இராமாயணம்- அயோத்தியா காண்டம் (RAMAYANAM- AYODHYA KANDAM)
இராமரும் சீதையும் பன்னிரெண்டு ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். இருவரும் உள்ளார்ந்த அன்புடன் வாழ்ந்து வந்தனர். தயரதன் தன் புதல்வர்களில் இராமனிடம் பெரும் அன்பு பூண்டிருந்தான்.
தன் முதுமையை உணர்ந்த தயரதன் ஆட்சிப் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ள முடிவெடுத்தான். இராமனுக்கு மணிமுடி சூட்ட சித்தம் கொண்டான். இதனை அனைவரிடமும் தெரிவிக்க அமைச்சரவையை தயரதன் கூட்டினான். அவையோர் மன்னனின் முடிவை ஏற்றுக்கொண்டனர். ஆட்சிப் பொறுப்பை இராமனிடம் ஒப்படைத்துவிட்டு தான் கானகம் சென்று தவம் செய்து மறுமைக்கு ஆக்கம் தேடிக்கொள்ள முடிவெடுத்தான். இதனை அவையோர் ஆட்சேபித்தாலும் பின் அதுவே மரபு என்று ஒப்புக்கொண்டனர்.
குல குரு வசிட்டர், "மறு நாளே நல்ல முகூர்த்த தினமாக உள்ளதால் நாளையே மணிமுடி விழா நடத்தலாம்'' என்றார். தயரதர், அமைச்சரை அனுப்பி இராமரை அழைத்து வரச்சொன்னார்.
இராமரிடம் தயரதர், ''இராமா, எனக்கு வயதாகி விட்டது. முதுமையும், மூப்பும் என்னை தளர்வடையச் செய்கின்றன. எனவே அரச பொறுப்பினை நீ ஏற்றுக்கொண்டு எனக்கு ஓய்வளிக்க வேண்டும். நம் முன்னோர்கள் ஆகாய கங்கையைப் பூவுலகிற்கு கொண்டு வந்தனர். அவர்களின் வழியில் நீ சிறப்புடன் அரசாள வேண்டும். பரதன் வெகு தொலைவில் உள்ளான் என்று வருந்த வேண்டாம். அவன் இச்செய்தி கேட்டு மகிழ்வடைவான். நீயும் சீதையும் மணிமுடி சூட்டு விழாவிற்காகத் தயாராகுங்கள்'' என்றார்.
தயரதர் ஆணை கேட்ட இராமர், மணி முடி சூடுவது பற்றி உணர்வுப்பூர்வ எண்ணங்களிலிருந்து விலகி, தந்தை ஆகிய மன்னரின் ஆணைக்குக் கீழ்ப்படிதலே கடமை என ஒப்புக்கொண்டான். கைகேயி இராமன் மேல் மிகுந்த அன்பு வைத்திருந்தாள். அவள் இராமனுக்கு மணிமுடி சூட்டுவது அறிந்து பெரு மகிழ்ச்சி கொண்டாள்.
இராமருக்கு மணிமுடி சூட்டுவிழாவினை அறிந்த மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.
இதனைக் கம்பர்;
''ஆர்த்தனர் களித்தனர் ஆடிப்பாடினர்
வேர்த்தனர் தடித்தனர் சிலிர்த்து மெய்ம்மயிர்
போர்த்தனர் மன்னனைப் புகழ்ந்து வாழ்த்தினர்
தூர்த்தனர் நீள்நிதி சொல்லினார்க் கெலாம் '' என்பார்.
வசிட்டர் இராமருக்கு அறம் கூறுதல்;
''யாரொடும் பகை கொள்ளலன் என்றபின்
போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது தன்
தார் ஒடுங்கல் செல்லாது அதுதந்தபின்
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ?''
மன்னன் என்பவன் எவருடனும் பகை கொள்ளாதவனாக இருந்தால் போர் என்பதே இல்லாமல் போய்விடும். அதற்கு மாறாக புகழ் ஓங்கும். வீணாகப் பகை கொள்வது மாண்புடையதன்று என்கிறார் வசிட்டர்.
மன்னனின் முழுமுதல் கடமை மக்களின் நலனே, என்றார். உலக உயிர்கள் யாவற்றையும் தன்னுயிராகக் கொண்டு மன்னன் வாழ வேண்டும். அவன் அறநெறியில் வழுவாது வாழ வேண்டும். இராமருக்கு இவ்வாறு அரச நீதிகளை எடுத்துச் சொன்னார். பின் இராமரை அழைத்துக் கொண்டு அரங்கநாதர் ஆலயம் சென்றார், வசிட்டர்.
இராமர் அரங்கநாதர் ஆலயத்தில் புனித நீராடினார். மணிமுடி சூட்டபோகும் மன்னருக்குரிய எல்லாச் சடங்குகளையும் செய்து முடித்தார் வசிட்டர்.
அயோத்தி மாநகர் எங்கும் விழாக்கோலம் பூண்டது. மக்கள் தோரணங்கள் கட்டி அழகுபடுத்தினர்.
கூனியின் செயல்;
கைகேயின் தோழி கூனி என்கின்ற மந்தரை. அவள் பெரிய அரசியல் தந்திரி. உலகிற்கெல்லாம் துன்பம் செய்யும் இராவணனைக் காட்டிலும் மிகு தீமை செய்யும் கொடுமனக்கூனி தோன்றினாள், என்று கம்பர் கூறுகிறார்.
இராமனுக்கு மணி முடி சூடுவதற்கு அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டது கண்டு கூனி நெஞ்சு துடிக்கின்றாள். அவள் இராமனிடம் தீராப்பகைக் கொண்டிருந்தாள். முன்னொரு நாள் இராமன் கூனியின் மேல் விளையாட்டாக அம்பு செலுத்தினான், அது கூனியின் மேல் பட்டது. அந்நாள் முதல் கூனி இராமனின் மேல் வெறுப்பு கொண்டிருந்தாள். அவள் கேகயன் மகள் கைகேயி இருப்பிடம் விரைந்தாள்.
கைகேயி கூனி உரையாடல்;
கூனி : கைகேயி உன் வாழ்வில் இருள் சூழ்ந்து விட்டது. ஆனால் நீயோ ஒன்றும் நடவாதது போல உறங்கிக் கொண்டிருக்கின்றாய். உறங்கிக் கொண்டிருக்கும் உன் மனத்தை நானே எழுப்புவேன் என்றாள்.
கைகேயி : திடுக்கிட்டு எழுந்த கைகேயி ''மந்தரை என்ன கூறுகின்றாய்? எனக்கு ஒன்றும் விளங்கவில்லை'' என்றாள்.
கூனி : நாளை இராமனுக்கு பட்டாபிடேகம், நீ அறிவாயா, நாடே விழாக்கோலம் கொண்டுள்ளது.
கைகேயி : ''ஆம், மந்தரை. இது மகிழ்ச்சியான செய்தியல்லவா? இராமன் அன்பில் சிறந்தவன். அவன் நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டவன். அவன் நல்லாட்சி புரிவான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நீ ஏன் பதறுகின்றாய்?'' என்றாள்
பின் முத்துமாலையைக் கழற்றி மந்தரையிடம் இதோ என் பரிசு பெற்றுக்கொள் என்றாள்.
