இராமாயணம் - பால காண்டம் (RAMAYANAM- BALA KANDAM)
பாலகாண்டம்
கோசல நாடு நீர் வளமும் நில வளமும் மிக்க நாடு. அனைத்து வளங்களும் நிறைந்த கோசல நாட்டில் மக்கள் நல்வாழ்வு வாழ்ந்து வந்தனர். நாட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருந்ததால் மக்கள் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. எல்லோருடைய சிந்தையிலும் செம்மைப் பண்பு இருந்ததால் சினம் இல்லை. நாட்டில் மக்கள் நல்லறம் புரிந்து இனிதே வாழ்ந்து வந்ததால் எங்கும் ஏற்றம் அல்லது இறக்கம் இல்லை.
''கூற்றம் இல்லையோர் குற்றம் இலாமையால்
சீற்றம் இல்லைதம் சிந்தையின் செம்மையால்
ஆற்றல் நல்லறம் அல்லது இலாமையால்
ஏற்றம் அல்லது இழிதகவு இல்லையே''.
கோசல நாட்டில் வறுமை இல்லாததால் வண்மை இல்லை. பகைவர் இல்லாததால் வீரம் இல்லை. பொய் இல்லாததால் உண்மை இல்லை. கேள்விச்செல்வம் மிகுந்து இருந்ததால் அஞ்ஞானம் இல்லை.
''வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய் உரை இல்லையால்
ஒண்மை இல்லை பல் கேள்வி ஓங்கால்''.
நாடும் மக்களும் வளமுடன் இருக்க மன்னனின் பங்கு இன்றியமையாததது. அங்ஙனம் நாட்டின் வளத்தையும், மக்களின் நல்வாழ்வினையும் அறிவதன் மூலம் அரசனின் நல்லாட்சியை அறியலாம்.
கோசல நாட்டை தயரதன் ஆண்டு வந்தான். அவன் தன் மக்களுக்கு வேண்டுவன தந்து, எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் கருதி பாதுகாத்தான். தயரத மன்னனுக்கு மூன்று மனைவிகள்.
கோசலையை குணத்திற்காகவும், கைகேயியை அழகிற்காகவும் மூன்றாவதாக சுமத்திரையையும் மணந்து கொண்டார். மூவருக்கும் குழந்தைப்பேறு இல்லாதது தயரத மன்னருக்கு மாபெரும் குறையாக இருந்தது.
தனக்குப் பின் நாட்டை ஆள ஒரு பிள்ளை இல்லையே என்ற குறையால் தயரதன் வாடினான். எனவே தன் குறையை குலகுருவாகிய வசிட்டரிடம் கூறினார். அவர் தன் தவ வலிமையால் வானுலகில் நிகழும் நிகழ்வுகளைக் கண்டார்,
இலங்கை மன்னன் இராவணன் முற்காலத்தில் கடுந்தவம் செய்து பிரமனிடமிருந்து சாகாவரம் பெற்றான். இராவணன் சிறந்த சிவபக்தன். சிவபெருமானிடமிருந்து சந்திரஹாசம் என்ற வாளினைப் பெற்றான். இராவணன் தன் பெரும் பலத்தால் தேவர்களைத் துன்புறுத்தினான்.
இராவணனது கொடுமை தாங்காமல் இந்திரன் மற்றும் தேவர்களும் பிரமனிடம் சென்று முறையிட்டனர். அதற்கு பிரமன் கூறியதாவது, ''என்னிடம் இராவணன் வரம் கேட்கையில் தேவர்கள், யட்சர்கள், கின்னரர்கள், கந்தர்வர்கள், இயக்கர்கள் முதலிய யாராலும் தனக்கு மரணம் நேரக்கூடாது என்று வரம் கேட்டுப் பெற்றான். ஆனால் மனிதர்களை விட்டுவிட்டான். எனவே மனிதனால் இராவணன் கொல்லப்படலாம்'' என்று பிரமன் கூறினார்.
