிக்காவின் உயர்ந்த குடிமகனுக்கான விருதைப் பெற்றார். 1979 முதல் 2009 வரை கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் கணிதவியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இவர் தான் உருவாக்கிய கோட்பாடுகளைப் பற்றியும், அண்டம் தொடர்பான அறிவியல் கட்டுரைகள் எழுதியும் புகழ் பெற்றார். இவரது "காலத்தின் ஒரு வரலாற்றுச் சுருக்கம்" என்னும் புகழ் பெற்ற கட்டுரைத் தொடர் 237 வாரங்கள் சன்டே டைம்சு (SundayTimes) என்னும் இதழில் வெளிவந்து சாதனை படைத்தது. ஹாக்கிங்கின் சுயசரிதையான "மை பிரீஃப் ஹிஸ்டரி" என்கின்ற நூலும் உலகப் புகழ் பெற்றது.
ஸ்டீபன் ஹாக்கிங் அண்டவியல் ஆராய்ச்சிகள் மூலம் புகழ் பெற்றவர். இவர் கருந்துளை (Blacak Hole), வேற்று கிரகவாசிகள் (Alien), பெருவெடிப்பு (BigBang Theory), காலப் பயணக் கருவி (Time Machine) என அறிவியலின் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். ஹாலிவுட்டின் பல படங்கள் இவரின் கோட்பாடுகளைத் தழுவியே எடுக்கப்படுகின்றன.
ஸ்டீபன் ஹாக்கிங் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் நாள் தனது 76வது வயதில் காலமானார்.
விண்வெளி சுற்றுலா செல்ல வேண்டும் என்று ஸ்டீபன் ஹாக்கிங் விருப்பம் கொண்டிருந்தார். தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் விண்வெளி சுற்றுலா சென்று வர வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். ஆனால் அது நிறைவேறா விட்டாலும், ஹாக்கிங் மரணத்திற்கு நாசா சார்பில் விண்வெளியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
உடல் குறையை எண்ணி புலம்பாமல், வாழ்க்கையில் எடுத்த காரியங்களில் வெற்றி காண வேண்டும் என சொன்னதுடன், அதைச் செய்தும் காட்டியவர் ஸ்டீபன் ஹாக்கிங்.
வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், தன்னம்பிக்கையுடன் போராடுவதன் மூலம், அதில் வெற்றி காண முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியவர் ஸ்டீபன் ஹாக்கிங்.


Comments
Post a Comment