மகாபாரதத்தில் அம்பை (AMBA IN MAHABHARATA)
இந்தியாவின் மாபெரும் இதிகாசங்களில் ஒன்று மகாபாரதம். இதில் வரும் பெண் கதாபாத்திரமாகிய அம்பை பற்றி இப்பதிவில் காண்போம். அம்பை காசி மன்னனின் மூத்த புதல்வி ஆவார். அம்பிகா, அம்பாலிகா என்போர் இவளது தங்கைகளாவர். காசி மன்னன் தன் புதல்விகள் மூவருக்கும் திருமணம் செய்விக்க வேண்டி, சுயம்வரம் ஏற்பாடு செய்தார். பல அரசர்கள் காசிக்கு வந்திருந்தார்கள். அஸ்தினாபுரத்தில் இருந்து விசித்திரவீரியனும், அவனுக்குத் துணையாக பீஷ்மரும் காசிக்குச் சென்றிருந்தார்கள்.
விசித்திரவீரியன் இளைஞன் ஆதலால் அவனை அரசனாக வைத்து, அரச காரியங்களையெல்லாம் பீஷ்மரே செய்து வந்தார். பீஷ்மருடைய சொல்லை வேதவாக்காக ஏற்று விசித்திரவீரியன் அரசாட்சி புரிந்து வந்தான்.
காசி மன்னனின் சுயம்வர விழாவிற்குச் சென்றிருந்த பீஷ்மரைக் கண்டு, அங்கு வந்திருந்த மன்னர்கள் "கிழவராகிய பீஷ்மர் ஏன் வந்துள்ளார்? தனது பிரம்மச்சரிய விரதத்தை காற்றில் பறக்க விட்டார் போலும்" என மெல்லப் பேசிக் கொண்டார்கள். ஆனால் பீஷ்மர், காசி மன்னனின் மகள்கள் மூவரையும் விசித்திரவீரியனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியே சுயம்வர விழாவிற்குச் சென்றிருந்தார்.
இவ்வாறிருக்க, காசி மன்னனின் மூத்த மகளான அம்பையும்,சாலுவ மன்னனும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். எனவே சுயம்வர விழாவில் சாலுவ மன்னனுக்கு மாலை அணிவித்து அவனையே தனது கணவனாக வரித்துக் கொள்ள அம்பை முடிவு செய்திருந்தாள்.
ஆனால் சுயம்வர விழாவிற்கு வந்திருந்த பீஷ்மரின் செயல் அம்பையின் கனவை சுக்கு நூறாக உடைத்தது. அம்பை, அம்பிகா, அம்பாலிகா மூவரும் சுயம்வர மண்டபத்திற்கு வந்த போது, பீஷ்மர் அவர்கள் மூவரையும் விசித்திரவீரியனுக்கு திருமணம் செய்து வைப்பதாகக் கூறி அரசவையிலிருந்து, அஸ்தினாபுரத்திற்கு கூட்டிச் செல்ல முற்பட்டார்.
அப்போது அங்கு இருந்த சாலுவ மன்னன் பீஷ்மரை எதிர்த்து மிகவும் கடினமாகப் போரிட்டான். ஆனால் பீஷ்மரின் பேராற்றல் முன் அவனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அவன் பீஷ்மரிடம் தோற்று ஓடினான். பீஷ்மர் அம்மூன்று பெண்களையும் அஸ்தினாபுரம் கூட்டிச் சென்றார். அவர் இப்பெண்களை அஸ்தினாபுரத்து மன்னனும், தனது தம்பியுமான விசித்திரவீரியனுக்கு மணமுடித்துக் கொடுப்பதற்காக சத்யவதியிடம் ஒப்படைத்தார்.
மூத்தவளான அம்பை, தனது விருப்பத்திற்கு மாறாக தன்னை இழுத்து வந்தற்காக கடும் சினம் கொண்டாள். அவள் பீஷ்மரிடம், தான் சாலுவ நாட்டு மன்னனைக் காதலிப்பதாகவும், அவனையே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறினாள். இதனை அறிந்த விசித்திரவீரியன், அம்பையை மணந்து கொள்ளப் போவதில்லை எனக் கூறி அவளது தங்கைகள் இருவரையும் மணந்து கொண்டான். மேலும் விசித்திரவீரியன் பீஷ்மரிடம் "அண்ணா! ஒரு வேளை சாலுவன் ஏற்க மறுத்து இவள் இங்கு வர நேருமாயின் என்னை மணந்து கொள்ளுமாறு வற்புறுத்தக் கூடாது" என்று கேட்டுக் கொண்டான். விசித்திரவீரியனின் கூற்றீனைக் கேட்ட அம்பை, தான் விரும்பிய சாலுவ நாட்டு மன்னனைக் காணப் புறப்பட்டாள்.