பிரமனின் கூற்றின் படி தேவர்கள் அனைவரும் திருமாலிடம் சென்று இராவணனை வதம் செய்ய வேண்டும் என்று பணிந்தனர். கோசலையின் புதல்வன் இராமனாக அவதாரம் ஆவதாகச் சொன்னார். ஆதிஷேசன் இலக்குமனனாகப் பிறந்து இந்திரஜித் போன்றோரை அழிப்பான் என்று சொன்னார். ''மேலும் சுதர்சனம் [சக்கரம்] பரதனாகவும், சங்கம் என்னும் சங்கு சத்ருக்கனாகவும், தேவர்கள் வானரங்களாகவும், சூரியன் சுக்ரீவனாகவும், பிரமன் சாம்பவானாகவும், இந்திரன் வாலியாகவும், வாயு அனுமனாகவும், பிறந்து இராவண வதத்திற்கு தனக்கு உதவுவார்கள்'' என்று திருமால் கூறினார்.
இவற்றினை தன் தவ வலிமையால் கண்ட வசிட்டர் இராமவதாரம் ஆகும் வேளை வந்து விட்டதை உணர்ந்தார். எனவே ரிசிய சிருங்கரை அழைத்து புத்திரகாமேஷ்டியாகம் செய்யும் படி தயரதனிடம் சொன்னார். அவ்வண்ணமே தயரதன் ரிசிய சிருங்கரை [கலைக்கோட்டு முனிவர்] அழைத்து யாகம் செய்யும் படி பணிந்து வேண்டினார். ரிசிய சிருங்கர் ஓராண்டு காலம் யாகம் செய்தார். யாகம் நிறைவடையும் தருணத்தில் யாக குண்டத்திலிருந்து கிடைத்த பிரசாதத்தினை ரிசிய சிருங்கர் தயரதனிடம் கொடுத்து அரசமாதேவிகளுக்கு பகிர்ந்து அளிக்க சொன்னார்.
மன்னனும் யாக குண்டத்திலிருந்து கிடைத்த பிரசாதத்தினை மனைவியர் மூவருக்கும் பகிர்ந்து வழங்கினான், பிரசாதத்தினை உண்ட அரசியர் மூவரும் இறையருளால் கருவுற்றனர்.
சித்திரை மாதம், நவமி திதி, புனர்பூச நட்சத்திரத்தில் திருமாலின் அவதாரமாகிய இராமர் கோசலைக்கு மகனாகப் பிறந்தார்.
மறுநாள் பூச நட்சத்திரத்தில் கைகேயியின் மகனாக பரதன் பிறந்தான். அடுத்த நாள் ஆயில்ய நட்சத்திரம், கடக ராசியில் சுமத்திரைக்கு இலக்குமனன் பிறந்தான், இரவில் மகநட்சத்திரம், சிம்ம ராசியில் சத்ருக்கனன் பிறந்தான்.
தயரதன் குழந்தை பிறந்த செய்தி கேட்டதும் ஆனந்தப் பரவசம் அடைந்தான். மகிழ்ச்சியில் தன் குடி மக்களுக்கு பொன்னலான பொருட்களும், நவமணிகளும், நெல் மணிகளும், தானமாக வழங்கினான். நாடெங்கும் விழாக்கோலம் பூண்டு மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
குழந்தைகள் சிறப்புடனும், ஒற்றுமையுடனும் வளர்ந்தனர். வசிட்டர் நால்வருக்கும் அனைத்துக்கலைகளையும் சிறப்புடன் கற்றுக்கொடுத்து நன்கு வளர்த்தார். நான்கு பிள்ளைகளும் வல்லவர்களாக வளர்ந்தனர். அவர்கள் குதிரை ஏற்றம், யானை ஏற்றம், ஆயுதப்பயிற்சி, தேர் ஓட்டுதல் போன்றவற்றிலும், கல்வியிலும் சிறந்து விளங்கினர்.