அதனைத் தூர வீசி எறிந்தாள் மந்தரை. ''நான் ஒன்றும் உன்னைப் போல வெட்கம் கெட்டவள் அல்ல. உன்னைத் திருமணம் செய்யும் பொழுது உன் கணவர், உன் தந்தைக்கு என்ன வாக்குறுதி அளித்தார், என்பது நினைவிருக்கிறதா?'' உன் வயிற்றுக் குழந்தைகளுக்கே வாரிசு உரிமை தருவதாக உறுதி அளித்தார் அல்லவா? இப்பொழுது இராமனுக்கு முடிசூட்ட ஆணை பிறப்பித்துள்ளார். இப்பொழுது இராமன் மன்னனாவான், பின் அவன் மகன், அவன் பேரன் என்று ஆட்சிப் பீடத்தில் அமர்வார்கள். உன் மகன் பரதன் கதி என்னவாகும், என்று சிந்தித்தாயா?
அதற்கு, கைகேயி மந்தரையிடம், ''இராமன் குணம் அறிந்துமா நீ இவ்வாறு பேசுகின்றாய்? இராமன் விட்டுக்கொடுத்து போவதில் அவனுக்கு ஈடு அவன் தான். குடும்பத்தின் மூத்த மகன். தம்பிகளின் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளான். அவனுக்கு பட்டம் சூட்டுவதில் என்ன தவறு உள்ளது'' என்றாள்.
அதற்கு, கூனி ''கைகேயி நீ இவ்வளவு மதியிலியாக இருப்பாய் என நான் எண்ணவில்லை. இராமன் அரசனானப் பின் நீ கோசலையிடம் கைக்கட்டி சேவகம் செய்யப்போகிறாயா?. இதனைத் தடுக்க ஒரே வழி தான் உள்ளது, பரதன் அரசனாக வேண்டும்'' என்றாள்.
கூனியின் வாதம் கைகேயியின் மனத்தை மாற்றியது.
''பரதனுக்கு முடிசூட்டுவதா? இது நடக்கக் கூடிய காரியமா? என்று வினவினாள்'' கைகேயி.
''ஏன் நடக்காது? முன்பு தேவேந்திரனுக்கு உதவியாகத் தயரதன் சம்பாசுரனை எதிர்த்தான். அப்போரில் உன் கணவன் அம்பு பட்டுத் தேரில் சாய்ந்த போது நீ தேரினைச் செலுத்தி அவன் உயிரைக் காப்பாற்றினாய். அப்பொழுது தயரதன் உனக்கு இரண்டு வரங்கள் அளித்தான் அல்லவா, அச்சமயம் உனக்கு அவ்வரம் தேவைப்படவில்லை. நீ தயரதனிடம் தக்க சமயம் வரும் பொழுது பெற்றுக்கொள்வதாகக் கூறினாய். நினைவிருக்கிறதா?” இப்பொழுது அவ்வரங்களைக் கேள்.
முதல் வரம் பரதன் நாடாள வேண்டும். ''இரண்டாவது வரம் இராமன் பதினான்கு வருடம் கானகம் செல்ல வேண்டும்'' என்று இரு வரங்களைக் கேள் எனக் கொடுமனக்கூனிக் கூறினாள்.
கைகேயி கூனியிடம் ''பரதன் நாடாள வேண்டும், சரி, இராமன் பதினான்கு வருடம் காட்டிற்குச் செல்ல வேண்டும் என்று ஏன் கேட்க வேண்டும்'' என்றாள்.
''இராமன் மேல் மக்கள் அதிக பிரியம் கொண்டிருக்கிறார்கள். தங்கள் வீட்டுப்பிள்ளை அரியணை ஏறினால் எவ்வளவு ஆனந்தம் அடைவார்களோ, அதனை விட மிகுதி உவகையில் இருக்கிறார்கள். வீதிகள் தோறும் தோரணங்கள், மலர் அலங்காரங்கள் என்று களைகட்டியுள்ளன. நாளை இராமனுக்குப் பதில் பரதன் முடிசூடப் போகிறான், என்றால் கலகம் செய்வார்கள். எனவே இராமன் பதினான்கு வருடம் கானகம் சென்று விட்டால் இராமனை மறந்து விட்டு பரதனை அரசனாக ஏற்றுக்கொள்வார்கள். தயரதனிடம் இரு வரங்களையும் கேள்'' என்றாள் கூனி.
''கைகேயி தயக்கத்தினை விட்டு விடு, தயரதன் வரும் நேரமாகின்றது. பின்னிய கூந்தலை அவிழ்த்து விடு, ஆபரணங்களை கழற்று'' என்று உந்தினாள். கைகேயியும் கூனியின் போதனையால் உள்ளம் மாறினாள். அவள் கூறியது போல ஆபரணங்களை கழற்றி வீசிவிட்டு அலங்கோலமாக வெறுந்தரையில் படுத்துக் கொண்டாள்.
தயரதன் முடிசூட்டு விழாவின் ஏற்பாடுகளை கவனித்து விட்டு, இராமன் முடிசூடப்போகிறான் என்ற இனிய செய்தியைக் கைகேயியிடம் கூற விரைந்தான். கைகேயியின் நிலைக் கண்டு தயரதன் தடுமாறினான்.
தயரதன் கைகேயியிடம் பரிவுடன் பேசலானான். ''கைகேயி என்ன நடந்தது, உன்னை யாராவது மரியாதை குறைவாக நடத்தினார்களா? அல்லது உன் உடல் நலம் சரியில்லையா? சொல்'' என்றான். அதற்கு கைகேயி பதில் அளிக்கவில்லை. உடனே அவன் ''உனக்கு யாராவது தீமை செய்தார்களா? உன் ஆணையை யாராவது மீறினார்களா? சொல், என்ன நேர்ந்தது'' என்றான்.
கைகேயி அதற்கு பதில் கூறாமல் அமைதியாகவே இருந்தாள். தயரதன் மனம் துயரம் அடைந்தது. அவன் கைகேயியிடம், ''கைகேயி நீ இவ்வாறு இருப்பதினை என்னால் காண முடியவில்லை, நான் உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமா? கூறு செய்து தருகின்றேன்'' என்றான்.
கைகேயி தசரதனிடம், ''இராமன் மீது ஆணையிட்டு நான் கேட்பதைத் தருவதாகக் கூறுங்கள்'' என்றாள்.
தயரதனும் கைகேயியின் எண்ணம் அறியாமல் அவளிடம் ''இராமன் மீது ஆணை, நீ எது கேட்டாலும் செய்து தருகிறேன்'' என்றான்.
''தாங்கள் இரண்டு வரங்கள் எனக்குத் தர வேண்டும். முதல் வரம் என் மகன் பரதனுக்கு முடி சூட்ட வேண்டும். இரண்டாவது வரம், இராமன் பதினான்கு வருடம் வனவாசம் செல்ல வேண்டும்'' என்றாள்.
''ஏய வரங்கள் இரண்டில் ஒன்றினால் என்
சேய் உலகாள்வது சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனமாள்வது எனப் புகன்று நின்றாள்
தீயவை யாவையிலும் சிறந்த தீயாள்''
தயரதனுக்கு உலகம் இருண்டது. கை,கால்கள் நடுங்கின. வாய் குழறியது. அவன் கைகேயிடம், ''கைகேயி, என்ன கேட்கின்றாய், விடிந்தால் இராமனுக்குப் பட்டாபிக்ஷேகம். நீ பரதனுக்கு முடிசூட்ட வேண்டும்'' என்கின்றாய்.
''உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா? அல்லது வஞ்சகர்களின் சதி வலையில் சிக்கிக்கொண்டாயா? சொல்'' என்றான்.
கைகேயி சிறிதும் அஞ்சாமல், ''யாரும் சதி செய்யவும் இல்லை, எனக்குப் பைத்தியமும இல்லை, நான் தெளிவாகக் கூறுகின்றேன். மன்னா, முன் தந்த இரு வரங்களைத் தர வேண்டும், இன்றேல் உன் மீது பழி ஏற்படுத்தி மாள்வேன். இது உறுதி'' என்றாள்.
''திகைத்ததும் இல்லை எனக்கு வந்து தீயோர்
இசைத்ததும் இல்லை முன் ஈந்த வரங்கள் என்பால்
குசைப்பரியோய் ! தரின் இன்று கொள்வேஎன்; அன்றேல்
வசைத்திறம் நின்வயின் நிற்க மாள்வன் என்றாள்''
கைகேயியின் கொடுமொழிகளைக் கேட்டு தயரதன் மிகவும் துன்புறுகின்றான். கொடிய நாகம் போன்ற கொடுந்தன்மை கொண்ட கைகேயி தன் நாவினால் நல்கிய நஞ்சு மிக வருத்துவதால் தயரதன் நடுக்கம் அடைந்தான்.
கைகேயி கேட்ட வரத்தை தரமறுக்கவும் அஞ்சுகின்றான். தன் நிலையில் மாறாத கைகேயியை வாளால் அறுப்பதை விட அவளிடம் இரப்பதே மேல் என்று நினைத்து அவள் காலில் விழுகின்றான். ''இராமனைக் காட்டிற்கு அனுப்ப வானுலகத்தோரும் விரும்ப மாட்டார்கள். மண்ணுலகில் உள்ளவர்களோ அவனைப் பிரிந்திருக்க மாட்டார்கள். ஆனால் நீயோ கல் நெஞ்சம் கொண்டாயோ?'' இவ்வாறு பலவாக மன்னன் புலம்பினான்.
பின் தயரதன் கைகேயியிடம் ''பரதன் நாடாளட்டும், ஆனால் இராமன் கானகம் செல்ல வேண்டும் என்ற உன் இரண்டாவது வரத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்'' என்றான்.
கைகேயி தன் முடிவில் மாற்றமின்றி உறுதியாக இருந்தாள். ''முன் தந்த வரத்தை தர மறுத்தால் நினது வாய்மை என்னவாகும்'' என்றாள்.
தயரதன் நிலை குன்றினான். ''இராமன் காடு போனால் நான் உயிர் பிழைக்க மாட்டேன்” என்று சொல்லி மதி மயங்கி சோர்ந்து விழுந்தான்.
மன்னன் இவ்வாறு சோர்வுற்று இருப்பதைக் கண்ட கைகேயி ''சத்தியத்தைக் காக்கும் பொறுட்டு சிபிச்சக்கரவர்த்தி தன் உடம்பையே அரிந்து கொடுத்தான். அப்பரம்பரையில் வந்த நீ முன்னர் வரத்தை நல்கி விட்டு பிறகு வருந்துவதால் என்ன பயன்'' என்றாள்.
தயரதன் வேறு வழியில்லாமல், நீ கேட்ட வரங்களை ஈந்தேன், ஈந்தேன், என்றான். கைகேயி மகிழ்ச்சியடைந்தாள்.
இரவு மறைந்து சூரியன் உதித்தது. கைகேயி இராமனை அழைத்து வர ஆணையிட்டாள். இராமன் வந்ததும் அறியாமல் தயரதன் நலிவுற்ற யானை தளர்ந்து படுக்கையில் படுத்திருப்பதுப் போல இருந்தான். இதனைக் கண்ட இராமர் மனம் பதைத்தது. இராமர் கைகேயியிடம், ''அன்னையே, தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுவிட்டதா?'' என்றான்.
''அதெல்லாம் ஒன்றும் இல்லை என்றாள்'' கைகேயி.
''இராமா மன்னர் உன்னிடம் ஒரு செய்தி கூற அழைத்தார். ஆனால் உன்னிடம் எவ்விதம் கூறுவது என்று தயங்குகின்றார். அவர் கூற விரும்பும் செய்தியை நானே கூறுகின்றேன்” என்றாள் கைகேயி.
இராமர், ''தாயே, நீங்களே எனக்கு தந்தையும் தாயும். கட்டளை இடுங்கள். உங்கள் ஆணைக்குப் பணியக் காத்திருக்கிறேன்'' என்றான்.
கைகேயி ''இராமா, கோசல நாட்டை பரதன் ஆள நீ கானகம் சென்று, மரவுரி தரித்து, தவம் செய்து, புண்ணிய நதிகளில் நீராடிப் பதினான்கு ஆண்டுகள் கழித்து வா என்று மன்னன் சொன்னான்'' என்றாள்.
இராமர் கூறுகின்றார், ''அன்னையே, என் தம்பி பரதன் பெற்ற செல்வம் யான் பெற்ற செல்வமாம். என்னைக் காட்டிலும் பரதன் சிறப்பாக கோசல நாட்டினை ஆள்வான். தங்கள் கட்டளையை எற்றுக்கொண்டு யான் கானகம் செல்ல சித்தமாயிருக்கின்றேன்'' என்றார்.
நாளை பட்டாபிஷேகம் என்றவுடன் இராமர் முகத்தில் ஏற்பட்ட பூரிப்பைக்காட்டிலும், நாளை வனவாசம் என்றவுடன் அவர் முகத்தில் மும்மடங்கு பூரிப்பு ஏற்பட்டதாக கம்பர் கூறுகின்றார்.
''இப்போழுது எம்ம நோரால் இயம்புவது எளிதோ யாரும்
செப்பரும் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்
ஒப்பதே முன்பு பின்பு அவ்வாசம் உணரக் கேட்ட
அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்ற தம்மா''
இராமன் தன் தாய் கோசலையின் மாளிகைக்குச் சென்றான் தன் மகன் நாடாளும் மன்னனாக பட்டாடை அணிந்து, வெண்கொற்றக் குடையுடன் தன்னைக் காண வருவான் எனக் காத்திருந்தாள் கோசலை. ஆனால் இவை எதுவும் இல்லாமல் இராமன் கோசலையைக் காணச் சென்றான். சூழலை உணர்ந்த கோசலை இராமரிடம் ''என்ன நேர்ந்தது?'' என வினவினாள்.
இராமன் தன் தாயை வணங்கி, ''அன்னையே! உன் அன்பு மகன், என் பாசமிகு தம்பி பரதன் முடிசூடுகிறான்'' என்றான்.
தன் மக்கள் நால்வரிடமும் மிகுந்த அன்பு கொண்ட கோசலை, இராமரிடம் கூறலானாள், ''இராமா பரதன் அறிவில் சிறந்தவன். சிறந்த குணவாளன். பரதன் மணிமுடி சூடுவதற்கு மரபுப்படி உரிமை இல்லை என்பதனைத் தவிர வேறு குறையொன்றும் இல்லை. நால்வரில் நீயே முதல்வன். இருப்பினும் நீ பரதனோடு ஒற்றுமை பாராட்டி பல்லாண்டு வாழ்க'' என்றாள்.
