கும்பகர்ணன் வதைப் படலம்
இராவணன் கும்பகர்ணனை அழைத்து வருமாறு பணியாளரை அனுப்பினான். அவர்கள் கும்பகர்ணன் அரண்மனையை அடைந்தனர்.
மலையை ஒத்த கும்பகர்ணன், உறங்கிக் கொண்டிருந்தான். அவன் உறங்கினால், கண் விழிக்க ஆறு மாத காலம் ஆகும். போர் தொடங்கும் முன் தான் அவன் உறங்கினான். பணியாளர்கள் தங்கள் கையில் உள்ள இரும்புத் தூண்களைக் கொண்டு, அவன் செவியிலும், தலையிலும் இடித்தனர். உறங்குகின்ற கும்பகர்ணனைப் பார்த்து இவ்விதம் கூறினர்.
''உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வு எலாம்
இறங்குகின்றது. இன்று காண் ; எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்கு போல வில் பிடித்த கால தூதர் கையிலே
உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்!''
என்ன செய்தும் கும்பகர்ணன் உறக்கம் கலைய வில்லை என இராவணனிடம் பணியாளர்கள் தெரிவித்தனர். இராவணன் அவனை ஆயிரம் மல்லர்களைக் கொண்டு அடித்து எழுப்பச் சொன்னான். உடனே ஆயிரம் மல்லர்கள் கும்பகர்ணனைச் சூழ்ந்தனர். அவர்களும் அவனை எழுப்ப முடியாமல் பின் வாங்கினர். பின் வீரர்கள் அவனைத் துயில் எழுப்ப சங்கு, தாரை முதலியவற்றை உரக்க ஒலித்தனர்.
இராவணன் ஆயிரமாயிரம் குதிரைகளை மிதிக்க விட்டு, எழுப்பும் படிச் சொன்னான். பின் கும்பகர்ணன் புரண்டு படுத்தான். மெல்ல கண் விழித்தான். உறக்கத்திலிருந்து எழுந்ததும் குடம் குடமாக உணவும், கள்ளும் குடித்தான். ஆனாலும் பசி அடங்காதவனாய், மென் மேலும் பசியுடையவனாய் இருந்தான்.
''ஆறு நூறு சகடத்து அடிசிலும்
நூறு நூறு குடம் கள்ளும் நுங்கினான்;
ஏறுகின்ற பசியை எழுப்பினான்;
சீறுகின்ற முகத்து இரு செங்கணான்;''
கும்பகர்ணன், இராவணன் அரண்மனையை அடைந்து தன் தமையனை வணங்கினான். இராவணன் அவனைத் தழுவிக் கொண்டான். பின் உணவு முதலியவற்றை அளித்து, அவனுக்கு போர் கவசம் அணிவித்தான்.
கும்பகர்ணன் ''அண்ணா! போர் ஆயத்தங்கள் எதற்காக?'' எனக் கேட்டான்.
இராவணன் ''தம்பி! மானிடர் இருவர் இலங்கை நகரைச் சுற்றி வளைத்தனர். நீ போய் அவர்களைக் கொன்று, வென்று வா'' என்றான்.
கும்பகர்ணன் ''போர் தொடங்கி விட்டதா? சீதையின் துயரம் இன்னும் தீரவில்லையா? விண்ணும், மண்ணும் வளர்ந்தோங்கிய உன் புகழ் போய் விட்டதா? நம் அழிவு காலம் வந்து விட்டதா?
நான் முன்பே உன்னிடம் கூறினேன் அல்லவா? கற்புக்கரசி சீதையை நீ விடவில்லையா? அவ்வாறு நீ விடாதது விதியின் செயல். பிரம்மனின் மரபிலே, தரும வழி வழுவாத குலத்தின் தன்மை உன் செயலால் அழிந்து விட்டது. அறம் உன்னை விட்டுச் சென்றது.
சீதையை விடுவித்து, இராமனின் திருவடிகளில் சரண் அடைந்து, வீடணனுடன் நட்பு பாராட்டுவதே நாம் உயிர் பிழைக்க வழியாகும். அவ்வாறு செய்ய நீ விரும்பாவிட்டால் கூட்டம் கூட்டமாக நம் படை அழிவதைக் காண்பாய்'' என்றான்.
இராவணன் ''உன்னை அழைத்தது, இனி நடப்பவை பற்றி அறிய அல்ல. அதனைக் கூற நீ
அறிவுடைய அமைச்சனும் அல்ல. நீ அஞ்சுகின்றாய். உன் வீரம் வீணானது. நீ போய் உறங்கு'' என்றான்.
