ஏகலைவன் (EKALAIVAN)
இந்தியாவின் மாபெரும் இதிகாசங்களுள் ஒன்று மகாபாரதம். குரு பக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறப்படுபவன் ஏகலைவன் ஆவான். ஏகலைவன் மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்களுள் ஒருவன். இவன் மகத நாட்டைச் சேர்ந்த வேடுவர் குலத் தலைவனின் மகன் ஆவான். இவன் வாழ்ந்த இடம் அஸ்தினாபுரத்திற்கு அருகில் இருந்தது. வில் வித்தை கற்றுக் கொண்டு அதில் தேர்ச்சி பெற்றவனாய் விளங்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தான் ஏகலைவன்.
துரோணர்
சிறந்த குரு என்பதனை அறிந்த ஏகலைவன் அவரிடம் சென்று தனக்கு வில் வித்தையைக் கற்றுத் தருமாறு வேண்டினான். துரோணர் தான் ஏராளமான சீடர்களுக்குப் பயிற்சி அளிப்பதால் தனக்கு நேரமில்லை என்று கூறினார். இதனைக்
கேட்ட ஏகலைவன், "பின் தான் எங்ஙனம் வில் வித்தையைக் கற்றுக் கொள்வது" என்று துரோணரிடமே கேட்டான். அதற்கு துரோணர் "உனக்கு என் மீது நம்பிக்கை இருந்தால் நீ எங்கிருந்தாலும் கற்றுக் கொள்வாய்"
என்று கூறி அனுப்பி விட்டார்.
துரோணரின்
உருவச் சிலை
துரோணர்
தன்னை சீடனாக ஏற்காததால், ஏகலைவன் மிகுந்த மன வருத்தத்துடன் தன்
இருப்பிடம் நோக்கிச் சென்றான். "நீ எங்கிருந்தாலும் வில் வித்தையைக்
கற்க முடியும்" என்ற துரோணரின் வார்த்தைகள் அவனுக்கு நம்பிக்கையை அளித்தது. எனவே துரோணரைத் தனது குருவாக் எண்ணி அவரது உருவச் சிலையை செய்தான். அந்த உருவச் சிலையின் முன் தினமும் விற் பயிற்சியை செய்யத் தொடங்கினான் ஏகலைவனின் விடாமுயற்சியும், சிறந்த
அர்ப்பணிப்பும் அவனை அர்ஜுனனை விட சிறந்த வீரனாக ஆக்கியது.
ஏகலைவன் அர்ஜுனன்
சந்திப்பு
ஏகலைவனின்
புகழையும், அவன் வில் வித்தையில் சிறந்து விளங்குவதனையும் அறிந்த அர்ஜுனன், அவனை நேரில்
சென்று பார்த்தான். அப்போது ஏகலைவன் விற்பயிற்சி செய்து கொண்டிருந்தான். துரோணரின்
சிலைக்கு முன்பாக மிகவும் சிரத்தையோடு வில் வித்தை கற்றுக் கொண்டிருந்தான். அப்போது
நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. அவனது கவனம் சிதறியது. குரைப்புச் சத்தம் வந்த திக்கை
நோக்கி அம்புகளை எய்தான். அம்புகள் எல்லாம் நாயின் வாயைச் சுற்றித் தைத்து குரைக்க
முடியாத படி செய்தது.
அர்ஜுனன்
தன்னை விட சிறப்பாக வில் வித்தை புரியும் ஏகலைவனைக் கண்டு ஆச்சரியப்பட்டான். ஏகலைவனிடம் உனது குரு யார் என்று அர்ஜுனன் கேட்டான். ஏகலைவன் "எனது குரு துரோணாச்சாரியார்" என்று பதில் அளித்தான். இதனைக் கேட்டு கோபம் கொண்ட அர்ஜுனன், தன்னை அஸ்தினாபுரத்தின் சிறந்த வீரனாக்குவேன் என்று கூறிய குரு துரோணாச்சாரியாரிடம் சென்றான். அர்ஜுனன் குருவிடம் சென்று, ஏகலைவன் பற்றி முழுவதுமாகக் கூறினான். இதனைக் கேட்ட துரோணர் ஏகலைவனைக் காண வேண்டும் என்ற எண்ணத்துடன் அவன் இருப்பிடம் நோக்கி விரைந்தார்.
குரு
தட்சணை
துரோணாச்சாரியார்
ஏகலைவனின் இருப்பிடத்திற்கு சென்றார். அவரோடு அர்ஜுனனும் சென்றான். ஏகலைவன் தனது குரு துரோணாச்சாரியார் தன் இருப்பிடத்திற்கு வந்ததைக் கண்டு பெரும் மகிழ்ச்சி கொண்டான். அவன் துரோணாச்சாரியாரை அன்புடன் வரவேற்று, அவரை தான் விற்கலை பயிலும் இடத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கு துரோணரின் உருவச் சிலை இருந்தது. ஏகலைவன் துரோணரிடம், "குருவே! நான் உங்கள் சிலையை முன் வைத்தே விற்கலையினைக் கற்றுக் கொண்டேன்" என்று கூறினான். இதனைக் கேட்ட துரோணர், தன் சிலை முன் பயிற்சி பெற்ற காரணத்தால் தனக்கு குரு தட்சிணை வழங்க வேண்டும் என்றார். அதுவும் குரு தட்சிணையாக பணம், பொருள் எதுவும் கேட்காமல், ஏகலைவனின் வலது கை கட்டை விரலைக்
கேட்டார். துரோணரின் மனத்தில் அர்ஜுனனை சிறந்த வில்லாளன் ஆக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்த காரணத்தால், ஏகலைவனின் கட்டை விரலினை குரு தட்சணையாகக் கேட்டார்.
ஏகலைவன்
தனது கட்டை விரலை தியாகம் செய்தல்
வலது
கை கட்டை விரல் இல்லாமல் வில் வித்தை புரிவது சாத்தியமல்ல என்பதை ஏகலைவன் அறிவான். ஆனாலும், குருவிற்காக அவர் கேட்ட தட்சணையாக தனது வலது கை கட்டை விரலை
வெட்டி அவரிடம் கொடுத்தான். இப்படி செய்ததன் மூலம் சிறந்த குரு பக்திக்கு எடுத்துக்காட்டாக ஏகலைவன் விளங்குகிறான். வில் வித்தையில் சிறந்தவனான ஏகலைவன், குரு பக்தியிலும் தன்னிகரில்லா இடத்தினைப் பெற்று அழியாப் புகழ் பெற்றான்.
Comments
Post a Comment