இராமனும் இலக்குவனும். மலரும் மணமும் போன்று இணைபிரியாமல் இருந்தனர். பரதனும் சத்ருக்கனும் அன்புடன் இணைபிரியாமல் இருந்தனர்.
தயரதன் தன் நாட்டில் நல்லாட்சி புரிந்து வந்த நிலையில் அவருடைய அரசவைக்கு விசுவாமித்திர முனிவர் வந்தார். உடனே தயரதன் தன் அரியனையில் இருந்து எழுந்து முனிவரை வணங்கி வரவேற்றான். அவருக்கு பொன் இருக்கை வழங்கி அமரச் செய்து பாத பூஜை செய்து வணங்கினான். மகாமுனிவரே! நீங்கள் இங்கே வந்தது யான் செய்த பெருந்தவமாகும் என்று போற்றினான்,
உடனே விசுவாமித்திரர் “தயரதா என்னைப் போன்ற முனிவருக்கும், தேவர்களுக்கும் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் அதனை நீக்கிக் கொள்ள கயிலையில் வீற்றிருக்கும் சிவபெருமானையும், பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமாலையும். தாமரை ஆசனம் உடைய பிரமனையும், தேடிச் செல்வோம். தயரதா நான் கயிலைமலைக்கோ, பாற்கடலுக்கோ, பிரம்ம லோகத்துக்கோ செல்வதைக் காட்டிலும் இங்கே எளிதாக வந்தடைய முடியும் என்று கருதியே நான் உன்னை நாடி வந்துள்ளேன்” என்று கூறினார். சம்பராசுரன் என்ற அரக்கன் தேவர்களுக்கும், இந்திரனுக்கும் தீராத தொல்லை அளித்து வந்தான். தயரதன் சம்பாசுரனை அழித்து இந்திரனுக்கு வானுலகப் பதவியை மீட்டுத் தந்தான். இதனை நினைவு கூறினார் விசுவாமித்திரர். முனிவரின் கூற்றினைக் கேட்டு தயரதன் மகிழ்ந்து, ''மாமுனிவரே யான் அரசு எய்திய பயனை இன்றே அடைந்தேன். யான் தங்களுக்கு யாது செய்ய வேண்டும்? ஆணையிடுங்கள் செய்து தருகிறேன்'' என்றான்.
அதற்கு விசுவாமித்திரர், “தயரதா! அடர்ந்த வனத்துள் நான் தவ வேள்வி நடத்துகின்றேன். யாகத்தினை மாரீசன், சுபாகு என்னும் இருவர் (காமம், கோபம் தவத்தை கலைப்பது போல்) கலைக்கின்றனர். அவர்களை தடுத்து நிறுத்த இராமனை என்னோடு அனுப்பி வை” என்றார்.
தயரதன் அச்சம் கொண்டான். மனம் அலறியது, தயரதன் இராமனை தன் உயிருக்கும் மேலாகக் கருதி அன்பு பூண்டிருந்தான். எனவே தயரதன் விசுவாமித்திரரிடம், இராமன் வயதில் சிறியவன், நானே அந்த அரக்கர்களை அழிக்கின்றேன், என்று கூறினான் விசுவாமித்திரர் கோபம் கொண்டார்.
விசுவாமித்திரரின் சினம் கண்டு தயரதன் கலங்கினான். பின் வசிட்டரும் இராமனின் பெருமையை உலகறியும் நேரம் வந்துவிட்டது. எனவே விசுவமித்திரரோடு இராமனையும் இலக்குவனனையும் அனுப்பு என்றார். தயரதனும் இராம, இலக்குவரை விசுவாமித்திரரோடு அனுப்ப சம்மதித்தான்.
