திருப்பாண்டிக் கொடுமுடி (KODUMUDI TEMPLE)
ஈரோடு
மாவட்டத்தில் உள்ள கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயம் சிறப்புக்கள் பல கொண்ட தொன்மை
வாய்ந்த ஆலயம் ஆகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக பாண்டிக் கொடுமுடி விளங்குகிறது. இவ்வாலயத்தின் தல விருட்சமாக வன்னி
மரம் உள்ளது. இம்மரம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. ஆனால் சிலர் இம்மரம் அதையும் விட பழமையானது என்றும், இதன் வயதைக் கணக்கிட முடியவில்லை என்றும் கூறுகின்றனர்.
இவ்வாலயத்தில்
சிவன், பிரம்மா, திருமால் ஆகிய மும்மூர்த்திகளும் கோவில் கொண்டிருப்பது சிறப்பு மிக்கதாகும். மகுடேஸ்வரர் சன்னிதிக்கும், வடிவுடைய நாயகி சன்னதிக்கும் நடுவில் வீர நாராயணப் பெருமாள்-மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன. மேலும் வன்னி மரத்தடியில் பிரம்மாவின் சன்னதி அமைந்துள்ளது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக இருப்பதாக ஐதீகம். அது போல, இங்கு மலையின் முடியே சிவலிங்கமாக காட்சியளிப்பதால், இத்தலம் கொடுமுடி என்று அழைக்கப்படுகிறது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாவார்.
மலையத்துவச
பாண்டியன் இக்கோவிலுக்கு மூன்று கோபுரங்களும், மண்டபங்களும் கட்டி, பல
திருப்பணிகள் செய்தான். பாண்டிய மன்னனால் திருப்பணிகள் செய்யப் பெற்றதால் இவ்வாலயம் பாண்டிக் கொடுமுடி என வழங்கப்படுகிறது.
தல
வரலாறு
ஆதிசேஷனுக்கும்,
வாயு பகவானுக்கும் தங்களில் யார் பெரியவர்? என்ற போட்டி எழுந்தது. ஆதிசேஷன் மேரு மலையைச் சுற்றி வளைத்துக் கொள்ள, வாயு பகவான் தன் பலத்தினால் (பலமான காற்றினால்) ஆதிசேஷனை விடுவிக்க முயன்றார். அப்பொழுது மேரு மலை சிறு சிறு துண்டுகளாகி நாலாப் புறமும் சிதறி விழுந்தது. அவை ஒவ்வொன்றும் சிவலிங்கமாக மாறியது. அவ்வாறு உருவானதே கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயம் என்று கூறப்படுகிறது.
இத்தலத்திற்கு
பிரம்மபுரி, ஹரிஹரபுரம், அமிர்தபுரி என்று வெவ்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன. பிரம்மன் இத்தலத்தை வழிபட்டதால் பிரம்மபுரி என்றும், திருமால் வழிபட்டதால் ஹரிஹரபுரம் என்றும், கருடன் இத்தல இறைவனை, வணங்கி தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததால் அமிர்தபுரி என்றும் அழைக்கப்படுகிறது.
இவ்வாலயத்தில்
மகாளய அமாவாசை, ஐப்பசி பௌர்ணமி, தைப்பூசம், ஆருத்ரா தரிசனம், மகா சிவராத்திரி போன்ற விழாக்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. ஆதிசேஷனால் உருவாக்கப்பட்ட கோயில் என்பதால் இத்தலத்தில் நாகர் வழிபாடு சிறப்பு கொண்டதாக அமைந்துள்ளது. இத்தல இறைவனை வழிபடுவதால் சகல தோஷங்களும், நோய்களும் நீங்கும் என்றும் கூறப்படுகிறது.
காவிரியாற்றங்கரையில்
அமைந்திருக்கும் சிறப்புக்கள் மிக்க கொடுமுடி கோவிலில், வடிவுடைய நாயகி உடனமர் மகுடேஸ்வரை தரிசனம் செய்து, வாழ்வில் பல நன்மைகளையும் பெறுவோமாக.