இராமனும் தாயின் சொற்படி நடப்பதாகக் கூறினான். பின் அரசர் தனக்கு ஓர் பணியினைச் செய்ய ஆணையிட்டிருப்பதாகவும், அதனைச் செவ்வனே செய்து முடிக்க தாங்கள் ஆசி வழங்க வேண்டும், என்றும் தன் தாயிடம் கூறினான்.
கோசலை அப்பணி யாது என வினவினாள்?. இராமன் கோசலையிடம் ''அன்னையே, அரசர் என்னை பதினான்கு ஆண்டுகள் கானகம் சென்று தவ வாழ்க்கை வாழப் பணித்துள்ளார்” என்றான்.
இராமரின் கூற்றினைக் கேட்ட கோசலை நிலைத்தடுமாறினாள். ''இராமா என்னக் கூறுகின்றாய். யாதொருக் குற்றமும் இழைக்காத போது உனக்கு மன்னர் இவ்வளவு பெரிய தண்டனை வழங்கியிருப்பதன் காரணம் என்ன?. கடவுளே! எதற்காக என் மகனுக்கு இத்துணை பெரிய தண்டனை, யான் செய்த தவறு யாது? எனப் பலவாறு'' புலம்பினாள்.
கலங்கிய தன் தாயை இராமன் தேற்றினான். ''தாயே! பரதன் நாடாளவும், நான் கானகம் செல்லவும் தந்தை இட்டக் கட்டளையை நான் மீற முடியுமா? அரசன் இட்ட பணியை நான் மீற முடியுமா? எனவே கலங்காதீர்கள்'' என்றான். உடனே கோசலை தானும் கானகம் வருவதாக இராமனிடம் கூறினாள்.
இராமன், ''அன்னையே! தாங்கள் என்னோடு வனம் வந்தால், என்னைப் பிரிந்து வருந்தும் தந்தைக்கு ஆறுதல் கூறுவது யார்?. பதினான்கு ஆண்டுகள் என்பது விரைந்து கழிந்து விடும். எனவே எதற்கும் கலங்க வேண்டாம்'' என்று ஆறுதல் கூறினான.
இதனிடையே செய்தி அறிந்த இலக்குவன் மனம் கொதித்தான். இராமனிடம், ''தந்தை இவ்வாறு குருட்டுத் தனமாய் ஆணையிட்டால் நாம் அதற்கு செவி சாய்க்க வேண்டுமா? இது சிற்றன்னையின் சூழ்ச்சி என்று அறிந்தேன். எனவே அண்ணா ஆணையிடுங்கள், நீங்கள் முடிசூடுவதற்கு எதிராக சதி செய்பவர்களின் திட்டங்களை தவிடு பொடியாக்கி, உங்களை இந்நாட்டின் மன்னனாக்குகின்றேன்'' என்றான்.
இராமர், ''தமையனே, அரசரும் நம் தந்தையுமானவரின் ஆணையை மீற முடியுமா? எனவே சீற்றம் கொள்ள வேண்டாம் இலக்குவா, மேலும் தந்தையின் வாக்கினைமீறி என்னால் நடந்து கொள்ள இயலாது. அரச பதவியின் மேல் எனக்கு விருப்பம் கிடையாது. எனவே தந்தை மேல் கொண்டுள்ள கோபத்தை விட்டு விடு'' என்றார்.
இலக்குவனும் ஒருவாறு கோபத்தை அடக்கிக் கொண்டாலும், கண்களிலிருந்து வரும் கண்ணீரினை கட்டுப்படுத்த முடியவில்லை. இராமர், இலக்குவனின் அன்பின் மிகுதியை எண்ணி அவனை அணைத்துக் கொண்டார்.
நிலைமையை ஒருவாறு உணர்ந்து கொண்ட இலக்குவன், இராமரிடம் ''அண்ணா, தாங்கள் கானகம் செல்லும் போது என்னையும் தங்களோடு அழைத்துச் செல்ல வேண்டும், இதுவே எனது விருப்பம்'' என்று கூறினான். இராமரும், இலக்குவனின் விருப்பத்திற்கு இசைந்தார். பின் இலக்குவன் தன் தாய் சுமந்திரையிடம் ஒப்புதல் பெற விரைந்தான்.
இராமரும், இலக்குவனும் மரவுரி தரித்து கானகம் செல்லப் புறப்பட்டனர். தயரதன் செய்வதறியாது கலங்கி நின்றான்.
தயரதன் தன் குல குகுருவான வசிட்டரின் உதவியை நாடினார், தயரதன் வசிட்டரிடம், ''எப்படியாவது இராமன் கானகம் செல்வதை தடுக்க வேண்டும். கைகேயி தன் வரத்தால் என் வாழ்வினை நரகமாக்கி விட்டாள். இரக்கமற்ற அரக்கியானாள். இராமனைக் கானகம் செல் என்று கூறி தீமையின் இருப்பிடமானாள். அவள் என் மனைவி என்று கூறுவதற்கு வெட்கப்படுகின்றேன். இல்லை அவள் என் மனைவியும் அல்ல, பரதன் என் மகனும் அல்ல. துறந்தேன், ஆட்சி உரிமை பெற்றுள்ள பரதன் எனக்கு உரிமைக் கடன் செய்யக்கூடாது'' என்றான்.
வசிட்டர், கைகேயியிடம் பலவாறு பேசியும் அவள் மனம் மாறவில்லை. இராமன் கானகம் செல்லவும், பரதன் நாடாள வேண்டும் என்பதிலும் அவள் உறுதியாக இருந்தாள்.
வசிட்டர், இராமரிடம் ''இராமா, உன் தந்தை தன் வாயால் உன்னைக் கானகம் செல் என்று கூறவில்லை, மேலும் உன்னைப் பிரிந்து உன் தந்தை உயிர் வாழார். ஆகவே நீ காட்டுக்குச் செல்ல வேண்டாம்'' என்றார்.
இராமர், வசிட்டரிடம், ''குருவே, தந்தையின் சத்தியத்தினை நிறைவேற்றுவதில் நான் மகிழ்வடைகின்றேன். கானகம் சென்று தவம் செய்வதில் விருப்பம் கொண்டுள்ளேன். எனவே என் தந்தையை நீங்களே காக்க வேண்டும்'' என்றான்.
இராமர் சீதையிடம் சென்றார். சீதைக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அனைவரும் சோகத்தில் இருப்பதனைக் கண்ட சீதை என்ன நடந்தது? என வினவினாள்,
''பொன்னை உற்ற பொலங்கழலோய் புகழ்
மன்னை உற்ற துண்டோ மற்றில் வந்துயர்
என்னை உற்றது? இயம்பு என்று இறைஞ்சினாள்
மின்னை உற்ற நடுக்கத்து மேனியாள்''.
இராமர், சீதையிடம் ''என் தம்பி பரதன் நாடாளவும், நான் கானகம் செல்லவும் என் தாய் தந்தை பணித்துள்ளனர். என்னோடு இலக்குவனனும் வருகின்றான். நீ மிதிலை சென்று உன் பெற்றோருடன் தங்கியிரு'' என்றார்.
இராமனின் கூற்றினைக் கேட்ட சீதை, ''நீங்கள் இருக்குமிடமே எனக்கு அயோத்தி. நானும் உங்களோடு வருவேன்'' என்றாள்.