விசுவாமித்திரர் வரலாறு;
விசுவாமித்திரர் சூரிய குலத்தின் மன்னனாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்தார். அவர் ஒரு சமயம் காட்டில் வேட்டைக்குச் சென்ற போது வசிட்டரின் ஆசிரமத்திற்குச் சென்றார். வசிட்டரும் விசுவமித்திரரையும், அவரின் படை வீரர்களையும் வரவேற்றார். வசிட்டர் அவர்களின் தாகத்திற்கு தண்ணீர் வழங்கியதுடன் உணவருந்திவிட்டுச் செல்லுமாறு வலியுறுத்தினார். விசுவாமித்திரர் வசிட்டரிடம் “என் படை பரிவாரங்கள் பெரிது, அனைவருக்கும் உங்களால் உணவளிக்க இயலாது” என்று கூறினார்.
வசிட்டர் தன்னிடம் உள்ள சபலை என்னும் தெய்வீக பசுவின் துணைக் கொண்டு அனைவருக்கும் உணவளித்தார். சபலை தன் தெய்வீக சக்தியின் மூலம் ஏராளமான பலகாரங்கள், உணவு வகைகள் இலையில் தோன்றும் படிச் செய்தது. அனைவரும் மகிழ்வுடன் உணவு உண்டனர். விசுவாமித்திரர் இத்தெய்வீகப் பசு தன்னிடம் இருந்தால் அனைவருக்கும் உதவியாக இருக்கும் என்று கருதி, வசிட்டரிடம் சபலையைக் கேட்டார். ஆனால் வசிட்டர் இப்பசுவே ஆசிரமத்தில் அனைவருக்கும் உண்வளிப்பதால் தர முடியாது என்றார்.
சினம் கொண்ட விசுவாமித்திரர், சபலையை இழுத்து வருமாறு படை வீரர்களை ஏவீனார். ஆனால் சபலை தன் தெய்வீகச் சக்தியால் ஏராளமான படை வீரர்களை உருவாக்கியது. விசுவாமித்திரரின் படை தோற்றது. தோல்வி அடைந்த விசுவாமித்திரர் தன் மகனுக்குப் பட்டம் சூட்டி விட்டு கானகம் சென்று தவம் செய்யலானார்.
விசுவாமித்திரர் சிவபெருமானை நோக்கி தவம் செய்யலானார். அவரது தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் அவர் முன் தோன்றி தனுர் வேதம் தெரியும்படி வரமளித்தார். வரம் பெற்ற விசுவாமித்திரர் பெரும் ஆயுதங்களோடு சென்று வசிட்டரை எதிர்த்தார். ஆனால் வசிட்டரின் தவவலிமை முன்பு விசுவாமித்திரரால் ஈடுகொடுக்க முடியவில்லை. தோல்வியடைந்த விசுவாமித்திரர், மீண்டும் கானகம் சென்று தவம் செய்து ''பிரம்ம ரிசி'' என்னும் பட்டம் பெற்றார். திரிசங்கு என்னும் மன்னனுக்காக புதிய சொர்க்கத்தையே உருவாக்கினார். பின் வசிட்டரால் பிரம்ம ரிசி என்ற பட்டம் பெற்ற பின் தவத்தினை நிறுத்தினார்.
இத்துணை ஆற்றலுடைய விசுவாமித்திரரே தன் யாகத்தினைக் காக்க இராம, இலக்குவரை வேண்டினார். விசுவாமித்திரர், இராம், இலக்குவர் மூவரும் அயோத்தி மாநகரத்தை நீங்கிச் சென்று சரயு நதியை அடைந்தனர்.
தாடகை வரலாற்றினைக் கூறலானார்.