ஆனால் அங்கு அம்பை நினைத்தபடி நடக்கவில்லை. சாலுவன் அவளை ஏற்க மறுத்து விட்டான். பீஷ்மர் தன்னைப் போரில் தோற்கடித்து கவர்ந்து சென்ற பெண்ணை மீண்டும் ஏற்க முடியாது என மறுத்து விட்டான். எனவே அவள் பல முறை அஸ்தினாபுரத்திற்கும், சாலுவ நாட்டிற்கும் அங்குமிங்குமாக அலைந்தாள். அப்படி ஆறு ஆண்டுகள் அலைந்து திரிந்தாள். முடிவில் பீஷ்மரை நோக்கி "என்னைக் கவர்ந்து வந்த நீரே என்னை மணந்து கொள்ளவும் வேண்டும்" என வற்புறுத்தினாள். பிரம்மச்சரிய விரதம் பூண்டிருந்த பீஷ்மர் அம்பையை மணக்க மறுத்து விட்டார். அம்பை தன் வாழ்வைப் பாழாக்கிய பீஷ்மரிடம் தீராப்பகை கொண்டு, அவரைப் பழி வாங்க துடித்தாள்.
பிறகு அம்பை பரசுராமரை அடைந்து, பீஷ்மரோடு போரிட அவரை அழைத்து வந்தாள். பீஷ்மருக்கும், பரசுராமருக்கும் கடுமையான போர் நிகழ்ந்தது. பல காலம் நடந்த போரில் இறுதியில் பரசுராமர் தோற்றார். தோல்வியுற்ற பரசுராமர் இனி அரசர்களுக்கு விற் பயிற்சி அளிப்பதில்லை என முடிவு செய்தார். அம்பை மனம் நொந்து, பாகிதா நதிக் கரையில் கட்டை விரலில் நின்று பன்னிரண்டு ஆண்டுகள் பரம்பொருளை நோக்கித் தவம் செய்தாள்.
முருகப் பெருமான் அவளுக்குக் காட்சி கொடுத்து "பெண்ணே! இனி உன் துன்பம் தொலையும். இந்த தாமரை மாலையை அணிபவனால் பீஷ்மர் மரணமடைவார்" எனக் கூறி மறைந்தார்.
அதன் பின்பும் அம்பையின் துயரம் தீரவில்லை. எல்லா நாடுகளுக்கும் சென்று, ஒவ்வொரு அரசனிடமும் அம்மாலையை அணிந்து கொண்டு, பீஷ்மருடன் போரிட்டு, அவரைக் கொன்று விட மன்றாடினாள். ஆனால் பீஷ்மரின் வல்லமைக்கும், பேராற்றலுக்கும் பயந்து யாரும் அதை அணிய முன் வரவில்லை.
இருந்தும் மனம் சோராத அம்பை, அம்மாலையை எடுத்துக் கொண்டு துருபதன் என்ற பாஞ்சால நாட்டு அரசனிடம் சென்று, தனக்கு உதவுமாறு வேண்டினாள்.
துருபதனும் மறுத்து விட, அம்பை மனம் வெறுத்து மாலையை அங்கேயே வீசி எறிந்து விட்டு மீண்டும் தவம் புரிய சென்றுவிட்டாள். இம்முறை சிவபெருமானை நோக்கிக் கடும் தவம் செய்தாள். சிவபெருமான் அவளுக்குக் காட்சி கொடுத்து, "பெண்ணே! இப்பிறவியில் உன் விருப்பம் நிறைவேறாது. அடுத்த பிறவியில் அது நடக்கும். உன்னைக் காரணமாகக் கொண்டு பீஷ்மருக்கு மரணம் ஏற்படும் " என்றார்.
பீஷ்மரைக் கொல்வதையேத் தன் குறிக்கோளாகக் கொண்டிருந்த அம்பை, தனக்கு இயற்கையான மரணம் ஏற்படும் வரை பொறுத்திருக்கவில்லை. வரம் கிடைத்த மறு வினாடியே சிதையில் வீழ்ந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.
அம்பை தன் மறு பிறவியில் துருபதனின் மகனாகப் பிறந்து, சிகண்டி என்ற பெயர் கொண்டாள். மகாபாரதப் போரில் யாராலும் வெல்ல முடியாத பீஷ்மர், அம்புப் படுக்கையில் வீழ்ந்து மரணமடையக் காரணமானவள் சிகண்டியாகப் பிறப்பெடுத்த அம்பையே ஆகும்.
மகாபாரதப் போரில் பலம் மிக்க பீஷ்மரின் இழப்பு, கவுரவர்களுக்கு பாதகமாகவும், பாண்டவர்களுக்கு சாதகமாகவும் அமைந்தது. அவ்வகையில் மகாபாரதத்தில் அம்பையின் பங்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
Comments
Post a Comment