ஔவையும் முருகனும் - AVVAIYAR MURUGAN
தமிழ் போற்றும் பெண்பாற் புலவர் ஔவையார். இவரின் சிறப்பியல்புகள் எண்ணற்றவை. தமிழறிவுடன் பிறந்த ஔவை கவி பாடுவதில் வல்லவர். அறம், பொருள், இன்பம், வீடு என அனைத்தும் உணர்ந்தவர். தமிழ் இலக்கிய வரலாற்றில் ஔவையார் என்ற பெயரில் பெண்பாற் புலவர்கள் பலர் இருந்துள்ளனர். முருகனுடன் பாடி உள்ளம் மகிழ்ந்த ஔவை சங்க காலத்தைச் சேர்ந்தவர். இவர் அதியமான் காலத்தைச் சார்ந்தவர். பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் "கொன்றை வேந்தன்" என்னும் நீதி நூலை எழுதி உள்ளார்.
முருகப் பெருமான் மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து, ஔவையுடன் நிகழ்த்திய உரையாடல் பொருட் சுவை மிகுந்தது.
ஔவைப் பிராட்டி பாத யாத்திரையாக பல ஊர்களுக்கும் சென்று கவி பாடும் பண்பாளர். ஒரு நாள் ஔவைப் பாட்டி அவ்வாறு சென்று கொண்டிருக்கும் போது, ஒரு நாவல் மரத்தின் அடியில் களைப்புடன் அமர்ந்தார். நெடுந் தொலைவு பயணம் செய்து வந்ததில் அவருக்கு பசி எடுத்தது. அப்போது பசுமையான அந்த நாவல் மரத்தின் கிளையின் மேல், மாடு மேய்க்கும் சிறுவன் அமர்ந்திருந்தான்.
ஔவைப் பாட்டி, மரத்தின் மேல் இருந்த சிறுவனைப் பார்த்து, "தம்பி! ஒரு கிளையை உலுக்கு. அதிலிருந்து விழும் பழத்தை எடுத்து உண்டு என் பசியை ஆற்றிக் கொள்வேன்" என்றார். உடனே அச்சிறுவன் "பாட்டி! உனக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?" என்றான்.
ஔவைப் பாட்டி சிரித்துக் கொண்டே "மரத்தில் கனிந்த பழம் எங்ஙனம் சுடும்? பழம் பறித்துப் போடு" என்று சிறுவனை நோக்கிக் கூறினார். மாடு மேய்க்கும் சிறுவன் மரத்தின் கிளையை உலுக்கினான். பழங்கள் உதிர்ந்து மண்ணில் விழுந்தது. அப்போது ஔவைப் பாட்டி ஒவ்வொரு பழமாக எடுத்து அதிலுள்ள மண்ணை நீக்க வேண்டி, ஊதி ஊதி சாப்பிட்டார்.
அப்போது மரக்கிளையில் அமர்ந்திருந்த அச்சிறுவன் "பாட்டி! பழம் சுடுகிறதா?" என்று கேட்டான். சிறுவனின் மதி நுட்பத்தைக் கண்டு ஔவைப் பாட்டி வியந்தார்.
பின் மாடு மேய்க்கும் சிறுவன் முருகப் பெருமானாக மாறி ஔவைப் பாட்டிக்கு காட்சி அளித்தார். முருகப் பெருமான் ஔவையின் மூலம் அறக் கருத்துக்களை உலகுக்கு உணர்த்த எண்ணினார். எனவே ஔவையிடம் "கொடியது எது? இனியது எது? பெரியது எது? அரியது எது?" என்னும் வினாக்களைக் கேட்டார். இவ்வினாக்களுக்கு ஔவை தந்த பதில் வாழ்வியல் நெறிகளை உலகுக்கு எடுத்துச் சொல்வவையாக உள்ளன.
கொடியது இளமையில் வறுமை, இனியது அறிவுள்ள சான்றோர் சூழ இருப்பது, பெரியது தொண்டரின் பெருமை, அரியது மானிடராய் பிறத்தல்.
அரியது என்பதில் மானுடராய் பிறத்தல் அரிது. அதிலும் ஊனம் இல்லாமல் பிறத்தல் அரிது. அதைக் காட்டிலும் அவன் கல்வி பெற்று இருப்பது அரிது. அதனிலும் அரிது அவனது ஈகைத் திறன் என்று கூறியுள்ளார்.
"அரியது கேட்கின் வரிவடிவேலோய்
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது:
மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது;
பேடு நீங்கிப் பிறந்த காலையும்,
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;
ஞானமும் கல்வியும் நயத்த காலையும்,
தானமும் தவமும் தாம் செயல் அரிது;
தானமும் தவமும் தாம் செய்வாராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே!"
Comments
Post a Comment