''சுகேது என்பவனுக்கு நீண்ட காலமாகக் குழந்தை இல்லை. நீண்ட தவத்திற்குப் பிறகு ஆயிரம் யானை பலம் கொண்ட அழகியப் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு தாடகை எனப் பெயரிட்டான். தாடகையை கந்தன் என்பவனுக்கு திருமணம் செய்து கொடுத்தான். அவர்களுக்கு மாரீசன், சுபாகு என இரு மகன்கள். ஒரு நாள் கந்தன் அகத்தியர் ஆசிரமத்தில் அவருக்கு தொல்லை கொடுத்தால் அகத்தியர் அவனை சபித்துக் கொன்றார். எனவே தாடகை, மாரீசன், சுபாகு மூவரும் அகத்தியரை அழிக்கச் சென்றனர். அகத்தியர் மூவரையும் அரக்கர்களாக மாறும் படி சபித்தார். இவர்களே இப்பொழுது யாகம் செய்யும் முனிவர்களுக்கு துன்பம் அளித்து வருகின்றனர் என்றார்” விசுவாமித்திரர்
அப்பொழுது நிலம் அதிர கருங்குன்று போலத் தாடகை எதிர் வந்தாள். இவள் தான் தாடகை என்றார் விசுவாமித்திரர். இராமலக்குவர் மீது பெரிய பாறைகளை வீசினாள். இராமர் தன் வில்லை எடுத்து நாணேற்றி எழுப்பிய ஒலியில் காடே அதிர்ந்தது. ஆயிரம் யானை பலம் கொண்ட தாடகை, இராமரின் அம்பு பட்டு உயிர் பிரிந்தாள். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். முனிவர்கள் இராமனை வாழ்த்தினர்.
விசுவாமித்திரர் ஆசிரமத்தில் வேள்வியைத் தொடங்கினார். ஆறு நாள் வேள்வியை இராமர், இலக்குவர் இருவரும் கண்ணை இமை காப்பது போல் காத்தனர். ஆறாம் நாள் வேள்வியில் மாரீசன், சுபாகு, மற்றும் பல அரக்கர்கள் புகுந்து யாக வேள்வியில் அட்டகாசம் செய்தனர். மாமிசத்துண்டுகளை வீசினர். இராமர் அக்கினி அஸ்திரத்தை சுபாகு மீது வீசினார். சுபாகு உயிர் மாண்டான். பின்னர் மாரீசன் மீது மானவஸ்திரத்தை செலுத்தினார். அஸ்திரம் பட்ட மாரீசன் கடலில் விழுந்தான். உயிர் பிழைத்த மாரீசன் சேதுக் கடலில் ஒளிந்து கொண்டான். இராமர் வீசிய வாயு அஸ்திரம் மற்ற அரக்கர்களைக் கொன்றது.
இராமர் அரக்கர்களை அழித்து யாகம் இனிதே நடைபெற உதவினார். விசுவாமித்திரர் இராமனை வாழ்த்தினார்.
விசுவாமித்திரர், இராமரிடம் "மிதிலை மன்னர் சனகர் தனுர்யாகம் செய்கின்றார். அங்குள்ள மாபெரும் வில்லை யாராலும் வளைக்க முடியவில்லை. நாம் அதைக் காண மிதிலைக்குச் செல்வோம்" என்றார்.
போகும் வழி
மிதிலையில் சீதை
மிதிலை மன்னர் ஜனகர் நீண்ட நாள் குழந்தைப்பேறு இல்லாமல் வாடினார். எனவே குழந்தைப்பேறு வேண்டி யாகம் செய்ய நிலத்தைப் பொன்னேர் கொண்டு உழுதார். கொழுமுனை ஓரிடத்தில் தடைப்பட்டது, தோண்டினார்கள். ஒரு பெட்டி கிடைத்தது. அதிலிருந்த அழகிய பெண் குழந்தையைக் கண்ட ஜனகர் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினார்.
ஏர்முனையை சீதை என்பார்கள். எனவே அக்குழந்தைக்கு சீதை என ஜனகர் பெயர் சூட்டினார். ஜனகரின் மகளானதால் ஜானகி என்றும், விதேக நாட்டு இளவரசியானாதால் வைதேகி எனவும், மிதிலை நகரத்து இளவரசியானதால் மைதிலி எனவும் அன்புடன் அழைக்கப்பட்டாள் சீதை.