''கூறுவது தெரிய அன்று; உன்னைக் கூயது
சிறு தொழில் மனிதரைக் கோறி சென்று; எனக்கு
அறிவிடை அமைச்சன் நீ
அல்லை அஞ்சினை;
வெறிவிது உன் வீரம்'' என்று இவை விளம்பினான்''
மானிடரையும், குரங்கினையும் வணங்கிக் கொண்டு, உன் தம்பி வீடணனைப் போல் உயிர் வளர்த்துக் கொள். அச்செயலை நான் செய்ய மாட்டேன். உடனே போர்க்களம் செல்ல ஆவன செய்க. நானே செல்கின்றேன் தருக என் தேர் படை என்றான்.
கும்பகர்ணன் ''அண்ணா! நீ செல்ல வேண்டாம். நானே போருக்குச் செல்கின்றேன். விதி என் கழுத்தைப் பிடித்துத் தள்ளும் போது நான் என் செய்வேன்? நான் போரில் தோற்றால் நீ சீதையை விட்டு விடு. அவ்விருவர் என்னை வென்றால், உன்னை வெல்வதும் திண்ணம்.
கொற்றவனே! இது நாள் வரையில் நான் ஏதேனும் தவறு இழைத்திருந்தால் பொறுத்தருள்வாயாக. இனி நான் உன் முகத்தில் விழிப்பது நடவாது. விடை பெறுகின்றேன்'' எனப் போர்க்களம் புறப்பட்டான்.
''இற்றை நாள் வரை, முதல், யான் முன் செய்தன
குற்றமும் உள
எனின் பொறுத்தி; கொற்றவர்
அற்றதால் முகத்தினில் விழித்தல்; ஆரிய!
பெற்றனென் விடை என
பெயர்ந்து போயினான்''
இராவணன் தன் இருபது கண்களிலும் இரத்தக் கண்ணீர் வடித்தான். செவ்விழி நீரோடு குருதி தேக்கினான். கும்பகர்ணன் நகர வாயிலை அடைந்தான். அவன் முன் செல்ல உணவும், கள்ளும் கொண்டு பணியாளர்கள் பின் சென்றனர். அவனுடன் பெரும் படை சென்றது.
இராமன், தேரில் வந்த கும்பகர்ணனைப் பார்த்து ''மேரு மலையைப் போல இருக்கும் இவன் யார்?'' என வீடணனைக் கேட்டான்.
வீடணன் ''இவன் இராவணனுக்குத் தம்பி. எனக்கு அண்ணன். திருமால் துயில் நீங்கி எழுந்தால் அசுரர் இறப்பர். இவன் துயில் நீங்கி எழுந்தால் தேவர் இறப்பர். அத்தகைய ஆற்றல் உடையவன். இவன் இவ்வளவு நாள் தூங்கியதால் உலகு பிழைத்தது. இராவணன் சீதையைக் கவர்ந்தது தவறு எனப் பல
முறைக் கூறியவன். இராவணன் கேளாமையால் இன்று காலன் முன் எய்தினான்'' எனறான்.
வீடணனின் கூற்றினைக் கேட்டு கும்பகர்ணனை, நம்முடன் சேர்த்துக் கொள்ளலாம் என சுக்ரீவன் கூறினான். இராமனும் அது சரி என்று வீடணனை, கும்பகர்ணனிடம் போய் பேசுமாறு அனுப்பினான்.
வீடணன் கும்பகர்ணிடம் சென்று அவனை வணங்கினான். கும்பகர்ணன் அவனை ஆரத் தழுவிக் கொண்டான்.
''வீடணா! தவசீலனான இராமனோடு சேர்ந்து, நீ அறம் வளர்த்தாய் என நான் பெருமை கொண்டேன். ஆனால் இப்பொழுது நீ தனியாக எங்கள் பக்கம் வரக் காரணம் என்ன?'' எனக் கேட்டான்.
வீடணன் ''அண்ணா! நீ இராமனை அடைக்கலமாக அடைந்தாயானால் அவன் உனக்கு அருள் புரிவான். உன் இளமைக் காலம் தூக்கத்தில் கழிந்தது. இனி தீமைக்காகப் போரிட்டு அழியப் போகின்றாயா? நீ இராமனை அடைந்தால் அவன் உனக்கு இலங்கையையும், அதன் செல்வத்தையும் அளிப்பான். பிறவி என்னும் தளை நீங்க உதவுவான். இன்பம், துன்பம் என மாறிமாறிச் சுழலும் இம்மாய வாழ்க்கையிலிருந்து விடுவித்து முக்தி அளிப்பான். இம்மைக்கும், மறுமைக்குமான பேற்றினை நமக்கு வழங்குவான். எனவே நீ இராமனைக் காண வருவாயாக!'' என்றான்.