இராமர் ''சீதா, கானகம் மலர்களும், மரங்களும் நிறைந்த இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாயினும், அங்கே கொடிய மிருகங்களும் வசிக்கின்றன. மேலும், அரண்மனையில் சகல வசதிகளுடன் வாழ்ந்த நீ காட்டில் துன்பப்பட வேண்டா'' என்றார்.
அதற்கு, சீதை ''நாம் இருவரும் உடலால் வேறுபட்டாலும், உள்ளத்தால் ஒன்றுபட்டவர்களே. உங்களைப் பிரிந்து இப்பூவுலகில் எங்கும் என்னால் வாழ இயலாது. கானகத்தில் நான் உங்களோடு இருந்தால் மகிழ்ச்சியாக இருப்பேன், ஆனால் உங்களைப் பிரிந்து வாழும் இடம் அயோத்தியாயினும், மிதிலையாயினும் எனக்குத் துன்பமே. எனவே நானும் உங்களோடு கானகம் வருகின்றேன்'' என்றாள்.
சீதை தன் முடிவில் உறுதியாக இருப்பதை உணர்ந்த இராமர், சீதையைத் தன்னுடன் அழைத்துச் செல்ல இசைந்தார்.
இராமர், இலக்குவர், சீதா தேவி மூவரும் வனவாசம் செல்லக் கிளம்பினர். தயரதனிடம் ஆசி பெற்றுக் கொள்ளச் சென்றனர. தயரதன், தன் நிலையில் இல்லாமல் மிகவும் சோர்ந்து காணப்பட்டான். மூவரும் மரவுரி தரித்து கானகம் செல்ல ஆயத்தமாகியதை உணர்ந்த தயரதன் உள்ளம் உடைந்தான். பின், அமைச்சர் சுமந்திரரை நோக்கி, இராமனுக்கு உதவியாக பெருஞ்சேனையை அனுப்புங்கள். உணவுத் தேவைக்காக வேண்டியப் பொருட்களையும் அனுப்பி வையுங்கள் என்றார்.
தந்தையே, கானகம் செல்வது தவ வாழ்வினை மேற்கொள்ளவே. அங்கேயும் சுக போகங்களை அனுபவித்து வாழ்வது தவறானது, என்று கூறி உதவிப் பொருட்களை மறுத்து விட்டார். தயரதன் காலில் இராமர் வீழ்ந்து வணங்கினார். சீதையும், இலக்குவனனும் உடன் வணங்கினர். இராமன், தன்னை விட்டுப் பிரிந்து செல்லப் போகிறான் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தயரதன் சோர்ந்து பேச்சற்றுப் போனான். கோசலையும், சுமந்திரையும் ஆசி வழங்கி அனுப்பினர்.
அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு மூவரும் ரதத்தில் ஏறினர். சுமந்திரர் ரதத்தினைச் செலுத்தினார். அயோத்தி மக்கள் கண்ணீருடன் இராமரின் பிரிவினை எண்ணி வருந்தினர். அயோத்தி எல்லையைக் கடந்தப் பின் இராமர் சுமந்திரரிடம் தேரினை நிறுத்தச் சொன்னார். சுமந்திரர், இராமனை வணங்கி விடைபெற்றார்.
தயரதன் ஓர் சிறிய நம்பிக்கையில் தன் உயிரினைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தான். சுமந்திரன் எப்படியாயினும் இராமனை திரும்ப அழைத்துக் கொண்டு வருவான், என்று நம்பினான். அவன் கோசலையிடம் பழைய சம்பவம் ஒன்றினைக் கூறினான்.
கோசலை, என் இளமை காலத்தில் வேட்டையாடுவதில் விருப்பம் உடையவனாக இருந்தேன். ஒரு நாள் இரவு சரயு நதிக் கரையில் யானை வேட்டைக்காகச் சென்றிருந்தேன். சப்தம் வரும் திசையில் சரியாக அம்பு எய்தும் ஆற்றல் என்னிடம் உண்டு. ஒரு மரத்தின் மேல் யானைக் கூட்டம் வருவதற்காக காத்திருந்தேன். அப்பொழுது யானை ஒன்று தண்ணீர் அருந்தும் சப்தம் கேட்டது. உடனே சப்தம் வந்த திசையில் அம்பெய்தேன். யானையின் பிளிறல் சப்தம் வருவதற்கு பதில் சிறுவனின் அலறல் சப்தம் வந்தது.
நான் அலறல் வந்த திசை நோக்கிச் சென்று பார்த்தபொழுது அங்கே சிறுவன் ஒருவன் அம்பு பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். அவன் உடலெங்கும் இரத்தம். அவன் பெயர் விரோச்சனன். அவன் தாய், தந்தையர் மிகவும் வயதானவர்கள். அவர்களுக்குக் கண்ணும் தெரியாது, நடக்கவும் முடியாது.
வலியால் துடித்துக் கொண்டிருந்த அவன் என்னிடம் ''என் தாய். தந்தையர் அருகில் உள்ள ஆசிரமத்தில் உள்ளனர். நான் அவர்களுக்காகத் தண்ணீர் எடுக்க இக்குளத்திற்கு வந்தேன். தண்ணீரினைக் குடுவையில் அள்ளும் பொழுது என் மேல் அம்பு பட்டது. இனி நான் பிழைக்க மாட்டேன். தாகத்தில் உள்ள அவர்களுக்கு இக்குடுவை நீரினைக் கொடுத்து விட்டு என் மரணச் செய்தியை தெரிவித்துவிடுங்கள்'' என்று கூறி மாண்டு போனான்.
யானை தண்ணீர் குடிப்பதாக எண்ணி ஓர் அப்பாவிச் சிறுவனின் உயிரைப் பறித்துவிட்டதற்காக வருந்தினேன். அவன் தாய் தந்தையரைப் பார்த்து, தாகத்தில் உள்ளவர்களுக்கு தண்ணீர் அளித்து விட்டு. மகன் மாண்ட செய்தியைத் தெரிவிக்கச் சென்றேன். அவர்கள் என் காலடி சப்தம் கேட்டு, தன் மகன் தண்ணீருடன் வருவதாக எண்ணி ''மகனே, வந்து விட்டாயா, ஏன் இவ்வளவு தாமதம்?'' என வினவினர்.
நான் அவர்களிடம் ''பெரியவரே, நான் இந்நாட்டின் மன்னன் தயரதன். நான் காட்டில் யானை வேட்டைக்கு வந்த போது, யானை தண்ணீர் அருந்தும் சப்தம் கேட்டு அத்திசையில் அம்பெய்தேன். அம்பெய்த பின் யானையின் பிளிறல் சப்தத்திற்குப் பதில் மனிதனின் அலறல் சப்தம் வந்தது. அங்கு சென்று பார்த்த பொழுது சிறுவன் ஒருவன் அம்பு பட்டு இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். நான் அவனைக் காப்பாற்ற முயற்சி செய்தேன். ஆனால் அவன் உயிர் பிரிந்து விட்டது. உங்கள் மகன் இறப்பதற்கு முன் உங்களைப் பற்றிக் கூறினான். நான் செய்த மாபெரும் தவறுக்காக என்னை மன்னித்து விடுங்கள். நான் உங்களுக்காகத் தண்ணீர் கொண்டு வந்துள்ளேன்'' என்று கூறினேன்.
அவர்கள் நிலைதடுமாறினர். நான் கொண்டு வந்த நீரினை ஏற்க மறுத்துவிட்டனர். நான் அவர்களிடம் ''பெரியவரே, நீங்கள் இருவரும் என்னுடன் வந்து விடுங்கள். நான் உங்களைக் கவனித்துக் கொள்கின்றேன்'' என்று கூறினேன்.