ஜனகரிடம் சிவதனுசு ஒன்று இருந்தது. அதனை பரம்பரை பரம்பரையாக மிதிலையில் பாதுகாத்து வருகின்றனர். அந்த சிவதனுசை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு மாற்ற வேண்டுமானால் எட்டுச்சக்கரங்கள் கொண்ட வண்டியில் பத்தாயிரம் பலசாலிகள் இழுத்து வரவேண்டியிருக்கும்.
ஒரு நாள் சீதை தன் தோழியருடன் பந்து விளையாடிக் கொண்டிருந்தாள். ஜனகர் அதனை பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது பந்து சிவதனுசு இருந்த இடத்தில் விழுந்தது. சீதை எவ்விதம் பந்தினை எடுப்பாள் என ஜனகர் பார்த்தப் பொழுது, சிவதனுசு இருந்த பெட்டியை இடக்கையால் நகர்த்தி பந்தை எடுத்துக்கொண்டு மீண்டும் பெட்டியை சரியாக வைத்து விட்டுச் சென்றாள்.
ஜனகர் சீதையின் ஆற்றல் கண்டு பிரமித்தார். எனவே ஜனகர் ஒரு தீர்மானம் கொண்டார். சிவதனுசை கையில் எடுத்து நாணேற்றும் ஆற்றலுடைய ஆண் மகனுக்கே சீதையை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.
இராமர் சீதை திருமணம்;
மிதிலை நகருக்குள் இராமர், இலக்குவர், விசுவாமித்திரர் மூவரும் பிரவேசித்தனர். தன் தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்த சீதை இராமரை நோக்கினாள்.
"எண்ணரும் நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணோடு கண்ணினை கதுவி ஒன்றைஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்"
இராமரைக் கண்டவுடன் சீதை உள்ளத்தில் அன்பு பூண்டாள். அரசவையில் மூவரும் நுழைந்தனர். இராமரின் அழகு அனைவரையும் கவர்ந்தது.
ஜனகர் சீதைக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்திருந்தார். சிவதனுசை கையில் எடுத்து நாணேற்றுபவருக்கே சீதையை திருமணம் செய்து தரப் போவதாக ஜனகர் அரசவையில் கூறினார்.
கன்னிமாடத்தில் நின்றிருந்த சீதையை இராமர் நோக்கினார். இராமரும் சீதையும் கண்களால் தங்களது அன்பினைப் பரிமாறிக் கொண்டனர். இருவரும் உள்ளத்தால் இணைந்தனர்.
விசுவாமித்திரர் இராம இலக்குவரை ஜனக மன்னரிடம் அறிமுகம் செய்து வைத்தார். ‘‘அயோத்தி மன்னர் தசரதச் சக்கரவர்த்தியின் குமாரர்கள். இராமர் வில்வித்தையில் அபார ஆற்றலுடையவன்’’ என்று கூறினார். மேலும் “தாடகை, சுபாகு, மாரீசன் மூவரையும் அழித்து தன் யாகத்தினைக் காத்த வெற்றி வீரர்கள்” என்று இராம, இலக்குவரை விசுவாமித்திரர் ஜனகரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
ஜனகரும் மகிழ்வுடன் நாளை நடைபெறும் சுயம்பர விழாவில் இராமரை கலந்து கொள்ள வேண்டினார். பின் விருந்தினர் விடுதியில் இராம இலக்குவர்கள் இராஜ மரியாதையுடன் தங்க வைக்கப்பட்டனர். மறுநாள் இராமர் அரசவைக்குள் பிரவேசித்தார், விசுவாமித்திரர் ஜனகரிடம் சிவதனுசு இருக்கும் பெட்டியை எடுத்து வரும் படி கூறினார் எட்டுச்சக்கரங்கள் கொண்ட தேரில் சிவதனுசு பல்லாயிரம் வீரர்களால் எடுத்து வரப்பட்டது.
