திருத்தணி சுப்ரமணியசுவாமி திருக்கோவில்
இத்தலம் 365 படிக்கட்டுகளைக் கொண்டு ஆண்டின் 365 நாட்களைக் குறிக்கின்றது. இவ்வாலயம் ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டதாகும். அருணகிரி நாதரால் பாடல் பெற்ற தலம் இதுவாகும். முருகனின் அறுபடை வீடுகளில் மிகப் பழமையான கோவில் இது என கூறப்படுகிறது.
முருகப் பெருமான் சினம் தணிந்து அருளும் தலம் என்பதால், திருத்தணியில் சூரசம்ஹார விழா நடைபெறுவதில்லை. இத்தலத்தின் தல விருட்சம் மகுட மரம் ஆகும். தீர்த்தம்- சரவண பொய்கை, இந்திர தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் என வழங்கப்படுகிறது.
முருகப் பெருமான் வள்ளியை மணம் புரிந்த வரலாறு;
திருத்தணி மலைப் பகுதியில் உள்ள அடர்ந்த வனத்தில் வேடர்கள் குழுவாக வசித்து வந்தனர். அவ்வேடர் குழுவின் தலைவனாக நம்பிராஜன் இருந்தான். ஒரு முறை நம்பிராஜன் தன் மனைவியோடு காட்டு வழியில் வரும் பொழுது, வள்ளிக் கொடியின் அடியில் அழகிய பெண் குழந்தை இருப்பதைக் கண்டான். மனம் மகிழ்ந்த நம்பிராஜன் அழகிய அப்பெண் குழந்தைக்கு வள்ளி எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தான். பருவ வயதினை அடைந்த வள்ளி, தினைப்புனம் காத்து வந்தாள். அவளை மணம் புரிய வேண்டி முருகப் பெருமான், முதியவர் வடிவில் வந்தார். வள்ளியைக் கண்டு காதல் கொண்டார்.
முருகப் பெருமான் வள்ளியைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் கொண்டார். எனவே வள்ளியை மணந்து கொள்ள தனக்கு உதவுமாறு, தன் அண்ணன் கணேசனிடம் விண்ணப்பம் செய்தார். விநாயகப் பெருமானும் தன் தமையனுக்கு உதவ ஒப்புக் கொண்டார். அதன் படி யானை வடிவங்கொண்டு வந்து, வள்ளியை பயமுறுத்தினார். வள்ளி பயந்து முதியவர் வடிவில் இருந்த முருகனைத் தழுவிக் கொண்டாள். பின் முதியவர் வடிவில் வந்திருப்பது முருகப் பெருமான் என அறிந்து அவரோடு இணந்தார். முருகப் பெருமான், வள்ளி திருமணம் இனிதே நடைபெற்றது. வள்ளியை பயமுறுத்திய விநாயகர் "ஆப்தசகாய விநாயகர்" என அழைக்கப்படுகிறார்.
திருத்தணி மலையின் இரு பக்கங்களிலும் மலைத் தொடர்ச்சி பரவியுள்ளது. வடக்கே உள்ள மலை வெண்மையாக இருப்பதனால் பச்சரிசி மலை என்றும், தெற்கே உள்ள மலை கருநிறமாக இருப்பதால் புண்ணாக்கு மலை என்றும் அழைக்கப்படுகிறது. சரவணப் பொய்கை என்னும் தீர்த்தம் மலை அடிவாரத்தில் உள்ளது.
இத்தலத்தில் முருகப் பெருமான் வலக்கையில் சக்தி வடிவம் கொண்ட வஜ்ரவேலுடன் அருட்காட்சி அளிக்கிறார். மற்ற கோவில்களில் உள்ளது போன்று இத்தல முருகனிடம் வேல் கிடையாது. அலங்காரத்தின் போது மட்டுமே தனியே வேல், சேவல் கொடி வைக்கின்றனர். வள்ளி, தெய்வானை இருவருக்கும் தனித்தனியே சந்நிதிகள் உள்ளன.
"குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்" என்னும் முதுமொழிக்கேற்ப, திருத்தணியில் வீற்றிருக்கும் முருகப் பெருமானை வணங்கி, வாழ்வில் நன்மைகள் பல பெறுவோமாக.
Comments
Post a Comment