அதற்கு அப்பெரியவர் ''மன்னா, குற்றமற்ற எங்கள் மகனை நீ கொன்று விட்டாய். நாங்கள் எங்கள் மகனை இழந்து வருந்துவது போன்று நீயும் ஒரு நாள் துயரடைவாய்'' என்று கூறி மாண்டு போயினர்.
அதன் பிறகு தான், கோசலை உன்னை மணந்து கொண்டேன். புத்திரப்பேறு இல்லை. கைகேயி, சுமந்திரை இருவரையும் மணந்து கொண்டும் புத்திரப்பேறு இல்லை. அச்சமயம் நான் இப் பெரியவரின் சாபத்தை எண்ணி, நிச்சயம் நமக்கு புத்திரப்பேறு உண்டு என்று மனத்திடம் கொள்வேன்.
கோசலை நான் இன்று புத்திர சோகத்தில் அல்லலுறுகின்றேன். அமைச்சர் சுமந்திரன், இராமனைத் திரும்ப அழைத்து வரவில்லை என்றால் என் உயிர் நிச்சயம் பிரியும் என்று புலம்பினார்.
கோசலை தயரதனை சமாதானம் செய்ய முயன்றாள். ஆனால் தயரதன் இராமனின் பிரிவினைத் தாங்க முடியாமல், புத்திர சோகத்தில் வாடினான்.
இராமனும், சீதையும், இலக்குவனும் அடர்ந்த வனத்துள் பயணம் செய்தனர்.கரிய நிறச் செம்மலான இராமனின் அழகை கம்பர் வர்ணிக்கின்றார்.
''வெய்யோன் ஒளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானோடும் போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ
ஐயோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்!''
இராமனிடத்திலிருந்து வெளிப்படும் ஒளியில் சூரியனது ஒளி மறைந்துவிட்டது என்றார். இராமனின் அழகு அழியா அழகு எனவும் புகழ்கின்றார்.
கானகத்தில் பயணம் செய்து இராமர், சீதை, இலக்குவர் மூவரும் கங்கைக் கரையை அடைந்தனர். அப்பகுதியை சிற்றரசன் குகன் ஆண்டு வந்தான். அவன் இராமரின் மேல் மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தான். இராமரின் வீரத்தையும், அழகையும் பிறர் புகழக் கேட்டிருந்த குகன், அவரைக் காண மிகுந்த ஆவல் கொண்டிருந்தான். இராமர் வனம் வந்த காரணத்தைக் குகன் அறிந்திருந்தான்.
இராமர், சீதை, இலக்குவர் மூவரும் கங்கைக் கரையில் ஒய்வெடுப்பதை அறிந்த குகன், அவர்களைக் காண அங்கு சென்றான்.
அவர்களைத் தங்கள் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றான். இராமர், சீதை, இலக்குவர் மூவரையும் அன்புடன் வரவேற்று, அவர்களுக்கு சுவை மிகுந்த கனிகளையும், இனிப்பு வகைகளையும் வழங்கினான். பின் குகன் இராமரிடம், ‘‘இராமா, நீ எங்கேயேயும் செல்ல வேண்டாம், பதினான்கு வருடம் இங்கேயே இருந்து விடு'' என்று கூறினான்.
இராமர் புன்முறுவலுடன் குகனிடம், குகனே, ''உன் அன்பினால் நான் மனம் மகிழ்ந்தேன். ஆனால் வனவாசம் என்பது உறவினர் வீட்டில் தங்குவது அல்ல'' என்று கூறி மறுத்து விட்டார்.
பின் குகனிடம் இராமர் ''குகனே கங்கையின் மறுகரையை அடைவதற்கு ஓடம் ஒன்றினைத் தர வேண்டும்'' என்று கூறினார்.
அடுத்த நாள் காலை இராமலக்குவரும், சீதையும் ஓடத்திலே ஏறத் தயாராயினர். குகன் இராமருக்கு பாத பூஜை செய்தான். இராமரைப் பிரிய மனமில்லாமல் கண்ணிரோடு நின்ற குகனிடம், இராமர் ''தசரத குமாரர்கள் நாங்கள் நால்வர். இன்று முதல் உன்னோடு ஐவரானோம். எங்கள் உள்ளத்தில் நீ என்றும் நீங்காது நிலைத்திருப்பாய்'' என்று கூறினார்.
மறுநாள் மூவரும் பரத்வாஜ ஆசிரமத்தை அடைந்தனர். பரத்வாஜர் அவர்களை அன்போடு வரவேற்றார்.
‘‘இராமா, இவ்விடம் கங்கையும் யமுனையும் கலக்கும் செழிப்பான இடம். இங்கு கனிகளும், காய்களும், கிழங்குகளும் ஏராளமாக கிடைக்கும். உன் வன வாசத்தை நீ இங்கேயே கழிக்கலாம்'' என்றார்.
இராமர் பரத்வாஜ முனிவரிடம், ''முனிவரே இவ்விடம் அயோத்திக்கு மிக அருகாமையில் உள்ளது. பல தர்ம சங்கடங்களை சந்திக்க நேரிடும். எனவே இன்னும் சிறிது தொலைவு செல்ல வேண்டும்'' என்றார்.
பரத்வாஜர், ''இராமா, இன்னும் பத்து காத தூரம் [நூறு மைல்] சென்றால் சித்திரக்கூட மலை இருக்கிறது. அது நீர்வளமும், நில வளமும் நிறைந்தப் பகுதி ஆகும். அங்கு உங்களுக்குத் தேவையான உணவும், நீரும் தடையின்றிக் கிடைக்கும். நீங்கள் தங்குவதற்கு ஏற்ற இடம்'' என்றார்.
அன்றிரவு பரத்வாஜ ஆசிரமத்தில் தங்கி, அவரது விருந்து உபசாரங்களைப் பெற்றுக் கொண்டு, அடுத்த நாள் காலை அங்கிருந்து புறப்பட்டனர்.
நீண்ட பயணத்திற்குப் பின் சித்திரக்கூட மலையை மூவரும் அடைந்தனர். அங்கு மூங்கில்கள், மரக்கிளைகள், ஓலைகள் கொண்டு அழகிய சிறு குடில் ஒன்றினை இலக்குவன் அமைத்தான்.இராமர் இலக்குவனின் திறனைப் பாராட்டினார்.
தயரதன், தன் அமைச்சர் எப்படியாயினும் இராமனைக் கானகத்தில் இருந்து திரும்ப அழைத்து வந்து விடுவாரென்ற நம்பிக்கையில் உயிர் கொண்டிருந்தான்.
இராம, இலக்குவரையும், சீதையையும், கானகத்தில் விட்டு அமைச்சர் சுமந்திரன் அரண்மனை திரும்பினார். தயரதன் சுமந்திரனிடம் ''இராமன் எங்கே?'' எனக் கேட்டான். அதற்குச் சுமந்திரன் ''இராமன் கானகம் போய்விட்டான்'' என்றான். உடனே தயரதன் உயிர் விட்டான். தயரதன் இறந்ததும் கோசலை கதறி அழுதாள். அனைவரும் துயரத்தில் ஆழ்ந்தனர்.