சீதை தன் உள்ளத்தில் இராமர் நாணேற்றி வெற்றி பெற வேண்டும் என்று திருவுளம் கொண்டு நின்றாள். ஜனகரும் தன் உள்ளத்தில் இராமர் சீதையை மணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார். சீதையின் தோழிகளோ பதைப்பதைப்புடன் நின்று கொண்டிருந்தனர். தன் தோழி சீதையின் விருப்பம் நிறைவேற வேண்டும் என்ற உவகையுடன் காத்திருந்தனர்.
இராமர் அப்பெரிய வில்லை ஒரு பூமாலையைக் கையில் எடுப்பது போல மிக எளிதாக எடுத்தார். கண் இமைக்கும் நேரத்தில் சிவதனுசை தூக்கி நிறுத்தினார். தன் கால் கட்டை விரலால் அழுத்திக் கொண்டு, நாணேற்றி வில்லை காது வரை வளைக்கவும், வில் இரண்டாய் முறிந்தது. வில் முறிந்த சப்தம் மேகங்களிலிருந்து இடி இறங்கியது போல் கேட்டது. பூமி அதிர்ந்தது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
"பூமழை சொரிந்தார் விண்ணோர் பொன்மழை பொழிந்த மேகம்
பாமமா கடல்கள் எல்லாம் பன்மணி தூவி ஆர்த்த
கோமுனிக் கண்கள் எல்லாம் கூறின ஆசி கொற்ற
நாமவேல் சனகன் இன்றென் நல்வினை பயந்தது என்றான்".
சீதை இராமர் கழுத்தில் மாலையிட்டாள். ஜனகரும் விசுவாமித்திரரும் மனம் மகிழ்ந்தனர். ஜனகர் விசுவாமித்திரரிடம், இராம சீதை திருமணத்தை இப்பொழுதே முடிக்கலாமா? அல்லது தயரதன் வர வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு விசுவாமித்திரர் "தயரதன் வர வேண்டும், அவனுக்கு சேதி சொல்லி அனுப்பு" என்றார்.
தயரதனுக்கு திருமணச் செய்தி வந்தது. இராமர் சீதை திருமணத்தைக் கேட்ட தயரதன் மிகவும் மனம் மகிழ்ந்தான்.
உடனே அரசியர் மூவருடனும், மந்திரிமார்களுடனும், உற்றார் உறவினருடனும், நால்வகை சேனைகளுடனும், நாட்டு மக்களுடனும் மிதிலைக்குப் புறப்பட்டார். வசிட்டரும், மற்ற முனிவரும் உடன் வந்தனர்.
ஜனகர், தயரதனை வரவேற்று உபசரித்தார், பின் ஜனகர் தயரதனிடம், ஒரு கோரிக்கையை வைத்தார். தன் இரண்டாவது மகள் ஊர்மிளையை இலக்குவனுக்கும், தன் தம்பி குஜத்வசனின் மகள்களான மாண்டவி, சுருத கீர்த்தி இருவரையும் முறையே பரதனுக்கும், சத்துருக்கனுக்கும் திருமணம் செய்து வைக்கக் கேட்டார்.
தன் குமாரர்கள் நால்வருக்கும் திருமணம் நடைபெறுவதனை அறிந்து தயரதன் மிக்க மகிழ்ச்சி அடைந்தார், தன் சம்மதத்தினை ஜனகரிடம் தெரிவித்தார்.
மிதிலை விழாக் கோலம் பூண்டது. இரு தரப்பினரும் கலந்துப் பேசி பங்குனி உத்திரத்தன்று திருமணம் என்று தீர்மானித்தனர். வசிட்டர் நான்கு திருமண மேடைகள் அமைத்தார்.
மாவிலைகளாலும், மஞ்சள், கமுகு தோரணங்களாலும், முத்துப் பந்தலாலும் அரண்மனை அலங்கரிக்கப்பட்டது. திருமண மண்டபம் மேரு மலை போல் இருந்தது.