''வேத நாயகனே! உன்னைக் கருணையால், வேண்டி விட்டான்
காதலால், என் மேல் வைத்த கருணயால், கருமம் ஈதே;
ஆதலால் அவனைக் காண, அறத்தோடு திறம்பாது, ஐய!
போதுவாய் நீயே என்னப் பொன் அடி இரண்டும் பூண்டான்''
கும்பகர்ணன் ''தம்பி! என்னை இவ்வளவு காலம் அருமையாக வளர்த்து, இன்று எனக்குப் போர்க்கோளம் அணிவித்து, என்னை நம்பி, சென்று வா! என்று அனுப்பிய இராவணனுக்காக என்னுயிரை வழங்காமல், நீரில் போட்ட கோலம் போல நிலையில்லாத செல்வ வாழ்க்கையை விரும்பி நான் இராமனுடன் சேர மாட்டேன்.
''நீர் கோல வாழ்வை நச்சி, நெடிது நாள் வளர்த்துப் பின்னைப்
போர்க் கோலம் செய்து விட்டாற்கு உயிர் விடாது, அங்கு போயின்
தார்க் கோல மேனி மைந்த என
துயர் தவிர்த்தி ஆகின்
கார் கோல மேனியானைக் கூடுதி கடிதின் ஏகி"
நீ பிரம்ம குலத்தின் அறத்தை வளர்த்தாய். அதனால் நீ இராமனைச் சேர்வது முறையானது. இராவணன் எனக்கு செய்த செஞ்சோற்றுக் கடனுக்காக அவனுக்கு முன் என் உயிரை விடுவதே சரியானது. உற்ற துணையாக தம்பி இருந்தும், யாருமற்றவனாக இராவணன், இராமனின் அம்பு பட்டு இறப்பதைப் பார்க்கவும் என்னால் முடியமா? எனவே நீ இராமனின் பக்கம் செல். எனக்காக நீ வருந்தாதே'' என்றான்.
கும்பகர்ணன் கண்ணிருடன் வீடணனுக்கு விடை கொடுத்தான். வீடணன் இராமனை அடைந்தான்.
வீடணன் ''அண்ணலே! எவ்வளவோ எடுத்துக் கூறியும் கும்பகர்ணனின் குலத்து மானம் தீரவில்லை'' என்றான்.
இராமன் ''வீடணா! உன் முன்னால் உன் அண்ணனைக் கொல்வது முறையாகா. எனவே நீ இவ்விடம் விட்டு அகல்வாயாக'' என்றான்.
போர் தொடங்கியது. அரக்கர் சேனையும், வானர சேனையும் மோதிக் கொண்டது. யானைகளும், குதிரைகளும் ஓட எங்கும் புழுதி படலமாகக் காட்சியளித்தது. எங்கும் இரத்த ஆறு ஓடியது. கும்பகர்ணன் வானரப் படையைக் கடுமையாகத் தாக்கினான். நீலன், அங்கதன் ஆகியோர் கும்பகர்ணனின் அடி தாங்காமல் கீழே விழுந்தனர். பின் அனுமன் வந்தான்.
அனுமன் கும்பகர்ணன் மேல் குன்றினை வீசினான். தன் தலையில் பட்ட மலையையே கும்பகர்ணன் அனுமன் மேல் வீசினான். அனுமன் கடுஞ்சினத்துடன் மற்றோர் மலையைப் பெயர்த்து தூக்கி வீச, கும்பகர்ணன் மேல் விழுந்து அம்மலை தூள் தூளாகியது.
''மாருதி, வல்லை ஆகின், நில், அடா! மாட்டாய் ஆகின்
பேருதி, உயிர் கொண்டு என்று பெருங்கையால் நெருங்க விட்ட
கார் உதிர வயிரக் குன்றைக் காத்திலன்; தோள் மேல் ஏற்றான்
ஓர் உதிர நூறு கூறாய் உக்கது, எவ் உலகும் உட்க''
கும்பகர்ணனின் ஆற்றல் கண்டு தேவர்களூம் அஞ்சினர். அவன் வானரப் படையைத் தாக்கி அழித்தான். எங்கும் குருதி பாய்ந்தது. கும்பகர்ணன் பூதாகரமாய் திரிந்தான். அவன் காலில் மிதிபட்டு யானை, குதிரை, வானர வீரர்கள் என எல்லாம் நசுங்கின. வானரர்கள் அங்கும் இங்கும் ஓடினர்.
