பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் ( BAVANI SANGAMESWARAR TEMPLE)
ஈரோடு
மாவட்டத்தில் உள்ள தொன்மை வாய்ந்த ஆலயங்களில் ஒன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் ஆகும். இவ்வாலயம் தேவாரப் பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலமாகும். இத்தல இறைவர் சங்கமேஸ்வரர், அளகேசன், சங்கமநாதர், மருத்துவலிங்கம், வானிலிங்கேஸ்வரர், வக்கிரேஸ்வரன், நட்டாற்றீஸ்வரன், திருநண்ணாவுடையார் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
கோயிலின் தல விருட்சம் இலந்தை
மரம் ஆகும்.இத்தல அம்மை வேதநாயகி, பவானி, சங்கமேஸ்வரி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி வக்கிரேஸ்வரி எனப் பல பெயர்களில் அன்புடன்
அழைக்கப்படுகிறார்.
இத்தலத்திற்கு பத்மகிரி என்ற பெயர் உண்டு. இதைச் சுற்றிலும் நாககிரி, வேதகிரி, மங்களகிரி, சங்ககிரி உள்ளது. வட இந்தியாவில் கங்கையுடன் யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் தலம் திரிவேணி சங்கமம் என அழைக்கப்படுகிறது. இங்கு சரஸ்வதி கண்ணுக்குத் தெரிவதில்லை. அது போல தென்னகத்தில் காவிரியுடன் பவானி மற்றும் அமுத நதி ஆகிய மூன்று நதிகளும் இத்தலத்தில் சங்கமிக்கின்றன. இதில் அமிர்த நதி கண்ணுக்குத் தெரிவதில்லை.
இந்த
நதியானது பூமிக்கடியில் இருந்து இவ்விடத்தில் சங்கமிப்பதாக ஐதீகம். மூன்று நதிகள் சங்கமிப்பதால் இத்தலம் "தென் திரிவேணி சங்கமம்" என வழங்கப்படுகிறது. எனவே இத்தல
இறைவர் சங்கமேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இத்தலம் வந்து
நீராடி, இறைவனை வணங்குபவர்களுக்கு "யாதொரு தீங்கும் நண்ணாது" (நெருங்காது). எனவே இத்தலத்திற்கு 'திருநணா' என்ற புராணப் பெயரும் உண்டு.
கோவிலின் தென்மேற்கு மூலையில் உள்ள தலவிருட்சம் இலந்தை மரம். இங்கு தான் குபேரனுக்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக தரிசனம் தந்துள்ளார். மூலவர் கிழக்கு நோக்கியும், குபேரன் வணங்கியதால் ராஜ கோபுரம் வடக்கு நோக்கியும் அமைந்துள்ளது. சிவன் சன்னதிக்கு பின்னால் பஞ்ச பூத லிங்கங்கள் உள்ளது. விஸ்வாமித்திரர் நதியின் கரையில் தனியாக லிங்கம் அமைத்து காயத்ரி மந்திரம் சொல்லியதால் இது காயத்ரி லிங்கம் என அழைக்கப்படுகிறது.
நான்கு
வேதங்களும் இங்கு தீர்த்தங்களாக உள்ளது. எனவே இத்தல இறைவனை தரிசித்தால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில்
ஆதிகேசவ பெருமாளுக்கும் சௌந்தரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் உள்ளன. இத்தலம் ஓர் பரிகாரத் தலம் ஆகும். பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து பரிகார பூஜைகளும் இங்கு செய்யப்படுகிறன.
தலபுராணம்
பூலோகத்தில்
உள்ள புனிதத் தலங்களை வணங்க விரும்பிய குபேரன், இந்த தலத்திற்கு வந்தான். இந்த தலத்தில் ஞானிகள், முனிவர்கள், கந்தர்வர்கள் அனைவரும் தவம் செய்வதைக் கண்டான். அத்துடன் மான், பசு, புலி, சிங்கம், யானை, நாகம், எலி ஆகிய அனைத்து உயிரினங்களும் சண்டையின்றி, ஒன்றாக நீர் அருந்துவதுடன், தவம் செய்பவர்களுக்குத் தொந்திரவு கொடுக்காமல் இருப்பதையும் பார்த்து ஆச்சரியமடைந்தான்.
அதில் உள்ளம் உருகிய குபேரன், தவமிருந்து சிவனருள் பெற்ற தலம் இது. அவனது தவத்தில் மகிழ்ந்து, ஹரியும், சிவனுமாக வாந்து அவனுக்குக் காட்சி தந்தருளினர். இறைவன் குபேரனிடம் "என்ன வரம் வேண்டும்" எனக் கேட்க, "அளகேசன் என்னும் உன் பெயரால் இந்த தலம் சிறப்புற்று, உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தந்தருள வேண்டும்" என வேண்டினான் குபேரன். அன்றிலிருந்து இத்தலம் "தட்சின அளகை" என்று பெயர் பெற்றது எனக் கூறுகின்றனர்.
சிறப்புக்கள்
கொண்ட பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரரை வணங்கி நன்மைகள் பல பெறுவோமாக.
Comments
Post a Comment