தயரதன் இறந்து விட்டான். அவன் புதல்வர்கள் நால்வரும் அவன் அருகில் இல்லை. இராமனும், இலக்குவனும் கானகம் சென்று விட்டனர். பரதனும், சத்ருக்கனும் கேகய நாட்டிற்குச் சென்று விட்டனர். பரதனும், சத்ருக்கனும் வரும் வரை உடலைப் பாதுகாக்க வேண்டும். எனவே தயரதனின் உடலைத் தைலத்தில் போட்டு வைத்தனர்.
குல குரு வசிட்டர் அரசியல் பொறுப்பினை ஏற்று, கேகய நாட்டிற்கு தூதர்களை அனுப்பி பரத சத்ருக்கனரை அழைத்து வரச் சொன்னார். தூதர்களிடம், ''குலகுருவும், அமைச்சர்களும், பரத சத்துருக்கனை அயோத்திக்கு வரச் சொன்னார்கள் என்பதனை மட்டும் கூறச் சொன்னார். அதன் படி அவர்கள் கேகய நாட்டிற்கு சென்று மன்னனிடம், வசிட்டர் பரத சத்துருக்கனை அழைத்து வரச் சொன்னார்'' என்று கூறினர்.
கேகய நாட்டில் இருந்து பரத சத்துருக்கனன் வர எட்டு நாட்கள் ஆகியது. எட்டாவது நாள் இருவரும் அயோத்தியை வந்தடைந்தனர். அயோத்தி நகரம் எழில் இழந்து காணப்பட்டது. மக்கள் அனைவரும் துக்கக் குறியோடு காணப்பட்டனர். பரதன் சத்துருக்கனிடம், சத்துருக்கா, நாட்டில் வழக்கமான சூழல் இல்லையே. மேலும் ''ஐந்து நாட்களாக நாம் கெட்ட கனவுகளாகவே கண்டு வருகிறோம்'' என்றான்.
இருவரும் அரண்மனையை அடைந்தனர். பரதன் கைகேயியிடம், ''அன்னையே, என்ன நிகழ்ந்தது. அப்பா நலம் தானா என்று கேட்டான்’’.
கைகேயி, ''பரதா, மாமன்னர் இவ்வுலகினை விட்டு நீங்கினார்”. நீ கலங்காதே. உன் கடமையை ஆற்று.
''வானகம் எய்தினான், வருந்தல் நீ என்றாள்''
தாயின் சொல் கேட்டு பரதன் நிலைகுழைந்தான். ''தாயே, என்ன கூறுகின்றீர்கள். நாங்கள் கேகய நாட்டிற்கு செல்லும் போது தந்தை நலமாகத் தானே இருந்தார். என்ன நேர்ந்தது எனப் பலவாறு புலம்பினான். பின் தாயே நான் அண்ணன் இராமனைச் சந்தித்து வருகின்றேன்'' என்றான்.
‘‘பரதா, இராமன் அயோத்தியில் இல்லை. அவன் பதினான்கு ஆண்டுகள் வன வாசம் சென்றுள்ளான்'' என்றாள் கைகேயி.
பரதனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ''கானகம் செல்ல தமையன் இழைத்த தீங்கு யாது?'' என வினவினான்.
கைகேயி, ''மகனே இராமன் எந்தத் தீங்கும் இழைக்கவில்லை. முன்பு தசரதச்சக்கரவர்த்தி, எனக்குத் தந்த இரு வரங்களை நான் இப்பொழுது கேட்டுப் பெற்றேன். ஒரு வரத்தால் நீ நாடாள வேண்டும் எனவும், மற்றொரு வரத்தால் இராமன் பதினான்கு வருடம் கானகம் செல்ல வேண்டும் எனவும் கேட்டுப் பெற்றேன்'' என்றாள்.
''வாக்கினால் வரம் தரக் கொண்டு மைந்தனைப்
போக்கினேன் வனத்திடைப் போக்கிப் பர் உனக்கு
ஆக்கினேன் அவன் அது பொறுக்கலாமையால்,
நீக்கினான் தன் உயிர் நேமி வேந்து'' என்றாள்.
பரதன் தன் தாய் கைகேயியின் கூற்றினைக்கேட்டு சினமுற்றான். ''அன்னையே, என்ன காரியம் செய்தாய். உன் பேரசையால் தந்தை உயிர் துறந்தார். அண்ணனைக் கானகம் அனுப்பிவிட்டு நான் அரச பதவியில் அமர்வேன் என்று நீ நினைத்தாயா? இப்பொழுதே வனம் சென்று இராமனை அழைத்து வந்து முடி சூட்டுவேன்'' என்று சீற்றத்துடன் பேசினான், பின் கோசலையைக் காண விரைந்தான்.
பரதன் கோசலையின் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கோரினான்.
தைலம் பூசிப் பாதுகாக்கப்பட்டிருந்த தயரதனின் உடலைக் கண்டு பரத சத்ருக்கனர் கண் கலங்கினர். தசரதச் சக்கரவர்த்திக்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது.
அரசன் இல்லாமல் நாடு இருக்கக்கூடாது. எனவே பரதன் முடி சூட வேண்டும் குலகுரு வசிட்டரும், அமைச்சர்களும் கூறினர், பரதன் ''வசிட்டரே! நான் கானகம் சென்று தமையன் இராமன் கால்களில் விழுந்து, அயோத்தி அரசனாக முடி சூட்டிக்கொள்ள வேண்டும் படி கேட்கப் போகிறேன். நான் கானகம் சென்று இராமனை அழைத்து வரப் போகிறேன்” என்னோடு வருபவர்கள் வரலாம்'' என்றான்.
அவையோரும், மக்களும் பரதனின் நல் உள்ளத்தினைக் கண்டு போற்றினர். மறு நாள் பரத சத்ருக்கனரோடு, வசிட்டரும், மற்ற அமைச்சர்களும் இராமனைக் காண கானகம் புறப்பட்டனர். அவர்களோடு கோசலையும், சுமந்திரையும் சென்றனர். தன் தவற்றினை உணர்ந்த கைகேயியை கோசலை மன்னித்து, அவளையும் தன்னுடன் வரும் படி கூறினாள்.
பரத சத்ருக்கனனோடு, அயோத்தி நகரமே பின் சென்றது. பெரும் படை பரதனின் தலைமையில் வருவதனைக் கண்ட குகன், சந்தேகமுற்றான். தன் படை வீரர்களிடம் ''பரதன் பெரும் படையோடு வருகின்றான். நான் அவர்களிடம் சென்று பேசுகின்றேன். நல்ல எண்ணத்துடன் வந்திருந்தால் ஓடம் கொண்டு ஆற்றினைக் கடக்க உதவுவோம், இராமன் கானகம் சென்றது போதாது, அவனை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்திருந்தால், நாம் அவர்களை இங்கேயே அழித்து விடுவோம்” என்றான்.
குகன் பரத சத்ருக்கனர் அருகே சென்றான். இருவரும் சோகமே உருவாகக் களையிழந்து காணப்பட்டனர். மரவுரி தரித்து, இராம இலக்குவரின் தோற்றத்தினைக் கொண்டு பரத சத்ருக்கனர் நின்றிருந்தனர். குகன் தான் தவறாக எண்ணியமைக்காக வருந்தினான். இராமருடைய சகோதரர்கள் தவறு செய்வார்கள் என்று எண்ணியது தவறானது என உணர்ந்தான். அவர்களைக் குகன் வரவேற்றான்.
