கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்தல்
சின்னக் கண்ணனின் குறும்புகள் அனைத்துமே படிப்பவர், கேட்பவர் என அனைவர் உள்ளத்தையுமே கவரக்கூடியது என்றால் அது மிகையாகாது. கிருஷ்ணரின் கதைகளில் ஒன்றினை இப்பதிவில் காண்போம்.
விருந்தாவனத்தின் ஆயர்கள் இந்திரனுக்காக ஏற்பாடு செய்திருந்த யாகத்தினை கிருஷ்ணர் தடுத்து விட்டார் என அறிந்த இந்திரன் மிகவும் கோபம் கொண்டான். எனவே இந்திரன் தனது கோபத்தை விருந்தாவனத்தின் மக்கள் மீது காட்டினான். யாகம் நிறுத்தப்பட்டதற்கு கிருஷ்ணரே காரணம் என இந்திரன் அறிந்திருந்தாலும், நந்த கோபர் ஆட்சியின் கீழ் உள்ள மக்களின் மேல் தன் கோபத்தைக் காட்டினான்.
தானே மூவுலகுக்கும் அதிபதி என்ற கர்வம் கொண்டவனும், கோபம் கொண்டவனுமான இந்திரன் பிரளயத்தைச் செய்யக் கூடியதுமாண "ஸாம் வர்த்தகம்" என்னும் மேகக் கூட்டத்தை அழைத்தான். விருந்தாவணத்தின் மேல் படர்ந்து அப்பகுதி முழுவதையும் பெரு வெள்ளத்தில் மூழ்கடிக்கும் படி இந்திரன் "ஸாம் வர்த்தக" மேகத்துக்குக் கட்டளையிட்டான்.
இவ்வாறு இந்திரனால் கட்டளையிடப்பட்டு ஏவப்பட்ட மேகக் கூட்டங்கள், பெரு மழையாக நந்த கோபரின் ஆட்சியின் கீழ் உள்ள கோகுலத்தைப் பீடித்தன. மின்னல்கள் பளிச்சிட்டன. இடிகள் பெரு முழக்கம் செய்தன. ஆலங்கட்டி மழை மிக வேகமாகப் பொழியத் தொடங்கியது. இடைவிடாத மழையினால், மேடு பள்ளம் தெரியாத அளவுக்கு பூமியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மழையினாலும், அதிகமான காற்றினாலும் நடுக்கம் அடைந்த மக்கள் கிருஷ்ணரைச் சரணடைந்தார்கள். ஆநிரைக் கூட்டங்கள் குளிரினால் நடுங்கியபடி இருந்தன. கோகுலம் முழுமையும் கல் (ஆலங்கட்டி மழை) மழையினால் அழிக்கப்படுவதைக் கண்ட கிருஷ்ணர், அந்தக் கொடிய மழை இந்திரனாலேயே பொழியப்படுகிறதென்று அறிந்து கொண்டார். எனவே கோகுலத்தையும், அம்மக்களையும் காக்கும் பொறுப்பு தன்னுடையதே என உறுதி கொண்டார்.
கிருஷ்ணர் ஒரு கையினால் கோவர்த்தன மலையைப் பெயர்த்து, சிறு குழந்தை குடையை விளையாட்டாக பிடிப்பதைப் போல தூக்கினார். பிறகு அவர், விருந்தாவனத்தின் மக்களை நோக்கி, "கோகுலவாசிகளே! பசுக்களுடன் நீங்கள் இந்த மலைக்குக் கீழேயுள்ள இடத்திற்கு வாருங்கள். என் கையில் ஏந்தியுள்ள இந்த கோவர்த்தன மலை, எங்கே எப்போது கீழே விழுந்து விடுமோ என்ற பயம் உங்களுக்கு இப்போது வேண்டுவதில்லை. காற்றினாலும், மழையினாலும் நீங்கள் பயந்துள்ளதை அறிந்தே உங்களைக் காப்பாற்றவே, இச்செயலைச் செய்கின்றேன்" என்றார்.
இதனைக் கேட்ட கோகுல மக்கள், பசுக் கூட்டங்களுடன் கோவர்த்தன மலையினடியில் தஞ்சமடைந்தார்கள். இவ்வாறு இரவு பகலாக ஏழு நாட்கள் வரை, கையில் தூக்கிய மலையுடன், வைத்த அடியை பெயர்த்து வைக்காமல் கிருஷ்ணர் நின்றிருந்தார். கிருஷ்ணரின் ஆற்றலைக் கண்டு வியந்த இந்திரன், தன் கர்வத்தை விட்டவனாக மேகக் கூட்டத்தை விலக்கிக் கொண்டான். மழை நின்றது. சூரிய ஒளி எங்கும் பரவியது. காற்றும், மழையும் ஓய்ந்தன.
அப்போது கிருஷ்ணர் கோகுலவாசிகளை நோக்கி, "கோபாலர்களே! அனைவரும் வெளியே வாருங்கள். காற்றும், மழையும் ஓய்ந்து விட்டன. உங்கள் பயத்தை விட்டு விடுங்கள்" என்றார். மக்கள் தங்கள் பசுக்களையும், கன்றுகளையும் ஓட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது கிருஷ்ணர் அந்த மலையை முன் போலவே விளையாட்டாக அது இருந்த இடத்தில் வைத்து விட்டார். கோகுலவாசிகள் மகிழ்ந்தனர். யசோதை, நந்தகோபர் இருவரும் கிருஷ்ணரை ஆசிர்வாதம் செய்தனர். தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர்.
Comments
Post a Comment