இராமர் மங்கள நீராடி, கடவுளைத் தொழுது, கலவை சாந்து பூசி, காதணி, வீரபட்டம், திலகம், முத்தாரம், தோள்வடம் அணிந்து, கையில் முத்துவடம், மார்பில் நவமணி மாலை, பட்டாடை, முப்புரிநூல், உடைவாள், சிலம்பு, கழல் அணிந்து அழகாகத் தோன்றினார்.
இராமரும் சீதையும் திருமண மண்டபத்தில் திருமணக் கோலத்தில் அமர்ந்திருந்தனர். சீதை இராமர் திருமணச் சடங்குகளை வசிட்டர் சிறப்பாக நடத்தினார். ஜனகர் சீதையை தாரை வார்த்து இராமர் கையில் அளித்தார். இராமர் சீதை திருமணம் இனிதே நிகழ்ந்தது.
தேவர்கள் பூமழை பொழிந்தனர். அரசர்கள் மலர் தூவி வாழ்த்தினர். இராமரும் சீதையும் மணக்கோலத்தில் அனைவர் உள்ளங்களையும் கவர்ந்தனர். அதே வேளையில் மணப்பந்தலில் ஜனகர் மகள் ஊர்மிளைக்கும் இலக்குவனுக்கும், திருமணம் நடைபெற்றது. மேலும் சனகர் தம்பி குசத்துவன் மகள்களான மாண்டவிக்கும் பரதனுக்கும், சுருத கீர்த்திக்க்ம் சத்துருக்கனுக்கும் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. அனைவரும் மணமக்களை வாழ்த்தினர்.
விசுவாமித்திரர், தயரதனிடம் ''உன் புதல்வனை சீதா இராமனாக்கி உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். இனி நான் விடைபெறுகிறேன்" என்று பிரிந்து சென்றார். தயரதனும் அனைவருடனும் அயோத்திப் புறப்பட்டார்.
வழியில் பல தடைகள் ஏற்பட்டன. கிளைகளுடன் மரங்கள் முறிந்து விழுந்தன. கதிரவனை மேகம் மறைத்தது. விஷ்ணுவின் அம்சமான பரசுராமர் எதிரே வந்தார். ''இராமா நீ சிவதனுசை ஒடித்ததாகக் கேள்வியுற்றேன். நீ இந்த விஷ்ணு தனுசை வளைத்து நாணேற்றாவிட்டால் நான் உன்னோடு போர் புரிவேன்'' என்று கூறினார்.
தயரதன் அச்சம் கொண்டான். ''முனிவரே தாங்களோ மாபெரும் தவசீலர். இராமன் வயதில் மிகவும் சிறியவன். தங்கள் அவனோடு போர் புரிய வேண்டாம்'' என்று பணிவாகக் கூறினார். ஆனால் பரசுராமர் அதனை சட்டை செய்யவில்லை.
இராமர் பரசுராமரிடம் இருந்து விஷ்ணு வில்லை வாங்கி நாணேற்றினார். உடனே பரசுராமர் இராமனை வாழ்த்திவிட்டு மகேந்திரமலை சென்று தவம் புரியலானார். இராமர் விஷ்ணு தனுசை வருணபகவானிடம் ஒப்படைத்தார்.
பின் தயரதன் மணமக்களோடு அயோத்தி வந்தடைந்தார். அயோத்தி மாநகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. மக்கள் புதிய மணமக்களை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
சிலகாலம் சென்றபின் தயரதன் பரதனிடம், ''பரதா நீ உன் தாய் மாமனோடு கேகய நாட்டிற்கு சென்று. அவனோடு சில காலம் தங்கி விட்டு வருக'' என்று கூறினார். பரதனும் தந்தையின் ஆணைப்படி கேகய நாட்டிற்கு அனைவரிடமும் ஆசி பெற்று புறப்பட்டான். சத்ருக்கனும் பரதனுடன் புறப்பட்டான்.

Comments
Post a Comment