திருவிடந்தை நித்திய கல்யாணப் பெருமாள் திருக்கோயில்

 சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவிடந்தை என்னும் ஊரில் அமைந்துள்ள பழமையான கோயில் நித்திய கல்யாணப் பெருமாள் கோயில் ஆகும். இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம், திருமணத் தடையை நீக்கும் தலமாக விளங்குகிறது. இக்கோயிலின் புராணப் பெயர் வராகபுரி ஆகும். வராக பெருமாளின் அவதாரத்தைக் குறிக்கும் வகையில் இப்பெயர் அமைந்துள்ளது.

                                


தல வரலாறு

காலவ முனிவர் என்பவர் வராகபுரியில் வாழ்ந்து வந்தார். அவருக்கு 360 பெண் குழந்தைகள் இருந்தனர். 360 பெண்களும் அழகிலும், அறிவிலும் சிறந்து விளங்கியதுடன், வராக மூர்த்தியிடம் மிகுந்த அன்பு கொண்டு திகழ்ந்தனர். தனது பெண்களுக்கு திருமணம் ஆக வேண்டி காலவ முனிவர், வராகப் பெருமாளைப் பிரார்த்தனை செய்து வந்தார். அதற்காக கடுமையான தவம் செய்து வந்தார். ஒரு நாள் வராகப் பெருமாள், பிரம்மச்சாரியாக வந்து காலவ முனிவரின் வேண்டுதலை ஏற்று, தினமும் ஒரு பெண்ணாக 360 நாட்களில் அனைவரையும் மணம் புரிந்து கொண்டார்.

                                  


கடைசி நாளன்று, 360 பெண்களையும் ஒன்றாகச் சேர்த்து "அகிலவல்லி" என்னும் ஒரே பெண்ணாக்கி தனது இடது புறத்தில் நிறுத்தி அனைவருக்கும் காட்சி தந்தார். திருவாகிய மகாலட்சுமியை தனது இடது பக்கத்தில் வைத்து அருள் புரிந்ததால் இத்தலம் திரு-இட-எந்தை என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் இவ்வூர் திருவிடந்தை என்ற பெயர் பெற்றது.

இங்கு வராகப் பெருமாள் தினமும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால், இத்தல உற்சவரின் திருநாமம் "நித்திய கல்யாணப் பெருமாள்" என்றானது. இங்கு உற்சவரின் தாடையில் திருஷ்டிப் பொட்டு உள்ளதாகவும், இதனால் இத்தலத்தில் வழிபட கண் திருஷ்டி அகலும் என்றும் கூறப்படுகிறது. திருமண தோஷம் நீங்க விரும்புவோர் இத்தலத்தில் பரிகாரம் செய்து, திருமண பாக்கியம் பெறுவதாக நம்பப்படுகிறது.

                                    


'கல்யாண விமானம்' என்ற விமானம் கொண்ட இத்தலம் திருமணத்தை விரும்பும் பக்தர்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. திருமணத்தை விரும்பும் பக்தர்கள் இங்கு வந்து வேண்டிக் கொள்ள, நல்ல வரன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

லட்சுமி வராகப் பெருமாள், கோமள வள்ளி தாயாரை வணங்கி சகல நலன்களைப் பெறுவோமாக.

Comments

Popular posts from this blog

நளதமயந்தி கதை (NALA THAMAYANDHI STORY)

சென்டினல் மக்கள் (THE SENTINELESE)

திருப்பாண்டிக் கொடுமுடி (KODUMUDI TEMPLE)