சென்னையின் வரலாறு (HISTORY OF CHENNAI)
சென்னை
தமிழ்நாட்டின் தலைநகரம் என்பதோடு அல்லாமல் இந்தியாவின் முதல் மாநகராட்சி என்ற பெருமையையும் கொண்டது.சென்னை வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த ஒரு துறைமுக நகரம் ஆகும். 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்
கால் பதித்தது முதல் சென்னை முக்கிய நகரமாக வளர்ந்து வருகின்றது.
'வந்தாரை
வாழ வைக்கும் சென்னை' மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. 1639 ம் ஆண்டு ஆகஸ்டு
22ம் தேதி , தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் சென்னை உருவானது. அன்றைய தினம் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர், இப்போது புனித ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள்.
ஓராண்டிற்குப்
பின் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்தக் கோட்டையை மையமாகக் கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. கிழக்கிந்தியக் கம்பெனி, புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்ட தேர்வு செய்த இடத்தில் சென்னப்பட்டினம், மதராசப்பட்டினம் என்ற இரண்டு கிராமங்கள் இருந்துள்ளன. இந்த இரண்டு ஊர்களின் இணைப்பில் உருவான நிலப்பரப்பே தற்போது சென்னை என்று அழைக்கப்படுகிறது. மெட்ராஸ் என்ற பெயரும், சென்னை என்ற பெயரும் முறையே மதராசப்பட்டினம், சென்னப்பட்டினம் என்ற இரண்டு ஊர்களின் பெயரில் இருந்து தான் தோன்றியது என்று பரவலாக நம்பப்படுகிறது.
சென்னப்பட்டினத்தை
ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டன. 1688 ம் ஆண்டில் சென்னை
மாகாணம் இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் மாநகராட்சி என்ற பெருமையைச் சென்னை பெற்றது.
1746ம்
ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டையையும், சென்னை நகரையும் பிரெஞ்சுப் படைகள் கைப்பற்றின. பின் 1749ம் ஆண்டு மீண்டும்
ஆங்கிலேயர் வசம் சென்னை வந்தது. அதன் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் இரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன.
இந்திய
விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956 ம் ஆண்டு மொழி
வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது தமிழ் நாட்டின் தலைநகரானது சென்னை. மதராஸ் என்ற பெயர் போர்த்துகீசியரால் வைக்கப்பட்டது என தமிழக அரசு
கருதியதால், 1996 ம் ஆண்டு சென்னை
என மாற்றம் செய்தது.
சென்னை
தென்னிந்தியாவின் தலைவாசல் என்றும், தென்னிந்தியாவின் கலாச்சாரத் தலைநகரம் என்றும் அழைக்கப்படுகிறது. அமெரிக்க ஆட்டோமொபைல் துறையின் தலைநகரான டெட்ராய்ட் போல் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் சிறந்த நகரமாக விளங்கும் சென்னை “ஆசியாவின் டெட்ராய்ட்” என்று அழைக்கப்படுகிறது.
வருடந்தோறும்
ஆகஸ்டு 22ம் தேதி சென்னை
தினமாகக் கொண்டாடப்படுகிறது. 400 ஆண்டுகள் பழமையான சென்னை நகரம் உலகிலேயே 31 வது பெரிய நகரமாக உள்ளது. இத்தனை ஆண்டுகளில் சென்னையில் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன.
ஆனாலும் அதன் பன்முகத் தன்மை மாறாமல் உள்ளது. சென்னை நகரம் அதன் வயதிலும், சிறப்பிலும் ஓங்கி வளர்ந்துள்ளது என்றால் அது மிகையாகாது.