பரதனின் நல் உள்ளத்தினை உணர்ந்த குகன், அவர்கள் அனைவரும் ஆற்றினைக் கடக்க ஓடம் கொடுத்து உதவினான். அனைவரும் பரத்வாஜ ஆசிரமத்தை அடைந்தனர். பரத்வாஜர் அவர்களை வரவேற்று, இராமர் சென்ற சித்திரக்கூட மலையைப் பற்றிக் கூறினார்.
பரதன் முன்னே சத்ருக்கனோடு செல்ல படை பரிவாரங்கள் பின்னே வந்தன. பெரும் ஆரவாரத்தோடு மக்கள் கூட்டம், சித்திரக்கூட மலை நோக்கி விரைந்தது. வனத்தில் ஒரே புழுதிப் படலம். இராமர் இலக்குவனிடம், ''இலக்குவா!, மான்களும், முயல்களும் நாலாப்புறமும் ஓடி வருகின்றன. மன்னர் யாராவது வேட்டையாட வருகிறார்களா என மரத்தில் ஏறிப்பார்'' என்றார்.
இலக்குவன் மரத்தில் ஏறிப் பார்த்தான். பெரும் படையோடு பரதன் வருவதைக் கண்டான். இராமனிடம், ''அண்ணா பரதன் காட்டிலும் நம்மை நிம்மதியாக இருக்கவிடாமல் படையெடுத்து வருகின்றான்'' என் சினத்துடன் கூறினான்.
இராமர் இலக்குவனிடம் ''பரதன் நம் சகோதரன். அவன் நம் மேல் பாசம் அதிகம் கொண்டவன். என்னை அயோத்திக்கு அழைத்துச் செல்ல வேண்டி வந்திருப்பான்'' என்றார்.
இராமனின் கூற்றினைக் கேட்டு இலக்குவன் அமைதியானான். இராம இலக்குவரைப் பார்த்து, பரதனும் சத்ருக்கனும் அன்புடன் தழுவிக் கொண்டனர். பரதன் இராமரின் கால்களில் விழுந்தான். இராமர் பரதனின் விழி நீரைத் துடைத்து சமாதானம் செய்தார்.
இராமர், பரதனிடம் ''பரதா! நம் தந்தை நலமா?'' எனக் கேட்டார்.
''அண்ணா! உங்களைப் பிரிந்த சோகத்தாலும், என் தாயின் வரத்தாலும் நம் தந்தை உயிர் துறந்தார்'' என்றான் பரதன்.
இராமர், தந்தையின் மறைவை அறிந்து செயலற்று கீழே சரிந்தார். பரதன் அவரை சமாதானம் செய்தான். சத்ருக்கனன் இலக்குவனைத் தழுவிக் கொண்டான். சீதை கண்ணீர் பெருக்கோடு நின்றிருந்தாள்.
இராமன் தந்தையின் மறைவை எண்ணி பலவாறு அழுது புலம்பினான். தன் தாய்மார்களிடம் தந்தையின் பிரிவினை எண்ணி வருந்தினார். வசிட்டர், இராமனைத் தேற்றினார். அவர் வாழ்வின் இரு நிலைகளைக் கூறினார். ''பிறந்த அனைவரும் ஓர் நாள் இறந்தே ஆக வேண்டும். இதை நீ மறக்கலாமா?'' என்றார்.
''துறத்தல் நல் அறத் துறையும் அல்லது
புறத்து ஒரு துணை இலை பொருந்தும் மன்னுயிர்க்கு,
இறத்தலும் பிறத்தலும் இயற்கை என்பதை
மறத்தியோ மறைகளின் வரம்பு கண்ட நீ?''
வசிட்டர் இராமரை தந்தைக்கு நீர்க் கடன் செலுத்தச் சொன்னார். இராமனும் தந்தைக்கு செய்ய வேண்டிய நீர்க்கடனைச் செலுத்தினார்.
''செறி திரைப் புனலில் செய்க என நின்றனர். இராமனும் நெறியை நோக்கினான்''
இராமர், இலக்குவன், சீதை மூவரும் நதி நீரில் நீராடினர். பிறகு, பரதன் இராமனிடம், ''அண்ணா! நீங்கள் மூவரும் இங்கே இருந்தது போதும். எங்களோடு அயோத்திக்கு வாருங்கள். நீங்களே அயோத்தியின் அரசனாக முடி சூட வேண்டும். நீங்கள் தந்தையின் சொல்லைக் காப்பாற்றிவிட்டீர்கள்'' என்றான்.
இராமரின் பதிலுக்காக அனைவரும் காத்திருந்தனர். இராமர், பரதனிடம், ''தந்தையின் மறைவினால் அவர் சத்தியம் மறையாது. நீ நாடாளவும், நான் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்யவும் அவர் சத்தியம் செய்துள்ளார். அச்சத்தியத்தினை நாம் காப்பாற்ற வேண்டும். நீ அயோத்தி சென்று மன்னனாக முடி சூடி அரச தர்மத்தினைக் காப்பாற்ற வேண்டும். நான் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடித்த பின் நிச்சயம் வந்து மணிமுடி சூடிக் கொள்கின்றேன்'' என்று உறுதியாகக் கூறினார்.
வசிட்டரும் இராமரின் மனத்தினை மாற்ற முயற்சித்தார். ஆனாலும் இராமர் தன் முடிவில் உறுதியாக இருந்தார். பரதனிடம் ''பரதா! தந்தை கூறிய படி நீ நாடாளும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்'' என்றார் இராமர்.
பரதன் ''அண்ணலே! உங்கள் பாதுகைகளை தாருங்கள். அவற்றினை அரியணையில் வைத்து உங்கள் சார்பாக நான் ஆட்சி செய்கின்றேன். பதினான்கு ஆண்டுகள் முடித்து அடுத்த நாள் நீங்கள் வரவில்லை என்றால் நான் அக்னிப் பிரவேசம் செய்வேன். நீங்கள் வந்த பிறகே எங்கள் வாழ்வில் ஒளி வீசும்'' என்றான்.
இராமனின் இரண்டு பாதுகைகளைத் தலையில் வைத்துக் கொண்டு பரதன் அயோத்திக்குப் புறப்பட்டான்.
''அடித் தலம் இரண்டையும் அழுத கண்ணினான்
முடித் தலம் இவை என முறையின் சூடினான்
படித் தலத்து இறைஞ்சினான் பரதன் போயினான்
பொடித் தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான்''
அயோத்தியில் பரதன் இராமனின் பாதுகைகளை சிம்மாச்சனத்தில் வைத்து பட்டாபிஷேகம் செய்வித்தான். அருகில் உள்ள நந்தி கிராமத்தில் தங்கி இராமனின் பிரதிநிதியாக பரதன் சிறப்பாக ஆட்சி புரிந்தான்.சத்ருக்கனன் பரதனுக்கு உறுதுணையாக இருந்தான்.
இராமர் சித்திரக்கூட மலையைவிட்டு தெற்கு நோக்கி பயணத்தைத் தொடர முடிவு செய்தார். இப்பகுதியை நாட்டு மக்கள் அறிந்ததால் மீண்டும் அவர்கள் வர வாய்ப்புண்டு. எனவே இவ்விடம் விட்டு நீங்கி அடர்ந்த வனத்துள் செல்ல முடிவு செய்தார். அவர்களின் பயணம் தொடர்ந்தது.

Comments
Post a Comment