சுக்ரீவன் கும்பகர்ணனைத் தாக்க இருவருக்கும் கடுமையான போர் நிகழ்ந்தது. சுக்ரிவன் தாக்குப் பிடிக்க முடியாமல் மயங்கி விழுந்தான். கும்பகர்ணன் அவனைத் தூக்கிக் கொண்டு இலங்கை நகர் கோட்டைக்குள் நுழைய முற்பட்டான். அப்பொழுது இராமன் அதனைத் தடுக்க அவ்விடம் வந்தான். இராமன் எய்த அம்பு மழையினால், கோட்டை வாசலில் அம்புகளினால் சுவர் உண்டானது போல தடுப்பு எழும்பி கும்பகர்ணனை வழி மறித்தது.
கும்பகர்ணன், சுக்ரீவனை தோளில் வைத்துக் கொண்டே, திரும்பி இராமனுடன் போரிட வந்தான். இராம பாணம் கும்பகர்ணனின் நெற்றியைத் தாக்கியது. அவன் நெற்றியில் பட்ட அம்பினால் இரத்தம் வழிந்தது. அந்த இரத்தம் சுக்ரீவன் மேல் பட, அவன் மயக்கம் தெளிந்து, கும்பகர்ணனின் மூக்கு, செவி இரண்டையும் அரிந்தான். பின் ஒரே பாய்ச்சலாக அவன் தோளிலிருந்து அகன்றான். ஆத்திரமடைந்த கும்பகர்ணன், சரமாரியாக வானரர்களைத் தாக்கினான். இராமனின் அம்பு அவன் தேர், வாள் என அனைத்தையும் பறித்தது. கும்பகர்ணன் ஆயுதம் இன்றி தனியனாக நின்றான்.
இராமன் ''கும்பகர்ணா! நீ
ஆயுதம் இன்றி தனியனாக நிற்கின்றாய். ஆயுதமில்லாத ஒருவனை நான் தாக்கி அழிக்க விரும்பவில்லை. நீ இப்பொழுது இவ்விடம் விட்டு போகிறாயா? பிறகு வருகிறாயா? அல்லது போரிட்டு சாகிறாயா?'' எனக் கேட்டான்.
''ஏதியோடு எதிர் பெருந்துணை இழந்தனை; எதிர் ஒருதனி நின்றாய்!
நீதியோனுடன் பிறந்தனை ஆதலின், நின் உயிர் நினக்கு ஈவன்;
போதியோ? பின்றை வருதியோ? அன்று எனின் போர்புரிந்து இப்போதே
சாதியோ? உனக்கு உறுவது சொல்லுதி சமைவுறத் தெரிந்து அம்மா!''
கும்பகர்ணன் ''என் தங்கை போல மூக்கிழந்து வாழ்தல் இயலாது. இராவணனிடம் சீதையை விட்டு விடு என்று கூறி வாக்கினை இழந்தேன். இப்பொழுது மூக்கினை இழந்து என்னால் வாழ இயலாது. என் மூக்கும் செவியும் இல்லாமல் என்னால் இலங்கை நகர் திரும்ப இயலாது'' என்று கூறி பெரு மலையைத் தூக்கி வீசினான். இராமன் தன் அம்பினால் அதனைத் தூளாக்கினான். இராமனின் அம்புகள் கும்பகர்ணனின் கைகள், கால்கள் என எல்லாவற்றையும் துண்டாக்கியது.
கும்பகர்ணனின் மார்பில் இராமன் அம்பெய்தான். ஆனால் அவன் சிவகவசம் அணிந்திருந்ததால் அதனை இராம பாணம் துளைக்க முடியவில்லை. பின் இராமன் தன் வில்லில் சிவ கணையைப் பூட்டி அவன் மேல் விடுத்தான். அது அவன் மார்பைத் துளைத்தது.
கும்பகர்ணன் ''இராமா, மூக்கில்லாத முகம் என்று என்னை ஒருவரும் கூறல் ஆகாது. எனவே என் தலையைத் துண்டித்து கடலில் போட்டு விடு'' என்று வரம் கேட்டான்.
''மூக்கிலா முகம் என்று முனிவர்களும் அமரர்களும்
நோக்குவார் நோக்காமே நோன்கணையால் என் கழுத்தை
நீக்குவாய்; நீக்கியபின் நெடுந்தலையைக் கருங்கடலுள்
போக்குவாய்; இது நின்னை வேண்டுகின்ற பொருள் என்றான்''
இராமனும் அவன் வரத்திற்கு இசைந்து, அவன் தலையைத் தன் அம்பினால் துண்டாக்கி கடலில் போட்டான். தலை கடலில் மூழ்கியது. கும்பகர்ணன் இறந்த செய்தியை இராவணனிடம் கூற ஒற்றர்கள் விரைந்தனர்.
Comments
Post a Comment